உக்ரைனை உறைய வைத்த ரஷ்யா
ரஷ்யாவின் தொடர்ச்சியான உள்கட்டமைப்புத் தாக்குதல்களால் பாதிக்கப்படும் உக்ரைனியர்களின் வாழ்வுரிமை

நவீன காலத்துப் போர்கள் ராணுவ இலக்குகளைத் தாண்டி, அப்பாவி மக்களின் உயிர்நாடியாக விளங்கும் உள்கட்டமைப்புகளைச் சிதைப்பதையே முதன்மை உத்தியாகக் கொண்டுள்ளன. தற்போது போர்நிறுத்தத்தால் சற்றே ஆசுவாசம் அடைந்துள்ள காஸாவில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்கள் லட்சக் கணக்கான பாலஸ்தீனியர்கள் வீடுகளையும் உடமைகளையும் வாழ்வாதாரத்தையும் இழக்கச் செய்தது. இப்போது உக்ரைனில் ரஷ்யா முன்னெடுத்துவரும் மின் கட்டமைப்பு, உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் உக்ரைன் மக்களை உறைபனியில் தவிக்கவிட்டுள்ளது.
குளிரில் உறையும் வாழ்க்கை
2025 டிசம்பர் மாதத்தில், உக்ரைனின் மின்னுற்பத்தி மற்றும் விநியோக மையங்களை இலக்காகக் கொண்டு ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் ஒரு நாட்டையே ஃப்ரீஸருக்குள் அடக்கிவிட்டது போன்ற நிலைக்குத் தள்ளியுள்ளது. குறிப்பாகக் கிறிஸ்துமஸ் தினத்தில் (டிசம்பர் 25) நடத்தப்பட்ட தாக்குதல்கள் உக்ரைனின் மின்னுற்பத்தித் திறனில் 50 சதவீதத்தை முடக்கியுள்ளன.
உக்ரைனில் குளிர் காலத்தில் -20 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் வெப்பநிலையில், மின்சாரம் என்பது ஒரு அடிப்படை உயிர்வாழ்வுத் தேவையாகிறது.
மின்சாரம் இல்லாததால் வீடுகளில் வெப்பமூட்டும் வசதிகள் அற்றுப்போய், மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே பல அடுக்குக் கம்பளி ஆடைகளை அணிந்து முடங்கியுள்ளனர். தண்ணீர் விநியோகம் முடங்குவது, மருத்துவமனைகளில் சிகிச்சைகள் பாதிக்கப்படுவது மற்றும் முதியவர்கள் குளிரால் உறைந்து மரணத்தைத் தழுவுவது என உக்ரைனின் அன்றாட வாழ்க்கை ஒரு பெரும் போராட்டமாக மாறியுள்ளது.
புகலிடங்களான ரயில் பெட்டிகள்
வீடுகளில் வெப்பமூட்டும் வசதிகள் முற்றிலும் செயலிழந்த நிலையில், உக்ரைன் மக்கள் உயிர் பிழைக்கப் புதிய வழிகளைக் கண்டறிந்துள்ளார்கள். குறிப்பாக, ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ள ரயில் பெட்டிகள் தற்காலிக வெப்பமூட்டும் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன. நிலக்கரி மூலம் இயங்கும் அடுப்புகள் கொண்ட இந்த ரயில் பெட்டிகளில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளார்கள். வீடுகளை விட இந்த பெட்டிகள் கதகதப்பாக இருப்பதால், முதியவர்களும் குழந்தைகளும் அங்கு இரவு நேரத்தைக் கழிக்கிறார்கள்.
அரசும் தொண்டு நிறுவனங்களும் இணைந்து நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தற்காலிகப் புகலிடங்களை அமைத்துள்ளன. இங்கு ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம், இணைய வசதி மற்றும் வெப்பம் வழங்கப்படுகிறது. மக்கள் தங்கள் கைபேசிகளை மின்னேற்றம் (Charge) செய்யவும், தண்ணீரைக் கொதிக்க வைத்து குடிப்பதற்காகவும் இந்தப் புள்ளிகளை நாடுகிறார்கள். ஒரு சிறிய மின் இணைப்புக்காக மக்கள் மணிநேக்கணக்கில் காத்திருக்கிறார்கள்.
கொடிய வரலாற்றின் மீள்நிகழ்வு
1990களில் நடந்த போஸ்னியப் போரின்போது, சரயேவோ நகரம் சுமார் நான்கு ஆண்டுகள் முற்றுகையிடப்பட்டது. அன்று அந்த நகரத்தின் மீதும் இதே போன்ற உத்திகள் கையாளப்பட்டன. மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிவாயு இணைப்புகளைத் துண்டித்து, மக்களைப் பட்டினியாலும் குளிராலும் மடியச் செய்யும் ஒரு கொடூரமான உத்தி அது. அன்று சரயேவோ மக்கள் எவ்வாறு நிலத்தடிப் பாதைகளையும், விறகுகளையும் நம்பி வாழ்ந்தார்களோ, அதே போன்றதொரு நிலையை இன்று உக்ரைன் நகரங்கள் சந்தித்துவருகின்றன.
ரஷ்யாவின் இப்போதைய நடவடிக்கை, 1930களில் ஜோசப் ஸ்டாலின் உக்ரைனில் நிகழ்த்திய 'ஹொலோடோமோர்' (Holodomor) எனப்படும் செயற்கைப் பஞ்சத்தை நினைவூட்டுகிறது. அன்று தானியங்களைப் பறிமுதல் செய்து உக்ரைனியர்களைப் பட்டினியால் கொன்றது போலவே, இன்று ஆற்றல் வளங்களை ஆயுதமாக்கி மக்களை வதைக்க ரஷ்யா முயல்கிறது. ஸ்டாலின் காலத்து ஒடுக்குமுறையும் சரி புடினின் போர்த் தாக்குதல்களும் சரி, இரண்டுமே சாமானிய உக்ரைனியர்களை குறிவைப்ப்பதன் மூலம் ஒரு தேசத்தை நிலைகுலையச் செய்யும் உத்திகள்தாம் .. .
ஸ்டாலின் கால சோவியத் ஒன்றியத்தின் தாக்குதல், சரஜீவோ நகர முற்றுகை ஆகியவை நிகழ்ந்து பல பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்போது உக்ரைன் மீது புடினின் ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் வரலாற்றின் மிக மோசமான மீள்நிகழ்வாகும்.
நிலங்கள் வேறு; வலி ஒன்று
உக்ரைனில் உள்கட்டமைப்புகள் தாக்கப்படுவதையும், அங்குள்ள மக்களின் துயரங்களையும் உலகம் கூர்ந்து கவனித்து வரும் அதே வேளையில், இதே போன்றதொரு அவலத்தை காஸா நிலப்பரப்பும் எதிர்கொண்டதை மறந்துவிட முடியாது. உக்ரைனில் உறைபனி ஒரு 'மறைமுக ஆயுதமா'கப் பயன்படுத்தப்படுகிறது என்றால், காஸாவில் மின்சாரம், எரிபொருள் மற்றும் குடிநீர் கட்டமைப்புகள் துண்டிக்கப்பட்டது ஒரு முழுச் சமூகத்தையுமே முடக்கும் பேராயுதமாக மாறியது.
ஒரு நாட்டின் குடிமைச் சமூகத்தின் அடிப்படைத் தேவைகளைத் துண்டித்து அவர்களை வதைப்பது என்பது எங்கு நடந்தாலும் அது கண்டிக்க வேண்டியது அவசியம். துரதிர்ஷ்டவசமாக, சர்வதேச அளவில் ஒரு பகுதியில் நடக்கும் துயரத்துக்காகக் குரல் கொடுப்பவர்கள், இன்னொரு பகுதியில் நடக்கும் அதே போன்ற அவலத்தைக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் போக்கைக் காண முடிகிறது. மனிதாபிமானம் என்பது புவியரசியலுக்கோ, ஒருவரின் ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கோ உட்பட்டதாக இருக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களின் வலியை அவர்கள் எந்தத் தரப்பில் இருக்கிறார்கள் என்பதை வைத்துப் பாகுபடுத்தாமல், பொதுவான நீதியின் கண்ணோட்டத்தில் அணுக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
உக்ரைனின் இந்த இருண்ட குளிர்காலமும் காஸா பேரழிவும் உலக நாடுகளுக்கு ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கிறது. ஒரு நாடு தனது பாதுகாப்புக் காரணங்களைக் கூறி நடத்தும் தாக்குதல்கள், இன்னொரு தேசத்தின் அப்பாவி மக்களின் வாழ்வுரிமையை நசுக்குவதாக அமையக் கூடாது. உக்ரைனாக இருந்தாலும் சரி, காஸாவாக இருந்தாலும் சரி, அடிப்படை வசதிகளைச் சிதைத்து மக்களை வதைப்பது என்பது நாகரிகச் சமூகம் ஏற்க முடியாதது. சர்வதேச சமூகம் இனியும் மெளன சாட்சியாக நீடிக்கலாகாது.


