இந்தியாவின் தார்மீக வீழ்ச்சி
ஒரு தேசத்தின் பலம் பகட்டான பேச்சுகளில் இல்லை; சர்வதேச அநீதி நடக்கும்போது, வல்லரசுகளின் கண்களை நோக்கி ‘இது தவறு’ என்று சொல்லும் துணிச்சலில் இருக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியா குறித்து உலகரங்கில் ஒரு பிரம்மாண்டமான பிம்பத்தைக் கட்டமைத்துள்ளது:
இந்தியா உலகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் நடுவர், மேற்கத்திய நாடுகளுக்கு அடிபணியாத சுயாட்சி நாடு, வளரும் நாடுகளின் தலைவன்…
ஆனால், சமீபத்திய நிகழ்வுகள், இந்தியாவுக்கு என்று ஒரு சுயேச்சையான குரல் சர்வதேச அரங்கில் இருக்கிறதா என்ற கேள்வியை வலுவாக எழுப்புகின்றன.
அமெரிக்காவிடம் அடங்கிப்போகிறதா இந்தியா?
சில உதாரணங்கள்…
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டபோதும், அங்குள்ள பள்ளி மீது குண்டுவீசப்பட்டு 160க்கும் மேற்பட்ட சிறுமிகள் உயிரிழந்தபோதும் இந்தியா மெளனம் காத்தது. கடும் விமர்சனங்களுக்கு மத்தியில், 5 நாட்களுக்குப் பிறகே, காமேனி இறப்புக்கு இரங்கல் தெரிவிப்பதற்கு பிரதிநிதியை அனுப்பியது மத்திய அரசு.
இந்தியாவின் அழைப்பை ஏற்று ஒரு கடற்படை விழாவுக்கு வந்த ஈரான் போர்க்கப்பல், திரும்பும் வழியில் இலங்கை அருகே அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதன்முறையாக இந்தியாவின் 'செல்வாக்கு மண்டலத்துக்குள்' நடந்த இந்தத் தாக்குதல், இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகப் பார்க்கப்பட்டபோதும், மத்திய அரசு மௌனம் காத்தது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலைத் தான் தலையிட்டுத் தடுத்ததாகத் தொடர்ச்சியாகக் கூறிவருகிறார். இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என்று மத்திய அரசு மறுத்துவந்தாலும், ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் உள்விவகாரத்தில் வெளிநாட்டுத் தலைவர் இப்படி உரிமை கோருவதை மோடி அரசு ஒருமுறை கூட நேரடியாகக் கண்டித்ததில்லை.
தற்போது ஹோர்முஸ் நீரிணை நெருக்கடியால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ள சூழலில், ட்ரம்ப் அரசு, "ரஷ்ய எண்ணெயை வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்குகிறது" என்று கூறியது. “இந்தியா யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை” என்று மத்திய அரசு விளக்கம் அளித்தபோதிலும், அதில் நேரடியாக அமெரிக்காவை சுட்டிக்காட்டத் துணியவில்லை.
இந்தியாவின் சுயாட்சியையே கேள்விக்குறியாக்கும் வகையில், மோடி அரசின் அணுகுமுறை ஒரு அடிபணிவுப் போக்காக உருவெடுத்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
இந்திய வெளியுறவுக் கொள்கையின் பரிணாமம்
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் பரிணாமத்தை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்.
1990க்கு முந்தைய காலகட்டம்
நேரு காலத்து 'அணிசேராக் கொள்கை' மூலம், எந்தவொரு பெரிய வல்லரசு பக்கமும் சாயாமல் தனது சுயாட்சியைப் பாதுகாக்க இந்தியா முயன்றது. இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தபோதும், இந்தியா தார்மீகப் பாதையைப் பின்பற்றியதாக மதிப்பிடப்படுகிறது.
1956இல் எகிப்தின் சூயஸ் கால்வாய் விவகாரத்தில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் ஆக்கிரமிப்பை இந்தியா எதிர்த்தது. அதேபோல், தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக ஐநா சபையில் குரல் எழுப்பியதும் இந்தியாதான். சோவியத் ஒன்றியத்துடனான நெருக்கம் இருந்தபோதும், உலக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் இந்தியா ஒரு தார்மீகத் தரப்பாக உலகரங்கில் மதிக்கப்பட்டது.
1990 - 2014 வரையிலான காலகட்டம்
சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, ‘கொள்கையை விடப் பொருளாதார வளர்ச்சியே முக்கியம்’ என்ற நிலைக்கு இந்தியா வந்தது. அமெரிக்காவின் சந்தையும் தொழில்நுட்பமும் தேவைப்பட்டதால், இந்தியா மெல்ல மெல்ல அந்த நட்பு வளையத்துக்குள் சென்றது. 1992இல் இஸ்ரேலுடன் முழுமையான தூதரக உறவை இந்தியா தொடங்கியது.
2005இல் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக ஈரானுக்கு எதிராக ஐநா சபையில் வாக்களித்தது.
பல தசாப்தங்களாக நட்புடன் பயணித்த ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தார்மீக நிலைப்பாடுகளிலிருந்து விலகி, தன் சுயதேவை சார்ந்த நடைமுறைவாத கொள்கைப் பாதைக்கு தீவிரமாக மாறத் தொடங்கியதற்கான புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.
2014க்கு பிந்தைய காலகட்டம்
பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ், இந்தியா தன்னை உலக அரசியலை வடிவமைக்கும் திறன்கொண்ட ஒரு வளர்ந்துவரும் சக்தியாக முன்னிறுத்தியிருக்கிறது. வியூகம் சார்ந்த சுயாட்சி, தெற்குலகத் தலைவன் போன்ற சொற்கள் இந்தியாவின் ராஜதந்திர உரையாடல்களில் மையம்பெறுகின்றன.
ஆனால் யதார்த்தத்தில், காஸா, உக்ரைன் தொடங்கி ஈரான் வரையில் முக்கியமான சர்வதேச பிரச்சினைகளில் அமெரிக்கா, இஸ்ரேல் தரப்புக்கு அஞ்சி இந்தியா மெளனம் காக்கிறது என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது.
“சர்வதேசப் பிரச்சனைகளில் இந்தியா தொடர்ந்து மௌனம் காப்பதை ஒரு ராஜதந்திர உத்தியாகக் கருத முடியாது. உக்ரைன் போர், காஸா போன்ற பெரிய பிரச்சனைகளில் இந்தியா தெளிவான நிலைப்பாடு எடுப்பதைத் தவிர்ப்பது, சர்வதேச அரங்கில் இந்தியாவின் குரலின் மதிப்பை வலுவிழக்கச் செய்யும்” என்கிறார் முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன்.
இருவேறு கோணங்கள்
மோடி காலத்து வெளியுறவு அணுகுமுறை சார்ந்து இருவேறு பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன.
முதலாவது…
“மன்மோகன் சிங் ஆட்சியில் இந்தியா ஒரு 'சமநிலைப்படுத்தும் சக்தியாக' (Balancing Power) உலக அரங்கில் செயல்பட முயன்றது. ஆனால், தற்போது 'நிர்ணயிக்கும் சக்தியாக' (Decisive Power) தன்னை முன்னிறுத்தும் மோடி ஆட்சியில், இந்தியா மிக மோசமான அடிபணிவுக்குச் சென்றுவிட்டது.
ஐநா பாதுகாப்புச் சபையில் நிரந்தர இடம் கோருவது இந்தியாவின் நீண்டகாலக் கனவு. ஆனால், உலகளாவிய பொறுப்பை ஏற்கும் நாடு, இக்கட்டான சூழல்களில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மாறாக, வல்லரசுகளின் நிழலில் ஒதுங்கும் ஒரு 'முகாம் நாடு' (Camp Follower) போலச் செயல்படுவது, இந்தியா தனது சொந்த நலனுக்காக எந்த நேரத்திலும் தன் கொள்கைகளைத் தாரைவார்க்கும் என்ற பிம்பத்தை ஏற்படுத்தும்” என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது.
இரண்டாவது…
“அதிகாரப் போட்டியும் பொருளாதாரச் சார்பும் கொண்ட இன்றைய உலகில், வெறும் தார்மீக நிலைப்பாடுகள் மட்டும் நாட்டின் நலன்களைப் பாதுகாக்க முடியாது. இந்தியா ஒரே நேரத்தில் பல நாடுகளுடன் உறவைப் பேணும் (Multi-alignment) உத்தியைப் பின்பற்றுவதாகவும், இது தார்மீக வீழ்ச்சி அல்ல, மாறாக ராஜதந்திர அணுகுமுறை” என்ற கோணமும் முன்வைக்கப்படுகிறது.
அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் துணிச்சல்
முந்தைய கால இந்திய ராஜதந்திரம் முழுக்க முழுக்க தார்மீகமானது என்று சொல்வதற்கில்லை. பனிப்போர் காலத்திலும்கூட, இந்தியா தனது நட்பு நாடுகளின் மீதான விமர்சனங்களைச் சில நேரங்களில் குறைத்துக்கொண்டது. ஆனால், அந்த முரண்பாடுகளுக்கு மத்தியிலும், காலனித்துவ எதிர்ப்பு மற்றும் உலகளாவிய நீதிக்காகப் பேசும் ஒரு நற்பெயரை இந்தியா கொண்டிருந்தது.
இன்றைய கவலை என்னவென்றால், இந்தியா தீவிர நடைமுறைவாதத்துக்கு மாறிவிட்டது என்பதல்ல, மாறாக அதன் ராஜதந்திரத்தில் அறம் சார்ந்த பரிமாணம் படிப்படியாகக் காணாமல் போய்க்கொண்டிருப்பதுதான்.
வெளியுறவுக் கொள்கையில் சமரசங்கள் தவிர்க்க முடியாதவை என்று கூறப்பட்டாலும், ஒவ்வொரு நாடும் தனது லட்சியங்களுக்கும் வியூகம் சார்ந்த நலன்களுக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேணுவது இன்றியமையாதது.
ஒரு தேசத்தின் பலம் என்பது பகட்டான பேச்சுகளில் இல்லை; சர்வதேச அநீதி நடக்கும்போது, வல்லரசுகளின் கண்களை நேராகப் பார்த்து "இது தவறு" என்று சொல்லும் தார்மீகத் துணிச்சலில்தான் அந்தத் தேசத்தின் மாண்பு ஒளிந்திருக்கிறது.


