சமையல் எரிவாயு: பதற்றமும் உண்மையும்
போர்ப் பதற்றம் தீவிரமடைந்ததை அடுத்து, ஒரு நாளுக்கான சிலிண்டர் முன்பதிவு படிப்படியாக அதிகரித்து மார்ச் 13 அன்று 80 லட்சத்தைக் கடந்தது.
“அன்பார்ந்த வாடிக்கையாளரே. உங்களுக்குக் குறிப்பிட்ட தேதியில் கடைசியாகச் சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அடுத்த முன்பதிவுக்கான நேரம் இன்னும் வரவில்லை. அடிக்கடி தொடர்பு கொள்வதைத் தவிருங்கள். பொறுமை காக்கவும்.” – சென்னையில் வசிக்கும் வாடிக்கையாளர் ஒருவர் முன்னணி எண்ணெய் நிறுவனத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்ய அழைத்தபோது அவருக்கு வந்த குறுஞ்செய்தி இது.
போரினால் ஏற்பட்ட விநியோகத் தடைகள்
மேற்காசியப் போர்ச் சூழல் இந்தியாவின் சமையல் எரிவாயு விநியோகத்தில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. வீடுகளுக்கான சமையல் எரிவாயு விநியோகம் தடையின்றித் தொடர்வதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. வீடுகளுக்கான சிலிண்டர்கள் முன்பதிவுக்கான காலக்கெடுவானது நகர்ப்புறங்களில் 21 நாட்களிலிருந்து 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மறுபுறம் வணிக சிலிண்டர்கள் விநியோகம் குறிப்பிடத்தக்க தடைகளை எதிர்கொண்டுள்ளது. வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அவற்றின் எரிவாயுத் தேவையில் 20 சதவீதம் மட்டுமே மத்திய அரசு மூலம் ஒதுக்கப்பட்டு மாநில அரசுகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இதற்குக் காரணமான அமெரிக்கா - இஸ்ரேல் எதிர் ஈரான் போரும், அதனால் மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலும் 20 நாட்களைக் கடந்தும் தணிவதாகத் தெரியவில்லை. மேலும் தீவிரமடைவதற்கான சமிக்கைகளையே இரு தரப்புகளும் வெளிப்படுத்திவருகின்றன.
பதற்றத்தால் அதிகரித்த முன்பதிவு
இந்தச் சூழலில் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைவது இயல்பானது. எனினும், இப்போது இந்தப் பதற்றம் குறைந்திருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் கிடைத்துள்ளன. மேற்காசியப் போர்ப் பதற்றம் தொடங்குவதற்கு முன்பு, அதாவது பிப்ரவரி 28-க்கு முன்பு வரை இந்தியாவில் ஒரு நாளுக்குச் சராசரியாக 55.7 லட்சம் சமையல் எரிவாயு நுகர்வோர் சிலிண்டர் முன்பதிவு செய்துவந்தனர். போர்ப் பதற்றம் தீவிரமடைந்ததை அடுத்து, ஒரு நாளுக்கான சிலிண்டர் முன்பதிவு படிப்படியாக அதிகரித்து மார்ச் 13 அன்று 88 லட்சத்தைக் கடந்தது.
முன்பதிவுப் பதற்றம் தணிந்தது
இந்நிலையில் ‘சமையல் எரிவாயு போதுமான அளவு கையிருப்பு உள்ளது. யாரும் வதந்தி பரப்ப வேண்டாம்’ என அரசும் எண்ணெய் நிறுவனங்களும் வாக்குறுதி அளித்துவருகின்றன. குறிப்பாக வீடுகளுக்கான சிலிண்டர்கள் விநியோகத்தில் எந்தச் சிக்கலும் இல்லை என்று கூறிவருகின்றன. இதையடுத்துப் பதற்றத்துடன் சிலிண்டர் முன்பதிவு செய்வது கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த வாரத்தின் இடைப்பகுதியில் ஒரு நாளில் இந்தியா முழுவதிலிருந்தும் 57 லட்சம் சிலிண்டர் முன்பதிவுகள் நடந்துள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் இணைச் செயலர் சுஜாதா ஷர்மா கூறியுள்ளார். ஆக, வீட்டு சிலிண்டர் முன்பதிவானது போர்ப் பதற்றத்துக்கு முந்தைய நிலையை நெருங்கிவிட்டது என்று மத்திய எரிபொருள் அமைச்சகமும் எண்ணெய் நிறுவனங்களும் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளன.
இந்தப் போர்ப் பதற்றம் தொடங்குவதற்கு முன்பு எண்ணெய் நிறுவனங்கள் தினமும் சராசரியாக 50 லட்சம் சிலிண்டர்கள் விநியோகம் செய்துவந்தன. தற்போது சுமார் 55 லட்சம் சிலிண்டர்களை விநியோகித்துவருகின்றன. பதற்ற முன்பதிவு உச்சத்தில் இருந்த நேரத்தில் இந்த நிறுவனங்கள் ஒரு நாளுக்கு 60 லட்சம் வீட்டு உபயோக சிலிண்டர்களை விநியோகித்ததாகச் சுஜாதா ஷர்மா கூறியுள்ளார். எந்த நேரத்திலும் இந்தியாவில் உள்ள 25,000 சமையல் எரிவாயு விநியோக நிலையங்களில் சிலிண்டர் இல்லை என்ற சூழல் உருவாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடரும் சவால்கள்
ஆனால் போர் இப்போதைக்கு நிறைவடையும் என்ற நம்பிக்கை தரும் வகையில் எதுவும் நடந்துவிடவில்லை. ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாகத் தெரியவில்லை. அமெரிக்காவின் மிரட்டல்களும் தாக்குதல்களும் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் போக்குவரத்தைத் தடுப்பதில் ஈரானின் மூர்க்கத்தை மேலும் தீவிரமடையச் செய்வதாகவே உள்ளன. இந்தியா தனது சமையல் எரிவாயுத் தேவையில் 60 சதவீதத்தை இறக்குமதி வழியாகவே பெறுகிறது. இந்தியா இறக்குமதி செய்யும் சமையல் எரிவாயுவில் 90 சதவீதம் வளைகுடா நாடுகளிலிருந்து ஹோர்முஸ் நீரிணை வழியாகவே வந்தாக வேண்டும்.
இதுவரை இந்திய அரசு ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் மூலம் கடந்த வாரம் இரண்டு கப்பல்கள் இந்தியா வந்தடைந்தன. இவை 92,700 மெட்ரிக் டன் எரிவாயுவைக் கொண்டு வந்துள்ளன. இது இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எரிவாயுத் தேவையை அதிகபட்சம் ஒன்றரை நாட்களுக்குச் சமாளிப்பதற்கு மட்டுமே இணையானது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார். இவை தவிர, கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயுவைச் சுமந்து வரும் 22 இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதற்கு இந்திய அரசு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.
அதிகரித்த உள்நாட்டு உற்பத்தி
போர்ப் பதற்றம் தொடங்கியவுடன் மத்திய அரசு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவும் வீட்டுப் பயன்பாடு விநியோகத்துக்கு முன்னுரிமை அளிக்கவும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டதால், வீட்டுப் பயன்பாடுக்கான சமையல் எரிவாயு உற்பத்தி 40% அதிகரித்துள்ளதாக அரசு கூறுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 1.25 லட்சம் புதிய எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகப் பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது.
மாற்றுவழிகளின் சாத்தியப்பாடு
சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோக அழுத்தத்தைக் குறைக்க, சாத்தியமுள்ள இடங்களில் குழாய் வழி இயற்கை எரிவாயுவுக்கு (PNG) மாறுமாறு அனைத்து வாடிக்கையாளர்களையும் (வீடு மற்றும் வணிகம்) அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதன் விளைவாக, கடந்த சில நாட்களில் சுமார் 5,600 வாடிக்கையாளர்கள் குழாய் வழிச் சமையல் எரிவாயுவுக்கு மாறியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அனைவரும் குழாய் வழி எரிவாயுவுக்கு மாறுவது அவ்வளவு எளிதானதோ விரைவாக நிகழக்கூடியதோ அல்ல. தற்போது இந்தியாவில் 33.3 கோடி வீடுகளில் சமையல் எரிவாயு இணைப்பு உள்ளது. இதில் குழாய் வழி இணைப்புகளின் எண்ணிக்கை வெறும் 1.5 கோடியாக மட்டுமே உள்ளது. சிலிண்டர்கள் மூலம் எளிதாக வீடுகளுக்குச் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியும்; ஆனால், குழாய் வழி எரிவாயுக்கு மாறுவதற்கு ஒவ்வொரு வீட்டின் வாசல் வரையிலும் குழாய் இணைப்பு வசதி அமைக்கப்படுவது கட்டாயமாகும். அரசுக் கணக்கீட்டின்படி இந்தியாவில் 60 லட்சம் வீடுகளுக்கு மட்டுமே உடனடியாக குழாய் வழி இணைப்பை வழங்க முடியும்.
ஒன்று போர்ப் பதற்றம் தணிய வேண்டும்; அல்லது ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் விரைவாக வந்து சேர்வதற்கு ஈரானுடன் நிரந்தர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இவை இரண்டில் ஏதேனும் ஒன்று நடக்காவிட்டால் 33 கோடி இந்தியச் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களும் எத்தனை நாட்களுக்குப் பதற்றம் அடையாமல் பொறுமை காக்க முடியும் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.