தேர்தலுக்கு முந்தைய ரூ.5,000 அளிப்பு: அதிகாரமளிப்பா, ஏலமா?

ஆளுங்கட்சிகள் நிதித் திட்டங்களை 'தேர்தல் அறுவடை கருவி'யாகக் கையாளக் கூடாது. வறுமையை ஒழிக்கும் கருவி, ஜனநாயகத்தைச் சிதைக்கும் கருவியாக மாறலாகாது.

Update: 2026-02-15 23:30 GMT

தமிழகத்தின் மகளிர் உரிமைத் தொகை அளிப்புத் திட்டமானது, நாட்டுக்கே முன்னோடியான ஒரு நல்ல சிந்தனை. நாடு வளரும்போது, வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் சாமானிய குடிமக்களோடு வளர்ச்சியைப் பங்கிடுதல் ஜனநாயகக் கடமை. இந்திய அரசியலில் இந்தப் பணி இப்போது 'நேரடிப் பணப் பரிமாற்றம்' எனும் திசைவழியில் பயணப்படுகிறது.

அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் இது இடம்பெறுவதும் இயல்பானது. ‘நாட்டின் வளர்ச்சி தரும் பழங்களில் எனக்கான பங்கு என்ன?’ எனக் கேட்கும் சாமானியர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை இத்தகு சூழல் உத்தரவாதப்படுத்துகிறது.

மகளிருக்கு மாதம் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை வழங்குவதை இலக்காகக் கொண்ட பல்வேறு மாநிலங்களின் இந்தத் திட்டங்கள் எல்லாமே போற்றத்தக்க முன்னெடுப்புகள். ​ஆனால், ஆளும் கட்சிகள் தேர்தலுக்கு முன்பு பணத்தைக் கொடுத்து, ஓட்டுகளை வாங்குவதற்கான வழிமுறையாக இதைக் கையாளும்போது அடிப்படை ஜனநாயகமே கேள்விக்குள்ளாகிறது.

பாஜகதான் இந்த மோசமான வழிமுறையை மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலின்போது ஆரம்பித்து வைத்தது. பின்னர் பல மாநிலங்களிலும் கையாண்டது. அடிப்படையில், சமமான ஆடுகளம் எனும் தேர்தல் சூழலை இது குலைத்துவிடுகிறது. நிதித் திட்டங்களை 'தேர்தல் அறுவடை' கருவியாகக் கையாளுவது அரசமைப்பு உறுதி தரும் சம வாய்ப்புத் தளத்தையே கேலிக்கூத்தாகிவிடும்.

வெகுசமீபத்தில்கூட பிஹாரில் பாஜக கூட்டணி அரசு இத்தகு வேலையில் ஈடுபட்டபோது, அதைக் கடுமையாக விமர்சித்தன திமுகவும் அதன் கூட்டாளியான காங்கிரஸும். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குகையில் அதே விஷயத்தை எந்த லஜ்ஜையுமின்றி திமுக செய்வதும், காங்கிரஸ் வரவேற்பதும் மோசமான சந்தர்ப்பத்தனம். ஒரு நாட்டின் அரசமைப்பை சட்டங்கள் மட்டும் அல்ல; மரபுகளும் சேர்ந்தே வடிவமைக்கின்றன. இன்று மரபைக் கொல்லுதலில் பாஜக ஆதரவு சக்திகளும், பாஜக எதிர் சக்திகளும் ஒரே வழியில் பயணிப்பது தார்மீகரீதியாகப் பெரும் கவலையை அளிக்கிறது. வறுமையை ஒழிக்கும் கருவி, ஜனநாயகத்தைச் சிதைக்கும் கருவியாக மாறலாகாது!

Tags:    

Similar News