ஒரே நாடு ஒரே தேர்தல் - நோயைவிடக் கொடுமையான மருந்து
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசமைப்பின் அடையாளத்தையே மாற்றுவதும், அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக் கொள்கையை மீறுவதும் ஆகும்.

இந்தோனேசியா 2019இல், அதிபர் பதவி, நாடாளுமன்றம், பிராந்திய சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒரே நாளில் தேர்தலை நடத்தியது. செலவுகளைக் குறைத்து நிர்வாகத்தை எளிமைப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, மனித உயிர்களின் பெரும் இழப்பை ஏற்படுத்தியது: சுமார் 900 தேர்தல் பணியாளர்கள் உயிரிழந்தனர்; மேலும் 5,000க்கும் மேற்பட்டோர் கடுமையான உடல்நலக் குறைவு அடைந்தனர்.
2025 ஜூன் மாதத்தில், இந்தோனேசிய அரசமைப்பு நீதிமன்றம் 2029 முதல் தேசிய மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் தனித்தனியாக — இரண்டு முதல் இரண்டரை ஆண்டுகள் இடைவெளியில் — நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. வாக்காளர்கள் மற்றும் நிர்வாக அமைப்புகள் மீது ஏற்பட்ட அதிகப்படியான சுமையும், ஜனநாயகப் பங்கேற்பில் ஏற்பட்ட பாதிப்பும் இதற்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டது.
இந்தியாவில் முன்வைக்கப்பட்டுள்ள ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ (One Nation One Election - ONOE) முன்மொழிவை ஆதரிப்பவர்கள், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒருங்கிணைப்பதன் மூலம் செலவுகளைக் குறைக்க முடியும், பாதுகாப்புப் படையினரை தேர்தல் பணிகளுக்காக நீண்டகால பணியமர்த்துவதைத் தவிர்க்கலாம், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறை காரணமாக ஏற்படும் நிர்வாகத் தடைகளைக் குறைக்கலாம், மேலும், அரசியல் கட்சிகள் எப்போதும் தேர்தல் பரப்புரை மனநிலைக்குத் தள்ளப்படுவதைத் தவிர்க்கலாம் என்றெல்லாம் வாதிடுகின்றனர்.. எனினும், இந்தோனேசியாவின் அனுபவம் ஒரு எச்சரிக்கைப் பாடமாகத் திகழ்கிறது.
நாடுகளின் அரசமைப்பு நடைமுறைகளை ஒப்பிட்டுப் பார்த்தால், கட்டாயத் தேர்தல் ஒருங்கிணைப்புக்குப் பெரிதாக ஆதரவு இல்லை. கனடாவில், நாடாளுமன்ற மற்றும் மாகாணச் சட்டமன்றத் தேர்தல்கள் தனித்தனியாக நடைபெறுகின்றன. ஆஸ்திரேலியாவில் ஒருங்கிணைப்பு இயலாத ஒன்றாகும்: அங்கு மாநிலச் சட்டமன்றங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் நான்கு ஆண்டுகள்; அதே நேரத்தில் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபையின் அதிகபட்ச பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே.
ஜெர்மனி பெரும்பாலும் தவறாக மேற்கோள் காட்டப்படுகிறது. அங்கு நிலவும் அரசியல் நிலைத்தன்மை, ஒருங்கிணைந்த தேர்தல்களால் அல்ல —மாநிலத் தேர்தல்கள் திட்டமிட்டே வெவ்வேறு காலங்களில் நடைபெறுகின்றன — மாறாக ‘ஆக்கபூர்வமான நம்பிக்கையில்லாத் தீர்மானம் (Constructive Vote of No Confidence’) என்ற முறையால் உருவாகிறது. அதன்படி, பிரதமரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு முன், அந்நாட்டு நாடாளுமன்றம் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தென்னாப்பிரிக்காவும் இந்தோனேசியாவும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையைப் பயன்படுத்துகின்றன; இது அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்கி, சிறுபான்மையினரின் குரலைப் பாதுகாக்கிறது. இந்தியாவில் ‘அதிக வாக்குகள் பெறுபவரே வெற்றி பெறும் தேர்தல் முறைமை (first-past-the-post) பின்பற்றப்படுகிறது. இதில் அத்தகைய பாதுகாப்புகள் இல்லை; தேசிய அளவிலான ஒரு அரசியல் அலை மாநிலத் தேர்தல்களிலும் முழுமையாகத் தாக்கம் செலுத்தக்கூடும். அமெரிக்கா வழங்கும் ஒப்புமையும் பலவீனமானதே: அங்கு நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் சுழற்சிகள் செயல்படுவதற்குக் காரணம், அதிபர் மற்றும் நிர்வாகத்தின் பதவிக்காலம் நாடாளுமன்றத்தின் ஆதரவைச் சார்ந்த்து அல்ல என்பதுதான்.
அரசமைப்புத் திருத்த முன்மொழிவு
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கான மிக விரிவான வரைவுத் திட்டம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் (2023–24) செயல்பட்ட உயர்மட்டக் குழுவினால் முன்வைக்கப்பட்டது. இது தற்போது அரசமைப்பு (129வது திருத்தம்) மசோதா, 2024ஆக தாக்கல் செய்யப்பட்டு சட்ட வடிவம் பெறுவதற்கான நடைமுறையில் இருக்கிறது. இதில் முன்மொழியப்பட்டுள்ள சட்டப் பிரிவு82ஏ-வின்படி, மக்களவைத் தேர்தல் சுழற்சியுடன் அனைத்து மாநிலச் சட்டமன்றங்களின் பதவிக்காலங்களையும் ஒத்திசைவு செய்ய ஒரு நியமிக்கப்பட்ட தேதியை அறிவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படுகிறது. அந்தத் தேதிக்குப் பின்னர் உருவாகும் மாநிலச் சட்டமன்றங்கள் தொடங்கி ஐந்தாண்டு காலம் முடிவடையாதிருந்தாலும் அவற்றின் பதவிக் காலம் குறைக்கப்படும்.
மேலும், இந்த மசோதா “மீதமுள்ள பதவிக்காலத்துக்கான தேர்தல்” (unexpired-term elections) என்ற புதிய நடைமுறையையும் அறிமுகப்படுத்துகிறது: ஒரு சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டால், புதியதாகத் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றத்தின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் அல்ல, முந்தைய சட்டமன்றத்தின் மீதமுள்ள பதவிக் காலம் மட்டுமே. கூடுதலாக, மக்களவைத் தேர்தலுடன்ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றதாக இருந்தால், மாநிலத் தேர்தல்களை ஒத்திவைக்க பரிந்துரை செய்யவும் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. சட்டப் பிரிவுகள் 83, 172 மற்றும் 327 ஆகியவற்றிலும் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இவை தீவிரமான அரசமைப்புச் சிக்கல்களை எழுப்புகின்றன.
இந்தியா திட்டமிட்டே நாடாளுமன்ற ஆட்சி முறைமையைத் தேர்ந்தெடுத்தது; இதில் அரசு, நாடாளுமன்ற/சட்டமன்றத்தின் நம்பிக்கையைத் தக்கவைத்திருக்கும் வரை மட்டுமே பதவியில் நீடிக்கும். அரசமைப்பு நிர்ணய சபையில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஜனநாயகம் ஒரே நேரத்தில் நிலைத்தன்மை, பொறுப்புணர்வு இரண்டையும் அதிகபட்சமாக உறுதிசெய்ய முடியாது என்று விளக்கினார். இந்தியா நிலைத்தன்மையைவிட பொறுப்புணர்வைத் தேர்ந்தெடுத்தது — நிர்வாகம் தொடர்ச்சியாகப் பொறுப்புடைமையுடன் இருப்பது,, நிலையான உறுதியான பதவிக்காலத்தைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.
சட்டப்பிரிவு 75, 164 ஆகியவை ஆட்சி நிர்வாகம் சட்டமன்றத்துக்குக் கூட்டுப் பொறுப்புடன் இருக்க வேண்டியதை நிறுவுகின்றன. சட்டப்பிரிவு 83,172 ஆகியவை மக்களவை மற்றும் சட்டமன்றங்களின் அதிகபட்ச பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்று மட்டுமே குறிப்பிடுகின்றன; உறுதியாக ஐந்தாண்டு பதவிக்காலம் என்று கூறவில்லை. எனவே, மக்களவை மற்றும் சட்டமன்றங்களை, முன்கூட்டியே கலைப்பது ஒரு குறைபாடு அல்ல; அது ஜனநாயகப் பாதுகாப்பு வழிமுறை ஆகும். ஆட்சி மீதான நம்பிக்கையை இழக்கும் மக்களுக்குப் புதிய தீர்ப்பை வழங்கும் வாய்ப்பை இது ஏற்படுத்தித் தருகிறது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ இந்த அடிப்படை தர்க்கத்தையே மாற்றுகிறது; மக்களவை மற்றும் சட்டமன்றக் கலைப்பை நிர்வாகரீதியான தொந்தரவு எனக் கருதி, இந்தியாவை மெதுவாக ஒரு பகுதியளவு-அதிபர் முறைமைக்குத் தள்ளுகிறது. இதன் மூலம் சட்டம் இயற்றும் அவைகளின் பொறுப்புணர்வு பலவீனமடையும்
எஸ்.ஆர்.பொம்மை எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றம் கூட்டாட்சித் தத்துவம் அரசமைப்புடைய அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதி என்று உறுதி செய்தது. மாநிலங்கள் வெறும் நிர்வாக அலகுகள் அல்ல; அவை தனித்துவமான அரசமைப்பு அடையாளத்தைக் கொண்டவை. அவற்றின் ஜனநாயக அரசியல் சுழற்சிகள் இயல்பாகவே மாறுபடலாம்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ இந்தக் கொள்கையைச் சிதைக்கிறது. சட்டமன்றங்கள் நம்பிக்கை இழப்பால் அல்லாமல், மக்களவைத் தேர்தல் கால அட்டவணையுடன் ஒத்திசைவை ஏற்படுத்துவதற்காக மாநில மக்கள் தீர்ப்புகளின் காலகட்டம் குறைக்கப்பட அனுமதிக்கிறது. 2029இல் இது அமல்படுத்தப்பட்டால், 2033இல் மக்கள் தீர்ப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றத்தின் அதிகாரம் வெறும் ஓர் ஆண்டில் முடிவடையக்கூடும்.
இதற்கு மாறாக, மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் வெவ்வேறு காலங்களில் நடைபெறுவது அரசுகளுக்குப் பொதுமக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து அறியும் வாய்ப்பை வழங்குகிறது. தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளை திரும்பப்பெறும் உரிமை மக்களுக்கு இல்லாத ஆட்சி முறைமையில், அவர்களின் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான மிகச் சிறந்த கருவி இதுதான். அமெரிக்க அரசமைப்புச் சட்டத்துக்கு ஆதரவாக எழுதப்பட்ட ஃபெடரலிஸ்ட் ஆவணத் தொகுப்பில் உள்ள 52ஆம் ஃபெடரலிஸ்ட்டில் ஜேம்ஸ் மேடிசன் எழுதியதுபோல், தேர்தல்கள் அடிக்கடி நடைபெறுவதால் அரசாங்கம், மக்களை நேரடியாகச் சார்ந்திருப்பதையும் மக்கள் மீது அக்கறையுடன் இருப்பதையும் உறுதி செய்ய முடியும்.
‘மீதமுள்ள பதவிக்காலத்’ தேர்தல்களின் சிக்கல்
இந்த முன்மொழிவின் மிகவும் கவலைக்குரிய அம்சம், மக்களவை மற்றும் சட்டமன்றங்களின் மீதமுள்ள காலத்துக்கு மட்டும் தேர்தலை நடத்துவது என்பதாகும். அரசமைப்பு ‘எஞ்சிய தீர்ப்பு’ என்ற கருத்தை அங்கீகரிப்பதில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள சட்டப் பிரிவு s 83(6) மற்றும் 172(5) ஆகியவை, புதியதாகத் தேர்ந்தெடுக்கப்படும் அவை, முந்தைய அவையின் தொடர்ச்சி அல்ல என்று கூறினாலும், தேர்தல் சுழற்சியை ஒருங்கிணைக்க முந்தைய கால அட்டவணையைத் தக்கவைத்துக்கொள்கின்றன. இதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன.
முதலில், இது வாக்குரிமையின் மதிப்பைக் குறைக்கிறது. இடைக்காலத் தேர்தல்கள் குறுகிய கால மக்கள் தீர்ப்பைக் கொண்ட அரசுகளை உருவாக்கும்; இதனால், தேர்தல்கள் இடைக்கால நடவடிக்கைகளாக மாறி, வாக்காளர்கள் அவற்றை அலட்சியப்படுத்தும் போக்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இரண்டாவதாக, இது நிர்வாகத்தையும் பொறுப்புக்கூறலையும் பாதிக்கிறது. குறுகிய கால மக்கள் தீர்ப்பைக் கொண்ட அரசுகளுக்கு கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளும் ஊக்கம் குறையும்; இதனால் மக்களைக் கவர்வதற்கான திட்டங்கள் மற்றும் கொள்கை திசைதிருப்பல்கள் அதிகரிக்கக்கூடும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஏற்படுத்தும் தற்காலிகக் கட்டுப்பாடுகளை விட, மக்கள் தீர்ப்பைக் குறைப்பது பல ஆண்டுகளுக்கு நிர்வாகத்தைப் பாதிக்கக்கூடும்.
மூன்றாவதாக, ‘நிர்வாக வெற்றிடம்’உருவாகும் அபாயம் உள்ளது. ‘மீதமுள்ள காலம்’ எவ்வளவு இருந்தால் இடைக்காலத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற குறைந்தபட்ச கால அளவைக்கூட இந்த மசோதா குறிப்பிடவில்லை.
மாநிலங்கள் அளவில், தேர்தலை ஒத்திவைப்பது குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்கக்கூடும்; இது அரமைப்புச் சட்டப் பிரிவு 356(5) உடன் முரண்படுகிறது. அந்தப் பிரிவு குடியரசுத் தலைவர் ஆட்சியை ஒரு ஆண்டுக்கு மட்டுமே அனுமதிக்கிறது; தேசிய நெருக்கடிநிலை மற்றும் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை இருந்தால் மட்டுமே மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்.
ஒன்றிய அளவில், இடைக்கால அரசானது ஒருங்கிணைந்த தேர்தல் நடத்துவதற்கான காலம் வரும்வரை பதவியில் நீடிக்கக்கூடும்; இது நாடாளுமன்றம் ஆறு மாதத்துக்கு ஒருமுறை கூட வேண்டும் என்ற சட்டப்பிரிவு 85இன் கீழான விதியுடன் முரண்படலாம். அத்தகைய அரசு, 112 முதல் 117 வரையிலான சட்டப்பிரிவுகளின் படி முழுமையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய முடியாது; சட்டப்பிரிவு 116இன் கீழ் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை மட்டுமே வழங்க முடியும். இதனால் நிதி நிர்வாகம் பாதிக்கப்படும்.
இதனால் ஒன்றிய அளவில் ‘மீதமுள்ள பதவிக்காலம்’ என்ற நடைமுறை, ஆறு மாதத்தைத் தாண்டி சட்டரீதியாகத் தொடர இயலாததாகும்; மேலும் இதற்கு அரசமைப்பின் அடையாளத்தையே மாற்றக்கூடிய பெரிய அளவிலான திருத்தங்களும் அதன் அடிப்படைக் கட்டமைப்பை மீறும் நடவடிக்கைகளும் தேவைப்படும்.
மசோதாவில் முன்மொழியப்பட்ட சட்டப்பிரிவு 82ஏ(5), மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடத்த இயலாதபோது மாநிலத் தேர்தல்களை ஒத்திவைக்கும் அதிகாரத்தை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வழங்குகிறது. இதற்குத் தெளிவான அளவுகோல்கள், கால வரம்புகள் அல்லது நாடாளுமன்ற மேற்பார்வை கிடையாது. மாநில அரசுகளைக் கலைக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கும் அரமைப்புச் சட்டப் பிரிவு 356இல்கூட நாடாளுமன்றத்தின் ஒப்புதல் மற்றும் கால வரம்புகள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன —ஆனால் சட்டப்பிரிவு 82ஏ(5) வரைமுறையற்ற அதிகாரத்தை அளிக்கிறது.
ஒரு மாநில அரசு இடைக்காலத்தில் வீழ்ந்தால், ஒன்றிய அரசு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி தேர்தலை ஒத்திவைத்து, ஆளுநர் மூலமாக மாநிலத்தை நிர்வகிக்கலாம். அதற்குப் பின்னர் நடைபெறும் தேர்தலுக்குப் பின் உருவாகும் அரசு குறுகிய பதவிக்காலத்தை மட்டுமே பெறக்கூடும்.
இத்தகைய தவறான பயன்பாடு நிகழ சாத்தியம் உள்ளதா என்பது கேள்வி அல்ல; 129ஆவது அரசமைப்புத் திருத்தம் அதற்கான அரசமைப்புரீதியான வாய்ப்பை உருவாக்குகிறது என்பதே முக்கியம். ஃபெடரலிஸ்ட் ஆவண எண் 59 இல் (1788) அலெக்சாண்டர் ஹாமில்டன் எச்சரித்தபடி, ஒரு சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு அரசமைப்புரீதியான வாய்ப்பு இருந்தாலே அது மறுக்க முடியாத எதிர்ப்புக்கு உரியதாகும்.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய (2015) வழக்கில், அரசமைப்புரீதியான செல்லுபடித்தன்மை என்பது அதன் 'நிறுவனக் கட்டமைப்பை' பொறுத்ததே தவிர, அந்த அதிகாரம் எவ்வாறு நல்ல முறையில் பயன்படுத்தப்படும் என்ற 'உறுதிமொழிகளை'ப் பொறுத்தது அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரு சட்டத்திருத்தம் அரசமைப்பின் 'அடிப்படை கட்டமைப்பை' சிதைக்கும் வகையில் இருந்தால், நடைமுறையில் அந்த அதிகாரம் எவ்வளவு நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டாலும் அது அரசமைப்புக்கு விரோதமானதே ஆகும். . ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம், தேர்தல்களை ஒருங்கிணைப்பது என்ற பெயரில், மாநிலங்களில் நீண்ட காலத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சியை (குடியரசுத் தலைவர் ஆட்சி போன்றவை) அனுமதிப்பதன் மூலம் கூட்டாட்சித் தத்துவத்தை மீறும் அபாயத்தைக் கொண்டுள்ளது
செலவைக் குறைக்கும் என்ற வாதம் நியாயமல்ல
தேர்தல்களின் நிதிச் சுமை மொத்த பொருளாதார அளவில் மிகச் சிறியது; இதனைக் காரணமாகக் கொண்டு இவ்வளவு பெரிய அரசமைப்பு மாற்றத்தை மேற்கொள்வது நியாயமல்ல.
நாடாளுமன்ற நிலைக் குழுவின் மதிப்பீட்டின்படி, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களின் மொத்தச் செலவு சுமார் ரூ.4,500 கோடி (2015–16) ஆகும் — இது ஒன்றிய பட்ஜெட்டின் சுமார் 0.25% மற்றும் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் 0.03% மட்டுமே. பி.ஆர்.எஸ் (PRS) ஆய்வு நிறுவனத்தின் தரவுகளின்படி, மக்களவைத் தேர்தல்களின் செலவு 0.02% முதல் 0.05% வரை (1957–2014) இருந்துள்ளது. தேர்தல்கள் பல கட்டங்களாக நடைபெறுகின்றன (2024இல் 82 நாள்கள்), இதனால் தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குபதிவு சரிபார்ப்பு (VVPAT) இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளை மாறிமாறிப் பயன்படுத்த முடிகிறது. ஒரே நேரத்தில் அனைத்துத் தேர்தல்களையும் நடத்துவது இந்த நெகிழ்வுத்தன்மையை நீக்கி, அதிக செலவுபிடிக்கும் புதிய வளங்கள் தேவைப்படும் சூழலை உருவாக்கும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1%க்கும் குறைவான செலவைச் சேமிக்க அரசமைப்பைத் திருத்தி, கூட்டாட்சியை பலவீனப்படுத்துவது புத்திசாலித்தனமானதா? தேர்தல்கள் என்பவை குறைக்கப்பட வேண்டிய நிர்வாகச் செலவுகளல்ல; தன்னாட்சிக்காக மீண்டும் மீண்டும் கொடுக்கப்பட வேண்டிய விலையாகும் — அதிகார வர்க்கம் மக்களிடம் பொறுப்புடைமையுடன் இருக்கச் செய்வதற்கான கட்டாயமான ஜனநாயகச் செலவாகும்.
ஒன்றிய--மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப் குழு, தனது அறிக்கையின் முதல் பகுதியில் (பிப்ரவரி 2026) ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது — இந்த நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசும் சரியானது என்று அங்கீகரிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தலின் நன்மைகள் என்று அதை முன்மொழிபவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை; ஆனால், அந்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்டால் ஏற்படக்கூடிய கட்டமைப்புரீதியான பாதிப்புகள் ஆழமானவை. இது அரசமைப்பின் அடையாளத்தையே மாற்றுவதும், அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக் கொள்கையை மீறுவதும் ஆகும். இந்தோனேசியா செய்த தவறை இந்தியா செய்துவிடக் கூடாது.


