வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாட்சி முழக்கம் சட்டமன்றத் தீர்மானம் ஆகட்டும்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமர்ப்பித்த அறிக்கை இந்தியக் கூட்டாட்சி வரலாற்றில் ஒரு மைல்கல்.
இந்தியக் கூட்டாட்சியை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமர்ப்பித்த அறிக்கை இந்தியக் கூட்டாட்சி வரலாற்றில் ஒரு மைல்கல்; 1971இல் வெளியான ராஜமன்னார் குழு அறிக்கையிலிருந்து அடுத்த பெரும் பாய்ச்சல். ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில், ஓய்வுபெற்ற அரசுத் துறைச் செயலர் அஷோக் வர்தன் ஷெட்டி, ஓய்வுபெற்ற பேராசிரியர் நாகநாதன் ஆகியோர் அடங்கிய குழு தயாரித்துள்ள இந்த ஆவணமானது, அறிக்கை என்றழைக்கப்பட்டாலும் ஒரு புத்தகம் அளவுக்கு விரிந்திருக்கிறது. இந்தியக் கூட்டாட்சியின் குறைகளையும் அவற்றைக் களைய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் உலகளாவிய உதாரணங்களுடன் பட்டியலிடுகிறது.
பிரிவினையினூடாக, பல்லாயிரம் உயிர்ப் பலிகளின் மத்தியில் நவீன இந்தியா பிறந்ததால், கூட்டாட்சிப் பண்பை மட்டுப்படுத்தியதாகவே இந்திய அரசமைப்புச் சட்டம் அமைந்தது. நாட்டின் மாநிலங்கள் எதிர்காலத்தில் பிளந்திடுமோ எனும் அச்சம் நம் முன்னோரை ஆட்டிப் படைத்தது. டெல்லியிலேயே எல்லா அதிகாரங்களையும் குவிப்பதும், மாநிலங்களின் அதிகார எல்லைகளைச் சுருக்கி வைத்திருப்பதும் ஒருமைப்பாட்டின் பெயரால் நியாயமாக்கப்பட்டது. காலப்போக்கிலேனும் மேம்பட்ட ஜனநாயகப் பாதையை நோக்கி நம் பயணம் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அதிகாரக் குவிப்பின் ருசி கண்ட டெல்லி ஆட்சியாளர்கள் மேலும் மேலும் மத்திய ஆட்சியின் எல்லைகளை விஸ்தரித்தனர். 2019இல் ஒரே இரவில் காஷ்மீர் எனும் மாநிலம் இரண்டாகப் பிளக்கப்பட்டு, இரு ஒன்றிய பிரதேசங்கள் ஆக்கப்பட்டது இந்தியக் கூட்டாட்சியின் உச்ச அவலம்.
ஆக, இந்த 75 ஆண்டுகளில் அடுத்து முன்னகர முடியாத ஒரு முட்டுச்சந்தில் மோதி இந்தியக் கூட்டாட்சி நிற்கும் சூழலில்தான் அரை நூற்றாண்டு இடைவெளியில் மீண்டும் டெல்லி நோக்கிப் பெரும் அறைகூவல் விடுத்திருக்கிறது தமிழ்நாடு. “இந்தியாவை முதிர்ச்சியடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்” என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான அறைகூவல். இதைத் தீவிரப் பாதையில் எடுத்துச் செல்ல, குரியன் குழுவின் பரிந்துரைகள் தேசம் தழுவிய விவாதம் ஆக்கப்பட வேண்டும். அறிக்கையின் முக்கிய அம்சங்களை டெல்லி நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். டெல்லியின் காது எப்போது கேட்குமோ… தமிழ்நாட்டிலிருந்து தொடர்ந்து முழங்குவோம்!