மத்திய பட்ஜெட்: சிந்தனைச் சோம்பலின் சாட்சியம்

பொருளாதார ஆய்வறிக்கையில் தலைமைப் பொருளாதார ஆலோசகர் முன்வைத்த பரிந்துரைகளை நிதி அமைச்சர் தனது பட்ஜெட்டில் புறக்கணித்துள்ளார்.

Update: 2026-02-08 23:30 GMT

2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அரசின் செய்தித் தொடர்பாளர்கள், தலையங்க எழுத்தாளர்கள், விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் இந்த பட்ஜெட்டின் தன்மையைக் குறிக்க, 'எச்சரிக்கை உணர்வு மிக்கது',  ‘குட்டையைக் குழப்பாமல் இருப்பது' என்பது போன்ற சொற்றொடர்களையே பயன்படுத்தினர். "வண்டி ஓடிக்கொண்டிருக்கும் வரை, அதை ஏன் வீணாகக் கழற்றிப் பார்க்க வேண்டும்?" ('If it ain't broke, don't fix it') என்ற அமெரிக்கப் பழமொழியைத்தான் அவர்கள் அனைவரும் பின்பற்றியதாகத் தெரிகிறது.

பற்பல சவால்கள்

இந்தியப் பொருளாதாரம் எதிர்கொண்டுவரும் பல்வேறு சவால்களை 2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. பின்வருவன அவற்றுள் சில:

• அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கட்டவிழ்த்துவிட்டுள்ள சுங்கவரிப் போர். இந்தியப் பொருட்கள் மீதான சுங்கவரியை அவர் 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்திருந்தாலும், அந்த வரிக்குறைப்பைப் பெறுவதற்கு இந்தியாவுக்குப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா அமெரிக்கப் பொருட்கள் மீதான சுங்கவரியை 'பூஜ்ஜியமாக' குறைக்க வேண்டும்; வரி அல்லாத வர்த்தகத் தடைகளை (Non-tariff barriers) நீக்க வேண்டும்; 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்க வேண்டும். இவைபோல் இந்தியா நிறைவேற்றுவதற்குக் கடினமான மேலும் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

• நேரடி அந்நிய முதலீடுகள் இந்தியாவின் அசலான தகுதிக்குக் குறைவான அளவிலேயே வந்துசேர்கின்றன. வெளிநாட்டுப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் தங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறுகிறார்கள். இந்தியத் தொழில் அதிபர்களின் கையில் தாராளமாகப் பணம் இருந்தாலும், முதலீடு செய்ய அவர்கள் தயங்குகிறார்கள். இதன் விளைவாக, நாட்டின் மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (ஜிஎஃப்சி எஃப்) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுமார் 30 சதவீதம் என்ற அளவிலேயே தேங்கியுள்ளது.

• மனநிறைவு தராத ஜிடிபி வளர்ச்சி: தேசிய புள்ளியியல் அலுவலகம் பின்பற்றும் கணக்கீட்டு முறைகளும், தேசியக் கணக்கு விவரங்கள் மீதான ஐயங்களும், 'பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாத ஜிடிபி ' (Real GDP) வளர்ச்சி விகிதங்களின் மீது ஒரு சந்தேக நிழலைப் படியச் செய்துள்ளன. உண்மையில், சந்தை விலையை அடிப்படையாகக் கொண்ட ஜிடிபி வளர்ச்சியே (Nominal GDP) ஒரு நாட்டின் உற்பத்தி வளர்ச்சியை மதிப்பிடுவதற்குத் துல்லியமான அளவுகோல். அது 2023-24 ஆம் ஆண்டில் 12%, 2024-25 ஆம் ஆண்டில் 9.8% மற்றும் 2025-26ஆம் ஆண்டில் 8% எனச் சரிந்துள்ளது. ஜிடிபி வளர்ச்சி அதன் விசையை இழந்து தள்ளாடிவருகிறது.

• கவலைக்கிடமான நிலையில் இருக்கும் வேலைவாய்ப்புச் சூழல்: 2025 ஜூன் மாதத்தில் இளைஞர்களிடையே நிலவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 15 சதவீதமாக இருந்தது. உழைக்கக்கூடிய வயதுப் பிரிவினரில் வெறும் 21.7 சதவீதத்தினர் மட்டுமே முறையான, மாதச் சம்பளம் பெறும் வேலையில் உள்ளனர். லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். அரசு தரும் புள்ளிவிவரங்கள், மக்கள் வேறு வழியின்றி சுயதொழிலை நோக்கித் தள்ளப்படுவதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

• உற்பத்தித் துறையில் வலிமைமிக்க சக்தியாக உருவெடுக்காமல் எந்த ஒரு நாடும் நடுத்தர வருவாய் கொண்ட நாடாக உயர்ந்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு, வெறும் 15-16 சதவீதமாகவே உள்ளது. 'மேக் இன் இந்தியா' , 'உற்பத்தி சார்ந்த ஊக்கச் சலுகை' (Production Linked Incentive) போன்ற திட்டங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தோல்வி அடைந்துவிட்டன.

• நிதிப்பற்றாக்குறையைக் குறைக்கும்  வேகம் (Fiscal consolidation), வருத்தம் தரும் வகையில் மிக மந்தமாக உள்ளது: நிதிப்பற்றாக்குறை 2025-26இல் 4.4 சதவீதத்திலிருந்து, 2026-27 இல் 4.3 சதவீதமாக குறையும்; வருவாய்ப் பற்றாக்குறையோ எவ்வித மாற்றமுமின்றி 1.5 சதவீதத்திலேயே நீடிக்கும். இதே வேகத்தில் சென்றால், நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவுத் திட்ட மேலாண்மைச் சட்டத்தின் (FRBM) இலக்குகளை எட்ட இன்னும் 12 ஆண்டுகளோ அல்லது அதற்கும் மேலோ ஆகும். இதற்காக நாம் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.

• 2025-26ஆம் ஆண்டின் வரி வருவாய் குறித்த அதீத நம்பிக்கைகள் படுதோல்வி அடைந்துள்ளன. அந்த ஆண்டின் பட்ஜெட் கணக்குகளைக் காப்பாற்றியது ரிசர்வ் வங்கி அளித்த ரூ.3,04,000 உபரி நிதிதான். முந்தைய ஆண்டில் ரிசர்வ் வங்கி ரூ.2,68,590 கோடியையும் அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.2,10,874 கோடியையும் உபரி நிதியாக அரசுக்கு வழங்கியிருந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் (2004-2014) ரிசர்வ் வங்கியிடமிருந்து ஒரு ஆண்டில் பெறப்பட்ட அதிகபட்ச உபரி நிதி 2013-14ஆம் ஆண்டில் பெறப்பட்ட ரூ.52,679 கோடி.

நிராகரிக்கப்பட்ட ஆலோசனை

பொருளாதார ஆய்வறிக்கையின் முதல் அத்தியாயத்தில், 'எச்சரிக்கை தேவைதான், ஆனால் அவநம்பிக்கை வேண்டாம்' என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் அறிவுரை வழங்கியுள்ளார். அறிக்கை முழுவதும் அதே தொனிதான் நீடிக்கிறது. மற்றொரு அத்தியாயத்தில், நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான நம்பகமானதொரு பாதையை அவர் பரிந்துரைக்கிறார். தலைமைப் பொருளாதார ஆலோசகர் துணிச்சலான அணுகுமுறையை முன்வைத்த ஒரே இடம் நகரமயமாக்கல் குறித்துத்தான். அங்கு அவர், 'வலிமையான மாநகராட்சி நிர்வாகம், குழப்பங்களுக்கு இடம் அளிக்காத சட்ட அமலாக்கம் மற்றும் குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பரஸ்பர நலன்களை முறைப்படுத்தும் ஒரு நம்பகமான சமூக ஒப்பந்தம்' ஆகியவற்றை வலியுறுத்துகிறார். மேலும், நகரங்கள் மேம்பட்ட நிதி ஆதாரங்களுடன் வலுவூட்டப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்

தலைமைப் பொருளாதார ஆலோசகரின் பரிந்துரைகளுக்கு நிதி அமைச்சர் அளித்த எதிர்வினை, அறிவுப்பூர்வமற்றதாகவும் மழுப்பலாகவுமே இருந்தது. தனது 85 நிமிட உரையில், இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை குறித்தோ அல்லது உலகப் பொருளாதாரத்தின் மீது ட்ரம்ப் தொடுத்துள்ள 'வரி விதிப்பு' மற்றும் 'வர்த்தகப் பேரங்களைத் வலுக்கட்டாயமாகத் திணித்தல்' என்ற இருமுனைத் தாக்குதல் குறித்தோ அவர் எதையும் பேசவில்லை. மேலும், உலகளாவிய மாற்றங்கள், சீனாவின் பொருளாதார விரிவாக்கம் என விவரம் தெரிந்த எவரும் ஒரு பட்ஜெட் உரையில் எதிர்பார்க்கக்கூடிய முக்கியமான விஷயங்கள் எதைப் பற்றியும் அவர் கருத்து தெரிவிக்கவில்லை. நிதியமைச்சரும் இந்த அரசும் பொருளாதார ஆய்வறிக்கையை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது எனது மென்மையான பார்வை. நாம் இந்தச் சூரியக் குடும்பத்திலேயே இல்லாத வேறொரு கிரகத்தில் வசிப்பதாக அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் எனது கறாரான விமர்சனம்

குறைந்துவரும் பொருளாதார வளர்ச்சி விகிதம், வறுமை மற்றும் அதிகரித்துவரும் சமமின்மை, தேக்கமடைந்துள்ள முதலீடுகள், பரவலான வேலையில்லாத் திண்டாட்டம், மக்கள் நலத்திட்டங்கள் புறக்கணிக்கப்படுவது, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, கட்டமைப்பு வசதிகள் மற்றும் அத்தியாவசியச் சேவைகளுக்கான தேவைக்கும் விநியோகத்துக்கும் இடையே நிலவும் பெரும் இடைவெளி ஆகிய கவலைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான அரசின் கொள்கைகளை விளக்க வேண்டியது அவசியம் என்று நிதியமைச்சர் கருதாதது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது

மோசமான நிதி மேலாண்மை

பொதுவான கணக்குப் பதிவுத் தரங்களின்படிப் பார்த்தால்கூட, நிதியமைச்சரின் நிதி மேலாண்மை மிகவும் மோசமாகவே உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் ஊரக வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் மற்றும் பல அமைச்சகங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் இரக்கமற்ற முறையில் செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளன. திரு. சிவராஜ் சிங் சவுகானின் பொறுப்பில் உள்ள வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் மட்டும் ரூ. 60,052 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்துக்கு ரூ. 67,000 கோடி ஒதுக்கப்பட்டது; ஆனால் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி, அதில் ரூ. 17,000 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூலதனச் செலவினம் 2024-25 இல் 3.2 சதவீதமாக இருந்தது, 2025-26 இல் 3.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. பாதுகாப்புச் செலவினமோ ஜிடிபியில் 1.6 சதவீதம் (மொத்த செலவினத்தில் 11.4 சதவீதம்) என்ற குறைந்த அளவுக்குச் சரிந்துவிட்டது; இது 2026-27 இல் ஜிடிபியில் 1.5 சதவீதம் (மொத்த செலவினத்தில் 11.1 சதவீதம்) என்ற நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளது.

விவரமறிந்த நிபுணர்கள் இந்த பட்ஜெட் உரையை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்தியா 'நான்காவது பெரிய பொருளாதாரம்' என்று சுயதம்பட்டம் அடித்துக்கொள்வதை டாக்டர் சுர்ஜித் பல்லா கிண்டல் செய்துள்ளார். நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதில் நிலவும் ஆமை வேகத்தை டாக்டர் சி. ரங்கராஜன் சுட்டிக்காட்டியுள்ளார். விவசாயத் துறையின் பெரும் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை டாக்டர் அசோக் குலாட்டி வருத்தத்துடன் பதிவுசெய்துள்ளார். கார்னெல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரோஹித் லம்பாவோ, 'ஒரு தெளிவான திட்டம் இல்லாத பொருளாதாரத்துக்கு ஏற்ற பட்ஜெட் இது' என்று எள்ளி நகையாடியுள்ளார்.

நிதியமைச்சர் தனது உரையைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது திட்டங்கள், இயக்கங்கள், நிறுவனங்கள். முன்னெடுப்புகள், குழுக்கள், நிதியங்கள் என அடுக்கடுக்கான அறிவிப்புகளை வாரி இறைத்தார். நான் எண்ணிப் பார்த்ததில் மட்டும் குறைந்தது  24 அறிவிப்புகள் இருந்தன. ஆனால், இந்த அறிவிப்புகள் பலவற்றுக்கு ஒரு பைசாகூட ஒதுக்கப்படவில்லை என்பது மக்களுக்கு விரைவில் தெரியவரும்.

மொத்தத்தில் சிந்தனைச் சோம்பலின் வெளிப்பாடுதான் இந்த பட்ஜெட்.


(தமிழில்: ச.கோபாலகிருஷ்ணன்)

Tags:    

Similar News