Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
6 நிமிட வாசிப்பு

நம் சமையலறை வரை வந்துவிட்ட போர்

ஒரு ட்ரம்ப்பாலும் ஒரு நெதன்யாகுவாலும் எங்கோ இருந்துகொண்டு நம் சமையலறையைத் தீர்மானிக்க முடிகிறது.

நம் சமையலறை வரை வந்துவிட்ட போர்
X

மேற்காசியாவில் பற்றி எரியும் போர், அந்தப் பிராந்தியத்தையும் தாண்டி இன்று ஒரு சராசரி இந்தியரின் சமையலறை வரை ஊடுருவியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான இந்தப் போர் ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல், மேற்காசியாவோடு முடிந்துவிடுகிற விஷயமாக இல்லாமல், 145 கோடி இந்தியர்களின் வாழ்வாதாரத்தையும் அசைத்துப் பார்க்கும் பெரும் பொருளாதாரப் பேரழிவாக உருவெடுத்துள்ளது.

வீட்டுக் கொல்லைக் கிணறு வற்றிப்போனதை பற்றி முகுந்த் நாகராஜன் ஒரு கவிதை எழுதியிருப்பார்:

‘என் கிணறு வற்றிப்போனதை விடவும் வருத்தம் தந்தது

யார் யாரோ

எங்கிருந்தோ என் கிணற்றை

வற்ற வைத்துவிட முடியும் என்பது’

அதேபோல்தான் ஒரு ட்ரம்ப்பாலும் ஒரு நெதன்யாகுவாலும் எங்கோ இருந்துகொண்டு நம் சமையலறையைத் தீர்மானிக்க முடிகிறது. உலகமயமாக்கப்பட்ட இன்றைய சூழலில், ‘போர் எங்கோ நடக்கிறது’என்று நாம் நிம்மதியாக இருக்க முடியாது என்பதை ஈரான் போர் உணர்த்தியுள்ளது. இந்தியாவின் எரிசக்தித் தேவையில் 85 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதியைச் சார்ந்திருப்பதால், மேற்காசியாவின் ஒவ்வொரு குண்டுவெடிப்பும் இந்தியக் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

மூடப்படும் உணவகங்கள்

இந்தியாவின் சமையல் எரிவாயு விநியோகத்தில் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கப்பல் போக்குவரத்து முடக்கத்தால், இந்தியா முழுவதும் சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மீண்டும் விறகு அடுப்புகளையும், மின் அடுப்புகளையும் தேடி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருசில வாரங்களுக்குள் வீட்டுப் பயன்பாடு எரிவாயு சிலிண்டர் விலை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்தியா முழுவதும் வெவ்வேறு நகரங்களில் சமையல் எரிவாயுக்காக விநியோக நிலையங்களை மக்கள் முற்றுகையிடும் காட்சிகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. காலி சிலிண்டர்களை வைத்துக்கொண்டு மக்கள் சாலையில் போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான உணவகங்கள் மூடப்பட்டுவருகின்றன. இதனால் தினசரி ரூ.1,300 கோடி வரை இழப்பு ஏற்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் சுமார் 20 சதவீத உணவகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன. இந்தியாவில் இந்தத் துறை நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. தற்போது லட்சக்கணக்கான ஊழியர்கள் வருமானமின்றித் தவிக்கின்றனர்.

உணவகங்கள் மூடப்படுவதால், அவர்கள் நாள்தோறும் கொள்முதல் செய்யும் டன் கணக்கிலான காய்கறிகள், பால் மற்றும் முட்டைக்கான சந்தை அழிகிறது. தக்காளி, வெங்காயம் போன்ற விளைபொருட்களை விற்க முடியாமல் விவசாயிகள் நஷ்டமடைந்து அவற்றை வீதிகளில் கொட்டும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் வெளியூர்களில் படிக்கும் மாணவர்கள், வேலை பார்ப்பவர்கள் என்று பலரும் உணவகங்களையும் சிறு சிறு மெஸ்களையும் நம்பியே வாழ்கிறார்கள். உணவுக்காக அவர்கள் இதுவரை பட்ட சிரமம் பெரிதென்றால் இனி படப்போகும் அல்லல்கள் பெருந்துயரம்.

தரைதட்டிய ரூபாய் மதிப்பு

ஈரான் போர் தீவிரமடைந்த 2026 மார்ச் தொடக்கத்தில், இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிவைக் கண்டுள்ளது. மார்ச் 9 அன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92.52 என்ற வரலாற்றுச் சரிவைத் தொட்டது. கச்சா எண்ணெய் விலை உயரும்போது, இந்தியா அதிகப்படியான டாலர்களைச் செலவிட வேண்டியிருப்பதாலும், முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையிலிருந்து வெளியேறுவதாலும் ரூபாயின் மதிப்பு வீழ்கிறது. இந்த வீழ்ச்சியால் இறக்குமதி செய்யப்படும் தங்கம், எலக்ட்ரானிக்ஸ், அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் பிரச்சினை

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் இந்தியாவின் எரிபொருள் விநியோகம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தியா அதன் கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. இதில் 50% கச்சா எண்ணெய் ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், உள்ளிட்ட மேற்காசிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகிறது. 30% ரஷ்யாவிலிருந்தும் 7.7% அமெரிக்காவிலிருந்தும், நைஜீரியா, அங்கோலா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சிறிதளவிலும் இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் மொத்த எரிவாயு இறக்குமதியில் கத்தார் மட்டும் பாதிக்கும் மேல் பங்கு வகிக்கிறது. அமெரிக்கா 13.8%, எகிப்து 4.8% பங்களிப்பை அளிக்கின்றன. ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டிருக்கும் விநியோகத் தடை, இந்தியாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலை உயர்வு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 118 டாலர் வரை தொட்டது. இந்தியாவின் 60 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் 50 சதவீதத்துக்கும் அதிகமான எல்.பி.ஜி (LPG) விநியோகம் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. இந்தப் பாதை முடங்கியுள்ளதால், ஒரு கன்டெய்னருக்கு 2,000 முதல் 4,000 டாலர் வரை கூடுதல் 'போர் அபாயக் காப்பீடு' (War Risk Insurance) வசூலிக்கப்படுகிறது. இது இந்தியாவுக்குள் வரும் எரிபொருளின் விலையை விண்ணைத் தொட வைத்துள்ளது.

உரத் தட்டுப்பாடும் உணவுப் பாதுகாப்பும்

இந்தியா தனது யூரியா மற்றும் பொட்டாஷ் போன்ற உரத் தேவைகளுக்கு மேற்காசிய நாடுகளை 25 சதவீதம் சார்ந்துள்ளது. போர் காரணமாக உர இறக்குமதி பாதிக்கப்பட்டால், இந்தியாவின் விவசாய உற்பத்தி குறையும். இது அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தி, இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமையும்.

புலம்பெயர் இந்தியர்களின் நிலை

வளைகுடா நாடுகளில் சுமார் 1 கோடி இந்தியர்கள் பணியாற்றிவருகின்றனர். போர் தீவிரமடையும்போது அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதோடு, அவர்கள் தாயகத்துக்கு அனுப்பும் பணம் குறையத் தொடங்கியுள்ளது. 2025இல் இந்தியா பெற்ற 138 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணியில் 38 சதவீதம் வளைகுடா நாடுகளிலிருந்து வந்தவை. இந்தப் பணப்புழக்கம் குறைந்தால், இந்திய வங்கிகள் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும்.

ஈரான் போரினால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5% முதல் 1% வரை குறையக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மேற்காசியாவில் விழும் ஒவ்வொரு குண்டும், இந்தியாவின் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரத்தைப் பிளக்கும் கோடரியாக மாறியுள்ளது. மாற்று எரிசக்தி மற்றும் உள்நாட்டு உற்பத்தியைப் போர்க்கால அடிப்படையில் பெருக்குவதே வருங்காலத்தில் இது போன்ற நெருக்கடிகளை எதிர்கொள்ள இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வழி.

ஈரான் போரினால் இந்தியா கடும் பாதிப்பைச் சந்தித்துவந்தாலும் இந்திய அரசின் எதிர்வினை பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்று சொல்லிக்கொண்டே எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்துகிறது. எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் நாடெங்கும் மக்கள் படும் அவதி, அரசின் கூற்றுக்கு எதிராகவே இருக்கிறது. இது ஒரு பக்கம் என்றால் ஈரான் போர் குறித்து அரசு காக்கும் மௌனம், யாருக்கு இந்திய அரசு பயப்படுகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. மேற்காசிய நாடுகளில் இருக்கும் ஒரு கோடி இந்தியர்களையும் இங்குள்ள 145 கோடி இந்தியர்களையும் கடுமையாகப் பாதிக்கும் ஒரு விவகாரத்தில் அரசின் செயலின்மையே வெளிப்படுகிறது.


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it