Top
Begin typing your search above and press return to search.

காந்திஜியின் ‘இரண்டாம் படுகொலை’

இந்தி மொழி பேசாத மக்களை அவமானப்படுத்துவதாக இருக்கிறது விபி-ஜி ராம் ஜி திட்டம்

காந்திஜியின் ‘இரண்டாம் படுகொலை’
X


காத்மா காந்தி, 1948 ஜனவரி 30ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார். தங்களுடைய கருத்தியலோ, பரப்புரையோ அந்த கொலைகாரருக்கு ஊக்குவிப்பாக இருந்தது என்பதை ஆர்எஸ்எஸ் இயக்கம் வன்மையாக மறுத்தது. தங்களுடைய இயக்கத்துக்கு சர்தார் வல்லபபாய் படேல் தடை விதித்தது நியாயமற்றது என்றும் அது கூறியது. ஆர்எஸ்எஸ் சொல்வது உண்மை என்றே ஒரு கணம் கருதுவோம், அந்த இயக்கத்துக்கும் அதன் வழித்தோன்றலான பாரதிய ஜனதாவுக்கும் இந்தக் கேள்வியை முன்வைப்போம்: மகாத்மா காந்தியின் பெயரை – ஒரேயொரு சமூக- பொருளாதார வளர்ச்சி திட்டத்துக்கு சூட்டப்பட்டதை – ஏன் அழிக்கிறீர்கள்?

மகாத்மா காந்தி பெயரிலான, ‘மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டம்’ (MGNREGS), நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் ஆதரவில் அமல்படுத்தப்பட்டது. இப்போதுள்ள ஒன்றிய அரசு, மசோதா எண். 197 மூலம் இந்த ஆண்டு (2025) மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை ரத்து செய்துவிட்டது. இதற்காக அது கொண்டுவந்த ரத்து மசோதாவின் பிரிவு 37(1) கூறுகிறது:

“பிரிவு 10-ல் கண்டுள்ளபடி, ஒன்றிய அரசு அறிவிக்கை வெளியிடும் நாளில் இருந்து அல்லது அறிவிக்கும் நாளிலிருந்து – மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம், 2005, அனைத்து விதிகள், அறிவிக்கைகள், திட்டங்கள், ஆணைகள், வழிகாட்டுதல்களுடன் ரத்து செய்யப்படுகிறது”.

மசோதா மேலும் கூறுகிறது: பிரிவு 8(1)-ன் கீழ் எல்லா மாநில அரசுகளும் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் கிராமப்பகுதிகளில் 125 நாள்களுக்கு ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்க திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்; அந்த வேலைவாய்ப்பு திட்டங்கள் மசோதாவின் அட்டவணை I-ல் வரையறுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச அம்சங்களுடன் இசைந்ததாக இருக்க வேண்டும்; அட்டவணை I-ன் படி, முதலாவது குறைந்தபட்ச அம்சமாவது:

:சட்டத்தின் 8-வது பிரிவின் கீழ் அறிவிக்கப்பட்டபடி எல்லா மாநிலங்களிலும் இந்த திட்டம், ‘விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு உறுதி, ஆஜீவிகா இயக்கம் (கிராம்): விபி-ஜி ராம் ஜி திட்டம்’ என்று அழைக்கப்பட வேண்டும். இந்தப் பெயரே உச்சரிக்க கடினமாக – வாயில் வலியத் திணித்துவிட்டதைப்போல இருப்பதுடன் இந்தி மொழி பேசாத மக்களுக்கு பொருளற்றதாகவும், அவமானப்படுத்துவதைப் போலவும் இருக்கிறது.

ஏழைகளுக்கு வாழ்வாதாரம்

இரவில் பசியுடனும் ஏமாற்றத்துடனும் படுக்கப் போகாமல் இருக்கும் நிலையை 12 கோடி ஏழைகளுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டம் வழங்கியதன் மூலம் அவர்களுக்கு வாழ்வாதாரமாகவும் முன்னேற்றத்துக்கு ஒரு பிடிமானமாகவும் இருந்தது. நிரந்தர வேலைக்குச் செல்ல முடியாத பெண்களுக்கும், முதியவர்களுக்கும் அது வரப்பிரசாதமாகவே உதவியது. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு, இந்த திட்டத்தின் மூலம் கிடைத்த பணமானது – அவர்களுடைய குடும்ப முன்னோர்களுக்குக் கிடைக்காத – பொருளாதார சுதந்திரத்தையும் தன்னம்பிக்கையையும் அளித்தது. ஏழைகளுக்கு ஒரு பாதுகாப்பு வலையாகவும் திகழ்ந்தது. இந்த நன்மைகளையெல்லாம் புதிய மசோதா, மிகவும் கொடூரமாக தட்டிப்பறித்துவிட்டது.

(காங்கிரஸ் தலைமையிலான) ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் நிதிநிலை அறிக்கையின்போது அறிவித்தேன்: ”இந்த திட்டத்தின்படி ஏழைகளுக்கு ‘முதல் உரிமை’ வழங்கப்படும்.. இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி முழுக்க அதற்கே செலவிடப்படும்… தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டன. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் -வேலைசெய்யும் உடல் திறன் உள்ள - ஒருவருக்காவது ஆண்டுக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதுதான் திட்டத்தின் நோக்கமாகும்…”

Ø அந்த சட்டத்தின் மூல ஆதாரமே, ஏழைகளுக்கு உறுதியான வாழ்வாதார பாதுகாப்பை வழங்குவதுதான் – அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

Ø இந்த திட்டம் எல்லோருக்குமானது, தேவை என்று கேட்போருக்கு வேலை தரும் - ஆண்டு முழுக்க செயல்படுத்தப்படும் திட்டம்.

Ø இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு ஊதியத்தை, ஒன்றிய அரசு வழங்கும்.

Ø இந்த திட்டத்துக்காகும் முழுச் செலவையும் ஒன்றிய அரசே ஏற்கும்; இந்த திட்டத்துக்கு தேவைப்படும் சாதனங்களுக்காகும் செலவில் மாநில அரசுகள் 25% ஏற்கும்.

Ø இந்த திட்டத்தில் வேலைதருமாறு ஒருவர் கோரிக்கை விடுத்து, அந்த கோரிக்கை மறுக்கப்பட்டால் - வேலையில்லாமைக்கான மானியம் பெற அவருக்கு உரிமை உண்டு.

Ø இந்த திட்டம் படிப்படியாக வளர்ச்சியடைந்த பிறகு அதில் பெண் தொழிலாளர்களை அதிகம் ஈடுபடுத்தும் வரவேற்கத்தக்க முன்னேற்றமும் ஏற்பட்டது.

வேலைவாய்ப்பு திட்டத்தை சிதைக்கிறது

புதிய மசோதாவும் திட்டமும் மேலே காணப்படும் எல்லா அம்சங்களையும் ஒரே நேரத்தில் அழித்துவிட்டது. இனி இந்த திட்டம் அந்தந்த மாநிலங்களின் தேவை – நிலைமைக்கேற்ப செயல்படுத்தும் இதற்காகும் செலவை ஒன்றிய அரசு 60%, மாநில அரசுகள் 40% என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் இந்த திட்டத்தில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்பதை ஒன்றிய அரசே தீர்மானிக்கும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மேலே செலவானால், அதை மாநில அரசுகளே ஏற்கவேண்டும்; எந்தெந்த இடங்களில் புதிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை ஒன்றிய அரசே உரிய அறிவிப்பாணைகள் மூலம் தெரிவிக்கும்; இதன் மூலம் இது, வேலைவாய்ப்பற்றவர்களின் கோரிக்கைகளுக்கேற்ப செயல்படுத்தும் திட்டத்திலிருந்து – நிதியும் பிற வளங்களும் கிடைப்பதைப் பொருத்து செயல்படுத்தும் திட்டமாக சூழ்ச்சியாக மாற்றப்படுகிறது. இந்த திட்டப்படி ஒருவர் 125 நாள்கள் வேலை பெறுவதை உறுதி செய்ய வேண்டியது அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பு என்று மாற்றியிருப்பது மாய்மாலமே தவிர வேலைவாய்ப்பு அளிக்க அல்ல. விவசாயத்துறையில் விதைப்பு – அறுவடை போன்ற வேலைக்கு ஆள் தேவை அதிகம் இருக்கும் காலங்களில், இந்த திட்டம் அமல்படுத்தப்படமாட்டாது – அதாவது ஆண்டுக்கு சுமார் 60 நாள்களுக்கு இந்த திட்டம் அமலாகாது. இந்த திட்டத்தில் வேலைகேட்டு விண்ணப்பித்தவருக்கு வேலை தர முடியாத பட்சத்தில், அரசு அறிவிக்கும் ஊதியத்தில் அதிகபட்சம் 25% மட்டுமே வழங்கப்படும், அதுவும் அவரவர் மாநிலத்தின் நிதி நிலைமைக்கேற்ப இருக்கும். அதே சமயம் இந்த வேலை திட்டம் தொடர்பாக எந்த பஞ்சாயத்தாக இருந்தாலும் அதை ஒன்றிய அரசுதான் தீர்த்துவைக்கும் – இந்த வகையில் இது கூட்டாட்சி திட்டத்துக்கு அப்பட்டமான எதிர்நிலையாகும். ஏழைகளுக்கு வாழ்வாதாரம் வழங்கும் திட்டம் என்ற இதன் முக்கிய நோக்கமானது இப்போது தலைகீழாக புரட்டிப்போடப்பட்டுவிட்டது. சில மாநிலங்கள் – குறிப்பாக பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள் – இதை அமல் செய்யத் தங்களுக்கு பொருளாதார வலிமை இல்லை என்று கூறி மிகக் குறைவான நிதியையே தங்களுடைய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கும், அமல்படுத்துவதற்கும் மிகச் சிறிய பரப்பையே தேர்வு செய்யும், பிறகு படிப்படியாக இந்த திட்டத்தை அமல் செய்வதையே கைவிட்டுவிடும்.

நினைவிலிருந்து அகற்றும் முயற்சி

பிரதமராக பதவியேற்ற பிறகு 2015 பிப்ரவரி 28-ல் நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, “இந்த திட்டத்தை எப்போதும் ரத்து செய்துவிடக்கூடாது என்று என்னுடைய அரசியல் அறிவு கூறுகிறது… உங்களுடைய (ஐமுகூ) ஆட்சியின் மிகப் பெரிய தோல்விகளில் ஒன்றான இது, என்றென்றும் மக்களின் நினைவில் நிற்கும் உதாரணமாக நீடிக்கும்” என்றார்.

அடுத்து வந்த ஆண்டுகளில் இந்த திட்டம் ஆள்வோரின் அலட்சியத்துக்குப் பெரிதும் ஆளானது. ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை என்று அறிவித்திருந்தாலும் உண்மையில் வேலை அளிக்கப்பட்ட நாள்கள் சராசரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 50 நாள்களாக சுருங்கியது. வேலைவாய்ப்பு பெற தகுதியுள்ள 8.61 கோடிப் பேரில் 40.75 லட்சம் குடும்பத்தினர் மட்டுமே 2024-25-ல் 100 நாள்கள் வேலை செய்தனர், 2025-26-ல் அந்த எண்ணிக்கை 6.74 லட்சம் மட்டுமே. வேலை தரப்படாத நிலையில், மனுச் செய்தவர்களுக்கு உரிய தொகையை அளிக்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை, ஆனால் எந்த மாநில அரசும் அப்படி அளித்ததாகத் தெரியவில்லை. இந்த திட்டத்துக்கு போதிய அளவு நிதி ஒதுக்கப்படவில்லை, நிதிநிலை அறிக்கையில் மதிப்பீட்டுத் தொகை 2020-21-ல் ரூ.1,11,170 கோடியாக இருந்தது, 2025-26-ல் ரூ.86,000 கோடியாக சரிந்துவிட்டது. இந்த திட்டத்தின் கீழ் வேலைசெய்த வறிய குடும்பங்களின் எண்ணிக்கை 2020-21-ல் 7.55 கோடியாக இருந்தது, 2024-25-ல் 4.71 கோடியாக குறைந்துவிட்டது. வேலை செய்தவர்களுக்கான ஊதிய நிலுவைத் தொகையும் ரூ.14,300 கோடியாக குவிந்துவிட்டது.

புதிய மசோதாவில் காணப்படும் குளறுபடிகள் ஒரு புறமிருக்க, நாட்டின் நினைவிலிருந்தே மகாத்மா காந்தியின் நினைவை அகற்றும் வலுவாந்திரமான முயற்சிதான் இந்தப் பெயர் மாற்றம், இது மிகவும் கண்டிக்கத்தக்கது. பாரதிய ஜனதாவின் கண்ணோட்டப்படி இந்தியாவுக்கு சுதந்திரமே 2014 மே 26 தான் கிடைத்தது; எனவே கடந்த கால நினைவுகள் அழிக்கப்பட வேண்டும். முதலில் ஜவாஹர்லால் நேருவுடன் தொடங்கிய இந்த முயற்சி இப்போது மகாத்மா காந்திக்கு வந்திருக்கிறது. பாரதிய ஜனதாவின் இந்த மாபெரும் தவறுகளை இந்திய மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.



Next Story

Related Stories

All Rights Reserved. Copyright @2019
Share it