ஈரானில் எப்போது அமைதி திரும்பும்?
ஈரானின் மக்கள் புரட்சியும் பின்னணியும்

கிறிஸ்துமஸ் ஈரானில் முக்கியமான பண்டிகையல்ல. பொங்கலைப் பற்றி அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சமீபத்தில், இவ்விரு பண்டிகைகளுக்கிடையில் ஈரானில் நடந்த சம்பவங்கள், அதன் வரலாற்றில் எப்போதைக்குமாக நிலைத்துவிட்டன. டிசம்பர் கடைசியில் தொடங்கிய மக்கள் திரளின் எழுச்சி, ஜனவரி இரண்டாம் வாரத்தில் மட்டுப்பட்டது. ஈரானுக்கு எதிராக எங்கள் ஆயுதங்கள் தயாராக இருக்கின்றன என்று அறைகூவல் விடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இப்போது பின்வாங்கியிருக்கிறார். முன்னதற்குக் காரணம், ஈரானிய அரசு போராட்டங்களைக் கடுமையாக ஒடுக்கியதாகும். பின்னதற்குக் காரணம் வெளிப்படையாகத் தெரியவில்லை. மேற்கு ஆசியாவில் ஒரு தாக்குதலைத் தவிர்க்குமாறு வளைகுடா நாடுகள் தங்கள் நண்பரான அமெரிக்காவிடம் வேண்டிக்கொண்டன என்று சொல்லப்படுகிறது. சரி, அப்படியானால், பிரச்சினை முடிந்ததா? இல்லை. மக்கள் எழுச்சிக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன. மக்களின் சினம் கனன்றுகொண்டிருக்கிறது. அமெரிக்காவின் ஆதிக்க ஆசையும் அணையவில்லை, அது எப்போது வேண்டுமானாலும் கிளர்ந்தெழலாம். என்ன நடக்கிறது ஈரானில்? பிரச்சினை எப்படித் தொடங்கியது?
ஈரான் நாணயம் ரியால். அதன் மதிப்பு இந்த டிசம்பரில் 16% சரிந்தது. கடந்த ஆறு மாதங்களில் அது 60% தாழ்ந்தது. உணவுப் பொருட்கள் தொடர்பான பணவீக்கம் மட்டும் 72% உயர்ந்தது. வணிகர்களால் பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. சந்தையில் விற்கவும் இயலவில்லை. அவர்கள் டிசம்பர் 28ஆம் நாள் கடைகளை அடைத்தனர். இந்தக் கடையடைப்பு விரைவில் மக்கள் போராட்டமாக மாறியது. இளையோர், முதியோர், மாணவர், தொழிலாளர் எல்லோரும் இணைந்தனர். பொருளாதாரக் கோரிக்கை, எதேச்சதிகாரத்துக்கு எதிராகவும், சமூக விடுதலைக்கான குரலாகவும் மாறியது.
இந்தப் பொருளாதாரச் சீர்கேட்டுக்கு ஈரானிய ஆட்சியின் குறைபாடு மட்டும் காரணமல்ல. உலகிலேயே மேற்கு நாடுகளின் தண்டனைத் தடைகளால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நாடு ஈரான்தான்.
1979இல் அமெரிக்க ஆதரவு மன்னராட்சி அகற்றப்பட்டு இஸ்லாமியக் குடியரசு நிறுவப்பட்டது. அமெரிக்கா உடனே ஈரானிலிருந்து எரிபொருள் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. அயலில் உள்ள ஈரானின் சொத்துகளும் பங்குப் பத்திரங்களும் முடக்கப்பட்டன. ஈரானில் அந்நிய முதலீடுகள் தடை செய்யப்பட்டன. இந்த நிலை 2015இல் மாறியது. ஈரான் தனது அணு உலைகளை ஐநாவின் ஆய்வுக்கு உட்படுத்தியது. அப்போது ஆட்சியில் இருந்த ஒபாமாவுடன் தடைகளை விலக்க ஒப்பந்தமும் மேற்கொண்டது (ஜே.சி.பி.ஓ.ஏ.). ஆனால் அடுத்து அரியணை ஏறிய ட்ரம்ப் ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார் (2018). இதற்கு இஸ்ரேலின் அழுத்தமும் ஒரு முக்கியக் காரணம். மேற்கு ஆசியாவில் இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராகப் பெரிதாகக் குரல் கொடுப்பதில்லை. ஆனால், ஈரான் விதிவிலக்கு. ஆகவே, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாட், ஈரானில் சைபர் தாக்குதல்கள், நாச வேலைகள், ஆயுதக் கடத்தல்/பயிற்சி என்று பல ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உச்சமாக, கடந்த ஆண்டு ஜூனில் நேரடித் தாக்குதலில் ஈடுபட்டது. அதில் அமெரிக்காவும் இணைந்தது. இதன் பிறகு ஈரானின் பொருளாதாரம் வேகமாக வீழ்ந்தது.
வணிகர்கள் மட்டுமே போராட்டக் களத்தில் இருந்தபோது அரசு தன்மையாகவே எதிர்கொண்டது. ஜனவரி 2ஆம் நாள் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாஹூவைச் சந்தித்ததும், ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். ஜனவரி 8இல் ஈரான் அரசு இணையத்தை முடக்கியது. ஜனவரி 10 முதல் அரசு, போராட்டக்காரர்களைக் கடுமையாக ஒடுக்கியது. போராட்டத்தில் மாண்டவர்களைக் குறித்து அதிகாரப்பூர்வமாக அறியக் கூடவில்லை. நார்வேயில் இயங்கும் மனித உரிமை அமைப்பு 3000க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்று கணிக்கிறது. அரசப் படையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 130ஆக இருக்கும் என்றும் அந்த அமைப்பு கூறுகிறது. அதாவது போராட்டக்காரர்கள் இடையில் ஆயுததாரிகள் இருந்திருக்கின்றனர். இதில் மொஸாடின் பங்கு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஜனவரி 13 அன்று போராட்டம் பெரிதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
போராட்டம் உச்சத்திலிருந்தபோது, ஜெர்மானிய வேந்தர் (Chancellor) பிரெட்ரிக் மெர்ஸ் ஈரானிய அரசு வீழ்ந்துபடும் என்று ஆரூடம் கூறினர். ஆனால் அப்படி நடக்கவில்லை. நடப்பதற்கான சாத்தியங்களும் குறைவு. இரண்டு காரணங்களைச் சுட்டலாம். ஒன்று- இந்தப் போராட்டம் தன்னெழுச்சியாக எழுந்தது. இதற்கு மக்களின் ஏற்புடைய தலைவர் எவருமில்லை. இரண்டு- காவல் துறையும் ராணுவமும் அரசுக்குப் பக்கபலமாக நிற்கின்றன. அவைதான் இந்தப் போராட்டத்தைக் கடுமையாக ஒடுக்கியும் இருக்கின்றன.
அமெரிக்கா இதுகாறும் நேரடித் தாக்குதலில் ஈடுபடவில்லை. இதற்கு வளைகுடா நாடுகளின் கோரிக்கையே காரணம் என்பதாகச் செய்திகள் கிடைக்கின்றன. வளைகுடா நாடுகளுக்கு ஈரானின் மீது எந்தக் கரிசனமும் இல்லை. அமெரிக்கா இதற்கு முன்பு தலையிட்டுப் போர் தொடுத்த ஆப்கானிஸ்தான் (2011), ஈராக் (2003), லிபியா (2011) முதலிய நாடுகளில், பிரச்சினைகள் தீரவில்லை, மாறாக மிகுந்திருக்கின்றன. ஆகவே தங்கள் அண்டையில் இன்னொரு பிரச்சினை உருவாக வேண்டாமென்று வளைகுடா நாடுகள் கருதியிருக்கலாம்.
ஈரானிய அரசு, நாட்டில் அமைதி திரும்பிவிட்டதாகச் சொல்கிறது. இருக்கலாம். ஆனால் தங்களது சமூக உரிமைகள் மீளக் கிடைக்கும் வரை மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். ஆகவே, நாட்டில் ஜனநாயகம் மீண்டெழ ஈரானிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அது நட்பு நாடுகளைத் திரட்டி அமெரிக்கா-இஸ்ரேல்-ஐரோப்பா கூட்டணிக்கு அழுத்தம் கொடுத்து, தண்டனைத் தடைகளை விலக்க வேண்டும். வளைகுடா நாடுகள் தங்கள் சுயநலத்தைத் துறந்து அமெரிக்க ஏகாதிபத்தியதை எதிர்க்க வேண்டும். அப்போதுதான் ஈரானில் உண்மையான அமைதி வரும்.


