விஜய் விவாகரத்து விவகாரம் ஏன் தனிநபர் பிரச்சினை அல்ல?
சாமானியர் என்பவர் ஒரு தனி நபர்; அரசியல் தலைவர் ஒரு பொது நிறுவனம்… தலைவர்களின் தனிப்பட்ட வாழ்வும் அரசியலின் ஒரு பகுதியே!

ரயில் பயணத்தில் இருக்கிறேன். அலுவலகத்திலிருந்து வாட்ஸப் கூட்டு அழைப்பு. “ஒரு முக்கியமான செய்தி… ஆனால், அதை வெளியிடுவதா; வேண்டாமா என்று முடிவெடுக்க முடியவில்லை” என்கிறார்கள் சகாக்கள்.
செய்தித் தொலைக்காட்சிப் பணியில் உள்ள பெரிய சவால்களில் ஒன்று, கணநேரத்தில் முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். எப்போதெல்லாம் புதிய சூழல்கள் ஏற்படுகின்றனவோ அப்போதெல்லாம் புதிய சவால்கள் ஏற்படும்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார். இதுதான் ஒரு வரி செய்தி.
பொதுவாக, விவாகரத்து போன்ற விஷயங்கள் முற்றிலும் இது தனிநபர் உரிமையின் கீழ் இருக்கின்றன. ஆகையால், நல்ல ஊடகங்கள் மேலோட்டமான சில வரி தகவல்களுடன் இதைக் கடந்துவிடுவதே மரபு. நாங்களும் எப்போதும் அந்த மரபையே கடைப்பிடிக்கிறோம். ஆகையால், இந்த விஷயத்தையும் அப்படியே கையாளுவது என்ற முடிவையே எடுத்தவுடன் எடுத்தோம். ஆனால், சங்கீதாவின் மனுவை ஆழ்ந்து வாசிக்கையில் அப்படி கடப்பது சரியல்ல என்று தோன்றியது.
திருமண உறவுக்கு வெளியே ஒரு நடிகையுடன் விஜய் தொடர்பில் இருக்கிறார்; இந்த உறவை பொதுவெளியில் - சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வழியே சம்பந்தப்பட்ட நடிகை வெளிப்படுத்துகிறார்; இது எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானமாக இருக்கிறது… விஜய்யுடனான உறவில் இருந்து விலகிக்கொள்ளலாம் என்று சுமுகமான முறையில் விவாகரத்துக்கு முயன்றாலும், விஜய் அதையும் பொருட்படுத்தவில்லை… ஒரே வீட்டில் வசித்தாலும் சில ஆண்டுகளாக நாங்கள் பிரிந்தே வாழ்கிறோம்; தனிப்பட்ட வாழ்விலும், சமூக வாழ்விலும் என்னை விலக்கி வைத்துவிட்டார் விஜய்.. பொருளாதாரரீதியாகவும் என்னை முடக்கிவிட்டார்! இதுதான் மனுவில் சங்கீதா குறிப்பிட்டிருக்கும் பிரச்சினையின் சாராம்சம்.
இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதில் மூன்று சிக்கலான கேள்விகள் இருந்தன.
1. விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் மட்டும் அல்ல; இப்போது வேகமாக வளர்ந்துவரும் ஒரு கட்சியின் தலைவரும்கூட. பல லட்சம் மக்களிடம், இளையோரிடம் செல்வாக்கும் தாக்கமும் செலுத்தும் நட்சத்திரம். 8 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாடு போன்ற ஒரு பெரிய மாநிலத்தின் முதல்வர் பதவிக்குப் போட்டியிடும் ஒருவர். பொது வாழ்வில் உச்ச அதிகாரத்துக்கு மிக அருகில் இருக்கும் இத்தகையோரையும், சாமானியர்களையும் ஒரே தட்டில் நிறுத்த முடியுமா?
2. திருமண உறவின் சிக்கல்கள், கணவன் - மனைவி இடையேயான சச்சரவுகள் ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடத்தோடு இணைந்திருக்கின்றன. நவீன வாழ்வின் ஆண் - பெண் உறவுமுறை பழைய கட்டுப்பெட்டி மதிப்பீடுகளிலிருந்து உடைத்துக்கொண்டு வெளியேறி நீண்ட காலம் ஆகிறது. கிராமங்கள், நகரங்கள்; ஏழைகள், பணக்காரர்கள் என எல்லா எல்லைகளுக்கும் அப்பாற்பட்டு இதுவும் சமூக வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே இருக்கிறது. திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு விஷயத்தில் இன்று விஜய் பெயர் மட்டும் அல்ல; பல பிரபலங்களின் பெயர்கள் பொதுவெளியிலேயே அடிபடுகின்றன. கடந்த காலத்தை எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டு அரசியலை அரை நூற்றாண்டு காலம் தமது ஆட்சியின் கீழ் வைத்திருந்த மு.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா மூவரின் பெயர்களும்கூட மக்களின் பேச்சுப் பட்டியலுக்கு அப்பாற்பட்டவையாக இல்லை. சரிதான்... ஆனால், நான்கு சுவர்களுக்குள், சம்பந்தப்பட்டவர்களுக்குள் மட்டும் விஷயங்கள் அணுகப்படுவதற்கும், சம்பந்தப்பட்டவர் ஒருவரால் பொதுவெளிக்கு விஷயம் கொண்டுவரப்படுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை எப்படி அணுகுவது?
3. பொதுவாக இந்தியாவில் எழுதப்படும் பெரும்பான்மை விவகாரத்து மனுக்கள் தத்தமது இணையரை கேவலப்படுத்த கூடியவை. உங்கள் இணையர் எவ்வளவு கொடுமைப்படுத்தியதாக, துன்புறுத்தியதாக நீங்கள் விவாகரத்து மனுவில் குறிப்பிடுகிறீர்களோ அவ்வளவுக்கு வழக்கு ஊட்டச்சத்து மிக்கதாக இருக்கும்; நல்ல இழப்பீட்டை, ஜீவனாம்ச தொகையை அது பெற்றுக்கொடுக்கும் என்று பேசப்படுவது உண்டு. அவமானம்தான் இதில் சூதாட்டப் பணயம். சங்கீதாவின் மனு மிகுந்த கண்ணியத்துடன் எழுதப்பட்டிருந்தது. இந்த விஷயத்தை விஜய்க்கு எதிராக ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த விரும்பியிருந்தால், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையே நடத்தி சங்கீதா அம்பலப்படுத்தியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. நீதிமன்றத்தின் முன் சங்கீதா முன்வைத்திருந்த மனுவில் முக்கியமான ஒரு கோரிக்கை, ஊடக விசாரணைக்கு இந்த மனு செல்லக் கூடாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இருவரின் தனியுரிமையிலுமே அவர் அக்கறை கொண்டிருந்தார். சங்கீதாவின் மனு முழுமையாக தீர்வை மட்டுமே இலக்காகக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. “முடிந்தவரை சுமுகமான, பரஸ்பர விவாகரத்துக்கு முயன்றேன்; முடியாத சூழலிலேயே நீதிமன்றப் படியேறுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார் சங்கீதா. ஊடக விசாரணை கூடாது எனும் அவருடைய தனியுரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்; அதேசமயம், இந்த விஷயங்கள் உண்மையெனில் சங்கீதாவே விரும்பாவிட்டாலும், தனியுரிமையின் எல்லைக்கு வெளியிலேயே இந்த விஷயம் செல்கிறது. என்ன முடிவெடுப்பது?
இரு தரப்புகளைக் கேட்பதும் முக்கியம் என்பதால், நாங்கள் விஜய் தரப்பின் பதில் என்னவென்பதைப் பார்த்து அடுத்த கட்டம் நகர முடிவெடுத்தோம்.
விஜய் தரப்பிலிருந்து நேரடியாக சங்கீதாவின் மனு தொடர்பாக எந்த பதிலும் வரவில்லை. ஆனால், அவருடைய கட்சியினர் இணையத்தில் எதிர்வினையில் இறங்கினார்கள்; சங்கீதா மீது இணையத்தில் கொடூரத் தாக்குதல்களை நடத்தினர். சங்கீதாவின் உடல் பரிகசிப்புக்குள்ளானது. சங்கீதாவின் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. சங்கீதாவின் தாம்பத்திய வாழ்க்கை விவாதத்துக்குட்படுத்தப்பட்டது. கூடவே, இதுவரையில் திருமணத்துக்கு வெளியே உறவு வைத்திருந்த பல தலைவர்களின் வாழ்க்கைகளும் சுட்டிக்காட்டி விமர்சிக்கப்பட்டன. மைய விஷயம் இதுதான்: “எவ்வளவோ பேர் செய்திருக்கிறார்கள். இதில் என்ன தவறு? இதை வெளியே கொண்டுவந்த நீதான் தவறு!”
சரி, இப்படி விஜய்க்கு கூப்பாடு போடுபவர்களில் எத்தனை பேர் தன் குடும்ப ஆண்களுக்கு அல்லது பெண்களுக்கு விஜய்க்கான நியாயத்தைப் பரிந்துரைப்பார்கள்? விஜய்யின் குழந்தைகள் தரப்பைப் பற்றி இவர்களில் எவரேனும் யோசித்திருப்பார்களா?
ஆயினும், இந்தத் தாக்குதல்களிலிருந்து தன்னுடைய மனைவியை, 25 ஆண்டு காலம் உடன் வாழ்ந்தவரை, தன்னுடைய இரு குழந்தைகளின் தாயைப் பாதுகாக்க விஜய்யிடமிருந்து ஒரு சொல்லும் வரவில்லை. பெண்கள் பாதுகாப்பை முக்கியமான முழக்கமாகத் தாங்கி பேசும் அவருடைய கட்சியின் முன்னணி தலைவர்களும் தம் கட்சியினரைக் கட்டுப்படுத்தவில்லை. மார்க்ஸிஸ்ட் கட்சியின் பெண்கள் அமைப்பு இதைச் சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்த பின்னரும்கூட விஜய்யிடமிருந்து எந்த அசைவும் இல்லை.
அடுத்த சில நாட்களிலேயே தஞ்சாவூரில் பல்லாயிரம் பேர் மத்தியில் கட்சிக் கூட்டத்தில் பேசினார் விஜய். அந்தக் கூட்டத்திலும் ஒரு சொல் இந்த விவகாரம் தொடர்பாக இல்லை. அடுத்த ஓரிரு நாட்களில் நடிகை த்ரிஷாவுடன் ஒரே காரில், ஒரே நிற உடையில் வந்திறங்கினார் விஜய். பத்திரிகையாளர்கள் அல்ல; விஜய்யின் செய்தி தொடர்பாளர் நிகில்தான் அந்தக் காட்சியைப் பதிவுசெய்து சமூகவலைதளங்களில் பகிர்ந்தார். ஆகையால், சங்கீதாவுக்கு விஜய் கொடுக்கும் மறைமுக அடி இது என்று விஜய் தொண்டர்கள் புல்லரித்தார்கள்.
அடுத்த சில நாட்களில், நீதிமன்றத்தில் சங்கீதா மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். “விவாகரத்து கோரி நீதிமன்றத்துக்குச் சென்றால், வீட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று கூறினார் விஜய். அந்த அச்சத்தாலேயே வெளியே இருக்கிறேன். நான் பிரிட்டன் பிரஜை. எனக்கு இந்தியாவில் வேறு வசிப்பிடம் கிடையாது. விவாகரத்து முடியும் வரையிலேனும் வீட்டில் வசிக்கும் உரிமையை விஜய் எனக்களிக்க உத்தரவிட வேண்டும்.”
தன்னுடைய சொந்த வீட்டில் கால் வைக்கவே வசிப்புரிமைக்காக தன் மனைவி நீதிமன்றப் படியேறிய அதே நாளில், கட்சி சார்பில் மகளிர் தின விழா நடத்தினார் விஜய். முதல்வர் பதவியில் தான் அமர்ந்தால் என்னவெல்லாம் தன் கட்சி செய்யும் என்று 12 வாக்குறுதிகளை அளித்தார். அனைத்துமே மகளிர் நலன், மகளிர் அதிகாரம், மகளிர் பாதுகாப்பை மையமாகக் கொண்டவை. கூட்ட முடிவில் முதல் முறையாக தன்னுடைய தனிப்பட்ட விஷயம் குறித்து சூசகமாக ஓரிரு வரிகள் விஜய் பேசினார்: “இதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்… நீங்கள் கவலைப்பட வேண்டாம்... அது அந்த அளவுக்கு வொர்த் கிடையாது!”
தன்னுடைய தாம்பத்ய உறவைப் பொதுவெளியில் இன்று இதற்கு மேலும் ஒரு தலைவர் தரமிறக்க முடியுமா? கூட்டத்தில் கூடியிருந்த தவெக தொண்டர்கள் ஆர்ப்பரித்தார்கள். கொடுமை என்னவென்றால், முழுமையும் பெண்கள்!
இனியும் விஜய் - சங்கீதா விவகாரம் தனிப்பட்ட உரிமைகளின் எல்லைக்குட்பட்ட விஷயம் என்று கருத முடியுமா?
பிரச்சினைகள் எவர் வாழ்விலும் வரலாம். உறவுகள் அலைமோதலில் எவர் வேண்டுமானாலும் சிக்கலாம். விஜய்க்கும் நிச்சயம் அவர் தரப்பு நியாயம் இருக்கலாம். அதை கண்ணியமாக வெளிப்படுத்த வேண்டிய கடமை அவருக்கு உண்டு. எவருமே பொறுப்புணர்வுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. தனிநபர்கள் விடலைத்தனத்திலிருந்து முதிராமல் இருக்கலாம்; அரசியல் தலைவர்கள் அப்படியிருக்க முடியாது. பொதுச்சமூகம் அதைத் தனியுரிமை எனக் கடக்கவும் முடியாது.
மேம்பட்ட ஜனநாயக அரசியலில், தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவர்களுடைய அரசியலின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும். மணவுறவு என்பது தனிப்பட்ட இரு நபர்களின் சேர்க்கை மட்டுமே அல்ல; சமூகத்தின் முன் அது ஓர் அறநெறிசார் ஒருமைப்பாடும், சட்டபூர்வ உறுதிப்பாடும்கூட. தனிப்பட்ட வாழ்க்கையிலேயே அத்தகு உறுதிப்பாடுகளைத் தூக்கி வீசிக் கடப்பவர்கள் பொது வாழ்வில் கொடுக்கும் வாக்குறுதிகளுக்கு எப்படி நேர்மையாக இருப்பார்கள் என்ற கேள்வி முக்கியமானது. அதனால்தான் மேற்குலக நாடுகள் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றன; கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அரசியலில் ஈடுபட்டிருக்கும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும், அவருடைய பண்புநலன்களையும் அவருடைய ‘அறநெறி திசைகாட்டி’யாக மதிப்பிடுகின்றன. ஒரு சாமானியரின் அந்தரங்க உறவும், மீறல்களும் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை; ஆனால், இரட்டை வாழ்க்கை வாழும் ஓர் அரசியலர் மறைமுக அழுத்தங்களுக்கும் மிரட்டல்களுக்கும் வளையக் கூடியவர் எனும் வேறுபாட்டை வரையறுக்கின்றன. தாராளத்துக்குப் பேர்போன அமெரிக்காவில் 1980களில் அதிபர் போட்டியில் முன்னணியில் இருந்த கேரி ஹார்ட், திருமணத்துக்குப் புறம்பான உறவு குறித்த குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக தனது அரசியல் வாழ்க்கையையே இழந்ததை இங்கே நினைவுகூரலாம். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் மீதான கண்டனத் தீர்மானம் சட்டரீதியானதாக மட்டுமல்லாமல், ஓர் அதிபரின் ஒழுக்கத் தகுதி குறித்த விவாதமாகவும் அமைந்ததை நினைவுகூரலாம்.
இந்தியா இந்த விஷயத்தில் இரட்டை வேஷத்தில் இருக்கிறது; ஒருபுறம் குடும்ப விழுமியங்கள், உயரிய ஒழுக்கம், கட்டுப்பாடான பண்பாடு, புனிதமான மரபுகள் என்று பெரும் பாட்டு பாடுகிறது; மறுபுறம் தனிப்பட்ட வாழ்க்கையில் தவறும் தலைவர்களுடைய ஏமாற்றைப் புறந்தள்ளுகிறது. ஆனால், இது இந்தியச் சமூகத்தின் மேம்பட்ட, தாராள அணுகுமுறை கிடையாது; நாள்பட்ட நிலவுடைமை மனோபாவத்தின் தொடர்ச்சியே இதுவும்; செல்வமும் அதிகாரமும் மிக்கவர்கள் எதையும் செய்யலாம்; நாம் கண்களை மூடிக்கொள்ள வேண்டும்; “பல்லுள்ளவர்கள் பட்டாணி மெல்லுகிறார்கள்!”
இந்த விஷயத்தில் நம்மவர்கள் செய்யும் மேலும் ஒரு மோசமான தவறு, கடந்த காலத் தலைவர்களின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டு வந்து சமகாலத் தவறுகளை நியாயப்படுத்திடல்! சமகால மதிப்பீடுகளால் கடந்த கால வாழ்க்கையின் மீது தீர்ப்பளிப்பது எத்தகைய ஆபத்தோ அதைக் காட்டிலும் பெரும் ஆபத்தானது, சமகாலத் தவறுகளைக் கடந்த காலத் தவறுகளின் பெயரால் நியாயப்படுத்திடல். சென்ற நூற்றாண்டில் காந்தி உள்பட பல தலைவர்கள் பால்ய விவாகம் செய்திருக்கிறார்கள். அதன் பொருட்டு இன்றைக்கு அதை நியாயப்படுத்திட முடியாது. காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனைகளை இன்று அவர் உயிரோடு இருந்தால் சமூகம் எளிதாகக் கடக்க முடியுமா?
சாமானியர் என்பவர் ஒரு தனிநபர்; ஆனால், ஒரு தலைவர் பொது நிறுவனம். சாமானியர்களின் தனிப்பட்ட வழுக்கல்கள் ஒரு குடும்பத்தை மட்டுமே பாதிக்கின்றன; விஜய் போன்றவர்களின் முடிவுகள் பல லட்சம் மக்களிடம் தாக்கம் செலுத்த வல்லவை.
விஜய் தன்னுடைய மனைவிக்கு மட்டும் அல்லாது பொதுச் சமூகத்துக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்!
(*கட்டுரையில் வெளிப்படும் கருத்துகள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள் ஆகும்.)


