நீலாம்பரி: சுயமரியாதையின் சின்னமா வன்மத்தின் வடிவமா?
’படையப்பா’ மறுவெளியீட்டுக்கு பின் நீலாம்பரி கதாபாத்திரத்தை கொண்டாடும் ஆபத்தான போக்கு உருவாகியுள்ளது.
இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘படையப்பா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, கிட்டத்த்தட்ட ஒரு தலைமுறை இடைவேளைக்குப் பிறகு மறுவெளியீடு கண்டிருக்கும் ‘படையப்பா’ படத்துக்கான எதிர்வினைகள் இடைப்பட்ட காலத்தில் சமூக உளவியலிலும் சிந்தனையிலும் விழுமியங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பிரதிபலிக்கின்றன.
‘படையப்பா’ படம் குறித்த சமூக வலைதளப் பதிவுகளிலும் விவாதங்களிலும் ஒரு விசித்திரமான போக்கு தென்படுகிறது. அன்று ‘வில்லி’யாகப் பார்க்கப்பட்ட நீலாம்பரி, இன்று ‘சுயமரியாதை மிக்க நவீனப் பெண்’ என்று கொண்டாடப்படுகிறார். அல்லது, ஆணாதிக்கத்தாலும் ஆண்மைய சமூகத்தின் கட்டுப்பாடுகளாலும் ‘பாதிக்கப்பட்டவள்’ (Victim) என்று பரிவுடன் நோக்கப்படுகிறார். ஆனால், நீலாம்பரியின் நச்சுத்தன்மை கொண்ட (Toxic) குணாதிசயங்களைப் சுயமரியாதையின் வெளிப்பாடாகவோ பெண்ணியமாகவோ சித்தரிப்பதும், அவர் மீது தேவையற்ற பரிவு காட்டுவதும் சமூக உளவியலில் ஒரு ஆபத்தான போக்கையே காட்டுகிறது.
பொருத்தமற்ற பரிவு
நீலாம்பரியை காதல் கைகூடாத துரதிருஷ்டசாலியாகப் பார்த்து அவர் மீது பரிதாபப்படுவது முற்றிலும் பொருத்தமற்றது. ஏனென்றால் அவர் படையப்பாவை ஒரு மனிதராக நேசிக்கவில்லை; மாறாகத் தான் அடையத் துடிக்கும் ஒரு 'விலை உயர்ந்த பொருளாகவே' பார்த்தார். ஒரு ஆணை அடைய முடியாதபோது, அவனது குடும்பத்தையே அழிக்க நினைப்பதும், தன் சமவயதுப் பெண்ணான வசுந்தராவின் காதலைக் குலைக்கத் துடிப்பதும் எந்த வகையில் நியாயமாகும்? தன் ஆசை நிறைவேறாததற்காகப் பிறர் வாழ்வை அழிப்பவர் ஒருபோதும் பரிவுக்குரியவர் ஆக முடியாது. 18 ஆண்டுகள் தன்னைத்தானே அறைக்குள் பூட்டிக்கொண்டது அவரது தியாகம் அல்ல; அது பிறரின் மகிழ்ச்சியைக் காணச் சகிக்காத ஒரு நோய்க்கூறான பிடிவாதம் மட்டுமே.
கதாபாத்திர வடிவமைப்பின் ஆபத்து
நீலாம்பரி கதாபாத்திர உருவாக்கத்தின் பின்னால் மிகத் தெளிவான ஆண்மையப் பிற்போக்குச் சிந்தனை உள்ளது. 1990களின் வணிக சினிமா தனக்கென ஒரு ‘பெண் இலக்கணத்தை’ வைத்திருந்தது. அதற்கு நேர் எதிராக, அதாவது படித்த, நவீன உடை அணிந்த, சுயசிந்தனை உள்ள பெண்ணை ‘தீய சக்தியாக’ இந்தப் படம் சித்தரிக்கிறது.
இங்குள்ள முதன்மையான சிக்கல் என்னவென்றால், சுயமாக முடிவெடுத்து தேர்வுகளை மேற்கொள்ளும் அறிவுத்திறன் உள்ள ஒரு பெண்ணுக்கு ஆதிக்க சிந்தனை, வன்மம், பொறாமை, பழிவாங்கும் உணர்ச்சி போன்ற அனைத்துத் தீய குணங்களையும் மொத்தமாகத் திணித்திருப்பதே ஆகும். "ஒரு பெண் அதிகம் படித்தால் அல்லது சுயமாகச் சிந்தித்தால் அவள் நற்பண்புகள் அற்றவளாக மாறிவிடுவாள்" என்ற நச்சுத்தன்மையான கருத்தை இது ஆழமாக விதைக்கிறது. அறிவும் துணிச்சலும் உள்ள பெண்ணை வில்லியாகக் காட்டுவது, நிஜ வாழ்க்கையில் தன்னிச்சையாகச் செயல்படும் பெண்களுக்கு எதிரான ஒரு தவறான பொதுப்புத்தியை உருவாக்குகிறது.
ஆதிக்கத்துக்கு எதிராக இன்னொரு ஆதிக்கம்
இந்த பிரச்சினைக்குரிய கதாபாத்திர வடிவமைப்பை எதிர்க்கும் விதமாக நீலாம்பரியைப் பெண்ணியவாதியாக முன்னிறுத்துவது பெண்ணியத்தின் அடிப்படை நோக்கத்தையே சிதைப்பதாகும். பெண்ணியம் என்பது பாலினச் சமத்துவத்தையும், அதிகாரப் படிநிலைகளற்ற சமூகத்தையுமே நாடுகிறது. ஆனால், நீலாம்பரியின் செயல்பாடுகள் சமத்துவத்தை நோக்கியவை அல்ல; அவை ஒரு ஆதிக்கத்திற்கு மாற்றாக இன்னொரு ஆதிக்கத்தை முன்னிறுத்துபவை. நீலாம்பரியின் உலகம் ஒரு ஆணாதிக்கவாதியின் உலகத்தையே பிரதிபலிக்கிறது. குறிப்பாக, தனது வீட்டுப் பணிப் பெண்ணான வசுந்தரா உட்பட சமூகப் படிநிலையில் தமக்குக் கீழே உள்ளவர்களை நீலாம்பரி நடத்தும் விதம் ஒடுக்குமுறை சார்ந்தது.
ஆணாதிக்கம் எத்தகைய அதிகாரத் தோரணையை வெளிப்படுத்துமோ, அதே பாணியைத்தான் நீலாம்பரியும் கையாளுகிறார். இதன் மூலம் அவர் ஆணாதிக்க கட்டமைப்பை எதிர்க்கவில்லை; மாறாக அந்தக் ஆதிக்கக் கட்டமைப்பின் உச்சாணிக் கொம்பில் ஒரு ஆணுக்குப் பதிலாகத் தான் அமர வேண்டும் எனத் துடிக்கிறார். அவரது இந்தச் செயல்பாடுகள் உண்மையான பெண்ணியத்திற்கு வலிமை சேர்க்கப் போவதில்லை. மாறாக, ஆணாதிக்கச் சமூகம் பெண்களின் மேல் சுமத்தியுள்ள "அடங்கிப் போதல் அல்லது அழிவைத் தேடுதல்" என்ற இரண்டு முனைகளுக்குள்ளேயே இக்கதாபாத்திரத்தைச் சிறைப்படுத்துகிறது.
பிரச்சினைக்குரிய ‘நல்ல பெண்’
நீலாம்பரிக்கு நேரெதிராக, 'அடக்கமான பெண்' என்பதற்கான ஒரு வார்ப்பாகவே வசுந்தரா கதாபாத்திரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எளிய பின்னணியில் இருந்து வரும், அமைதியான சுபாவம் கொண்ட பெண்ணாக அவர் சித்தரிக்கப்படுகிறார். நீலாம்பரியின் அதிகாரத் தோரணைக்கு முன்னால் வசுந்தராவின் அமைதி என்பது, ஒரு 'நல்ல பெண்ணுக்குரிய' அடையாளமாகவே படத்தில் கையாளப்பட்டுள்ளது. சுய சிந்தனை கொண்ட பெண்ணை 'வில்லி'யாகக் காட்டும் அதே கதைக் களம், எவ்விதச் சுய அடையாளமும் இன்றி அடக்கத்தோடு இருப்பவரையே 'நாயகியாக' அங்கீகரிக்கிறது. ஒரு ஆணின் நிழலில் ஒதுங்கி நிற்கும் ஒரு பின்னணிச் சித்திரமாகவே வசுந்தரா கதாபாத்திரம் முடிந்து போகிறது.
முன்னிறுத்தப்பட வேண்டிய பெண்கள்
நீலாம்பரியைக் கொண்டாடுவது என்பது படத்தில் உள்ள பெண் வெறுப்புக்கு எதிரான ஒரு எதிர்வினையாகத் தோன்றினாலும், அது ஆதிக்க வேட்கையையும் வன்மத்தையும் நியாயப்படுத்துகிறது என்பதே உண்மை. ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தின் ஈர்ப்பையும், அதில் நடித்துள்ளவரின் திறமையையும் ரசிப்பதில் தவறில்லை. ஆனால், வன்மம் காட்டும் நீலாம்பரியைப் பரிவுக்குரியவராகவோ பெண்களுக்கான முன்னுதாரணமாகவோ முன்னிறுத்துவது ஆபத்தானது. நாம் தேட வேண்டியது அடங்கிப் போகும் வசுந்தராக்களையும் அல்ல; அழிவைத் தேடும் நீலாம்பரிகளையும் அல்ல. சுயமரியாதையுடனும், சமத்துவத்துடனும் வாழும் நிஜமான பெண்களையே இன்றையத் திரைகளும் சமூகமும் முன்னிறுத்த வேண்டும்.




