ஈரானிய மக்களுக்காக யார் நிற்பார்கள்?
இந்தப் போரின் நோக்கம் ஈரானின் விடுதலை அல்ல; தோட்டாக்கள் உணவையும் சுதந்திரத்தையும் கொண்டு வராது.

ஈரானுக்குள் இருந்து வரும் செய்திகளை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன், என் துயரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த ஆட்சியால் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட ஒரு ஈரானியனாக, நாட்டின் அவலநிலையில் உலக மனித உரிமை அமைப்புகளும் ஊடகங்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கெஞ்சிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இப்போது ஈரானின் மீது அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுகள் விழுவதைப் பார்க்கிறேன்; அப்பாவி மக்கள்இறந்து கொண்டிருக்கும் வேளையில் சில ஈரானியர்கள் இந்தப் போரைக் கொண்டாடுகிறார்கள். என் நாட்டுக்காக என் இதயம் உடைகிறது.
‘சிங்கத்தின் கர்ஜனை’
நாம் தெளிவாக இருப்போம்: டொனால்டு ட்ரம்ப், பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் இந்தப் போரைத் தொடங்க சதி செய்தபோது, அது ஈரானிய மக்களை ஆட்சியின் கொடுங்கோன்மையிலிருந்து விடுவிக்கும் ஆசையினால் அல்ல. போரின் இரண்டாம் நாளில் நெதன்யாகு கூறினார்: "இந்த படைகளின் கூட்டணி, நான் 40 ஆண்டுகளாக எதைச் செய்ய ஏங்கினேனோ அதைச் செய்ய அனுமதிக்கிறது." இந்த நடவடிக்கைக்கு அவர் ‘சிங்கத்தின் கர்ஜனை’ என்று பெயரிட்டுள்ளார். இதற்கிடையில், ஈரானிய மன்னராட்சி ஆதரவாளர்கள், கிரீடம் அணிந்த சிங்கம் மற்றும் சூரியன் கொண்ட ஷா காலத்து தேசியக் கொடியை அசைத்துக்கொண்டு இந்த இனப்படுகொலையைக் கொண்டாடுகிறார்கள்.
ஆட்சி புதிய உயர் தலைவராக மொஜ்தபா காமேனியைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், புலம்பெயர்ந்து வாழும் மற்றொரு மனிதர் மன்னராக வேண்டும் என்று கனவு காண்கிறார். 1979 புரட்சியின்போது ஈரானியர்கள் யாரைப் பதவியிலிருந்து அகற்ற இவ்வளவு பாடுபட்டார்களோ, அந்த முன்னாள் ஷாவின் மகனான ரெசா பஹ்லவி, இப்போது நாட்டை வழிநடத்த தான் ‘தனித்துவமான நிலையில்’ இருப்பதாக நம்புகிறார். அவர் மார்ச் 1 அன்று ட்வீட் செய்தார்: "ஆட்சியால் கொல்லப்பட்ட 3 அமெரிக்க வீரர்களுக்காகவும், காயமடைந்த 5 பேருக்காகவும் என் இதயம் வலிக்கிறது. ஈரானிய மக்கள் எப்போதும் அவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளனர். துயருறும் அவர்களின் குடும்பங்களுக்கு: தயவுசெய்து எங்களது அளவற்ற அன்பு, ஆழ்ந்த இரங்கல் மற்றும் நித்திய நன்றியை ஏற்றுக்கொள்ளுங்கள்." அவர் ஈரானியரை விட அமெரிக்கராகவே இருக்கிறார். அவர் உண்மையான ஈரானியராக இருந்தால், இந்த சமீபத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈரானிய பொதுமக்களுக்காக வருத்தம் தெரிவித்திருப்பார்; இதில் அமெரிக்கத் தாக்குதலால் கொல்லப்பட்ட 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளும் அடங்குவர்.
ஈரானுக்குள் மன்னராட்சி கொடியை ஏற்றுபவர்களையும், நாட்டுக்கு வெளியே அவ்வாறு செய்பவர்களையும் நாம் ஒரே மாதிரியாக மதிப்பிட முடியாது. புலம்பெயர்ந்த சில மன்னராட்சி ஆதரவாளர்கள் ஒரு காலத்தில் இஸ்லாமியக் காவலர்களாக இருந்தவர்கள், அமெரிக்க-இஸ்ரேலியப் போர் அவர்களை அதிகாரத்துக்குக் கொண்டுவரக்கூடும். ஈரானில் இருப்பவர்கள் ஈராக்குடனான எட்டு ஆண்டுகாலப் போரை அனுபவித்தவர்கள், போர் என்பது திகிலையும் மரணத்தையும் கொண்டுவரும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அவர்கள் ஏற்கனவே ஆட்சியின் கைகளால் பலமுறை இறந்துவிட்டார்கள். நீரில் மூழ்கும் ஒரு நபர் எதையேனும் பற்றிக்கொள்ள முயற்சிப்பார், அது அவரை மேலும் கீழே இழுத்தாலும்கூட. இதனால்தான் சிலர் பஹ்லவியை ஏற்றுக்கொள்கிறார்கள். 1953இல், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் ஒரு சதியை நடத்தி, பஹ்லவியின் தந்தை முகமது ரெசா பஹ்லவியை அதிகாரத்தில் அமர்த்தின. இப்போது அது போன்ற ஒன்றைச் செய்யும் முயற்சியை நாம் காண்கிறோம்.
ட்ரம்ப், நெதன்யாகு மற்றும் பஹ்லவி ஆகியோர் மீண்டும் ஒருமுறை மக்களை கிளர்ந்தெழக் கேட்டுக்கொண்டனர். கடந்த முறை விடுக்கப்பட்ட கிளர்ச்சி அழைப்பை மக்கள் ஏற்கனவே மறந்துவிட்டார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஜனவரி 13 அன்று, ட்ரம்ப் ஈரானியர்களிடம் கூறினார்: "தொடர்ந்து போராடுங்கள்... உதவி வந்துகொண்டிருக்கிறது." எந்த உதவியும் வரவில்லை, பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது. ட்ரம்ப் மீண்டும் மக்களிடம், கிளர்ந்தெழுந்து "உங்கள் அரசாங்கத்தைக் கைப்பற்றுங்கள்" என்று கூறியுள்ளார். ஆனால் உதவி வரவில்லை - குண்டுகள் மட்டுமே வருகின்றன.
நெதன்யாகுவின் அறிக்கை, பஹ்லவியின் இதே போன்ற அழைப்பு மற்றும் மக்களின் போராட்டத்தைத் தொடருமாறு ட்ரம்ப் விடுத்த கோரிக்கை ஆகியவை, உண்மையில் மக்களை மரணத்தை நோக்கித் தள்ளுகின்றன; ஏனெனில் ரொட்டிக்காகவும் சுதந்திரத்துக்காகவும் வீதிகளில் இறங்குபவர்களை 'வெளிநாட்டு உளவாளிகள்' என்று முத்திரை குத்த இது ஆட்சிக்கு வாய்ப்பளிக்கிறது. அதிகாரத்தைக் கைப்பற்றியது முதல், இந்த ஆட்சி போராட்டக்காரர்களை அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் ஏஜென்டுகள் என்று குற்றம் சாட்டி வழக்கமாக மரணதண்டனை நிறைவேற்றிவருகிறது. சமீபத்திய கிளர்ச்சிகளில் கொல்லப்பட்டவர்களுடன் சேர்த்து, 50,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அப்பாவி மக்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் உள்ளனர்.
போரின் நோக்கம் ஈரானின் விடுதலை அல்ல
அமெரிக்கா அல்லது இஸ்ரேலுடன் ஒத்துழைப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாக இருக்கும் ஒரு நாட்டில், அப்பாவி மக்களிடம் இத்தகைய கோரிக்கைகளை வைப்பது பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது. மக்களின் எழுச்சி வெற்றியடைவதைக் கண்டு பல அதிகார மையங்கள் அஞ்சியதாகவே எனக்குத் தோன்றுகிறது. இந்த ஆட்சி மட்டுமல்ல, இஸ்ரேலும் அமெரிக்காவும்கூட மக்கள் தாங்களாகவே இஸ்லாமியக் குடியரசை வீழ்த்திவிடுவார்களோ என்று மிகவும் கவலைப்பட்டதாகத் தெரிகிறது. சாதாரண மக்களால் வழிநடத்தப்படும் ஒரு கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது. அதனால்தான் இந்த ஆட்சி மாற்றம் கவனமாக நிர்வகிக்கப்படுகிறது, மற்றும் கீழிருந்து இயற்கையாக உருவெடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. இந்தப் போரின் நோக்கம் ஈரானின் விடுதலை அல்ல; தோட்டாக்கள் உணவையும் சுதந்திரத்தையும் கொண்டு வராது என்று கூறும் விமர்சகர்கள், பின்னர் மன்னராட்சி ஆதரவாளர்களால் தாக்கப்படுகிறார்கள். "நீங்கள் எங்களுடன் இருங்கள், அல்லது ஆட்சியுடன் இருங்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள். மன்னராட்சி ஆதரவாளர்கள் நம் காலத்து அரசியலை இப்படித்தான் புரிந்துகொள்கிறார்கள் - ஏனெனில் அவர்கள் ஒருபோதும் அரசியலில் தீவிரமாக இருந்ததில்லை, சிறையையோ சித்ரவதையையோ அனுபவித்ததில்லை.
இந்த ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியபோது, என் தலைமுறை அவர்களுக்கு எதிராகப் போராடியது. எங்களில் பல்லாயிரக்கணக்கானோர் தூக்கிலிடப்பட்டனர், அதே நேரத்தில் பல மன்னராட்சி ஆதரவாளர்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறினர். படையெடுப்புக்கும் பொதுமக்களின் கொலைக்கும் எதிராக இருக்கும் ஈரானியர்களை மன்னராட்சி ஆதரவாளர்கள் கண்டிக்கின்றனர். நான் கேட்ட அவர்களின் முழக்கங்களில் ஒன்று: "முல்லாக்களுக்கும், இடதுசாரிகளுக்கும், மொஜாஹிதீன்களுக்கும் மரணம்." கற்பனை செய்து பாருங்கள் - பல தசாப்தங்களாக ஆட்சியின் கைகளால் தூக்கிலிடப்பட்ட பிறகு, மன்னராட்சி ஆதரவாளர்கள் இப்போது அதே மக்களை அமைதிப்படுத்த அதே தூக்குக்கயிற்றைப் பகிரங்கமாக அழைக்கிறார்கள்.
இப்போது இந்த அதிகாரங்கள் ஈரானிய மக்களுக்கு எதிராக ஒன்றுபட்டுள்ள நிலையில், உலகின் பிற பகுதிகள் ஒன்றிணைந்து, வானத்திலிருந்து விழும் இந்த பொதுமக்களின் படுகொலைக்கு எதிராகத் தோளோடு தோள் நின்று எதிர்க்க வேண்டும். மேற்கத்திய மக்கள் இந்தப் போருக்கு எதிராக வெளிவந்து அதன் முடிவைக் கோருவார்கள் என்று நான் நம்புகிறேன்.
- தமிழில்: ஆசை
- நன்றி: தி கார்டியன் நாளிதழ்


