ஆட்சியில் பங்கு: தேசியக் கட்சிகளுக்குத் தகுதி இருக்கிறதா?
அண்ணா கேட்டது மாநிலங்களின் சுயமரியாதையை; ஆனால் தேசியக் கட்சிகள் கேட்பது மாநிலங்களிடம் மிச்சமிருக்கும் அதிகாரத்தை.

தமிழ்நாட்டின் அரசியல் களம் ‘ஆட்சியில் பங்கு’ என்ற முழக்கத்தால் தகித்துக்கொண்டிருக்கிறது. மாநில உரிமைகளையும், சுயமரியாதையையும் துளியும் மதிக்காத தேசியக் கட்சிகள், அதே மாநிலங்களிடம் கூச்சமின்றி அதிகாரப் பங்கு கேட்பது எந்த வகை அறம்?
அண்ணாவின் வேண்டுகோளும், காங்கிரஸின் நிராகரிப்பும்…
மாநில சுயாட்சி என்பது தமிழ்நாட்டுக்கு வெறும் தேர்தல் கால முழக்கமல்ல. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே சுயாட்சியும், சுயநிர்ணய உரிமையும் கேட்ட வரலாற்றுக்குச் சொந்தமானது தமிழ்நாடு. 1962இல் திமுக தலைவர் அண்ணா மாநிலங்களவையில் ஆற்றிய கன்னிப் பேச்சை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். "இந்தியா என்பது ஒரு தேசமல்ல; அது பல தேசிய இனங்கள் கொண்ட ஒரு துணைக் கண்டம்" என்று அதிகாரக் குவிப்பு பேராசையில் இருந்த காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்குத் தன்மையான மொழியில் பாடம் நடத்தினார் அண்ணா.
தேச பக்தி என்ற போர்வையில் மாநிலங்களின் குரல்வளையை நெரிக்காதீர்கள் என்று எச்சரித்த அண்ணா, நாட்டின் பாதுகாப்பு, பணத்தாள் அச்சிடும் ரிசர்வ் வங்கி, வெளியுறவு போன்றவற்றை மட்டும் ஒன்றிய அரசு வைத்துக்கொண்டு, மற்ற அனைத்து அதிகாரங்களையும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என இறைஞ்சினார். ஆனால், 'தேச ஒற்றுமைக்கு ஆபத்து' என்ற வழக்கமான பல்லவியைப் பாடி, அண்ணாவின் நியாயமான கோரிக்கையை ஆணவத்துடன் நிராகரித்தது காங்கிரஸ்.
வேகமெடுத்த அதிகாரக் குவிப்பும், குப்பைக்குப் போன ஆணைய அறிக்கைகளும்…
காங்கிரஸின் அதிகாரக் குவிப்பு வெறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைத்து ஜனநாயகப் படுகொலை செய்யவும் துணிந்தது. 80க்கும் மேற்பட்ட முறை மாநில அரசுகளைக் கலைத்த காங்கிரஸ், சொந்தக்கட்சி முதல்வர்களையே இஷ்டத்துக்கு மாற்றி, மாநில மக்களின் சுயமரியாதையைச் சீண்டவும் தவறவில்லை. இதற்கு எதிராக மாநிலங்கள் கிளர்ந்தெழுந்தபோது, அந்தக் கொந்தளிப்பைக் குறைப்பதற்காக மத்திய மாநில உறவுகளை ஆராய ஒன்றிய அரசே சர்க்காரியா கமிஷனை (1983) அமைத்தது. (ஏற்கெனவே தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.கருணாநிதி அமைத்த ராஜமன்னார் குழு அறிக்கையை ஏற்க அதற்கு மனமில்லை) ஆளுநரை நியமிக்கும்போது சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகளைக் குப்பைத் தொட்டியில் வீசியது காங்கிரஸ்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில், திமுக உள்ளிட்ட மாநில கட்சிகளின் அழுத்தத்தால் 2007இல் அமைக்கப்பட்டது பூஞ்ச் கமிஷன். சட்டமன்றத் தீர்மானம் மூலம் ஆளுநரை பதவிநீக்கம் செய்ய முடியும் என்ற அந்த ஆணையத்தின் அறிக்கையை அன்று நடைமுறைப்படுத்தாத காங்கிரஸ், இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தைப் புறக்கணித்து நெருப்புக்கோழி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. இந்த வரலாற்றின் மீது நின்றுகொண்டு, தமிழ்நாட்டு அரசில் பங்கு கேட்க காங்கிரஸுக்கு என்ன தகுதி இருக்கிறது? அதுவும் ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்கிற விதம் இருக்கிறதே, அது அரசியல் அநாகரிகத்தின் உச்சம்!
பாஜகவின் சிங்கப் பங்கும்… அதிமுகவின் எதிர்காலமும்…
இன்று காங்கிரஸைப் போலவே பாஜகவும் ஆட்சியில் பங்கு எனும் வியூகத்துடன் தமிழ்நாட்டில் களமிறங்கியிருக்கிறது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் எவ்வளவோ மேல் என்று சொல்லுமளவுக்கு இருக்கிறது பாஜகவின் நச்சு வியூகம். பாஜக ஒருபோதும் ஆட்சியில் பங்கு கேட்பதில்லை, தனக்கா ‘சிங்கப் பங்கை’ அதுவே எடுத்துக்கொள்ளும். அதற்கு மஹாராஷ்டிராவே ரத்தமும் சதையுமான சாட்சி. 56 ஆண்டுகளாக மராட்டியர்களின் தன்மானச் சின்னமாக விளங்கிய சிவசேனாவைத் துண்டு துண்டாக உடைத்து, அதன் ‘வில்-அம்பு’ சின்னத்தையும் பறித்திருக்கிறது பாஜகவின் அதிகாரப் பசி. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸை சிதைத்து, ஒரு தரப்பை ‘ஆட்சியில் பங்கு’ என்ற ஆசைகாட்டி இழுத்து, ஒட்டுமொத்தக் கட்சியையும் அதன் வேர்களையும் அறுத்தெறிந்தது பாஜக.
மாநிலக் கட்சிகளின் தோளில் ஏறி அமர்ந்து, அதே கட்சியின் கழுத்தை நெரிப்பதில் கைதேர்ந்தது பாஜக. மஹாராஷ்டிராவில் பாஜக நடத்திய இந்த அதிகார அத்துமீறல், தமிழ்நாட்டுக்கும் அதிமுக போன்ற கட்சிகளுக்கும் விடப்பட்ட நேரடி எச்சரிக்கை!
அதிகாரப் பகிர்வு: யாருக்குத் தகுதி இருக்கிறது?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை போன்ற கட்சிகளும், அதிமுக அணியில் புரட்சி பாரதம், புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கலாம். காரணம் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சிகள் முன்வைக்கும் ‘ஆட்சியில் பங்கு’ கோரிக்கையானது சமூக நீதியின் நீட்சி. சிறு கட்சிகளுக்கு அளிக்கப்படும் கூட்டணி ஆட்சி அதிகாரம், ஒருபோதும் மேலேயுள்ள கட்சியை வீழ்த்தக்கூடிய கொலையதிகாரமாக மாறுவதில்லை. ஆனால், டெல்லியை ஆளும் வல்லாதிக்க சக்திகள் அப்படியானவை அல்ல! அரை நூற்றாண்டுக்கும் மேலாக தேர்தல் அரசியலில் களப்பணி செய்தும், அதிகாரத்தின் நேரடிப் பங்களிப்பு இல்லாமல் தவிக்கிற பட்டியலினத்தவர்களை முன்னிறுத்தும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்பது ஜனநாயக உரிமை. தேசியக் கட்சிகள் டெல்லியில் அதிகாரத்தை குவித்தது போதாதென்று மாநிலத்தையும் ஆக்கிரமிக்கத் துடிக்கின்றன.
அண்ணா கேட்டது மாநிலங்களின் சுயமரியாதையை; ஆனால் தேசியக் கட்சிகள் கேட்பது மாநிலங்களிடம் எஞ்சியிருக்கும், மிச்சசொச்ச அதிகாரத்தை.
சூழ்நிலைக் கைதிகளான திமுக, அதிமுக ஏற்றுக்கொண்டாலும், தமிழ்நாட்டு மக்கள் தேசிய கட்சிகளின் மேலாதிக்கத்தை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்!


