Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
8 நிமிட வாசிப்பு

பேசப்படுமா குரியன் ஜோசப் குழு?

தமிழ்நாட்டில் கூட்டாட்சி கோரிக்கை தொடர்ந்து பேசப்பட்டாலும் நீதிபதி குரியன் ஜோசப் குழுவைப் பற்றிய விவாதங்கள் கருத்தியல் தளத்தில் ஏதும் எழாதது மோசம்.

பேசப்படுமா குரியன் ஜோசப் குழு?
X

மத்திய மாநில உறவுகளைப் பற்றி ஆலோசித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் தமிழ்நாடு அரசு உயர்நிலைக் குழு ஒன்றை 2025 ஏப்ரல் மாதத்தில் அமைத்தது. அந்தக் குழு 2026 ஜனவரி மாதம் இறுதிக்குள் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

"நீட் தேர்வால் பல மாணவர்களின் மருத்துவ கனவுகள் சிதைந்துள்ளன; மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது திணிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது; தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை வழங்க ஒன்றிய அரசு மறுக்கிறது; தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்க மாநிலங்களுக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை; கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும்; மாநில அரசின் வரி வருவாய்ப் பறிக்கப்படுகிறது; நாம் செலுத்தும் ஒரு ரூபாய் வரியில் 29 பைசாதான் திரும்பி வருகிறது; மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்குத் தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது”என மாநில உரிமைகளுக்கு எதிரான ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட தமிழ்நாடு முதல்வர், அதற்காகவே இந்த உயர்நிலைக் குழு அமைக்கப்படுவதாக அறிவித்தார்.

நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழு இடைக்கால அறிக்கையை 2026 ஜனவரி மாத இறுதிக்குள் சமர்ப்பிப்பது என்பதற்குப் பதிலாக, அறிக்கையை இரண்டு பாகங்களாகப் பிரித்துக் கொண்டு முதல் பாகத்தைத் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக சமர்ப்பிக்கும் என்று செய்திகள் வெளிவந்தன. தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு இன்னும் ஓரிரு வாரங்களே இருக்கும் நிலையில் குழுவின் அறிக்கை நேற்று முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் அது தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் மாநில உரிமைகளைப் பற்றி ஆரவாரமாகப் பேசப்பட்டாலும் நீதிபதி குரியன் ஜோசப் குழுவைப் பற்றிய விவாதங்கள் கருத்தியல் தளத்தில் ஏதும் எழவில்லை. அந்தக் குழு எத்தகைய விஷயங்களைப் பரிசீலிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு வரையறுத்திருந்தாலும் அந்தக் குழு அமைக்கப்பட்டதை முன்வைத்து உருப்படியான விவாதங்கள் ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் தமது கருத்துகளை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், இதில் எதுவுமே நடக்கவில்லை.

எந்தப் பின்னணியில் அணுக வேண்டும்?

‘நீதிபதி குரியன் ஜோசப் குழு எந்தப் பின்னணியில் மத்திய - மாநில உறவுகள் என்ற பிரச்சினையை அணுகவேண்டும்?’ என்பது முக்கியமான வினாவாகும். பரந்துபட்ட அளவில் இது தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை தொடர்பான விஷயமாகும். எனவே, நீதிபதி குரியன் ஜோசப் குழு நமது அரசமைப்புச் சட்டத்தின் வரம்புக்குள் நின்று சுயநிர்ணய உரிமை என்ற சட்டகத்துக்குள் மத்திய - மாநில உரிமைகளைப் பரிசீலிக்க வேண்டும். இதில் உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி திரு கே.ஜி.பாலகிருஷ்ணன் அந்தப் பதவியை வகித்தபோது தெரிவித்த கருத்துகள் பயனுள்ளவையாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

மேனாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் நாள் டெல்லியில் வி.கே.கிருஷ்ண மேனன் நினைவுச் சொற்பொழிவை ஆற்றும்போது தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை (self determination) குறித்து முக்கியமான சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். மிகவும் சிக்கலான இந்தப் பிரச்சினையை அவர் தனது உரையில் நுட்பமாகக் கையாண்டிருந்தார்.

சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்வதற்கான உரிமையாகவே கருதப்படுகிற சூழலில் ஐ.சி.சி.பி.ஆர் என சுருக்கமாக அறியப்படும் ‘அரசியல் மற்றும் சிவில் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம்’, ஹெல்சின்கி சட்டம், ஐ.நா. சபையின் தீர்மானங்கள் முதலானவை அதை எப்படி விளக்கியுள்ளன என்று பாலகிருஷ்ணன் தனது உரையில் தெளிவாக எடுத்துக்காட்டியிருந்தார்.’கொசோவாவின் சுதந்திரப் பிரகடனமும், ஜார்ஜியாவிலிருந்து தெற்கு ஒசேஷியா மற்றும் அப்காஸியா ஆகியவை பிரிந்துசென்றதும் சுயநிர்ணய உரிமை குறித்த பிரச்சினையை மீண்டும் விவாதத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றன’ என்று சுட்டிக்காட்டிய கே.ஜி.பாலகிருஷ்ணன் இந்த விஷயத்தில் அண்மைக்காலமாக நிகழ்ந்திருக்கும் கருத்தியல் மாற்றங்களையும் எடுத்துக் கூறியிருந்தார்.

இரண்டு விதமான சுயநிர்ணய உரிமைகள்

சுயநிர்ணய உரிமை என்பது இரண்டு விதமாகப் பார்க்கப்படுகிறது. ஒன்று உள்ளான சுயநிர்ணய உரிமை மற்றது புறமான சுயநிர்ணய உரிமை. “பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பதைக் குறிப்பிட்டதொரு அரசியல் சூழலில்தான் ஐ.நா. பேரவை ஏற்றுக்கொள்கிறது. காலனிய நாடுகளில் உள்ள மக்களுக்கு அந்த உரிமையை ஐ.நா. தீர்மானம் வழங்குகிறது. ஆனால், சுதந்திரம் பெற்ற ஒரு நாட்டில் இந்த உரிமையை அப்படியே பொருத்திப் பார்க்க முடியாது” என்று கூறிய கே.ஜி.பாலகிருஷ்ணன், அண்மைக் காலமாக ‘உள்ளான சுயநிர்ணய உரிமை’ என்பது எவ்வாறு அரசியல் தளத்தில் முக்கியத்துவம் பெற்றுவருகிறது என்பதைத் தனது உரையில் விரிவாக எடுத்துக்கூறி இருந்தார்.

ஐ.நா. பேரவையின் தீர்மானம் 2625இல் இதுகுறித்து தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஒரு நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தவர் மிக மோசமாக ஒடுக்கப்படும்போது அவர்கள் தமது அரசியல் தலைவிதியைத் தாமே தீர்மானித்துக்கொள்ளக்கூடிய உரிமையைக் கோரலாம். பிரிந்து செல்லாமல் அந்த நாட்டுக்குள்ளேயே சமத்துவமான உரிமைகளுக்கான ஏற்பாட்டைச் செய்து கொள்வதுதான் ‘உள்ளான சுயநிர்ணய உரிமை’ என்பதன் பொருளாகும்.

2002ஆம் ஆண்டு உலக அளவிலான ஊடகவியலாளர்களை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சந்தித்தபோது, அவர்களுக்கு ஆன்டன் பாலசிங்கம் ஆங்கிலத்தில் குறிப்பு ஒன்றை வழங்கினார். புலிகள் கேட்கும் சுயநிர்ணய உரிமை எத்தகையது என்பதை அதில் அவர் விளக்கியிருந்தார். “சமமான உரிமைகளைக் கொண்ட ‘ உள்ளான சுயநிர்ணய உரிமை‘யைத்தான் நாங்கள் கோருகிறோம்” என்பதை அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டு மாவீரர் தின உரையில் பிரபாகரனும் அதை உறுதிப்படுத்தியிருந்தார். ‘‘சுயநிர்ணய உரிமை என்பது உள்ளான, புறமான இரு அம்சங்களைக் கொண்டது. உள்ளான சுயநிர்ணயம் என்பது ஒரு மக்கள் சமூகத்தின் பிரதேச சுயாட்சி உரிமையை வலியுறுத்துகிறது. தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில் வரலாற்றுரீதியாக வாழ்ந்துவந்த பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடு இன்றி, சுதந்திரமாக, கௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இன அடையாளத்தைப் பாதுகாத்து வாழ விரும்புகிறார்கள். தமது தாயக மண்ணில் தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகிறார்கள். இதுவே எமது மக்களின் அரசியல் அபிலாஷை. உள்ளான சுயநிர்ணயத்தின் அர்த்தப் பரிமாணம் இதில்தான் அடங்கியிருக்கிறது. உள்ளான சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் எமது தாயக நிலத்தில், எமது மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய பூரண சுயாட்சி அதிகாரத்துடன் ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டால், நாம் அத்திட்டத்தை சாதகமாகப் பரிசீலனை செய்வோம்” என்று மாவீரர் தின உரையில் பிரபாகரன் கூறியிருந்தார். பிரபாகரனின் ஊடகவியலாளர் சந்திப்பைத் தொடர்ந்து அங்கே அந்தக் கருத்து விவாதப் பொருளாகியிருக்க வேண்டும். ஏனோ அவ்வாறு நடக்கவில்லை.

கே.ஜி.பாலகிருஷ்ணனின் எச்சரிக்கை

“புறமான சுயநிர்ணய உரிமையைப் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையிலும் அடைய முடியும். முன்னாள் சோவியத் ரஷ்யா பல்வேறு தேசிய இனங்கள் பிரிந்துசெல்ல அனுமதித்தது, செக் மற்றும் ஸ்லோவக் மொழிகள் பேசும் தேசிய இனங்கள் பிரிந்தது, எத்தியோப்பியாவிலிருந்து எரித்திரியா பிரிந்தது ஆகியவை இப்படி பரஸ்பர ஒப்புதலோடு நிகழ்ந்தவைதான்”என்பதை சுட்டிக்காட்டிய கே.ஜி.பாலகிருஷ்ணன், சில நேரங்களில் உள்ளான சுயநிர்ணயம் என்பதேகூடப் பிரிவினைக்கான முன்னோட்டமாக அமைந்துவிடக்கூடும் என்ற எச்சரிக்கையையும் தமது உரையில் வெளியிட்டிருந்தார்.

“சர்வதேசச் சட்டங்கள் முழுமுதலான சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கின்றனவா? அல்லது, தற்காலிகமான சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கின்றனவா? என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும். 1960ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐ.நா சபை தீர்மான எண் 1514ன்படி காலனிய ஆட்சியின்கீழ் இருக்கும் நாடுகளுக்கே இது பொருந்தும் என்று தெளிவுபடுத்தப்பட்டிருந்தாலும் சிறுபான்மை இனத்தவர் தொடர்ந்து ஒடுக்கப்படுகிற நாடுகளில் இருக்கும் சூழல் காலனிய நிலைமைக்கு எந்தவிதத்திலும் வேறுபட்டதல்ல என்ற கருத்துகளும் கூறப்படுகின்றன. இவை விவாதிக்கப்பட வேண்டும்”என நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார்.

மத்திய - மாநில உறவுகளைப் பற்றி ஆலோசித்து அறிக்கை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டிருக்கும் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழு நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் சுயநிர்ணய உரிமை குறித்துக் கூறிய கருத்துகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்துத் தந்த நமது அரசமைப்புச் சட்டத்தில், ஐநா தீர்மானங்களுக்கு ஏற்ப செய்ய வேண்டிய திருத்தங்களை முன்மொழிய வேண்டும்.


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it