Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
2 நிமிட வாசிப்பு

அமெரிக்காவைத் திகைக்க வைக்கும் ஈரானின் 'மொசைக் டிஃபென்ஸ்'

ஈரானின் ராணுவம் இப்போது ஒரு 'தலை இல்லாத உடலாக' மாறி இயங்குவதால், அதனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் இஸ்ரேலும் அமெரிக்காவும் திகைத்து நிற்கின்றன.

அமெரிக்காவைத் திகைக்க வைக்கும் ஈரானின் மொசைக் டிஃபென்ஸ்
X

வெனிசுலாவில் ஏற்பட்டது போன்ற ஒரு ஆட்சி மாற்றத்தை ஈரானிலும் ஏற்படுத்திவிடலாம் என ட்ரம்ப் எதிர்பார்த்தார்.

ஆனால், 'மாபெரும் சீற்றம் நடவடிக்கை' போர் தொடங்கி இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும், அமெரிக்கா, இஸ்ரேலின் தீவிரத் தாக்குதல்களில் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டபோதிலும், ஈரான் நிலைகுலையாமல் பதில் தாக்குதல் நடத்திவருகிறது.

எப்படிச் சாத்தியமாகிறது?

'மொசைக் டிஃபென்ஸ்'

ஈரானின் தனித்துவமான ராணுவ வியூகம்

2008ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சிகர பாதுகாப்புப் படையின் அன்றைய தளபதி முகமது அலி ஜாபரியால் உருவாக்கப்பட்ட இந்த வியூகமே, ஈரான் முடங்கச் செய்யாமல் தாக்குப்பிடித்து நிற்கச் செய்வதாகக் கூறுகின்றனர்.

இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து 2001இல் ஆப்கானிஸ்தான் மீதும், 2003இல் பேரழிவு தரும் ஆயுதங்களை வைத்திருந்ததாகக் கூறி ஈராக் மீதும் அமெரிக்கா போர்த் தொடுத்தது. அப்போது தாலிபான் தலைமையும், சதாம் உசைனும் வீழ்த்தப்பட்ட பிறகு அந்த நாடுகளின் ஒட்டுமொத்த ராணுவக் கட்டமைப்பும் முடங்கியதை ஈரான் உன்னிப்பாகக் கவனித்தது. தனது நாட்டுக்கும் அத்தகைய நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த புதிய வியூகத்தை ஈரான் வகுத்தது.

இந்த வியூகத்தின்படி, ஈரான் தனது ராணுவத்தை 31 தன்னாட்சி மண்டலங்களாகப் பிரித்துள்ளது. ஒவ்வொரு மண்டலமும் ஒரு 'குட்டி நாடு' போலச் சுயாதீனமாகச் செயல்படும்.

தலைநகர் டெஹ்ரானுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், அந்தந்தப் பகுதி தளபதிகளே சுயமாக முடிவெடுத்து ஏவுகணைகளை ஏவவும், போரிடவும் முழு அதிகாரம் பெற்றுள்ளனர். "தலைமையிடம் இருந்து உத்தரவு வராவிட்டாலும், எதிரி தாக்கினால் என்ன செய்ய வேண்டும்" என்ற அறிவுறுத்தல் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதால், தலைமை இல்லாவிட்டாலும் தாக்குதல்கள் தடையின்றித் தொடர்கின்றன.

ராணுவம் மட்டுமின்றி உணவு, மருந்து மற்றும் எரிபொருள் கையிருப்பைக் கூட அந்தந்த மாகாணங்களே நிர்வகிக்கும் வகையில் அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், ஈரானின் ராணுவம் இப்போது ஒரு 'தலை இல்லாத உடலாக' மாறி இயங்குவதால், அதனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் இஸ்ரேலும் அமெரிக்காவும் திகைத்து நிற்கின்றன.


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it