Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
6 நிமிட வாசிப்பு

உயர்கல்வி நிலையங்களில் சமத்துவம்: தொடரும் சட்டப் போராட்டம்

உயர்கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்ற யூஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது

உயர்கல்வி நிலையங்களில் சமத்துவம்: தொடரும் சட்டப் போராட்டம்
X

நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடு என்பது ஒரு தீராத சமூகப் பிரச்சினையாகத் தொடர்கிறது. இந்தப் பாகுபாட்டால் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் துயரச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. இந்நிலையில் இத்தகைய தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கத்துடன் யூஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்த புதிய விதிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

புதிய சமத்துவ விதிமுறைகளின் பின்னணி

2016ஆம் ஆண்டு ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலாவும், 2019ஆம் ஆண்டு மும்பை மருத்துவ மாணவி பாயல் தத்வியும் சாதியப் பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டனர். இவர்களின் மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவர்களின் அன்னையர் (ராதிகா வெமுலா, அபேதா சலீம் தத்வி) 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், பல்கலைக்கழகங்களில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 2012ஆம் ஆண்டு சமத்துவ விதிகள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்றும், மாணவர்களைப் பாதுகாக்க வலுவான சட்டப் பாதுகாப்பு தேவை என்றும் கோரியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், "சமத்துவ விதிகள் வெறும் காகித அளவில் இருக்கக் கூடாது; அவை உண்மையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்" என்று யூஜிசிக்கு அறிவுறுத்தியது. இதன் விளைவாகவே கடந்த ஜனவரி 13 அன்று "பல்கலைக்கழக மானியக் குழு (உயர் கல்வி நிலையங்களில் சமத்துவத்தை ஊக்குவித்தல்) விதிமுறைகள், 2026" அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தடைக்கு வித்திட்ட எதிர்ப்பு

புதிதாக அறிவிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னேறிய சாதிகளைச் சேர்ந்த பொதுப் பிரிவு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர்.

2026 விதிமுறைகளின்படி 'சாதியப் பாகுபாடு' என்பது பட்டியல் சாதி (எஸ்சி), பட்டியல் பழங்குடி (எஸ்டி), மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் (ஓபிசி) சேர்ந்த மாணவர்களுக்கு எதிராக நடப்பது என்று வரையறுக்கப்பட்டுள்ளது. முன்னேறிய சாதிகளைச் சேர்ந்த மாணவர்களின் எதிர்ப்புக்கு இதுவே முதன்மையான காரணம். இதன் மூலம் தங்களுக்கு எதிராக நடக்கும் பாகுபாடுகளை முறையிட இந்த விதிகள் இடமளிக்கவில்லை என்பது அவர்களின் பிரதான குற்றச்சாட்டு. இது அரசமைப்பு சட்டம் உறுதி செய்திருக்கும் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமையை மீறுவதாக முன்னேறிய சாதி மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சாதிப் பாகுபாடு குறித்த பொய்ப் புகார்களை தண்டிப்பதற்கான விதிமுறைகள் இல்லை என்பதற்கும் பொதுப் பிரிவு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் இந்த விதிமுறைகள் தங்களுக்கு எதிராகத் தவறாக பயுன்படுத்த இடமளிக்கப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர்.

மேலும் சாதியப் பாகுபாடுகளை விசாரிப்பதற்கான சமத்துவ குழுக்களில் (Equity Committee) எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் முன்னேறிய சாதிகளைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படாததற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் புதிய விதிமுறைகள் தெளிவற்றவையாக இருப்பதாகவும் அவை தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்பிருபதாகவும் கூறி விதிமுறைகளுக்குத் தடை விதித்துள்ளது. இது தொடர்பான விசாரணை தொடரும் என்று கூறியுள்ளது.

ஒப்பீடு 2012 & 2026 விதிமுறைகள்

யூஜிசி சமத்துவ விதிமுறைகள் 2026க்கு ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காக களப்பணியாற்றும் சில சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். 2026 விதிமுறைகள் 2012 விதிமுறைகளை நீர்த்துப்போகச் செய்வதாக யோகேந்திர யாதவ் உட்பட சில சமூகச் செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 2012 விதிமுறைகளின்படி ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒரு 'குறைதீர்ப்பு அதிகாரி' (Ombudsman) இருக்க வேண்டும். ஆனால் புதிய விதிகளில் அந்தப் பதவியின் அதிகாரம் குறைக்கப்பட்டு, நிர்வாகத்தின் தலையீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் சாதியப் பாகுபாட்டில் ஈடுபட்டால் அவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய ஒழுங்கு நடவடிக்கைகள் புதிய விதிகளில் தெளிவற்றதாக உள்ளன. இது குற்றவாளிகள் எளிதில் தப்பிக்க வழிவகுக்கும் எனச் செயல்பாட்டாளர்கள் வாதிடுகின்றனர்.

மேலும், 2012 விதிமுறைகளில் கல்வி நிலையங்களில் நிகழக்கூடிய 25 வகையான சாதியப் பாகுபாடுகளை வரையறுத்திருந்தன. 2026 விதிமுறைகளில் இவை நீக்கப்பட்டுள்ளன.

அதே நேரம் 2012 விதிமுறைகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களை சாதியப் பாகுபாடுகளிலிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை என்றும், 2026 விதிமுறைகளில் அவை சேர்க்கப்பட்டிருப்பதையும் சில சமூகச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சாதியப் பாகுபாட்டுக்கு ஆளாகக் கூடியவர்களாக ஓபிசி பிரிவினரையும் அடையாளப்படுத்தியிருப்பதே முன்னேறிய சாதிகளைச் சேர்ந்த மாணவர்களை கொதித்தெழச் செய்திருப்ப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

மாணவர் தற்கொலைகளில் சாதியின் பங்கு

2014 முதல் 2021 வரையிலான ஏழு ஆண்டுகளில் மட்டும் ஐஐடி (IIT), என்ஐடி (NIT) போன்ற புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் 68 பேர் (அதாவது பாதிக்கும் மேற்பட்டோர்) எஸ்சி, எஸ்டி ஓபிசி ஆகிய இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யூஜிசி தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் சாதியப் பாகுபாடு தொடர்பான புகார்கள் 118% அதிகரித்துள்ளன. 2019-20-இல் 173 ஆக இருந்த புகார்கள், 2023-24-இல் 378 ஆக உயர்ந்துள்ளன. உயர்கல்வி நிலையங்களை சாதிப் பாகுபாடுகளைக் களைவதற்கான வலுவான சட்டம் அவசரத் தேவை என்பதற்கு இந்தப் புள்ளிவிவரங்களே போதுமான சான்றாகும்.

யாருக்கு பாதுகாப்பு அவசியம்?

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்த தவறான புரிதல்களும் ஏளனப் பார்வையும் முற்பட்ட சாதியைச் சேர்ந்த பெரும்பாலனவர்களிடையே ஆழமாக ஊறிப்போயுள்ளன. குறிப்பிட்ட சமூகங்களுக்கு வரலாற்றுரீதியாக இழைக்கப்பட்ட அநீதிகளைக் களைவதற்காக அவர்களுக்கு வழங்கப்படும் மறுபங்கீடு உரிமைதான் இடஒதுக்கீடு. ஆனால் இடஒதுக்கீடு மூலம் பயனடையும் மாணவர்களே அது குறித்து தாழ்வுணர்ச்சி அடையச் செய்யும் குரல்கள்தான் இந்தியக் கல்விப் புலத்தில் ஓங்கி ஒலிக்கிறது. இந்தப் பின்னணியில் இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களே சாதியப் பாகுபாடுகளுக்கும் ஏளனங்களுக்கும் அதிகமாக ஆளாகக் கூடியவர்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. முன்னேறிய சாதியினருக்கு எதிரான ராகிங் போன்ற குற்றங்களைத் தடுப்பதற்கு ஏற்கெனவே வலுவான சட்டங்கள் இருக்கின்றன.

பொய்ப் புகார்களால் அப்பாவிகள் பாதிகப்படுவதைத் தடுப்பது அவசியம்தான் என்றாலும் சாதிப் பாகுபாடு சார்ந்த அனைத்து புகார்களையும் நிரூபித்துவிட முடியாது. எனவே, ஒரு புகாருக்கு போதுமான அளவு நிரூபணம் இல்லை என்பதாலேயே அது பொய்ப் புகார் ஆக வரையறுத்துவிட முடியாது என்ற கவனத்துடன் இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும். பொய்ப் புகார்களை தண்டிப்பதற்கான பிரிவே புகார் அளிப்பதற்கு அச்சப்படும் சூழலை உருவாக்கிவிட அனுமதிப்பது சாதிப் பாகுபாடுகள் தொடர்வதற்கே வழிவகுக்கும்.

கல்வி நிலையங்கள் சாதியப் பாகுபாடுகளற்ற சமத்துவ மையங்களாக மாற வேண்டியது அவசியம். உச்ச நீதிமன்றத்தின் தலையீடு அனைத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் வலுவான விதிமுறைகளுக்கு வழிவகுக்க வேண்டும். அதே நேரம் வரலாற்றுரீதியாக பிறப்பின் அடிப்படையில் ஒடுக்கப்படும் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சாதியப் பாகுபாடுகளிலிருந்து முழுமையான விடுதலை அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.


#UGC_Regulations_2026#CasteDiscrimination#HigherEducationIndia#SupremeCourtVerdict#SocialJustice#RohithVemula#StudentRights#AntiDiscriminationLaws#ReservationPolicy#EducationalEqualityயுஜிசி புதிய விதிமுறைகள் 2026 (UGC New Guidelines 2026)உயர்கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடு (Caste discrimination in higher education)உச்ச நீதிமன்ற இடைக்காலத் தடை (Supreme Court stay on UGC equity rules)மாணவர் தற்கொலைகள் புள்ளிவிவரம் (Student suicide statistics in IIT/NIT)சாதிப் பாகுபாடு தடுப்புச் சட்டம் (Laws to prevent caste discrimination)யுஜிசி 2012 vs 2026 விதிகள் ஒப்பீடு (Comparison of UGC 2012 and 2026 rules)கல்விப்புலத்தில் சமத்துவம் (Equality in educational institutions)ஓபிசி மாணவர் பாதுகாப்பு விதிகள் (OBC student protection guidelines)உச்ச நீதிமன்றம்யுஜிசி விதிமுறைகள்சட்டப் போராட்டம்இடைக்காலத் தடை. சாதியப் பாகுபாடுதீண்டாமைஒடுக்கப்பட்ட மாணவர்கள்தற்கொலைத் தடுப்பு. பல்கலைக்கழக மானியக் குழுஐஐடி (IIT)என்ஐடி (NIT)உயர்கல்வித் துறை. ரோகித் வெமுலாபாயல் தத்விராதிகா வெமுலாயோகேந்திர யாதவ்
Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it