வந்தே மாதரம்: ஏன் இந்த சர்ச்சை?
‘ஜன கண மன’ பாடலுக்கான முதன்மையை நீர்த்துப்போகச் செய்வது, நம் முன்னோர்கள் கண்ட கனவைச் சிதைப்பதாகும்

நாடுகள் தாம் உயர்த்திப் பிடிக்கும் குறியீடுகளின் மூலமாகவே தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன. அந்த வகையில் 1950இல் இந்தியா ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தது. அரசமைப்பு நிர்ணய அவை தேசிய கீதத்துக்காக ‘ஜன கண மன’, ‘வந்தே மாதரம்’, ‘சாரே ஜஹான் சே அச்சா’ ஆகிய பாடல்களைப் பரிசீலித்தது. இவை அனைத்துமே விடுதலைப் போராட்டக் காலத்தில் மக்களுக்கு எழுச்சியூட்டியவைதான். இருப்பினும், ‘ஜன கண மன’ பாடலுக்கு தேசிய கீதம் எனும் முதன்மையான இடத்தை அரசமைப்பு நிர்ணய அவை அளித்தது; ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரு பத்திகளுக்கு மட்டும் ‘தேசியப் பாடல்’ எனும் அந்தஸ்தை வழங்கியது. ‘சாரே ஜஹான் சே அச்சா’ என்ற உருது மொழிப் பாடல், அதன் ஆசிரியர் முகமது இக்பால் பாகிஸ்தான் பிரிவினைக்கு வித்திட்டவர்களில் ஒருவர் என்பதால் பரிசீலனையிலிருந்து நீக்கப்பட்டது.
தேசிய கீதமாக ‘ஜன கண மன’ பாடலை உச்ச நிலையில் வைத்த அந்தப் படிநிலை மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டது. ஏனெனில், இவ்விரு பாடல்களும் இந்தியா குறித்த இரண்டு வேறுபட்ட சிந்தனைப் போக்குகளைப் பிரதிபலிப்பவை. வந்தே மாதரம் பாடலின் ஆறு பத்திகளையும் பாட வேண்டும் என்றும், அரசு நிகழ்வுகளில் அதைத் தேசிய கீதத்துக்கு முன்னதாகவே பாட வேண்டும் என்றும் அண்மையில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள், அன்று கருத்தொற்றுமையுடன் எட்டப்பட்ட உடன்பாட்டைச் சிதைக்கின்றன. அரசமைப்பை உருவாக்கியவர்கள் விவாதித்து முடிவெடுத்த ஒன்றை, ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் மாற்றிவிட முடியும் என்பதை இது உணர்த்துகிறது. இது இந்தக் குடியரசின் அச்சாணியையே நகர்த்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
பன்மைத்துவத்தின் பிரதிபலிப்பு
தேசிய கீதத்தைப் பாருங்கள். ஒரே ஒரு பத்தியில் அது பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியம், திராவிடம், உத்கலம் மற்றும் வங்காளத்தை உள்ளடக்குகிறது. இவை பிராந்தியங்களே தவிர மதங்கள் அல்ல. ஒரு பரந்த நிலப்பரப்பை ஒரே தாளகதியில் இது ஒன்றிணைக்கிறது. எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதற்காக யாரையும் மாறச் சொல்லாமல், அனைவரும் இந்த நாட்டின் அங்கமே என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இதில் எந்தக் கடவுளின் பெயரும் இல்லை; எந்த ஒரு தனிப்பட்ட பாரம்பரியத்துக்கும் இது முன்னுரிமை அளிக்கவில்லை. இந்தியாவை ஒரு பொதுவான குடிமை வெளியாகவே இது கற்பனை செய்கிறது.
அந்தக் கட்டமைப்பு முக்கியமானது. பன்மைத்தன்மை கொண்ட கூட்டாட்சி ஜனநாயகத்துக்கு இதுவே பொருத்தமானது. இது வேற்றுமையில் ஒற்றுமையைத் தாங்கி நிற்கிறது; இதன் ஆன்மா, அரசமைப்பு விழுமியங்களைப் பிரதிபலிக்கிறது. அதனால்தான் அரசமைப்புச் சட்டம் இதற்கு சந்தேகத்துக்கு இடமில்லாத அங்கீகாரத்தைத் தருகிறது. பிரிவு 51-ஏ தேசியக் கொடிக்கும் தேசிய கீதத்துக்கும் மரியாதை அளிக்கச் சொல்கிறது. இவற்றுக்குச் சட்டப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குடியரசின் சட்ட ஒழுங்கின் மையப்புள்ளியாக தேசிய கீதம் திகழ்கிறது.
சமத்துவத்தை உறுதிசெய்த சமரசம்
வந்தே மாதரம் வேறொரு தளத்தில் நிற்கிறது. கவிதையாக அது மிகவும் சக்தி வாய்ந்தது. அதன் தொடக்கப் பத்திகள் இந்த நிலத்தின் எழிலை ஆறுகள், வயல்கள், இளந்தென்றல், நிலவொளி எனச் செழுமையான பிம்பங்களால் கொண்டாடுகின்றன. அந்த வரிகள் மத நம்பிக்கைகளையும் பிராந்திய எல்லைகளையும் கடந்து மக்களை ஒன்றிணைக்க வல்லவை; விடுதலைப் போராட்டக் காலத்தில் அவை அதைச் செய்தன. ஆனால், வந்தே மாதரம் பாடலின் பிந்தைய பத்திகள் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களை முன்னிறுத்துகின்றன. அங்கே தாய்நாடு ஒரு பெண் கடவுளாக மாறுகிறது. அந்த உருவகம் குடிமை நிலப்பரப்பிலிருந்து புனிதமான குறியீடாக மாறுகிறது. பலருக்கு இது பண்பாட்டின் அழகு; ஆனால் மற்றவர்களுக்கு இது தேசத்துக்கும் மதத்துக்கும் இடையிலான கோடுகளை மங்கச் செய்வது.
அரசமைப்பு உருவாக்கியவர்கள் இந்தப் பதற்றத்தைப் புரிந்துகொண்டிருந்தனர். பிரிவினையின் வடுக்கள் நிறைந்த அக்காலத்தில், குறியீடுகள் எவ்வளவு எளிதாக மனங்களைக் காயப்படுத்தும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். எனவேதான் வந்தே மாதரம் பாடலின் முதல் இரு பத்திகளை மட்டும் பயன்படுத்தினால் போதும் என்று முடிவெடுத்து, தேசிய கீதத்துக்கு முதலிடம் அளித்தனர். இந்தச் சமரசம் வரலாற்றுக்கு மதிப்பளிப்பதோடு அனைவருக்கும் சமமான குடியுரிமையையும் உறுதி செய்தது.
முன்னிறுத்தப்படும் பண்பாட்டுத் தேசியம்
இன்று இந்தச் சமநிலையைக் குலைப்பது என்பது ஒரு சிறிய நடைமுறை மாற்றம் மட்டுமல்ல; இது 'குடிமைத் தேசியத்தை' விட 'பண்பாட்டுத் தேசியத்துக்கு' முக்கியத்துவம் அளிக்கப்படுவதன் சமிக்ஞை.
குடிமைத் தேசியம் என்பது அரசமைப்பு மற்றும் சம உரிமைகளை அடிப்படையாகக் கொண்டது. பண்பாட்டுத் தேசியம் என்பது பொதுவான மரபுகள் மற்றும் புனித பிம்பங்களைச் சார்ந்தது. இந்தியாவின் கடந்த காலத்தில் இவ்விரு நீரோட்டங்களுமே இருந்துவந்தன. ஆனால், அரசை வரையறுக்க இவற்றில் ஒன்று மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டது. அரசு விழாக்களில் தேசிய கீதத்துக்கு முன்னதாகவே வந்தே மாதரத்தைப் பாட வேண்டும் என்பதில் ஒரு குறியீட்டுவாதம் வெளிப்படுகிறது. அது கடவுள் வழிபாடு சார்ந்த பிம்பங்களே இனி தேசத்தின் பொது முகத்தைத் தீர்மானிக்கலாம் என்கிறது. அரசின் நோக்கம் அதுவல்ல என்றாலும்கூட, இந்தச் செய்தியே மக்களைச் சென்றடையும்.
இங்கே சீர்மை குறித்த கேள்வியும் எழுகிறது. ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் தேசியக் குறியீடுகளின் வரிசையை இன்று மாற்ற முடியுமென்றால், நாளை வேறொரு மாற்றத்தைத் தடுப்பது எது? உதாரணமாக, தமிழ்நாட்டுத் தேர்தலுக்கு முன்னதாக, ஒரு அதிகாரி அதீத ஆர்வ மிகுதியில் சுப்பிரமணிய பாரதியாரின் "தாயின் மணிக்கொடி..." என்ற பாடலை இந்தியா முழுவதும் அனைத்து அலுவலகப்பூர்வ நிகழ்வுகளிலும் கட்டாயம் பாட வேண்டும் என்று உத்தரவிடுவதாக வைத்துக்கொள்வோம். அது நாட்டுப்பற்றுப் பாடல்தான்; நாடு குறித்த பெருமிதத்தை விதைக்கும் பாடல்தான். ஆனால் நாடு அதை ஏற்குமா? நாடாளுமன்றத்தைத் தவிர்த்துவிட்டு இத்தகைய முடிவுகளை எடுக்க முடியுமா? இது 'முடியாது' என்றால், தற்போதைய மாற்றமும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
1950இன் தீர்க்கதரிசனம்!
தேசியக் குறியீடுகள் என்பவை ஒருமித்த கருத்தின் மூலம் உருவாகின்றனவே தவிர, வெறும் அரசாணைகளால் அல்ல. அன்று அரசமைப்பு நிர்ணய அவை வன்முறை மற்றும் பிரிவினையின் நிழலில் நின்று விவாதித்து, மிகுந்த கவனத்துடன் முடிவெடுத்தது. பன்மைத்தன்மை கொண்ட இந்தியாவைச் சிறப்பாகப் பிரதிபலிப்பதால் 'ஜன கண மன' பாடலை மையத்தில் வைத்தது. வந்தே மாதரத்தை அங்கீகரித்த அதே வேளையில், அது இந்தக் குடியரசை வரையறுக்க அனுமதி அளிக்கவில்லை. அந்தப் பகுத்தறிவு கலைத்தன்மையையும் சமத்துவத்தையும் பாதுகாத்தது.
இந்தியா இவ்விரு பாடல்களையும் போற்ற முடியும். ஆனால் அவை ஆற்றும் பங்கைப் போட்டுக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை. நாம் ‘ஜன கண மன’ பாடலுக்கு எழுந்து நிற்கும்போது, பன்மைத்தன்மை கொண்ட, பிளவுபடாத, அனைவரையும் உள்ளடக்கிய ஓர் இந்தியாவை உறுதிப்படுத்துகிறோம். அந்தப் பாடலுக்கான முதன்மையை நீர்த்துப்போகச் செய்வது, நம் முன்னோர்கள் கண்ட கனவைச் சிதைப்பதாகும். குறியீடுகள் மக்களை ஒன்றிணைக்கும்போது மட்டுமே நிலைத்து நிற்கும்; அவை கட்டாயப்படுத்தப்படும்போது பிரிவினையைத் தூண்டும். இந்த நுட்பமான வேறுபாட்டை உணர்ந்திருந்ததன் விளைவுதான் 1950இல் வெளிப்பட்ட அந்த முதிர்ச்சியான தீர்க்கதரிசனம்.
(தமிழில்: ச.கோபாலகிருஷ்ணன்)


