Top
Begin typing your search above and press return to search.

புராணங்கள் கால எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை: தேவ்தத் பட்நாயக்

"மனிதகுலத்தின் பன்முகத்தன்மையை நாம் போற்றவும் அங்கீகரிக்கவும் உதவுகிறது”

புராணங்கள் கால எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை: தேவ்தத் பட்நாயக்
X

இந்தியப் புராணவியலை நவீன காலகட்டத்தோடும் வாழ்வியலோடும் இணைக்கும் முதன்மைச் சிந்தனையாளர் தேவ்தத் பட்நாயக். இதுவரை 50க்கும் மேற்பட்ட நூல்களையும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் எழுதியுள்ள இவர், தனது தனித்துவமான பார்வைகளால் பரவலான கவனத்தை ஈர்த்தவர். இந்தியப் புராணங்களில் பெண்ணியக் கூறுகளை விவரிக்கும் ‘சதி சாவித்ரி’ (Sati Savitri),ஹரப்பா நாகரிகம் குறித்த பார்வைகளை முன்வைக்கும் ’அஹிம்சா’ (Ahimsa) ஆகிய இவரது நூல்கள் அண்மைய ஆண்டுகளில் வெளியாகி கவனம் ஈர்த்தவை. பால் புதுமையர் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பிவரும் இவர் இந்திய மரபில் தன்பாலின உறவாளர்கள் முற்றிலும் ஒதுக்கப்படவில்லை என்பதை புராணச் சான்றுகளை முன்வைத்து தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். புராணக் கதைகளை ஆன்மிகமாக மட்டும் பார்க்காமல், அவற்றைச் சமூக நீதி, நிர்வாகத் திறன் மற்றும் தனிமனித ஒழுக்கத்திற்கான பாடங்களாக உலகிற்கு எடுத்துரைப்பதில் இவர் ஒரு முன்னோடியாக விளங்குகிறார்.

நாம் ஏன் நமது புராணங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் ? அவை நமது சிந்தனையை எவ்வாறு வடிவமைக்கின்றன?

நாம் நமது புராணங்களுக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் அப்படித்தான்; ஆனால் அது நமக்குத் தெரிவதில்லை. இந்தப் புராணங்கள்தான் நாம் வாழும் உலகத்தைப் பற்றிய புரிதலை நமக்கு அளிக்கின்றன; நமது வாழ்க்கைக்கு ஒரு பொருளைத் தருகின்றன. நாம் அறிந்தோ அறியாமலோ, இந்த உலகத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு கட்டமைப்பை நமது மனதிற்கு இவை வழங்குவதால், அவை நமது இருப்பையே வடிவமைக்கின்றன. புராணங்களைத் தெரிந்துகொள்வது, மனிதகுலத்தின் பன்முகத்தன்மையை நாம் போற்றவும் அங்கீகரிக்கவும் உதவுகிறது.

பண்டைய புராணங்கள் இன்றைய காலத்திலும் மீண்டும் அரங்கேறுவதை நீங்கள் காண்கிறீர்களா? பாலின நெகிழ்வுத்தன்மை மற்றும் பாலியல் சார்ந்த கருத்துக்களிலும் அவற்றுக்கான ஏற்புத்தன்மையிலும், பண்டைய புராணங்கள் இன்றும் செல்வாக்கு செலுத்துகின்றனவா?

ரோமானியப் பேரரசு கிறித்தவத்தின் 'ஒரே கடவுள்' என்ற கருத்தாக்கத்தால் வீழ்த்தப்பட்டது. பின்னர், அந்த கிறித்தவ உலகிற்கு 'ஐரோப்பிய அறிவொளி இயக்கம்' சவாலாக அமைந்தது; அது கடவுள் என்ற கோட்பாட்டை நிராகரித்து, அறிவியலுக்கு மதிப்பளித்தது. கடந்த காலத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அதையே ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது என்பது ஆபிரகாமியப் புராணவியல் பண்பாகும். இன்று டிரம்ப் அதே தர்க்கத்தைப் பயன்படுத்தி அறிவியல் சார்ந்த அனைத்தையும் நிராகரிக்கிறார்!

'ஒரே கடவுள்' மற்றும் 'ஒரே உண்மை' இருக்கும் உலகில், மாற்று சிந்தனைகளுக்கு இடமில்லை. அங்கு மாற்றுச் சிந்தனைகள் அனைத்தும் வெறும் கற்பனையாகவோ, போலித் தகவல்களாகவோ மாயையாகவோ பார்க்கப்படுகின்றன; இது அடிப்படையில் பன்முகத்தன்மையை நிராகரிப்பதாகும்.

அதேபோல், பன்முகத்தன்மை குறித்த இன்றைய நவீன விவாதங்கள் கூட மிகவும் முழுமையான பிடிவாதத்துடனும் (absolute), ஆதிக்கத் தன்மையுடனும் மோதுகின்ற போக்கிலுமே இருக்கின்றன. இருமைகளை அடிப்படையாகக் கொண்ட முந்தைய காலப் பார்வைகளுக்கு அங்கு இடமில்லை. இது மேற்கத்திய நேர்க்கோட்டுப் புராணவியல் (Western linear mythology) முறை; இதன் மிகவும் பிரபலமான வெளிப்பாடுதான் ஆபிரகாமிய மதங்கள்.

புராணங்கள் என்பது 'யாரோ ஒருவருடைய உண்மை' (Somebody’s truth), அது 'ஒற்றை முழுமுதல் உண்மை' (The Truth) அல்ல என்று பலமுறை நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது, இந்து, சமண, பௌத்த புராணங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட பாலினங்கள் மற்றும் பல்வேறு பாலியல் வெளிப்பாடுகளைப் பற்றிப் பேசியுள்ளன என்பதைத் தெரிந்துகொள்வது ஏன் இவ்வளவு முக்கியமானது ?

இந்து, சமண, பௌத்த புராணங்கள் கர்மவினையை அடிப்படையாகக் கொண்டவை – அதாவது நிகழ்காலம் என்பது கடந்த காலத்தின் எதிர்வினை, எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின் எதிர்வினையாக இருக்கும். இந்த உலகத்தைக் கட்டுப்படுத்துவது அல்ல, மாறாக உலகத்தைப் புரிந்துகொள்வதே இதன் நோக்கம். இந்த 'கர்மவினை' சார்ந்த மரபுகளை உருவாக்கிய முனிவர்கள் ஆண், பெண் ஆகிய இரு பாலினங்களோடு, 'பாலின நெகிழ்வுத்தன்மை' கொண்டவர்களையும் அங்கீகரித்தனர். இன்றைய எல்ஜிபிடிக்யூ (LGBTQ) சமூகத்தினரைக் குறிக்கும் பல சொற்களை அவர்கள் பயன்படுத்தினர்.

இது யூத-கிறித்தவ-இஸ்லாமியப் புராணங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அங்கு கடவுள் ஒருவரே, அவருக்குப் பாலினப் பண்புக்கூறுகள் அளிக்கப்படும்போது அவர் 'ஆணாகவே' முன்னிறுத்தப்படுகிறார். அங்கு தெய்வீகத்தன்மை என்பது பெண்ணாகவோ அல்லது பாலின நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவோ இருக்க இடமில்லை. இவ்வாறுதான், புராணங்கள் வெவ்வேறு கலாச்சாரங்களின் பன்முகத்தன்மையை நமக்கு வெளிப்படுத்துகின்றன.

நீங்கள் ஏன் கதைகளைச் சொல்ல விரும்புகிறீர்கள்? உங்களுக்குப் புராணவியலின் மீது ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன?

"கதைகள் உலகைப் பற்றிய நமது பார்வையை வெளிப்படுத்துகின்றன என்று நான் நினைக்கிறேன். 'இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடிந்தது' என்ற கதைகள் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் மிகவும் பிரபலம்; ஏனெனில், கிறித்தவத் தாக்கத்தின் காரணமாக ஒரு நாள் உலகம் 'ரட்சிக்கப்படும்' என்று அவர்கள் நம்புகிறார்கள். மேற்கத்திய கதைகள் கதைக்களத்துக்கும் நாடகீயத் தருணங்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. ஆனால், இந்தியக் கதைகளோ மனநிலைக்கும் உணர்ச்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் தருகின்றன.

மனித வாழ்வின் பன்முகத்தன்மையை ரசிப்பதற்கு கதைகள் ஒரு எளிய வழி. 'நீதி', ‘சமத்துவம்' என இன்று நாம் பயன்படுத்தும் கருத்தாக்கங்கள் கிரேக்க, கிறித்தவப் புராணங்களிலிருந்து உருவானவை என்பதை அவை வெளிப்படுத்துகின்றன. உலகை 'ரட்சிக்க' நினைக்கும் பல அரசியலர்களும் சமூக ஆர்வலர்களும் நினைப்பது போல, இந்தக் கருத்தாங்கள் அகில உலகத்துக்கும் பொதுவானவை அல்ல. புராணங்கள் அந்த உண்மையை நமக்கு உணர்த்துகின்றன.

நீங்கள் சொல்வதுபோல புராணங்கள் வெறும் குறியீடுகள் என்றால், அவை கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு வழியாகின்றன. ஆனால், பெரும்பாலும் அவை அப்படியே நேரடிப் பொருளில் புரிந்துகொள்ளப்படுகின்றன. நீங்கள் சொல்லும் கதைகளையும் மக்கள் இதே வழியில் புரிந்துகொள்ளக்கூடும் அல்லவா?

ஒரு பொறியாளரின் சிந்தனைக்கும், ஒரு கலைஞரின் சிந்தனைக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. பொறியாளர் கணிதத்தை விரும்புகிறார், உருவகங்களை நிராகரிக்கிறார். அதேபோல், சிலர் குறியீடுகளை (சூழலுக்கு ஏற்பப் பல அர்த்தங்கள் தருபவை) விட, அடையாளங்களையே (சூழல் எதுவாக இருந்தாலும் ஒற்றை அர்த்தம் தருபவை) விரும்புகிறார்கள்.

மேற்கத்திய கல்வியாளர்கள் அனைத்து இந்தியக் கதைகளையும் ஏதோ ஒரு ஒற்றை வார்ப்புக்குள் அடக்கவே விரும்புகிறார்கள். இதனால்தான் அவர்களுக்குச் சிவலிங்கம் என்பது வெறும் 'ஆண்குறி' மட்டுமே; அதைத் தவிர வேறொன்றுமில்லை. இந்தப் பார்வையை எதிர்க்கும் எந்தவொரு முயற்சியும், 'பிராமணிய ஆதரவு' அல்லது 'நடுத்தர வர்க்கப் போலி ஒழுக்கவாதம்' என்பது போன்ற புத்திசாலித்தனமான கலைச்சொற்களைக் கொண்டு அடக்கப்படுகிறது.

பல வெற்றிகரமான எழுத்தாளர்களைப் போலவே, உங்களுக்குப் பல அபிமானிகள் உள்ளனர். அதே சமயம், தாங்கள் ஏற்றுக்கொண்ட 'இந்து மதம்' வடிவத்தை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருப்பவர்கள் உங்களை விமர்சிக்கிறார்கள். பண்டைய புராணங்களை நீங்கள் மீண்டும் கூறுவது என்பது, ஒரு வகையில் நிலைபெற்றுள்ள மரபுகளைப் புரட்டிப்போடுவதற்கான முயற்சியாகக் கருதலாமா?

வாதிடுவதும், விவாதிப்பதும், ஒரே ஒரு 'முழுமுதல் உண்மையை'த் தேடுவதுமான உலகம் என்பது மேற்கத்தியக் கட்டமைப்பு; இது கிரேக்க, கிறித்தவச் சிந்தனை முறைகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே, தங்களின் இந்து மத வடிவத்தைப் பாதுகாக்கத் துடிப்பவர்கள், ஒன்று காலனி ஆதிக்கத்தின் தாக்கத்தால் மேற்கத்தியச் சிந்தனை முறைக்குள் அகப்பட்டவர்கள் அல்லது மாறுபட்ட கருத்துக்களைக் கையாளத் தெரியாத தங்களின் தன்முனைப்புக்குப் (அஹம்) பலியானவர்கள். அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டும். ஏனெனில், அவர்கள் தங்களின் சொந்தத் தகுதி அல்லது தங்களின் ஆத்திரத்தின் எல்லைகளுக்குள் சிறைப்பட்டவர்கள்.

தெரிவு, பொறுப்பு, சுதந்திரம் போன்ற பல சிக்கலான கருத்துக்களை மிக எளிமையான முறையில் விளக்குவதற்கு நீங்கள் புராணங்களைப் பயன்படுத்துகிறீர்கள். "ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளாதவர்கள்தான் அதை விளக்க ஸ்லோகங்களைப் பயன்படுத்துகிறார்கள்" என்று ஒருமுறை குறிப்பிட்டிருந்தீர்கள். பாலியல் மற்றும் பாலினம் குறித்துப் பேசும்போது பயன்படுத்தப்படும் சிக்கலான கலைச்சொற்கள், அது சார்ந்த புரிதல்களைத் தேவையற்ற முறையில் சிக்கலாக்குகின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

தன் சொந்தக் கருத்துகளின் மீது யாருக்கெல்லாம் சந்தேகம் இருக்கிறதோ, அவர்கள்தான் 'சமஸ்கிருதத்தையோ கலைச்சொற்களையோ தங்களின் ஊன்றுக்கோலாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு கருத்து, வேதங்களாலோ சாக்ரடீஸாலோ ஃபூக்கோவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே அது உண்மை ஆகிவிடாது. ஒரு கோட்பாட்டையோ கருதுகோளையோ முன்வைக்கும்போது ஒருவருக்குத் தனது சொந்தக் கருத்துக்களின் மீது ஆழ்ந்த நம்பிக்கை இருக்க வேண்டும். அதுவே மிக முக்கியமானது. அந்தத் தெளிந்த நம்பிக்கை, ஒரு விஷயத்தைத் தீர ஆராய்ந்ததன் மூலம் பிறப்பதாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

சிந்தனைகளுக்கு மொழி கிடையாது; மொழி என்பது கருத்துக்களைக் கொண்டு சேர்க்கும் கருவியாக இருக்க வேண்டுமே தவிர, அதைக் கட்டுப்படுத்துவதாக இருக்கக் கூடாது. பல பின்நவீனத்துவச் செயல்பாட்டாளர்கள், தங்களின் கருத்துக்களைக் கலைச்சொற்கள் எனும் சித்து விளையாட்டு மூலமாகச் சிதைத்துக் கொள்வதுடன், அவற்றைப் பொதுமக்களுக்குத் தொடர்பற்றதாகவும் மாற்றிவிடுகிறார்கள்.

புராணங்களை உருவாக்குதல் என்பது கடந்த காலத்தோடு முடிந்துபோன ஒன்றா? அல்லது இக்காலத்திலும் அத்தகைய உருவாக்கம் தொடர்கிறதா?

மனிதர்கள் ஓயாது புராணங்களை உருவாக்கிக்கொண்டேதான் இருக்கிறார்கள். தன்னை ஒரு ரட்சகனாகவோ தியாகியாகவோ கருதிச் செயல்படும் அரசியல்வாதிகளும் சமூகச் செயற்பாட்டாளர்களும் மேற்கத்தியப் புராணங்களுக்குள்ளேயே வாழ்கிறார்கள். மாற்றத்தை ஏற்றுக்கொண்டு பன்முகத்தன்மையைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் இந்தியப் புராண மரபுக்குள் இருக்கிறார்கள். அதுபோலவே, சமூக நல்லிணக்கத்துக்கு உயர்வு தாழ்வு எனும் அதிகாரப் படிநிலை அவசியம் என ஏற்பவர்கள் சீனப் புராண மரபைப் பின்பற்றுகிறார்கள். புராணங்கள் காலத்துக்கும் பிற எல்லைகளுக்கும் அப்பாற்பட்டவை. ஆனால், நாம் பகுத்தறிவுள்ளவர்கள் அல்லது மதப்பற்றாளர்கள் அல்லது நாகரிகமானவர்கள் என்பது போன்ற குறுகியநோக்கில், அவை வேறொரு வரலாற்றுக்கோ நிலப்பரப்புக்கோ உரியவை எனத் தவறாக எண்ணிக்கொள்கிறோம்.

(In Plainspeak இணைய இதழுக்காக ஷைஃபாலி அகர்வாலுக்கு தேவ்தத் பட்நாயக் அளித்த பேட்டியின் சுருக்கமான வடிவம்)

தமிழாக்கம்: ச.கோபாலகிருஷ்ணன்


Next Story

Related Stories

All Rights Reserved. Copyright @2019
Share it