Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
4 நிமிட வாசிப்பு

சீனாவின் அசுர வளர்ச்சிக் கதை

இந்தியாபோல் பின்தங்கிய நிலையில் இருந்த சீனா, 50 ஆண்டுகளில் உலகின் உற்பத்தி மையமாக மாறியது எப்படி?

சீனாவின் அசுர வளர்ச்சிக் கதை
X

சீனாவின் அசுர வளர்ச்சி உலகையே திகைக்க வைக்கிறது.

ஒரு நாடு எந்த வேகத்தில் தன்னை மறுவடிவமைப்பு செய்ய முடியும் என்பதற்குச் சீனாவே சாட்சி.

கடந்த 15 ஆண்டுகளில் 45,000 கி.மீ அதிவேக ரயில் பாதைகளைச் சீனா அமைத்துள்ளது; இது உலக நாடுகளின் மொத்த நீளத்தை விட அதிகம்.

அமெரிக்கா ஒரு நூற்றாண்டு முழுவதும் (1901-2000) பயன்படுத்திய சிமென்ட் அளவை, சீனா மூன்றே ஆண்டுகளில் (2011-13) பயன்படுத்திப் பிரம்மாண்ட நகரங்களை எழுப்பியது.

உலகின் 10 பெரிய சரக்குப் பெட்டகத் துறைமுகங்களில் 7 சீனாவிலேயே உள்ளன.

உலகுக்குத் தேவையான 9 கோடி கார்களில் 6 கோடியைத் தயாரிக்கும் திறனும், உலகப் புதிய சூரிய மின் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கும் சீனாவிடமே உள்ளது.

வெறும் உற்பத்தியில் மட்டுமல்லாது, ரோபோமயமாக்கல் மற்றும் பேட்டரி தொழில்நுட்பம் என வருங்காலத்தின் சாவியையும் சீனா தன் கையில் வைத்துள்ளது.

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28% உற்பத்தித் துறை பங்களிக்கிறது. இது அமெரிக்கா மற்றும் பிரிட்டனைவிட ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகம். 2030க்குள் உலக உற்பத்தியின் 45% சீனாவினால் மட்டுமே செய்யப்படும் என ஆய்வுகள் கூறுகின்றன.

1970களில் இந்தியாவைப் போலவே இருந்த சீனா, இன்று எப்படி உலகின் 'உற்பத்தி மையம்' ஆனது?

இதற்கான விடை சீனாவின் ‘பொறியியல் அரசு’(Engineering State) என்ற தத்துவத்தில் ஒளிந்துள்ளது.

பொறியியல் அரசு

டான் வாங் தனது ‘பிரேக்நெக்’ (Breakneck) புத்தகத்தில் சீனாவை 'பொறியியல் அரசு' என்று அழைக்கிறார். 1980களில் டெங் சியாவோபிங் கம்யூனிஸ்ட் கட்சியை மறுசீரமைத்தபோது, பொறியாளர்களை ஆட்சியில் அமர்த்தினார். 2002இல் சீனாவின் உச்ச ஆட்சிக்குழுவில் இருந்த ஒன்பது பேருமே பொறியாளர்கள்.

இதன் விளைவாக, அரசாங்கம் ஒவ்வொரு சமூகப் பிரச்சினையையும் ஒரு 'பொறியியல் சவாலாக' பார்த்தது. கொள்கைகள் துல்லியமாக வகுக்கப்பட்டன. மின்னணு ரயில்கள், ட்ரோன்கள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள், விமானத் தளங்கள், நெடுஞ்சாலைகள், பாலங்கள், மின்னுற்பத்தி, கட்டிடங்களைப் போர்க்கால வேகத்தில் துரிதமாகவும் சிக்கனமாகவும் கட்டிமுடித்தனர்.

ஷென்ஜென் (Shenzhen) நகரம் ஒரு சாதாரண உதிரிபாக மையமாக இருந்தது. வெறும் 30 ஆண்டுகளில் ஹூவாய் (Huawei) மற்றும் பி.ஒய்.டி (BYD) போன்ற நிறுவனங்களின் தாயகமாக மாறியது. அமெரிக்காவின் சிலிக்கான் வேலி மென்பொருட்களின் தலைநகரம் என்றால், சீனாவின் ஷென்ஜென் வன்பொருட்களின் தலைநகரம். அங்கே சர்க்கியூட் போர்டு முதல் பேட்டரி வரை அனைத்தும் அடுத்தடுத்த தெருக்களில் கிடைக்கின்றன.

செயல்முறை அறிவு: கைகளில் உறங்கும் ரகசியம்

ஒரு நாடு உற்பத்தித் துறையை விட்டு விலகும்போது, அது வெறும் வேலைவாய்ப்புகளை மட்டும் இழப்பதில்லை; தனது 'செயல்முறை அறிவையும்' இழக்கிறது. இது எந்தப் பாடநூலிலும் இல்லாத, பல தசாப்தங்களாகத் தொழிற்சாலைகளில் உழைக்கும் தொழிலாளர்களின் கைகளிலும் மூளையிலும் சேமிக்கப்படும் நடைமுறை அறிவு.

அமெரிக்கா தனது உற்பத்தியைச் சீனாவிடம் ஒப்படைத்தபோது, பொருட்களை உருவாக்கும் இந்தத் திறனை இழந்தது. ஒரு காலத்தில் அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் ‘ஃபோக்பேங்க்’(Fogbank) என்ற ரகசியப் பொருளை அமெரிக்காவால் மீண்டும் தயாரிக்க முடியாமல் போனது. காரணம், அதைத் தயாரிக்கத் தெரிந்த பழைய பொறியாளர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர்; அந்த அறிவு அவர்களுடன் மறைந்துவிட்டது. ஆனால் சீனா, உற்பத்தி வர்க்கத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் இந்த அறிவைத் தேசியச் சொத்தாகப் பாதுகாக்கிறது.

கெளுத்தி மீன் உத்தி: வளர்ச்சிக்கான தூண்டில்

தனது உள்நாட்டுத் திறனை வளர்க்கச் சீனா 'கெளுத்தி மீன் உத்தி' (Catfish Effect) என்ற முறையைப் பயன்படுத்தியது. ஒரு தொட்டியில் சோம்பலாக இருக்கும் மீன்களைச் சுறுசுறுப்பாக்க ஒரு வேட்டையாடும் கெளுத்தி மீனை உள்ளே விடுவது போல, தனது மந்தமான உள்நாட்டுத் தொழில்துறைக்குள் வலிமையான வெளிநாட்டுப் போட்டியாளரை அனுமதித்தது.

உதாரணமாக, டெஸ்லாவை ஷாங்காயில் அனுமதித்ததன் மூலம், உள்நாட்டு நிறுவனமான பி.ஒய்.டிக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியது. அந்தப் போட்டியால் தன் தரத்தை உயர்த்திய பி.ஒய்.டி, இன்று டெஸ்லாவையே விஞ்சும் அளவுக்கு உலகப் புகழ்பெற்ற மின்சார வாகன நிறுவனமாக வளர்ந்துள்ளது.

இந்தியாவுக்கான பாடம்

சீனா மாதங்களில் முடிக்கும் திட்டங்கள், இந்தியா மற்றும் அமெரிக்காவில் தசாப்தங்கள் எடுக்கின்றன. இதற்குப் பொறியியல் சவால்களை விட, சட்டச் சிக்கல்களும் சுற்றுச்சூழல் மதிப்பீடுகளுமே காரணம்.

டான் வாங் கூறுவது போல: "கட்டும் அரசு வெல்லும்; கட்டுப்பாடு விதிக்கும் அரசு அல்ல." சீனாவில் தொழிற்சாலை வருவதற்கு முன்பே சாலைகளும் மின்சாரமும் தயாராக இருக்கும். இந்தியாவில் தொழிற்சாலை வந்த பல ஆண்டுகளுக்குப் பிறகே அடிப்படை வசதிகள் வருகின்றன.

எதிர்காலம் என்பது வெறும் 'வாக்குறுதி அளிக்கும்' அரசால் தீர்மானிக்கப்படாது; மாறாகச் சாலைகள், துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலைகளைத் துணிச்சலாகக் 'கட்டும்' அரசாலேயே தீர்மானிக்கப்படும்.

2030க்குள் செமிகண்டக்டர் மற்றும் பாதுகாப்புத் துறையில் இந்தியா சாதிக்க வேண்டுமானால், கொள்கை நிலைத்தன்மையும், 'செயல்முறை அறிவை' வளர்க்கும் சூழலும் மிக அவசியம்.

சீனாவின் மாதிரி போற்றத்தக்கதா என்பது கேள்வியல்ல; அதன் வேகத்துடனும் திறனுடனும் போட்டியிட நமது நடைமுறைகளை நாம் எப்போது மாற்றப்போகிறோம் என்பதே இப்போதைய சவால்!


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it