Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
4 நிமிட வாசிப்பு

இட ஒதுக்கீடு சலுகையல்ல, பரிகாரம்!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கல்வியும் அதிகாரமும் மறுக்கப்பட்ட ஒரு சமூகம், பல தலைமுறைகளாகச் சலுகை பெற்றவர்களுடன் சமமாகப் போட்டியிட வேண்டும் என்று கோருவது நியாயமா?

இட ஒதுக்கீடு சலுகையல்ல, பரிகாரம்!
X

இடஒதுக்கீடு குறித்த விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

குறிப்பாக, மஹாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கான 5% இட ஒதுக்கீட்டை பாஜக தலைமையிலான அரசு ரத்து செய்திருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சச்சார் கமிட்டி முதல் மிஸ்ரா ஆணையம் வரை பல ஆய்வுக் குழுக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கிய சமூகத்துக்கு இடஒதுக்கீடு தேவை என்பதை தரவுகளுடன் வலியுறுத்தியுள்ளன.

எனினும், இந்தியாவில் இட ஒதுக்கீடுக்கு எதிரான வாதம் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவருகிறது: "இடஒதுக்கீடு தகுதியைக் கொன்றுவிடும். இடஒதுக்கீடு தனிமனிதத் திறமையை விட சாதி, மத அடையாளத்துக்கு முன்னுரிமை அளிக்கிறது."

நிஜமாகவே தகுதி என்பது ஒரு தனிமனிதனின் உழைப்பு மட்டும்தானா? அல்லது அது ஒரு பிறவிச் சலுகையின் மறுபெயரா?

தகுதி: சலுகையின் எச்சம்

"தகுதி முடிவு செய்யட்டும்” என்பது கேட்பதற்கு மிகவும் நேர்மையான வாதமாகத் தோன்றும். ஆனால், ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஒருவர் தொடக்கக் கோட்டிலும், இன்னொருவர் 50 மீட்டர் முன்னாலும் நின்றால், அந்தப் பந்தயத்தின் முடிவு தகுதியைச் சொல்கிறதா அல்லது அந்தத் தொடக்கப் புள்ளி இடைவெளியைச் சொல்கிறதா?

முற்படுத்தப்பட்ட்ட சாதி, நகர்ப்புற, ஆங்கிலம் பேசும் சூழலில் வளரும் ஒரு குழந்தைக்குக் கிடைக்கும் பயிற்சியும், ஒரு குக்கிராமத்தில் வசதிகள் மறுக்கப்பட்ட குழந்தைக்குக் கிடைக்கும் பயிற்சியும் ஒன்றல்ல.

“நாம் 'தகுதி' என்று எதைக் கொண்டாடுகிறோமோ, அது உண்மையில் தலைமுறைகளாகக் குவிக்கப்பட்ட சலுகையின் விளைவே. தகுதி என்பது பல நேரங்களில் தனிமனித சாதனையாக மாறுவேடமிடும் வரலாற்றுச் சலுகை” என விமர்சிக்கிறார் சமகாலத்தின் மிக முக்கியமான அரசியல் தத்துவ அறிஞர் மைக்கேல் சாண்டெல் .

தகுதியின் கொடுங்கோன்மை

மைக்கேல் சாண்டெல் முன்வைக்கும் 'தகுதியின் கொடுங்கோன்மை' (The Tyranny of Merit) என்ற வாதம், தகுதிவாதம் (Meritocracy) ஒரு சமூகத்தின் ஆன்மாவை எப்படி இரண்டாகப் பிளக்கிறது என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது.

ஒரு போட்டித் தேர்வில் வெல்லும் நபர், "இந்த வெற்றி முழுக்க முழுக்க எனது உழைப்பால், எனது அறிவால் கிடைத்தது" என்று மார்தட்டிக்கொள்கிறார். தான் ஒரு வசதியான சூழலில் பிறந்த அதிர்ஷ்டத்தையும், தனக்குப் பின்னால் இருந்த தலைமுறை காலச் சலுகைகளையும் அவர் வசதியாக மறந்துவிடுகிறார்.

தோல்வியடைந்தவர்களோ, "நான் தோற்றதற்கு என் சூழல் காரணமல்ல, எனக்குத் தகுதியில்லை" என்று தங்களைத் தாங்களே நொந்துகொள்கிறார்கள். இது அவர்களின் சுயமரியாதையைச் சிதைத்து, அவர்களை ஒரு நிரந்தரமான தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளுகிறது.

தகுதிவாதம் என்பது ஒரு நுணுக்கமான உளவியல் யுத்தமும் கூட.

இந்தியப் போட்டித் தேர்வு முறைகள் இந்தத் தகுதிக் கதையை மிகத் தீவிரமாக விற்கின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கல்வியும் அதிகாரமும் மறுக்கப்பட்ட ஒரு சமூகம், தலைமுறை தலைமுறையாக சலுகை பெற்றவர்களுடன் சமமாகப் போட்டியிட வேண்டும் என்று கோருவது எந்த வகையில் நியாயம்?

இட ஒதுக்கீடு: ஜனநாயக அமைப்பின் தார்மீகப் பொறுப்பு

தகுதிவாதம் முன்வைக்கும் மிகப் பெரிய ஆபத்து என்னவென்றால், அது 'திறமையை' வெறும் தேர்வு மதிப்பெண்களாகச் சுருக்குகிறது. ஆனால், ஒரு ஜனநாயக சமூகத்துக்குத் தேவைப்படுவது தேர்வு மதிப்பெண்கள் மட்டுமல்ல; சமூகப் பொறுப்புணர்வு, பன்முகத்தன்மை.

ஒரு சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் அதிகாரத்தில் பங்கேற்காத வரை, அந்த அரசு எடுக்கும் முடிவுகள் ஒருதலைப்பட்சமாகவே இருக்கும். இடஒதுக்கீடு என்பது அந்த ஒருதலைப்பட்சமான போக்கைச் சரிசெய்யும் ஒரு 'திருத்த நடவடிக்கை' என்கிறார் சாண்டெல் . இது தகுதியைக் குறைப்பதல்ல; மாறாக, குறுகிய வட்டத்தில் தேங்கிக் கிடக்கும் தகுதியை விரிவுபடுத்தி, ஒட்டுமொத்த தேசத்தையும் தகுதியுள்ளதாக மாற்றுவதாகும்.

திறமை என்பது ஒரு சமூகச் சொத்து. ஒரு நபர் மருத்துவராகவோ அல்லது அதிகாரியாகவோ ஆவதற்கு அவரது உழைப்பு மட்டும் காரணமல்ல; சமூகம் வழங்கிய வாய்ப்புகளும் காரணம். எனவே, அந்தத் திறமை சமூகத்தின் அனைத்து அடுக்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்தப் பயன்படுத்தப்பட வேண்டும்.

விளிம்புநிலைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கொள்கை முடிவெடுக்கும் இடத்துக்கு வரும்போது, அவர் கொண்டுவரும் 'வாழ்வியல் அனுபவம்' எந்த ஒரு பாடப் புத்தகத்தாலும் வழங்க முடியாதது. இது நிர்வாகத்தைச் செழுமைப்படுத்துவதோடு, அரசின் மீதான சமூக நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதாவது, அதிகாரத்தை பன்முகப்படுத்துகிறது.

நாம் எத்தகைய சமூகத்தை விரும்புகிறோம்?

உண்மையான கேள்வி, "யாரிடம் அதிக மதிப்பெண் இருக்கிறது?" என்பதல்ல; "நாம் எந்த மாதிரியான சமூகமாக வாழ விரும்புகிறோம்?" என்பதே.

சலுகை பெற்றவர்கள் மட்டும் முன்னேறும் 'தகுதிவாதம்' கொண்ட சமூகமா? அல்லது பிறப்பின் தற்செயல் நிகழ்வுகளைத் தாண்டி, ஒவ்வொரு குடிநபருக்கும் சமமான கண்ணியத்தையும் வாய்ப்பையும் வழங்கும் சமூகமா?

சமத்துவமற்ற ஒரு சமூகத்தில் 'தகுதி' என்பது வெறும் கட்டுக் கதை. அந்தக் கட்டுக் கதையை உடைத்து நீதியை நிலைநாட்டவே இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது.

இட ஒதுக்கீடு தகுதியைச் சிதைப்பதில்லை; மாறாக, அது உண்மையான திறமை வெளிப்படுவதற்கான களத்தைத் தயார் செய்கிறது.


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it