Top
Begin typing your search above and press return to search.

விவாதங்கள் முடக்கப்படும் காலம்

பிரதமர் மோடி தெரிவித்த கருத்துகள், மிகப் பெரிய முரண்நகை

விவாதங்கள் முடக்கப்படும் காலம்
X

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னால் இந்த ஆண்டு (2025) டிசம்பர் முதல் நாள் பேசிய பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு - குறிப்பாக ஓரிரு கட்சிகளுக்கு – விடுத்த வேண்டுகோளில், “நாடாளுமன்றம் என்பது நாடகம் நடத்துவதற்கான அரங்கம் அல்ல, மக்களுடைய பிரச்சினைகளை விவாதிப்பதற்கானது” என்று வலியுறுத்தினார். அவருடைய பேச்சில் இருந்த முரண்நகையை, அனைவருமே நன்கு புரிந்துகொண்டனர்.

ஆத்திரமூட்டும் விமர்சனம்

இந்த எச்சரிக்கை, குளிர்கால கூட்டத் தொடருக்கே அச்சுறுத்தும் வகையில் இருந்தது. மோடி என்ன சொன்னார் என்பதைத் திரும்ப ஒரு முறை சொல்வது அவசியம்: “துரதிருஷ்டவசமாக, ஓரிரு அரசியல் கட்சிகளால் தங்களுடைய (தேர்தல்) தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. பிஹார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கணிசமான நாள்கள் ஆகிவிட்டன, எனவே அவர்கள் அந்த தோல்வி தந்த உணர்வுகளிலிருந்து மீண்டிருப்பார்கள் என்றே கருதினேன்; நேற்று அவர்கள் தெரிவித்த கருத்துகளிலிருந்து, அந்தத் தோல்வி அவர்களை இன்னமும் பாடாய்ப்படுத்துகிறது என்பது தெரிகிறது…

“அரசியல் முழக்கங்களை எழுப்ப இந்த நாட்டில் ஏராளமான இடங்கள் உண்டு. நீங்கள் எங்கே தோற்றீர்களோ, அங்கேயே இந்த முழக்கங்களை நிறைய எழுப்பினீர்கள். அடுத்து எங்கே தோற்கப் போகிறீர்களோ அங்கும் இப்படி முழக்கமிடலாம். ஆனால் இங்கே (நாடாளுமன்றத்தில்), கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் – முழக்கங்களுக்கு அல்ல.”

சில மாநிலக் கட்சிகளையும் அவர் குறிப்பிட்டு குத்திக்காட்டினார். “சில மாநிலங்களில், ஆட்சிக்கு எதிரான அதிருப்தி மக்களிடையே அதிகமாக இருக்கிறது; அதிகாரத்தைச் சுவைத்த அவர்களால், மக்களிடையே மீண்டும் ஆதரவு கேட்டு செல்ல முடியாதபடிக்கு எதிர்ப்புணர்வு அதிகமாக இருக்கிறது… அவர்கள் எல்லாம் நாடாளுமன்றத்துக்கு வந்து, தங்களுடைய கோபத்தைக் கொட்டித் தீர்க்கின்றனர்.”

இரட்டை நாவுக்கு உதாரணம்

பிரதமரின் இந்தப் பேச்சு ‘இரட்டை நாவுக்கு’ சிறந்ததோர் உதாரணம். நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னாலும், இந்த அரசு உலகமே அறியும்படி ஓர் அறிவிப்பை வெளியிடும் – “இந்த அரசு எந்தவிதமான விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கத் தயங்கவில்லை, இந்த அரசிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை, எதைப்பற்றி வேண்டுமானாலும் விவாதிக்கலாம் – ஆனால் ‘அவை விதிகளுக்கு’ உட்பட்டு”. அவைகளுக்கான நடைமுறை விதிகள் என்பவை அதற்கான புத்தகத்தில் இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு விளக்கம் அளிப்பதும் - செயல்படுத்துவதும் அவைக்குத் தலைமை தாங்கும் அதிகாரிகள் (மக்களவையாக இருந்தால் மக்களவைத் தலைவர், மாநிலங்களவை என்றால் அவைத் தலைவர் – குடியரசு துணைத் தலைவர்) அதிகாரங்களுக்கு உட்பட்டது. ஆனால் அவர்கள் பெரும்பாலும் நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பின் தலைவர்களுடன்தான் ஆலோசனை கலந்து முடிவுகளைப் எடுப்பார்கள். நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக்குழுவில் எதிர்க்கட்சிகள் தாங்கள் விவாதிக்க விரும்பும் பொருள்கள் குறித்து கோரிக்கை வைத்தால், அரசுத் தரப்பு பெரும்பாலும் எதிர்க்கும். இதனால்தான் கசப்புணர்வு அதிகரிக்கிறது, இதன் விளைவைத்தான் ‘எதிர்க்கட்சிகளின் நாடகம்’ என்று இகழ்கிறார் பிரதமர்.

யாருடைய நிகழ்ச்சிநிரல்?

மசோதாக்களும், அரசின் வரவு- செலவு ஆண்டறிக்கையும் (பட்ஜெட்) அரசின் நிகழ்ச்சி நிரலுக்குரியவை. கேள்வி நேரத்தில் விவாதங்கள் இடம்பெற அவை விதிகள் அனுமதிப்பதில்லை. எதிர்க் கட்சிகள் மக்களுடைய பிரச்சினைகளை அவசரம் கருதி விவாதிக்க விரும்பினால், ஒத்திவைப்புத் தீர்மானம், கவன ஈர்ப்புத் தீர்மானம், குறுகிய நேர விவாதம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு விவாதப் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தலாம். இவையெல்லாம் நாடாளுமன்றத்தில் காலங்காலமாக அனுமதிக்கப்பட்டு தொடர்பவை, இவற்றுக்கென்று விதிகளும் உண்டு.

ஒத்திவைப்புத் தீர்மானம் என்றால் (அலுவல் ஆய்வுக்குழுவில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட) நிகழ்ச்சி நிரலை ஒத்திவைத்துவிட்டு எதிர்க் கட்சிகள் கொண்டுவரும் பிரச்சினை குறித்து உடனடியாக விவாதிப்பது; எனவே அரசுத்தரப்பு இதை தன்னைக் கண்டிக்கும் கண்டன விவாதமாகவே கருதுகிறது. இந்த வகை விவாதத்துக்கான விதிகள் தெளிவாகவே இருக்கின்றன. மக்களவையில் விதி எண் 57 இப்படிக் கூறுகிறது: ஒன்றிய அரசின் பொறுப்பை சுட்டிக்காட்டி, குறிப்பிட்ட ஒரு விவகாரம் அல்லது மக்கள் பிரச்சினை தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானத்துக்கு அனுமதி கோரி, பிறகு விவாதம் நடத்தலாம். மாநிலங்களவைக்கு விதி எண் 267 இருக்கிறது. இது அவசர முக்கியத்துவம் உள்ள மக்கள் பிரச்சினை குறித்து - நிகழ்ச்சி நிரலில் இல்லாவிட்டாலும் - அவையின் பிற நிகழ்ச்சிகளை ஒதுக்கிவைத்துவிட்டு விவாதிக்கலாம் என்கிறது.

மக்களுடைய பிரச்சினைகள் மீது அவசரமாக - குறுகிய கால விவாதம் கோர, மக்களவையில் விதி எண் 193 - மாநிலங்களவையில் விதி எண் 176 அனுமதிக்கின்றன.

கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருவதற்கு மக்களவையில் விதி எண்: 197 – மாநிலங்களவையில் விதி எண்:180 இடம் தருகின்றன. இந்த விவாதங்களுக்குப் பிறகு அந்தத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் விளக்க அறிக்கையைத் தந்தாக வேண்டும்.

கடந்த 11 ஆண்டுக்காலத்தில் இத்தகைய கோரிக்கைகள் மீது அரசு எத்தகைய பதில் நடவடிக்கைகளை எடுத்தது என்று பட்டியலிட்டால், இவற்றை விவாதிப்பதற்கான கதவு மட்டுமல்ல – ஜன்னல்கள் கூட – அரசுத் தரப்பால் திட்டமிட்டு படிப்படியாக சாத்தப்பட்டு விட்டது தெரியவரும். கடந்த சில ஆண்டுகளாக நிலைமை படுமோசமாகிவிட்டது. எந்தவிதமான முக்கிய விவாதங்களையும் அனுமதிக்கவே கூடாது என்பதில் மோடி தலைமையிலான அரசு பிடிவாதமாக இருக்கிறது.

கதவுகள், ஜன்னல்கள் மூடப்பட்டன

இதற்கான பட்டியலை ஆராயும்போது உண்மை தெரியும். மோடி அரசு தனது முதல் ஐந்தாண்டு பதவிக்காலத்தில் ஒத்திவைப்புத் தீர்மானங்களுக்கு அஞ்சியது; அப்படி ஒத்திவைப்புத் தீர்மானம் மூலம் விவாதிப்பது தங்களுடைய ஆட்சித் திறமைக்கு களங்கம் கற்பிப்பதாக ஆகிவிடும் என்றே கருதியது. குறுகிய கால விவாதங்கள், கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் ஆகியவற்றை அனுமதிப்பதில் ஓரளவுக்கு சகிப்புத் தன்மையுடன் செயல்பட்டது. இரண்டாவது ஐந்தாண்டு பதவிக்காலத்தில், சகிப்பின்மை அப்பட்டமாக வெளிப்பட்டது; கதவுகள் அடைத்து சாத்தப்பட்டன, ஆனால் ஜன்னல்கள் திறக்கப்பட்டன.

மக்களவையில் பெரும்பான்மை வலுவைக்கூட பெற முடியாமல் மூன்றாவது ஐந்தாண்டு காலத்தில் காலடி வைத்த மோடி அரசு, நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளுக்கான விவாதங்களுக்கு ஜன்னல்களைக்கூட அடைத்துவிட்டது. எனவே இந்த ஆட்சியில் விவாதத்துக்குரிய மக்களுடைய அவசரப் பிரச்சினைகளே ஒன்றுகூட இல்லை என்று நாம் கருதிக்கொள்ளலாமா?

துரதிருஷ்டவசமாக, மக்களவையைவிட மாநிலங்களவையில் விவாதங்கள் அதிகம் தடுக்கப்படுகின்றன. இதற்குக் காரணம் அவைக்குத் தலைவராக பதவி வகித்தவர் (ஜகதீப் தன்கர்) தான் என்றே பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருதினர். செப்டம்பர் மாதம் புதியவர் (சி.பி. ராதாகிருஷ்ணன்) அவைத் தலைவராகப் பதவி ஏற்றார். அவர் இப்போதுதான் தனக்குரிய கடமையில் ‘பயிற்சி பெறுகிறார்’ என்று கருதுகிறேன்; அது மட்டுமின்றி இந்த ஆண்டின் குளிர்கால கூட்டத் தொடரும் மிகவும் குறைந்த நாள்களுக்கே நடைபெறுகிறது.

ஒளிவுமறைவின்றி சொல்ல வேண்டுமென்றால், துடிப்பான - மக்கள் பிரச்சினைகளை விரிவாக விவாதிக்க வேண்டிய நாடாளுமன்றம் அவசியமென்று இந்த அரசு கருதவில்லை. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக மற்றவர்களுடன் ஆலோசனை - நாடாளுமன்றத்தில் விவாதம் போன்றவற்றை அனுமதிக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் தொடருக்கு முன்னால் பிரதமர் மோடி தெரிவித்த கருத்துகள், மிகப் பெரிய முரண்நகையாக இருக்கின்றன.


Next Story

Related Stories

All Rights Reserved. Copyright @2019
Share it