தமிழ்நாட்டுக்கு என்ன செய்துவிட்டார் எம்ஜிஆர்?

நவீன தமிழ்நாட்டின் சிற்பி யார் என்று சமூகவலைதளங்களில் அவ்வப்போது நிகழும் ஒரு விவாதம் உண்டு. பெருமளவில் முன்னாள் முதல்வர் காமராஜர், கருணாநிதி இருவரையும் ஒப்பிட்டு நடக்கக் கூடிய விவாதமாகவே அது இருக்கும். உண்மைதான். நவீன தமிழ்நாட்டுக்கு இவர்கள் இருவரும் செய்தது அதிகம். இது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு இன்னோர் உண்மை உண்டு: எல்லா சாதனைகளையும் இவர்கள் இருவர் மீது மட்டுமே எழுதிவிட முடியாது. முக்கியமான மூன்றாவது பெயர்: எம்.ஜி.ராமச்சந்திரன். பல விஷயங்களில் குறைத்து மதிப்பிடப்படுவர் எம்ஜிஆர்.
தமிழ்நாட்டின் நீண்ட கால ஆட்சியாளர்களை வரிசைப்படுத்தினால், எம்ஜிஆர் மூன்றாம் இடத்தைப் பிடிப்பார். கருணாநிதி (சுமார் 18 ஆண்டுகள், 10 மாதங்கள்), ஜெயலலிதா (சுமார் 14 ஆண்டுகள், 4 மாதங்கள்), எம்ஜிஆர் (10 ஆண்டுகள், 6 மாதங்கள்), காமராஜர் (9 ஆண்டுகள் 3 மாதங்கள்). இவர்களில் அடித்தட்டு மக்களைக் கைபிடித்து மேலே தூக்கிவிட்டதில் எம்ஜிஆரே முன்னோடி எனலாம். இல்லை என்றால், எப்படி ஒரு மனிதர் மறைந்து நான்கு தசாப்தங்களாகும் நிலையிலும் மக்களிடம் அவர் செல்வாக்கு உறைந்து நிற்கும்!
பார் போற்றும் சத்துணவு
எம்ஜிஆர் கொண்டுவந்த சத்துணவுத் திட்டத்தை ஏதோ பள்ளிக்கூடங்களுக்கான ஓர் உணவு வழங்கல் திட்டம் போன்று மட்டும் நாம் மதிப்பிடுகிறோம். அந்தக் காலகட்டத்திய தமிழகத்தின் வறுமைச் சூழலோடும் பொருத்திப் பார்த்தால், பெரும் வறுமை ஒழிப்புத் திட்டமாகவும் அது திகழ்ந்தது என்பதை உணர முடியும். குழந்தைகளோடு அல்ல; கர்ப்பிணிகள் முதல் முதியோர் வரைக்கும் மதியவுணவு தரச் சொன்னார் எம்ஜிஆர்.
தமிழகத் தொடக்கக் கல்வியைப் பொருத்தமட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்த பல லட்சம் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களை நோக்கி ஈர்க்கும் விசையானது.
கல்வியில் அடுத்த புரட்சி
உயர்கல்வித் துறையில் எம்ஜிஆர் செய்த மாற்றங்களே கல்வித் துறையில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தின. இன்றைக்குத் தமிழக தொழில்நுட்பக் கல்வியின் மணிமகுடமாகப் பார்க்கப்படும் அண்ணா பல்கலைக்கழகம், எம்ஜிஆர் ஆட்சியில் ஒருங்கிணைக்கப்பட்டது. தமிழுக்கான தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், பெண்களுக்கான கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆகிய முன்முயற்சிகள் எம்ஜிஆர் காலத்தியவை. கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது.
அரசால் மட்டுமே கல்லூரிகளை நடத்திட முடியாது என்ற சூழலிலேயே துணிந்து, சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தார். தமிழ்நாடு இன்று இந்தியாவின் தொழில்நுட்ப மனிதவளத்தின் முக்கிய மையமாகத் திகழ்வதற்கும், மருத்துவத் துறையில் சிறந்து விளங்குவதற்கும் இந்தத் துணிச்சலான முடிவே காரணம். அரசே இந்த கல்லூரிகளைத் தொடங்கியிருக்க முடியாதா என்று கேட்பவர்கள், பல அரசுக் கல்லூரிகள் பேராசிரியர்கள் நியமனமின்றி, கெளரவ விரிவுரையாளர்களைக் கொண்டு ஓட்டப்படுவதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கலாம்.
சலுகையல்ல… உரிமை!
எம்ஜிஆர் கொண்டுவந்த நலத்திட்ட அரசியல் திட்டங்களை வெகுஜன மயக்கு அரசியலாகப் பேசியது எத்தகு அபத்தம் என்பதை காலம் நமக்கு உணர்த்தியிருக்கிறது. ஒருகாலத்தில் இலவசம் என்று அதனை கொச்சைப்படுத்திய பொருளாதாரப் புலிகளும், வலதுசாரிகளும்கூட இப்போது நலத்திட்ட அறிவிப்பின் மூலமே, மாநிலங்களின் வளர்ச்சியையும், பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் முன்னேற்றத்தையும் வேகமெடுக்கச் செய்ய முடியும் என்பதை உணர்ந்துவிட்டார்கள்.
அப்படி பார்க்க இந்தியாவை இன்று ஆளும் கட்சிகள் பேசும் மக்கள் நல அரசியலை அரை நூற்றாண்டுக்கு முன்னரே சிந்தித்தவர் தொலைநோக்கர் இல்லையா?!
விளிம்புநிலைச் சிந்தனையாளர்
இந்தியாவிலேயே முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான ஓய்வூதியத் திட்டத்தை (Old Age Pension) தீவிரமாகச் செயல்படுத்திய முன்னோடி எம்ஜிஆர். உழைக்க முடியாத வயதில் இருக்கும் முதியவர்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவதன் மூலம், அவர்கள் யாரையும் சார்ந்து நிற்க வேண்டிய அவசியமில்லாத ஒரு கண்ணியமான வாழ்வை உறுதி செய்தார். சத்துணவுத் திட்ட அமைப்பாளர்கள், சமையல் உதவியாளர் பணி முழுக்க முழுக்க பெண்களுக்கே என்று அறிவித்து, லட்சக்கணக்கான கிராமப்புறப் பெண்களுக்கு அவர்கள் வாழும் ஊரிலேயே அரசு வேலை கிடைக்கச் செய்தார் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய, விலையில்லா வேட்டி சேலை திட்டமும்கூட வெறும் இலவசமல்ல; அதன் பின்னால் நெசவாளர்களின் வாழ்வாதாரமும் இருந்தது. 100 நாள் வேலைத்திட்டம் போல, ஏழை நெசவாளர்களின் உணவை உத்தரவாதப்படுத்திய திட்டம் அது.
சமூகநீதி பங்களிப்பாளர்
ஒரு நூற்றாண்டாக நிலவிவந்த பரம்பரை கர்ணம் (Village Officers) முறையை ஒழித்த எம்ஜிஆரின் நடவடிக்கை, முக்கியமான சமூக நீதிப் புரட்சி. கிராம நிர்வாகம் என்பது குறிப்பிட்ட சமூகத்தினரின் கையில் ‘பரம்பரை அதிகாரமாக’ இருந்ததை ஒழித்து, தகுதி வாய்ந்த யார் வேண்டுமானாலும் தேர்வு மூலம் அந்தப் பதவிக்கு வரலாம் என்ற விஏஓ முறையை 1980இல் அறிமுகம் செய்தார் எம்ஜிஆர். இன்றளவும் டிஎன்பிஎஸ்ஸி மூலம் அதிகம் பேருக்கு வேலை தரும் பதவி இதுவாகவே தொடர்கிறது.
எல்லோருக்கும் சமநீதி எனும் நோக்கோடு பொருளாதாரத்தால் பின்தங்கியோருக்கும் இடஒதுக்கீட்டை சிந்தித்தது எம்ஜிஆருடைய பிழையான முடிவாக இருக்கலாம். ஆனால், தவறுகளை அவர் திருத்திக்கொள்ள தவறவே இல்லை. அதனால்தான், இந்திய மாநிலங்களில் யாரும் தொடாத உச்சத்தை நோக்கி பிற்படுத்தப்பட்ட்டோருக்கான இடஒதுக்கீட்டை தன் காலத்தில் அவரால் கொண்டுசெல்ல முடிந்தது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31% என்பலிருந்து 50% ஆக உயர்த்தினார் எம்ஜிஆர். மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கு முன்பே, எம்ஜிஆர் அளித்த மிகப் பெரிய பாய்ச்சல் இது. இதன் மூலம்தான் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 69% ஆனது.
உள்ளாட்சியில் நல்லாட்சி!
1986இல் எம்ஜிஆர் கொண்டுவந்த உள்ளாட்சித் தேர்தல் மாற்றங்கள் மிக முக்கியமானவை. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறையை (Direct Election) எம்ஜிஆர் வலுப்படுத்தினார். அதிகாரம் என்பது மேலிருந்து கீழே வருவதாக அல்ல, அது கீழிருந்து மேலே செல்ல வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அந்த மாற்றத்தில் கைவைத்ததால்தான், இன்று மாநகராட்சி, நகராட்சித் தலைவர்கள் பலர் கவுன்சிலர்களின் கலகத்தால், நித்திய கண்டத்தில் தத்தளிக்கிறார்கள்.
வெறும் வெகுஜன தலைவரல்ல!
இளம் தலைமுறை முன் எம்ஜிஆர் ஒரு வெகுஜன தலைவராக மட்டுமே அறிமுகப்படுத்தப்படுகிறார். உண்மையில், அவர் ஒரு தொலைநோக்கர். இன்று தமிழ்நாடு பேசும் முன்மாதிரி அரசியலில் எம்ஜிஆரின் மனிதாபிமானப் பார்வைக்கும் அணுகுமுறைக்கும் முக்கியப் பங்கிருக்கிறது. இனியேனும் தமிழ்நாட்டைக் கட்டமைத்த சிற்பிகள் தொடர்பான விவாதத்தில் எம்ஜிஆர் பெயரைச் சேர்த்துக்கொள்ளலாமா?


