முதல்வரின் உத்தமர் காந்தி கிராமங்கள் திட்டம் செல்ல வேண்டிய திசை எது?
முதல்வர் ஸ்டாலினின் திட்டம் பெயரளவில் மட்டுமே காந்தியைக் கொண்டிராமல், அதன் ஆன்மாவிலும் காந்தியத் தத்துவங்களும் செயல்முறைகளும் இருக்க வேண்டும்.

அண்மையில், தமிழ்நாடு அரசு ஒரு மிகப் பெரும் சமூக ஆய்வைச் செய்தது. கிட்டத்தட்ட 1.8 கோடி குடும்பங்களில் ஆய்வு செய்து, அரசின் திட்டங்களில் என்னென்ன அக்குடும்பங்களுக்குச் சென்று சேர்ந்திருக்கின்றன, அவை தொடர்பான பயனாளிகளின் மதிப்பீடுகள் என்ன என்னும் ஒரு விரிவான ஆய்வு. அந்த ஆய்வின் ஒரு பகுதியாக, மக்களின் அடுத்த கட்ட தேவைகள் என்ன என்பதையும் கேட்டு, அவற்றை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், முதல்வர், ‘கனவு மெய்ப்பட வேண்டும்’, என்னும் தலைப்பில், 14 துறைகளில் செய்யவிருக்கும் முன்னெடுப்புகளை மக்கள் மன்றத்தில் வைத்தார்.
இன்றைய அரசு நிர்வாகத் தளத்தில், இது ஒரு புத்தாக்க முயற்சி என்றே சொல்ல வேண்டும். ஐந்தாண்டு ஆட்சியை முடித்துவிட்டு, மீண்டும் அடுத்த தேர்தலுக்குத் தயாராகும் முன்பு, அரசின் திட்டங்களைப் பற்றிய மக்களின் எண்ணத்தையும், அடுத்த ஐந்தாண்டுகளில் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் எதிர்காலத்தைத் திட்டமிடுதல், மிகச் சரியான மேலாண் அணுகுமுறை.
அந்த 14 துறைகளில், ஒன்று கிராமப்புற மேம்பாடு. இந்திய சமூகப் பொருளாதாரத்தை அதன் அடிமட்டத்தில் இருந்தது கட்டியெழுப்ப வேண்டும் என்னும் நோக்கத்துடன் காந்தியும் ஜே.சி.குமரப்பாவும், பல செயல்திட்டங்களை வகுத்தார்கள். கிராமங்கள் பொருளாதாரத் தன்னிறைவு பெற வேண்டும் என்பதே அவற்றின் முக்கிய நோக்கம்.
கிராமங்களுக்கும் எல்லாம்...
உத்தமர் காந்தி கிராமங்கள் திட்டம் அறிவிப்பு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இதைத்தான் பேசினார். மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், அவர் காலத்தில், நகரங்களில் கிடைக்கும் எல்லா வசதிகளும் சேவைகளும் கிராமங்களிலும் கிடைக்க வேண்டும் என்றொரு கருதுகோளை (Provision of Urban Amenities in Rural Areas – PURA) முன் வைத்தார். அதைக் கோடிட்டுக் காட்டிய முதல்வர், இதே திசையில் கிராமச் சந்தைகளை வலுவாக்குதல், நீர்நிலைகளை மேம்படுத்துதல், கிராமப்புறங்களைப் பசுமையாக்குதல், வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற தளங்களில் திட்டங்கள் தீட்டப்பட்டு உன்னதமான கிராமங்களை உருவாக்குவது அடுத்த ஐந்தாண்டுகளின் ஒரு முக்கியமான குறிக்கோளாக இருக்கும் என அறிவித்தார். இத்திட்டத்துக்கு, உத்தமர் காந்தி மாதிரிக் கிராமங்கள் எனப் பெயர் சூட்டப்படும் எனவும் அறிவித்தார். இது உடனடியாக, பத்து ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
இது உண்மையிலேயே மிகவும் புரட்சிகரமான ஒரு திட்டமாகும். இன்றைய தமிழ்நாட்டுக்கு மிகவும் தேவைப்படும் திட்டமும்கூட. கடந்த ஐம்பதாண்டுகளில், கிராமங்களில் இருந்து பெருமளவு மக்கள், வேளாண்மையை விட்டு வெளியேறி, மற்ற பொருளாதாரத் தளங்களுக்குச் சென்றுவிட்டாலும், ஒரு சமூகமாக, தமிழ்நாடு, கிராமப்புற மேம்பாட்டையும், வேளாண்மையையும், அது சார்ந்த வாழ்வாதாரங்களையும் விட்டுவிட முடியாது. எனவேதான், இந்தத் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
காந்தியின் நிர்மாணத் திட்டங்கள்
இங்கே நாம் சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான ஒரு கருத்து இருக்கிறது. காந்தியின் நிர்மாணத் திட்டங்கள் அனைத்துமே மக்களின் பங்களிப்போடு நடந்தவை. எடுத்துக்காட்டாக காந்தியின் பொருளாதாரப் பரிசோதனைக் களத்தின் கருதுகோளோடு உருவான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு என்பது உற்பத்தியாளர்களின் நலன் நாடும் நிறுவனமாக, வெற்றிகரமாக இயங்கிவருகின்றன. உற்பத்தியாளர்களே தங்களது உற்பத்தியை நுகர்வோர் இல்லம் தேடிக் கொண்டுசேர்ப்பதால், அந்தத் தொழில் மாதிரியில் லாபம் தேடும் தனியார் முதலீட்டாளர்கள் இல்லை. அப்படிப்பட்ட அணுகுமுறைதான் நிலையான ஊரக மேம்பாட்டின் அடிப்படையாக இருக்க முடியும்.
காந்தியின் பெயரால் இயங்கப்போகும் முதல்வர் ஸ்டாலினின் திட்டம் பெயரளவில் மட்டுமே காந்தியைக் கொண்டிராமல், அதன் ஆன்மாவிலும் காந்தியத் தத்துவங்களும், செயல் முறைகளும் இருக்க வேண்டும். இதை ஒரு இயக்கமாக அரசு உருவாக்க வேண்டும். அங்கே அரசு அதிகாரிகளும் அரசியலர்களும் முதலீட்டாளர்களும் சந்தைப் பொருளாதார அறிஞர்களும் பெரிய முதலீடுகளும் தேவையில்லை. தேவை: படைப்பூக்கத்துடன் கூடிய புத்தாக்க அணுகுமுறை. இன்று, இது, அரசு நிர்வாகத்தின் எல்லைக்கு வெளியேதான் சாத்தியம்.
காந்தியப் பணியாற்றுபவர்கள்
இன்றைய காலகட்டத்தில், கிராம நிர்மாணப் பணிகளில் உண்மையிலேயே ஆர்வமுடன் செயல்படும் பல உன்னதத் தலைவர்களும் அறிஞர்களும் இருக்கிறார்கள். இது போன்ற திட்டத்தை வழிநடத்த, ஜான் ட்ரெஸ் போன்ற மக்கள் நலன் நாடும் பொருளாதார அறிஞரின் துணையை நாடலாம். சமத்துவபுரம் என்னும் ஒரு திட்டத்தின் முன்னோடியாக தன் கிராமத்தில் அனைத்து மக்களும் ஒன்றாக வசிக்கும் திட்டத்தை உருவாக்கிய குத்தம்பாக்கம் இளங்கோ, ஓடந்துறை என்னும் ஒரு கிராமத்தைத் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றிய ஷண்முகம், சிட்லிங்கி வனப் பகுதியில் பழங்குடியினருக்கான சுகாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாடுகளை உருவாக்கி நடத்திவரும் மருத்துவர்கள் ரெஜி, லலிதா, வேளாண் தற்சார்புக்காக இயங்கி வரும் கலசப்பாக்கம் ராஜேந்திரன், SRED, வானவில் போன்ற ஊரக மேம்பாட்டு அமைப்புகள், காந்தியப் பாதையில் பெரும் கண் மருத்துவக் குழுமத்தை நடத்தி வரும் அர்விந்த் குழுமம், உள்ளாட்சி அமைப்பு மேம்பாட்டுக்காக ஒரு நிறுவனத்தை நடத்திவரும் நந்தகுமார், தமிழ்நாட்டில் பெருமளவில் நீர்நிலைகளை மேம்படுத்திவரும் நிமல் ராகவன், காந்தியர் கண்ணன் தண்டபாணி போன்றவர்கள், இன்றைய கிராமங்களில் உன்னதமான பணி செய்துவருபவர்கள்.
இவர்களைப் போன்ற உண்மையான செயல் தலைவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் முக்கியமானவர்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பை உருவாக்கி, அவர்கள் வழியே, கிராமப்புற இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். சிறு சோதனைச் செயல்பாடுகள் வழியே தேவையான திட்டங்களை உருவாக்கி, பின்னர் அவற்றை விரிவுபடுத்தலாம். இதன் முக்கியமான உதாரணம் முதல்வரின் காலை உணவுத் திட்டம். பல்வேறு அணுகுமுறைகள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியில் மக்களின் பங்களிப்போடு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுவருகிறது.
திட்டங்கள், முழுக்க முழுக்க மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, மக்களால் திட்டமிடப்பட்டு, மக்களால் நிறைவேற்றப்படும் திட்டங்களாக இருக்க வேண்டும். பல ஆயிரம் திட்டங்கள் மக்களிடம் இருந்து எழட்டும். அவற்றை முதல்வரே முன்னின்று ஒருங்கிணைத்து வழிநடத்தட்டும்.
பலரும் நினைப்பது போலில்லாமல், காந்தியச் சிந்தனைகளே இன்றும் நிலையான ஊரக முன்னேற்றத்துக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் அடிப்படையாக உள்ளன. அவற்றை மீட்டுருவாக்கம் செய்து, மீண்டும் நிலைநிறுத்துவது, காந்திக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். கடந்த ஐந்தாண்டுகளில், பல்வேறு முன்மாதிரி மக்கள்நலத் திட்டங்களை வெற்றிகரமாக உருவாக்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதே போல, காந்திய வழியில் கிராம நிர்மாணத் திட்டங்களையும் உருவாக்கி நாட்டுக்கு முன்மாதிரியாக நிலைநிறுத்த நமது வாழ்த்துகள்.


