Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
6 நிமிட வாசிப்பு

என்ன நடக்கிறது மேற்காசியாவில்?: ஒரு நேரடி சாட்சியம்

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துவரும் நிலையில் மேற்காசிய நாடுகளில் சாமானிய மக்கள் பெரும் பதற்றத்துடன் வாழ்கின்றனர்.

என்ன நடக்கிறது மேற்காசியாவில்?: ஒரு நேரடி சாட்சியம்
X

தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. எங்கள் வீட்டில் பணிப்பெண் இலங்கைத் தமிழர். தனது மூன்று பெண் குழந்தைகளுடன் இருக்க இந்த வார இறுதியில் கொழும்பு செல்லத் திட்டமிட்டிருந்தார். அந்தப் பெண்ணின் ஒன்பது வயது மகள், தனக்காக 'குனாஃபா சாக்லேட்' உள்ளிட்ட சில பொருட்களை வாங்கி வரக் கேட்டிருந்தாள். அதற்காக அவர் கடைக்குப் போக விரும்புகிறார்—ஆனால் மால்கள் திறந்திருக்குமா எனத் தெரியாததால் நான் அவரை ஒரு நாள் பொறுத்திருக்கச் சொன்னேன்.

வீதிகள் வெறிச்சோடிக்கிடக்கின்றன, பள்ளிகளும் பல அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன என்று வேலைக்குச் சென்ற எனது கணவர். நோன்பு முடிந்து நோன்பு கஞ்சி குடிப்பதற்காக மக்கள் அவசரமாகத் தங்கள் கார்களை ஓட்டிச் செல்லும் 'ரமலான் காலத்து வேகம்' இன்று சாலைகளில் இல்லை.

இது போரின் நான்காவது நாள். பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. அதற்குப் பதிலடியாக ஈரான், கத்தார் உள்ளிட்ட பல மேற்காசிய நாடுகளில் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.

தலைக்கு மேல் வெடிக்கும் குண்டுகள்

"இப்படிப்பட்ட 'குண்டுவெடிப்புகளை' நான் பார்த்ததே இல்லை" என்கிறார் என் மகனின் பேச்சுப் பயிற்சியாளர் மார்க்.அவர் பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர். அந்நாட்டின் தூதரகம் அவரை வீட்டிலேயே இருக்கச் சொல்லியும் அவர் வேலைக்கு வந்துவிட்டார். "நானும்தான்" என்றேன் நான். இந்தியாவில் மதக்கலவரங்கள், குண்டுவெடிப்புகள், எல்லை மோதல்கள் என வன்முறைகள் நடந்தாலும், இவ்வளவு அருகில் எதையும் நான் பார்த்ததில்லை. இந்தப் போர் வானத்தில் நடக்கிறது, அதை நாம் தரையிலிருந்து பார்க்கிறோம். அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளமான 'அல் உதைத்' எங்கள் வீட்டிலிருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அந்தப் பகுதியை நோக்கி ஈரான் ஏவுகணைகளை ஏவியபோது, அபாயச் சங்குகள் அலற, எங்கள் தலைக்கு மேலேயே பட்டாசுகள் வெடிப்பது போன்ற காட்சிகளைக் கண்டோம்.

ஏவுகணைகள் இடையில் மறிக்கப்படும்போது வானம் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறத்தில் ஜொலித்தது; எங்கள் வீட்டுக் கண்ணாடி ஜன்னல்களும் கதவுகளும் அதிர்ந்தன. கண்ணாடிகள் உடைந்தால் பாதிப்பு ஏற்படும் என்பதால் அவற்றிடமிருந்து விலகி இருக்க வேண்டும். ஒரு காணொளியில் ஒரு குடும்பமே பாத் டப்புக்குள் தஞ்சம் அடைந்திருந்ததைக் கண்டபோது கவலையாகத்தான் இருந்தது. நாங்களும், மற்றவர்களைப் போலவே எங்களுக்கு நேரும் அனுபவங்களை காணொளியாகப் பதிவு செய்து இந்தியாவில் உள்ள நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பினோம்.

என் மகள் அந்தக் காணொளிகளைத் தன் நண்பர்களுக்கு அனுப்ப விரும்பினாள்—அவளது தோழியின் தந்தை ராணுவத்தில் இருக்கிறார், "அவர் வெள்ளையர், அமெரிக்கரா அல்லது பிரிட்டிஷ்காரரா எனத் தெரியவில்லை" என்றாள். காணொளியை அந்தத் தோழிக்குக் அனுப்ப வேண்டாம் என்று நாங்கள் அதைத் தடுத்துவிட்டோம். அவசரத் தேவை இன்றி வெளியே வர வேண்டாம் என எங்கள் கைபேசிகளில் தேசிய நெருக்கடிகால எச்சரிக்கை சத்தம் (Emergency Alert) மீண்டும் மீண்டும் ஒலித்து எங்களைத் திடுக்கிடச் செய்தது.

இவற்றுக்கு இடையிலும், கடந்த ஏப்ரல் மாதம் ஈரான் நடத்திய தாக்குதல் வெறும் அடையாளபூர்வமாக இருந்தது போல இப்போதைய மோதலும் பெரிய ஆபத்தில்லாத ஒன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. நாங்கள் இன்னும் பீதியடையவில்லை.

இந்தத் தாக்குதல்கள் தொடங்கிய காலை வேளையில், ஆறு கோள்கள் வரிசையாகத் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு ஒன்றும் நடந்தது. அதைப் பார்க்க வெளியே சென்ற என் மகள், "ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் இந்த கிரக அணிவகுப்பு நாளைத் தேர்ந்தெடுத்திருக்கிறது அல்லது ரமலான் பெருநாளைக் கெடுக்க விரும்புகிறது" என நம்புகிறாள்.

தாய்நாட்டுச் சொந்தங்களின் பதற்றம்

இந்தியாவில் உள்ள எங்கள் உறவினர்கள் எங்களை விட அதிகக் கவலையில் உள்ளனர். ஒரு நண்பர் எங்களை நிலத்தடி அறைக்கு செல்லச் சொன்னார்—எங்கள் குடியிருப்பில் அப்படி ஒன்று இல்லை. மற்றொருவர் பதுங்கு குழி இருக்குமே என்றார். உறவினர் ஒருவர், "அங்கே அமெரிக்க விமானங்கள் விழுந்து நொறுங்கியதாமே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?" எனக் கேட்டார். "என்ன? எனக்குத் தெரியாதே" என்று நான் கூகுளில் தேடிப் பார்த்தேன். அது 500 கி.மீ தொலைவிலுள்ள குவைத்தில் நடந்துள்ளது.

பொது அறிவு அதிகம் உள்ளவர்களுக்குக்கூட இந்தப் பிராந்தியத்தின் புவியியல் குறித்த எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பது வேடிக்கையாக உள்ளது. ஒருவருக்கு தோஹா கத்தாரில் இருப்பது தெரியவில்லை; இன்னொருவர் துபாய் சவுதி அரேபியாவில் இருப்பதாக நினைக்கிறார்; மற்றொருவர் குவைத்தும் ஓமனும் ஒன்றுதான் என நினைக்கிறார்.

தோஹா விமான நிலையத்தைக் குறிவைத்த ஏவுகணை இடைமறிக்கப்பட்டதாகச் செய்திகள் வருகின்றன. கத்தார் எனர்ஜி எண்ணெய் நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்திவிட்டது கிடங்குகளையும் மூடியுள்ளது. ஒரு சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, அநேகமாக, விழுந்த ஏவுகணைச் சிதறல்களால் இருக்கலாம். "சமையல் எரிவாயுவுக்கு என்ன செய்வாய்?" என என் சகோதரி கவலையுடன் கேட்கிறாள். எனக்குத் தெரியவில்லை. நாங்கள் நோன்பு இருப்பதால் சமையல் குறித்த கவலை இல்லை. ஆனால், பெருநாளுக்குள் போர் முடிந்துவிட வேண்டுமே என்ற கவலை இருகக்த்தான் செய்கிறது.

உணவு டெலிவரி மற்றும் வாடகை கார் செயலிகள் வழக்கம்போல் இயங்குகின்றன. குண்டு சத்தங்களுக்கு மத்தியிலும் மார்க் ஊபர் புக் செய்து வீட்டுக்குச் சென்றார். புவிசார் அரசியலும் போர்களும் வாடகைக் கார் ஓட்டுநர்கள் போன்ற விளிம்புநிலைத் தொழிலாளர்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.

மெல்ல மங்கும் நம்பிக்கை ஒலி

ஆனால், "நாங்கள் பாதுகாப்பாக இருப்போம்" என்ற நம்பிக்கை மெல்லத் தேயத் தொடங்குகிறது. இங்கு புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டுப் பெண்களுக்கான ஃபேஸ்புக் குழுவில், அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பையைத் தயார் நிலையில் வைத்திருப்பது பற்றி விவாதிக்கிறார்கள். டொனால்டு ட்ரம்ப் இந்தப் போர் நான்கு வாரங்கள் நீடிக்கலாம் என்கிறார்; பெஞ்சமின் நெதன்யாகு ஒரு வருடத்துக்கும் குறைவான காலம் இந்தப் போர் தொடரக்கூடும் என்கிறார். கத்தாரில் உள்ள இன்னும் பல இடங்களைக் குறிவைக்கிறது ஈரான்.

என் மகளின் வார்த்தைகளில் சொன்னால், இந்த வெடிப்புச் சத்தங்கள் இப்போது வெறும் பின்னணி ஒலி ஆக மாறிவிட்டன.

போரின் ஆறாவது நாளில், அமெரிக்கத் தூதரகம் அருகே வசிப்பவர்கள் அதிகாலையிலேயே வெளியேற்றப்பட்டனர். விரைவில், வானில் ஏவுகணைகள் தோன்றின, "ஆபத்து அதிகரித்துள்ளது" என எச்சரிக்கை குறுஞ்செய்தி வந்தது. என் மகளின் ஆன்லைன் வகுப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டன. நாங்கள் மளிகைப் பொருட்களைச் சேமித்து வைக்கலாமா என யோசிக்கிறோம்.

என் வீட்டு உதவியாளர் தனது மொபைலில் ஒரு தமிழ்க் காணொளியைக் காட்டி, விமான நிலையம் திறந்துவிட்டதாகச் சொன்னார்; அது பொய் என்று நான் கூறினேன். பிறகு, அவரது விமானம் ரத்துசெய்யப்பட்டதாக மின்னஞ்சல் வந்தது. அவர் "என் பிள்ளைகள் என்ன செய்வார்கள்... அவர்களின் தந்தை அவர்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்" என்று அழத் தொடங்கினார்.

குழந்தைகள். அவருடையவர்கள், என்னுடையவர்கள். காஸாவில் இருப்பவர்கள். லெபனானில். ஈரானில்... ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இரண்டு சிறுமிகள் பள்ளிகள் தாக்கப்பட்டு 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்—அவர்களின் சிறிய பைகள் இடிபாடுகளில் சிதறிக்கிடக்கின்றன.

(மேற்காசியாவில் இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், அங்குள்ள சாமானிய மக்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை கத்தாரில் வாழும் இந்திய வம்சாவளி பத்திரிகையாளர் சபா ரஹ்மான் மிக உயிர்ப்புடன் பதிவு செய்துள்ளார். போலிச் செய்திகளுக்கு மத்தியிலான உண்மையான நிலவரத்தை விவரிக்கும், கட்டுரை இது.)

- தமிழில்: ச.கோபாலகிருஷ்ணன்

- நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it