வைரமுத்துவுக்கு ஞானபீடம்: பண்பாட்டுச் சூழலின் பேரிடர்
கடுமையான பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான வைரமுத்துவுக்கு மதிப்பு வாய்ந்த விருதை வழங்குவது இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களை இழிவுபடுத்தும் செயல்.

திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு இந்த ஆண்டுக்கான ஞானபீட விருது கிடைத்திருப்பது கண்டனத்துக்கும் வருத்தத்துக்கும் உரியது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அவரது இலக்கியத் தகுதி. இன்னொன்று அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள்.
நவீன தமிழ் இலக்கியம் பாரதி, புதுமைப்பித்தன் முதலான படைப்பாளிகளில் தொடங்கி இன்றளவும் மிகச் செழுமையான, உலகத் தரத்திலான ஆக்கங்களையும் படைப்பாளிகளையும் உருவாக்கிவருகிறது. இந்த வரிசையில் வைத்துப் பார்ப்பதற்கு எந்த வகையிலும் தகுதியற்ற ஒருவருக்கு இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருது கிடைத்திருக்கிறது. எந்த அளவுகோலின் அடிப்படையில் தஸ்தாயேவ்ஸ்கி, டால்ஸ்டாய், கேப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், ஃப்ரன்ஸ் காஃப்கா, தாராசங்கர் பானர்ஜி, சிவராம் காரந்த், வைக்கம் முகம்மது பஷீர், புதுமைப்பித்தன் போன்றோரை இலக்கியவாதிகள் என்று சொல்கிறோமோ அந்த அளவுகோலின்படி வைரமுத்துவின் எந்த வகையான எழுத்தையும் இலக்கியம் என்று சொல்ல முடியாது. தீவிர இலக்கியம், பொழுதுபோக்கு இலக்கியம், பரப்புரை இலக்கியம் என்று எழுத்தில் பல வகைமைகள் உள்ளன. சில படைப்புகள் வெவ்வேறு வகைமைகளுக்கிடையில் ஊசலாடும். பொழுதுபோக்கு இலக்கியத்திலும் சில இடங்கள் இலக்கியத் தரமாக அமைந்துவிடும். பரப்புரையை முன்னிட்டு எழுதப்படும் பிரதிகளில் பல கூறுகள் நேர்த்தியான இலக்கியத் தன்மைகளைப் பெற்றிருக்கும். தீவிர இலக்கியத்திலும் சில பகுதிகள் தட்டையாக, நீர்த்துப்போனதாக அமைந்துவிடும். எனவே வகையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு படைப்பைத் தூக்கவோ புறந்தள்ளவோ முடியாது. எனவே, வெகுஜனப் பரப்பில் இயங்கிவரும் வைரமுத்துவின் படைப்புகளில் இலக்கியத் தரம் இருக்க முடியாதா என்ற கேள்வி எழலாம்.
பொழுதுபோக்கை முதன்மையாகக் கொண்ட வெகுஜன எழுத்து, குறிப்பிட்ட கருத்தை முன்னிறுத்தும் நோக்கம் கொண்ட பரப்புரை எழுத்து ஆகியவை நேர்மையான வெளிப்பாடுகள். இவற்றின் நோக்கமும் வெளிப்பாடுகளும் வெளிப்படையானவை; பாசாங்கற்றவை. வைரமுத்துவின் எழுத்துகள் அடிப்படையிலேயே பாசாங்கும் போலித்தனமும் கொண்டவை. தன்முனைப்பே அவற்றில் பிரதானமாக இருக்கும். தனக்கு ஏதோ ஒன்று தெரியும் என்று நினத்துக்கொள்ளும் வைரமுத்து அதை வெளிப்படுத்துவதற்காகவே புனைவு உத்திகளைக் கையாள்கிறார். தன் படைப்புகளில் அவர் முன்வைக்கும் கருத்துக்களோ சிந்தனைகளோ அவருடையவை அல்ல. தகவல்கள் பல்வேறு நூல்களிலிருந்து திரட்டியவை. கடன் வாங்கிய கருத்துக்களையும் இரவல் சிந்தனைகளையும் கடைபரப்பவே அவர் புனைவுகளைச் செய்கிறார். கவிதை போன்ற ஏதோ ஒன்றைக் கட்டமைக்கிறார்.
போலி எழுத்து…
அவரது பிரதிகளைச் சற்றே கட்டுடைத்தால் அவற்றில் ஆகிவந்த முற்போக்குக் கருத்துக்களும் வானப்பாடிக் கவிஞர்களின் படிமங்களும் செயற்கையான மொழிக் கட்டமைப்பால் வலியத் திணிக்கப்பட்டிருப்பதை எளிதில் அறியலாம். ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘மூன்றாம் உலகப் போர்’ போன்ற படைப்புகள் சமூக அக்கறை என்னும் பாசாங்கைக் கொண்டவை. இந்தக் ‘கதை’கள் பேசும் உள்ளடக்கங்களை மிகச் செறிவாகவும் ஆதாரபூர்வமாகவும் உண்மையான அக்கறையோடும் பேசும் அல்புனைவுப் பிரதிகள் தமிழிலேயே கணிசமாக இருக்கின்றன. கதை அல்லது கவிதை வடிவில் ஒரு கருத்தை முன்வைத்துவிட்டால் அது படைப்பாகிவிடாது. அந்தக் கருத்தையும் நேர்மையோடும் உண்மையான அக்கறையோடும் முன்வைக்காமல் பாசாங்குத்தனமாகக் கையாள்வது போலி எழுத்தின் அசலான வெளிப்பாடு.
இத்தகைய எழுத்தை வண்டிவண்டியாக எழுதிக் குவித்துக்கொண்டிருக்கும் காரணத்தாலேயே வைரமுத்துவுக்கு உயரிய விருது கிடைத்ததும் இலக்கியவாதிகள் பலரும் பொங்கி எழுந்தார்கள். பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்த விருதை எதிர்ப்பவர்களைப் போலவே இலக்கியத் தர மதிப்பீட்டை முன்வைத்து எதிர்ப்பவர்களும் கணிசமாக இருக்கிறார்கள். இலக்கியப் படைப்பு என்பது புறப்படும் இடம் தெரியும்; போகுமிடம் தெரியாது என்ற வகையில் அமையும் பயணம். குறிப்பிட்ட இலக்கோ, முன்முடிவோ, நோக்கமோ இல்லாத பயணத்தில வெளிப்படும் மெய்ம்மையை மொழிவழிப்படுத்தும் செயல்முறை. நோக்கம் இருந்தாலும் அதை மீறிச் செல்லக்கூடிய யாத்திரை. தேடலின் பயணமும் பாதையுமே இங்கு முக்கியம். வெகுஜனப் படைப்புகளுக்குப் பொழுதுபோக்கும் கேளிக்கையும் பிரதானம். பரப்புரை எழுத்துக்குத் தான் தேர்ந்துகொண்ட நோக்கமே முக்கியம். இவை இரண்டையும் கடந்த நிலையில் செயல்படுவது இலக்கியப் படைப்பு. வைரமுத்துவை இவை எதிலும் சேர்க்க முடியாது. தீவிர இலக்கியத்துக்கான திறந்த தேடலோ பொழுதுபோக்கு எழுத்திற்கான வசீகரமோ பரப்புரை எழுத்துக்கான நேர்மையான நோக்கமோ அவர் எழுத்துகளில் இல்லை. செயற்கையான புனைவுக் கட்டமைப்பும் சுயபிம்ப வெளிப்பாடுகளுமே அவர் எழுத்தின் அடிப்படைகள். எனவே, அவரது எழுத்துக்கு வழங்கப்படும் எந்த இலக்கிய அங்கீகாரமும் தீவிரமான இலக்கிய வாசகரைத் துன்புறுத்தவே செய்யும்.
வைரமுத்து என்ற திரைப்படப் பாடலாசிரியர்
வைரமுத்துவை திறமையான திரைப்படப் பாடலாசிரியர் என்று சொல்லலாம். புதுக்கவிதையின் நவீன படிமமொழியைத் திரைப்பாடல்களுக்குள் கொண்டுவந்ததையும் சமகாலத் தன்மையைப் பாடல்களில் கலப்பதையும் வைரமுத்துவின் தனித்தன்மை என்று சொல்லலாம். எனவேதான் திரைப்பாடல்களுக்காக அவர் தேசிய விருதுகள் வாங்கியபோது யாரும் எதிர்க்கவில்லை; தமிழுக்கு நேர்ந்த அவமானமாக அதைக் கருதவும் இல்லை. ஆனால், சாகித்ய அகாடமி, ஞானபீடம் ஆகிய இலக்கிய விருதுகளை அவர் பெறும்போது இலக்கியத்தின் மீது மரியாதை கொண்டவர்களால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வைரமுத்துவுக்கும் இலக்கியத்துக்கும் தொடர்பு இல்லை என்பதோடு, இந்த விருதினால் பிற மொழிகளின் பார்வையில் தமிழின் மதிப்பு குறைவதும் இதற்குக் காரணங்கள்.
தகுதியின்மை ஒரு புறம் இருக்க, சாகித்ய, ஞானபீட விருதுகளை வைரமுத்து “வாங்கிய விதம்” பற்றியும் பல குற்றச்சாட்டுகள் எழுகின்றன. மிகக் கடுமையான சிபாரிசு உத்திகளைப் பல விதங்களிலும் பல மட்டங்களிலும் பயன்படுத்தியே அவர் விருதுகளை வாங்குவதாகச் சொல்லப்படுகிறது. சாகித்ய அகாடமி விருதின் தேர்வுக் குழுவில் வண்ணநிலவன் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைப் பழக்கூடை முதலான ‘மரியாதை’களுடன் சென்று சந்தித்தவர்தான் வைரமுத்து. குழுவில் இருந்தது வண்ணநிலவன் அல்ல; வல்லிக்கண்ணன் என்று தெரிந்ததும் கொண்டுபோன பழங்களை வீணாக்காமல் அப்படியே எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். இந்தச் சம்பவத்தை வண்ணநிலவனே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.
வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்
வைரமுத்துவின் இலக்கியப் பெறுமானம் இவ்வாறு இருக்க, வேறொரு காரணத்தாலும் இந்த விருதளிப்பு கண்டனத்துக்குரியதாகிறது. கடுமையான பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான வைரமுத்துவுக்கு இத்தகைய மதிப்பு வாய்ந்த விருதை வழங்குவது இந்தக் குற்றச்சாட்டுக்களை மலினப்படுத்துவதுடன் இவற்றை முன்வைத்தவர்களை இழிவுபடுத்தும் செயல் என்ற விமர்சனம் எழுகிறது. படைப்பாளியின் தனிப்பட்ட ஆளுமையையும் அவரது படைப்பையும் குழப்பிக்கொள்ளக் கூடாது என்பது சரிதான். மிக மோசமான குணங்களையும் நடவடிக்கைகளையும் கொண்ட ஒருவர் மேலான படைப்பைத் தந்துவிடுவதற்கான சாத்தியக்கூறு நிச்சயமாக இருக்கிறது. எனவே “மோசமான” ஒரு நபரின் படைப்பு நன்றாக இருந்தால் அதைப் பாராட்டுவதில் தவறில்லை.
ஆனால் விருது என்பது வேறு. அது ஒரு அங்கீகாரம்; பண்பாட்டு அடையாளம். அதற்கென்று சில தார்மீகப் பொறுப்புகள் உள்ளன. பல்வேறு பெண்கள் வைரமுத்துமீது பாலியல் புகார் கொடுத்திருக்கிறார்கள். எழுத்தின் மூலம் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்திப் பாலியல் அத்துமீறலில் அவர் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். அந்த அதிகாரத்தின் காரணமாகவே இந்தப் பெண்களின் திரையுலகத் தொழில் வாழ்க்கை கடுமையான பின்னடைவைச் சந்தித்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். (மீடூ புகாரளித்ததற்கு முன்பும் பின்பும் பாடகர் சின்மயியின் நிலை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு). இன்றளவிலும் வைரமுத்து இந்தக் குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்பான பதில் எதுவும் அளிக்கவில்லை. விளக்கம் கொடுக்கவில்லை. வருத்தமும் தெரிவிக்கவில்லை. தான் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்ற முறையிலேயே அவர் இக்குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறார். அடிப்படையான அறமற்ற இத்தகைய நடத்தையையும் ஆளுமைச் சிக்கலையும் கொண்ட ஒருவர் அற விழுமியங்களை முன்வைக்கும் போலிப் பிரதிகளை எழுதிவிட்டு, தேர்வுக் குழுவின் கதவுகளை ஓயாமல் தன் தொடர்புகள் மூலம் தட்டிக்கொண்டே இருப்பது விருதுகளை அவமதிக்கும் செயல். இத்தகையவரை விருதின் மூலம் அங்கீகரிப்பது அற விழுமியங்களைப் புறக்கணிக்கும் செயல்.
விருது என்பது ஒரு காலகட்டத்தின் பண்பாட்டுச் செயல்பாடு என்னும் வகையில் அது வெறும் பிரதியின் மீதான மதிப்பீடாக மட்டும் இருக்க முடியாது. தனது செயல்களுக்குப் பொறுப்பேற்கவோ விளக்கமளிக்கவோ தயாராக இல்லாத அளவுக்குத் திண்ணக்கம் கொண்ட ஒருவரை ‘ஞான’பீடத்தில் ஏற்றிவைப்பது அந்தப் பீடத்துக்கே அவமானம். அந்தப் பீடத்தில் ஏறி நின்று அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மொழிக்கும் அவமானம். எழுத்தினால் கிடைத்த அதிகாரத்தால் சுரண்டப்பட்ட பெண்களின் உணர்வுகளுக்கு இழைக்கப்படும் அவமானம். சமகாலப் பண்பாட்டின் குறியீடாக விளங்கும் விருது பண்பற்ற ஒருவருக்குப் போவது அந்தப் பண்பாட்டையே இழிவுபடுத்துவதாகும்.
போலித்தனம், தற்பெருமைப் பீறிடல்கள், அறவுணர்வற்ற அதிகாரச் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடையாளங்களை அரியணையில் அமர்த்தும் ஒரு பண்பாட்டுச் சூழல் அதில் இருக்கும் அனைவரையும் தலைகுனிய வைக்கக்கூடியது. மேலான இலக்கிய விழுமியங்கள்மீதும் கறாரான தர அளவுகோல்கள் மீதும் நம்பிக்கையும் மரியாதையும் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிக்க வேண்டிய பண்பாட்டுப் பேரிடர் இந்த விருதளிப்பு.


