மாநிலத்தில் கூட்டணியாட்சி: ஏகாதிபத்தியக் குரல்
ஒன்றிய-மாநில அதிகாரப் பகிர்வில் உள்ள அசமத்துவத்தை சரிசெய்யாமல் மாநிலத்திலும் கூட்டணியாட்சியில் பங்குபெற தேசிய கட்சிகள் ஏங்குவது மக்களாட்சிக்கு உகந்ததல்ல

அரசியல் விவாதங்களில் இன்று ஏற்படும் மிகப் பெரிய குழப்பம் கூட்டாட்சியையும், கூட்டணி ஆட்சியையும் முடிச்சு இட்டு, ஒன்றுபடுத்திப் பேசுவது! முதலில் இது இரண்டும் எப்படி முற்றிலும் வேறுபட்டவை என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
கூட்டாட்சி (federalism) என்பது வெவ்வேறு தளங்களிலான அரசு (State -ஸ்டேட்) மற்றும் அரசாங்கங்களுக்கான (Government – அரசாங்கம்) இடையிலான அதிகாரப் பகிர்வு.
கூட்டணி ஆட்சி என்பது கோலீஷன் கவர்ன்மென்ட் (coalition government) என்னும் பல அரசியல் கட்சிகள் இணைந்து அமைக்கும் அரசாங்கம். தனிப்பட்ட எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் நாடாளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ கிடைக்காதபோது பல கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பது.
மேலும் இரண்டு எதிரிணைகளைப் புரிந்துகொண்டால்தான் இந்தக் கூட்டாட்சி, கூட்டணி ஆட்சி வேறுபாட்டை முழுமையாக உள்வாங்க முடியும்:
அரசு - எதிர் - அரசாங்கம்
அரசியல் – எதிர் - முரணரசியல்
அரசமைப்பின் இறையாண்மைப் பகிர்வே கூட்டாட்சி அரசியல்
கூட்டாட்சி என்பது குடியரசின் உயிர்நாடியான அதிகாரப் பகிர்வு. நவீன குடியரசு என்பது சட்டத்தின் ஆட்சியையும் மக்களாட்சியையும் இணைக்கிறது. அரசு என்பது சட்ட த்தின் ஆட்சி. அரசாங்கம் என்பது மக்களாட்சி. இந்த இரண்டும் இணைந்து உருவாக்கும் இறையாண்மை என்பது குத்துக்கோடாக மூன்றாக பிரிக்கப்படுகிறது:மக்கள் பிரதிநிதிகள் (லெஜிஸ்லேச்சர் – Legislature), அரசு நிர்வாகம் (எக்ஸிக்யூடிவ் – Executive), நீதிபரிபாலனம்.(ஜுடீஷியரி – Judiciary) என்பவைதான் அந்தக் குத்துக்கோடான பிரிவினைகள். ஒன்றிய அரசாங்கம், மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை கிடைக்கோடான மூன்று தளங்கள். அதிகாரப் பகிர்வு என்பது இந்த குத்துக்கோடுகள், இணைகோடுகள் சந்திப்பில் நிகழவேண்டும். இந்த அரசமைப்பு எப்படி மக்கள் வாழ்வை நிர்வகிக்கிறது, எப்படி அவர்கள் குரலுக்கு மதிப்பளிக்கிறது போன்றவை அரசியல் கேள்விகள்.
அரசாங்க உருவாக்கத்தின் ஒரு வகைப்பாடே கூட்டணி ஆட்சி முரணரசியல்.
கூட்டணி ஆட்சி என்பது மக்கள் பிரதிநிதிகளில் பெரும்பான்மையினர் எப்படி இணைந்து அரசாங்கத்தை அமைக்கப்போகிறார்கள் என்பது குறித்த கேள்விதான். அப்படி அரசாங்கத்தை அமைக்க வசதியாகத்தான் அரசியல் கட்சிகள் உருவாகின்றன. தேர்தல்களில் கட்சிகளாகப் பிரிந்து போட்டியிட்டால் அதிக தொகுதிகளில் வென்று அதிக பிரதிநிதிகளைப் பெறும் கட்சிகள் ஆட்சியமைக்க வசதியாக இருக்கும். அப்படி அந்தக் கட்சி வேட்பாளர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வசதியாகத்தான் அவர்கள் கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியவை பிரச்சாரம் செய்யப்படுகின்றன. அந்த கோட்பாடுகள் அடிப்படையிலான அணிச்சேர்க்கை முரண்கள், சமூக முரண்களுடன் இணைந்துதான் கட்சிகளுக்கான ஆதரவுத் தளங்களை உருவாக்குகின்றன.
உலக நாடுகளில் ஒரே கட்சி அரசியல் முரண்களம், இரு கட்சிகள் அரசியல் முரண்களம், பல கட்சி அரசியல் முரண்களம் என வகைப்பாடுகள் உள்ளன. பல கட்சி முரணரசியலில்தான் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காதபோது கூட்டணி ஆட்சி அமைகிறது. இவ்வாறு தேர்தல் களத்தில் சமூக முரண்கள் அரசியல் கட்சி முரண்களாக வடிவமைக்கப்பட்டு அரசாங்கத்தை உருவாக்குவதை முரணரசியல் என்று கூற வேண்டும். ஆங்கிலத்தில் பொலிட்டிகல் என்ற பெயர்ச்சொல்லாக வழங்குகிறார்கள்.
இந்திய மக்களாட்சியின் உள்ளார்ந்த முரண்பாடு
இந்திய மக்களாட்சியில் மக்கள் தொகுதிகள் மொழி சார்ந்து, பண்பாட்டு வரலாற்று நிலப்பரப்பு சார்ந்து உருவாகின்றன. இவ்வாறு உருவாகும் மக்கள் தொகுதிகள்தான் முரணரசியல் களங்களாக அமைகின்றன என்பதால் அவையே மக்களாட்சியின் நிலைக்களங்களாக விளங்குகின்றன. தேசிய அளவில் முரணரசியல் களம் என்பது சாத்தியமேயில்லை. ஒரு மாநிலத்து மக்களுக்கு பிற மாநில கட்சிகளின், தலைவர்களின் பெயர்கள்கூட தெரியாது. பிரச்சினை என்னவென்றால் அதிகாரம் ஒன்றிய அரசாங்கத்திடம் குவிக்கப்பட்டுள்ளது; மக்களாட்சி முரணரசியல் களங்கள் உருவாக்கும் மாநில அரசுகள் சுயாட்சியுடன் இயங்க முடிவதில்லை.
இந்திய தேசிய உருவாக்கம் என்பது காங்கிரஸ் என்ற ஆங்கிலக் கல்வி பெற்ற உயர்வகுப்பினரின் குடிமைச் சமூக முன்னெடுப்பாக விளங்கியதால், இந்திய அரசமைப்புச் சட்டம் ஒன்றிய அரசாங்கத்திலேயே அதிகாரங்களை குவித்துவிட நேர்ந்தது. அதனால் சட்ட த்தின் ஆட்சி என்பது ஒன்றியத்திலும், மக்களாட்சி என்பது மாநிலங்களிலுமாக மையம் கொள்வதைக் காண்கிறோம். மக்களாட்சி முதிர்ச்சியடையும்போது, மாநிலக் கட்சிகளின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. தேசியக் கட்சிகள் எனப்படுபவையும் மாநில அளவில்தான் வேர்கொண்டுள்ளன.
அதனால் ஒன்றியத்தில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாமல் போகும்போது மாநில கட்சிகள் பங்குபெறும் கூட்டணி ஆட்சி அமைவது தேவையாகிறது. ஆனால், மாநில முரணரசியலில் இருதுருவ அரசியல் நிலைபெறும்போது ஏதோவொரு கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் அரசமைப்பதே மாநில அரசியலுக்கு நிலைத்தன்மையை வழங்குகிறது. ஏனெனில் அதிகாரப் பகிர்வுக்காக ஒன்றிய அரசுடன், மாநில அரசுகள் போராட வேண்டியுள்ளது. ஒன்றிய - மாநில அதிகாரப் பகிர்வில் உள்ள அசமத்துவத்தை சரிசெய்யாமல் மாநில அரசாங்கத்திலும் வலிந்து கூட்டணி ஆட்சியில் பங்குபெற தேசிய கட்சிகள் ஏங்குவது மக்களாட்சிக்கு உகந்ததல்ல!


