Top
Begin typing your search above and press return to search.

ஈரானில் என்னதான் நடக்கிறது?

முழுமையான பின்னணி 10 குறிப்புகளில்

ஈரானில் என்னதான் நடக்கிறது?
X

ஈரானின் தெருக்களில் இன்று ரத்தம் ஆறாக ஓடுகிறது.

அரசு வன்முறையால் கடந்த சில வாரங்களில் மட்டும் 3,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

86 வயதான உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சிக்கு எதிராகத் தேசமே திரண்டிருக்கிறது.

போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து, இந்த ஆட்சியின் கவிழ்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

ஈரானில் என்னதான் நடக்கிறது?

1. மத்திய கிழக்கின் பாரிஸ் (1979க்கு முன்)

50 ஆண்டுகளுக்கு முன்பு ஈரான் நவீனத்துவத்தின் உச்சமாக இருந்தது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முழு சுதந்திரம் இருந்தது; தெஹ்ரானின் வீதிகளில் பெண்கள் நவீன உடைகளுடன் தத்துவங்கள் பேசி உலவினர். ஆனால், அமெரிக்க ஆதரவுடன் செயல்பட்ட மன்னர் ஷா முகமது ரெசா பஹ்லவியின் இந்த வளர்ச்சி மேல்தட்டு வர்க்கத்திற்கு மட்டுமே பலன் தந்தது. மன்னரின் ஊழலும் அடக்குமுறையும் சாமானியர்களிடம் பெரும் அதிருப்தியை விதைத்தது.

2. இஸ்லாமியப் புரட்சியும் தலைகீழ் மாற்றமும்

மன்னருக்கு எதிராக மதவாதிகளும் இடதுசாரிகளும் ஒன்றிணைய, 1979இல் மிகப்பெரிய புரட்சி வெடித்தது. மன்னர் ஷா முகமது ரெசா பஹ்லவி குடும்பத்தோடு அமெரிக்காவிற்குத் தப்பி ஓடினார். ஈரான் ஒரு 'இஸ்லாமியக் குடியரசாக' மாறி, அதிகாரம் மதகுருக்களின் கைக்குச் சென்றது. ஷரியா சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு, பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமானது. தங்கள் ஆதரவு மன்னர் ஆட்சியை கவிழ்த்ததால், அன்றிலிருந்து அமெரிக்காவின் தீவிர எதிரியாக ஈரான் உருவெடுத்தது.

3. மஹ்சா அமினியால் பற்றிய நெருப்பு (2022)

கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் மக்கள் இந்த இறுக்கமான கட்டுப்பாடுகளை சகித்து வாழ்ந்துவந்த நிலையில் 2022இல் அதில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது. 2022 செப்டம்பரில் மஹ்சா அமினி என்ற இளம் பெண், ஹிஜாப் சரியாக அணியவில்லை என்பதற்காகக் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் மரணமடைந்தார். பெண்கள் வீதிகளில் இறங்கினர். இது வெறும் ஆடைக்கான போராட்டமாக இல்லாமல், 'பெண், வாழ்க்கை, சுதந்திரம்' என்ற முழக்கத்தோடு ஒட்டுமொத்த அடக்குமுறைக்கு எதிரான போராட்டமாக மாறியது.

4. 2026: வாழ்வாதாரப் போராட்டமாக மாறிய ஆட்சி மாற்றம்

2022இல் உரிமைகளுக்காகத் தொடங்கிய போராட்டம், இன்று 2026இல் பசிக்கான போராட்டமாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் பண மதிப்பு வீழ்ந்து, ஒரு கிலோ சிக்கன் வாங்குவது கூட ஈரானியர்களுக்கு இன்று ஆடம்பரக் கனவாகிவிட்டது. முன்பு 'தனிமனிதசுதந்திரம்' கேட்ட நடுத்தர வர்க்கத்தோடு, இன்று 'பசி' என்று வீதிக்கு வரும் அடித்தட்டு வர்க்கமும் இணைந்திருப்பதுதான் கமேனி ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நிஜமான நெருக்கடி.

5. ராணுவப் பெருமையின் வீழ்ச்சி

பொருளாதாரச் சீர்குலைவுக்கு இணையாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தொடர் தாக்குதல்கள் ஈரானின் முக்கிய ராணுவ மையங்களைச் சிதைத்துள்ளன. ‘தலைவர் நம்மைக் காப்பார்’ என்ற சித்தாந்த நம்பிக்கை சிதைந்துவிட்டதால், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் என இரண்டு தளங்களிலும் தோற்றுப்போன கமேனி அரசுக்கு மக்கள் 'கடைசி எச்சரிக்கை' விடுத்துப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

6. ரெசா பஹ்லவி: இறுதிப்போர்

நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட மன்னரின் மகன் ரெசா பஹ்லவி, இந்தப் போராட்டங்களின் முக்கிய உந்துசக்தியாக மாறியுள்ளார். அமெரிக்காவிலிருந்து அவர் விடுத்த ‘இறுதிப் போர்’ என்ற அழைப்பு மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அவரை ஒரு மன்னராகப் பார்ப்பதைவிட, மதகுருக்களின் ஆட்சிக்கு மாற்றான ஒரு 'ஒருங்கிணைப்பாளராகவே' பார்க்கிறார்கள்.

8. ஈரானில் ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்நோக்கும் அமெரிக்கா

தற்போதைய கொந்தளிப்பைப் பயன்படுத்தி ஈரானைக் கவிழ்க்க அமெரிக்கா காய் நகர்த்துவதற்கு சில காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ஈரான் அணு ஆயுதம் ஏந்திய நாடாக மாறிவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது; இது இஸ்ரேலின் பாதுகாப்பிற்கும் அமெரிக்க ஆதிக்கத்திற்கும் பெரும் சவாலாகும். இரண்டாவதாக, மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்படும் ஹிஸ்புல்லா, ஹமாஸ், மற்றும் ஹவுதி போன்ற ஆயுதக் குழுக்களுக்கு ஈரான் அளிக்கும் ஆதரவைத் துண்டிப்பது அமெரிக்காவின் இலக்கு. மூன்றாவதாக, ஈரானின் எண்ணெய் வளத்தை அமெரிக்க ஆதரவு ஆட்சியின் கீழ் கொண்டு வருவதுடன், ரஷ்யா-சீனாவுடனான ஈரானின் ராணுவக் கூட்டணியை உடைக்கவும் அமெரிக்கா முயல்கிறது. இறுதியாக, 1979இன் வரலாற்றுப் பகைக்குப் பழிவாங்கி தன் மேலாதிக்கத்தை நிலைநாட்டவே ஈரானில் ஆட்சிக் கவிழ்ப்பை அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

8. அமெரிக்க தலையீட்டின் ஆபத்து

அதிபர் ட்ரம்ப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தருவது அவர்களுக்கு உத்வேகம் தந்தாலும், அதுவே கமேனிக்கு ஒரு 'ஆயுதமாகிறது'. "இது அமெரிக்கத் தூண்டுதல்" என்று கூறி போராட்டக்காரர்களைத் தேசத்துரோகிகளாகச் சித்தரிக்க அவர் முயல்கிறார். ஈரானியர்கள் தங்கள் அரசை வெறுத்தாலும், ஈராக் அல்லது சிரியாவைப் போலத் தங்கள் நாடு அந்நிய சக்திகளால் சிதைக்கப்படுவதை விரும்பவில்லை.

9. 1979க்கும் 2026க்கும் உள்ள வேறுபாடு

1979இல் புரட்சி ஏற்பட்டபோது மன்னர் ஷாவை ராணுவம் கைவிட்டது, அதனால் புரட்சி வென்றது. ஆனால் இன்றைய ராணுவம் கமேனிக்கு மட்டுமே விசுவாசமானது. 'புரட்சிகர பாதுகாப்புப் படை' (IRGC) வெறும் ராணுவமல்ல; ஈரானின் 40% பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு கார்ப்பரேட் சாம்ராஜ்யம். ஆட்சி வீழ்ந்தால் தங்கள் செல்வம் அழியும் என்பதால், அவர்கள் மக்களைக் கொன்று குவிக்கவும் தயங்குவதில்லை.

10. எதிர்காலம் என்ன?

ஈரான் இன்று ஒரு வாழ்வா சாவா நெருக்கடியில் இருக்கிறது. ஆட்சி மாற்றம் ஒரு முறையான தலைமையின் கீழ் நிகழாவிட்டால், ஈரான் உள்நாட்டுப் போரில் சிதையவும், அணு ஆயுதங்கள் தவறான கைகளுக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது. தெஹ்ரானின் தெருக்களில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் வெறும் கோபமல்ல; அவை ஒரு புதிய ஈரானின் பிரசவ வலி.


Next Story

Related Stories

All Rights Reserved. Copyright @2019
Share it