ஈரான் போர்: தொடங்கியவர்தான் நிறுத்த வேண்டும்
சுயநல நோக்கில் இஸ்ரேல் நடத்தும் இந்த ராணுவத் தாக்குதலுக்குத் துணை நிற்பதன் மூலம், தன்னுடைய நாடு எந்த அடிப்படை மீது உருவானதோ அதையே கைவிட்டுவிட்டது அமெரிக்கா.

மக்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லாமல் அமெரிக்காவும் இஸ்ரேலும் - ஈரான் மீது பிப்ரவரி 28-ல் தொடங்கிய போரின் மோசமான விளைவுகள் உலகம் முழுவதையும் பாதித்து வருவதுடன் பாரதூரமான பொருளாதார விளைவுகளையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
‘மாபெரும் சீற்றம்’என்று பெயரிடப்பட்ட இந்தத் தாக்குதலால் மிகப் பெரிய சேதங்களைச் சந்தித்திருந்தாலும் தோற்றுவிடவில்லை ஈரான். இந்தப் போரின் முதல் நாளிலேயே ஈரானின் முதல் வரிசைத் தலைவர்கள் – அயதுல்லா காமேனி உள்பட – ஏவுகணை வீச்சுகளால் உயிரிழந்தார்கள். அவசர அவசரமாகச் செயல்பட்டு ஈரானுக்குப் புதிய தலைவரையும் ராணுவத்துக்குத் தலைமை தளபதியையும் நியமிக்க வேண்டியதாயிற்று; ‘புதியவர்களையும் கொல்வோம்’ என்று அமெரிக்க – இஸ்ரேலிய ராணுவக் கூட்டு கொக்கரித்தது. டெஹ்ரான், சனந்தாஜ், இஷ்ஃபஹான் மற்றும் இதர பெரிய ஈரானிய நகரங்கள் மீதும் குண்டு மழை பொழிந்தது. முதலிரண்டு வாரங்களில் மட்டும் ஈரானியர்களில் 1,300 பேர் கொல்லப்பட்டனர், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அமெரிக்கா வீசிய டொமஹாக் ஏவுகணை ஒரு பள்ளிக்கூடத்தின் மீது விழுந்து வெடித்ததில் 168 சிறார்களும் (மாணவர்கள்) 14 ஆசிரியர்களும் இறந்தனர். அவர்கள் செய்த குற்றம்தான் என்ன?
பெரிய அளவில் சேதம்
ஈரான் நாட்டுக்கு விளைந்திருக்கும் பெரிய அளவிலான சேதங்கள் –
Ø ஏவுகணை ஏவுதளங்கள், ராணுவ படைப்பிரிவுகளின் தளங்கள், கடற்படையின் கப்பல்கள், பீரங்கிகள், படை வீரர்களின் பாசறைகள், வான் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள செய்யப்பட்டிருந்த தற்காப்பு சாதனங்கள், ராணுவ சாதனங்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் ஆகியவை குறிவைத்து தாக்கி அழிக்கப்பட்டன;
Ø மக்களுடைய குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் அழிந்தன;
Ø மிகப் பெரிய எண்ணெய் கிடங்குகள் (அவை இன்னமும் அணைக்கப்பட முடியாமல் எரிகின்றன) தாக்கப்பட்டன;
Ø குடிநீர் வழங்கல் ஏற்பாடுகள், கடல்நீரை நன்னீராக மாற்றும் நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன;
Ø பொதுச் சுகாதாரத்தை அழித்து மக்களைத் தொற்றுநோய்க்குள்ளாக்க திட்டமிட்டே தாக்குதல்கள் நடத்தப்பட்டன;
Ø பாலைவன நாடு என்பதால் பெரிய அளவில் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன;
Ø ஈரானின் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி மூச்சுத்திணறல், மாரடைப்பு உள்ளிட்டவற்றுக்கு பெரும் எண்ணிக்கையில் மக்களை ஆளாக்கும் விதமாக தாக்குதல்கள் இருந்தன.
மதரீதியாக மக்களை அடக்கி ஆளும் ஈரானிய சர்வாதிகார அரசு நிர்வாகத்தை ஒரு கணம் ஓரத்தில் வையுங்கள், சாமானியர்களுடைய நிலைமையை எண்ணிப்பாருங்கள். இப்படியொரு பேரழிவுத் தாக்குதலை எதிர்கொள்ளும் அளவுக்கு அவர்கள் என்ன செய்தார்கள்? ‘செறிவூட்டிய யுரேனியத்தை ஏராளமான அளவில் கைவசம் வைத்திருக்கிறது - அணு ஆயுதங்களைத் தயாரித்தே முடித்துவிட்டது’ என்ற இஸ்ரேலின் இடைவிடாத தூண்டலால், அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, கத்தார் நாட்டின் மத்தியஸ்த ஏற்பாட்டில் அமெரிக்கா சார்பில் ஸ்டீவ் விட்காஃப், ஜேர்ட் குஷ்னர் ஆகியோர் ஈரானிய அதிகாரிகளிடம் தங்களுடைய சந்தேகங்கள் தொடர்பாகப் பேசினர். வளைகுடாவில் போர் மூண்டுவிடுமோ என்ற அச்சத்தில் ஓமன் நாட்டின் வெளியுறவு அமைச்சரும் அப்போது வாஷிங்டனுக்கு விரைந்து, ‘செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் கைவசம் வைத்துக்கொள்ளாது’ என்றும் ‘இப்போது மட்டுமின்றி – இனி எதிர்காலத்திலும் அணு ஆயுதம் எதையும் கையாளாது’ என்றும் ஈரான் சார்பில் வாக்குறுதி அளித்தார். இந்தப் பேச்சு நடந்துகொண்டிருந்தபோதே, ‘இந்த வாக்குறுதிகளை நம்ப முடியாது’ என்று அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பேச்சு வார்த்தையை முறித்துவிட்டு, ஈரான் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு ஆணையிட்டார்.
இஸ்ரேல் தன்னுடைய நிலப்பரப்பை மேலும் அதிகரித்துக்7 கொள்ள வேண்டுமானால் ஈரான் ஒரு அச்சுறுத்தலாக விளங்கலாம், ஆனால் அமெரிக்காவுக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவுக்குப் பெரிய நாடல்ல ஈரான். கடந்த 2025 ஜூனில் ‘நள்ளிரவு சம்மட்டி அடி’ (ஆபரேஷன் மிட்நைட் ஹாமர்) என்ற பெயரில் ஈரான் மீது (சர்வதேசச் சட்டவிரோதமாகத்தான்) கடும் தாக்குதலை நடத்திய அமெரிக்கா, ‘யுரேனியம் செறிவூட்டும் அணு ஆயுத தயாரிப்பு ஆலையும் அதற்கான வசதிகளும் தங்களால் முழுதாக தாக்கி அழிக்கப்பட்டுவிட்டதாக’ அறிவித்தது. அந்தத் தாக்குதலுக்குப் பிறகும் ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருந்தன என்றால் அவை எங்கே இருந்தன? ஈரானை முழுமையாக சோதனையிட்டு அந்த அணு ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள் என்று சர்வதேச அணு ஆயுதக் கண்காணிப்பு முகமையை அமெரிக்கா கேட்டுக்கொண்டதா? எந்த நாட்டில் அணு ஆயுதம் இருக்கிறது - எந்த நாட்டில் இல்லை என்று எந்த அதிகாரப்படி அமெரிக்கா தீர்மானிக்கிறது? இதே பாணியில் இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா நாடுகளின் அணுசக்தி நிலையங்களையும் அமெரிக்கா இப்படி தாக்குதல் நடத்தி அழித்துவிடுமா?
உடந்தையான மௌனம்
மேற்காசியாவில் இஸ்ரேலுக்குப் பல எதிரிகள். பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான பகுதியில் ‘இஸ்ரேல்’ என்ற நாடு உருவாக்கப்பட்ட நாளிலிருந்தே இந்தப் பகைமை தொடர்கிறது. இருப்பினும் நாள்கள் செல்லச் செல்ல உலகமானது – இஸ்லாமிய நாடுகள் உள்பட – ‘இஸ்ரேல் இனி இங்கே இருந்துதான் தீரும்’ என்ற எதார்த்த நிலையை ஏற்றுக்கொண்டுவிட்டன. பாலஸ்தீனப் பகுதியைப் பிரிக்கும் பிரிவினை முடிவை எதிர்த்து இந்தியா (1947) வாக்களித்தது, பின்னாளில் நிலைமையை உணர்ந்து, இஸ்ரேல் நாட்டுக்கு 1950 செப்டம்பரில் அங்கீகாரம் வழங்கியது, முழு அளவிலான தூதரக உறவுகள் 1992இல் ஏற்பட்டன. வர்த்தகம், ராணுவ ஒத்துழைப்பு, உளவுத் தகவல்கள் பரிமாற்றம் ஆகிய துறைகளில் உறவு செழிப்புற்றது. மேற்காசியாவில் எப்போது மோதல்கள் ஏற்பட்டாலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அறிவுறுத்தும் சமாதானக் குரலாகத்தான் இந்தியா இருக்கிறது – இதுவரையில். ஆனால் சமீபகாலமாக இஸ்ரேலுக்கு மிகவும் சார்புள்ள நாடாக மாறிக்கொண்டிருக்கிறது; இந்த மோதல் தொடர்பாக ஈரானை மட்டும் கண்டிக்கும் ஐநா சபையின் பாதுகாப்புப் பேரவைத் தீர்மானத்துக்கு 2026 மார்ச் 12-ல் இந்தியா ஆதரவாக வாக்களித்தது. புதிதாக உருவாகிவரும் ஷியா – சன்னி கலகக் கூட்டணிக்கு எதிராக ‘ஆறு நாடுகளின் ராணுவக் கூட்டணி’ ஒன்றைத் தயார் செய்வதாக இஸ்ரேலியப் பிரதமர் சமீபத்தில் பேசியபோது, ‘அந்தக் கூட்டணியில் நாங்கள் இல்லை’ என்றோ ‘இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை’ என்றோ இந்தியா ஒரு வார்த்தைகூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இஸ்ரேல், இந்தியா, கிரீஸ், சைப்ரஸ், சில அரபு, ஆப்பிரிக்க, மத்திய தரைக்கடல் நாடுகளும் இந்த அறுகோணக் கூட்டில் அடக்கம் என்று தெரியவருகிறது.
ஈரானைத் தாக்குவதற்கான காரணம் என்ன என்பதை அதிபர் டொனால்டு ட்ரம்ப் அடிக்கடி மாற்றி மாற்றிக் கூறுகிறார். ஈரானை அணு ஆயுதமற்ற நாடாக்குவதே நோக்கம் என்றார், இப்போது ஈரானின் ராணுவ வல்லமையையே வற்றச் செய்வதுதான் நோக்கம் என்கிறார், ஈரானில் ஆட்சி(யாளர்கள் மாற்றமே அடுத்த இலக்கு என்கிறார், நிபந்தனையின்றி தங்களிடம் ஈரான் சரண் அடைய வேண்டும் என்கிறார். ‘ஈரானியர்களே இது உங்களுடைய தருணம், ஆட்சியாளர்களை அகற்றிவிட்டு அரசைக் கைப்பற்றுங்கள்’ என்றார். ஒருவரும் அவர் கூறியபடிச் செயல்பட முன்வரவில்லை.
ஈரானை ஒடுக்கும் ட்ரம்ப்பின் சாகச முயற்சிகளால் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா பெட்ரோலிய எண்ணெய்யின் விலை 100 அமெரிக்க டாலர்களுக்கும் மேல் உயர்ந்துவிட்டது. அமெரிக்காவிலேயே விலைவாசி கட்டுக்கடங்காமல் அதிகரித்து ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் கொதித்துக்கொண்டிருக்கிறார்கள். ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதன் வழியாக எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து முழுமையாக நின்றுவிட்டது. இந்தியாவில் சமையல் எரிவாயு விலை உயர்ந்துவிட்டது, புதிய விலையிலும் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. உலகம் முழுவதிலும் பங்குச் சந்தைகள் கலகலத்து வீழ்ச்சி அடைந்துவிட்டன. இந்த மேற்காசியப் போருக்கு அன்றாடம் 200 கோடி அமெரிக்க டாலர் செலவாகிறது. இதில் இறப்போரின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.
அனைவரையும் அம்பலப்படுத்துகிறது
அமெரிக்க அதிபராகப் பதவி வகித்தவரும் - மிகச் சிறந்த ராணுவ வீரருமான டுவைட் ஐஸனோவர் கூறியிருக்கிறார், “போர் மிகவும் கொடூரமானது, பயனற்றது, முட்டாள்தனமானது”.
உக்ரைன் மீது ரஷ்யா நான்காண்டுகளுக்கு முன்னால் படை எடுத்தது, இன்றுவரை அதனால் வெற்றி பெற முடியவில்லை. இதற்கிடையில் ரஷ்ய நாட்டின் கடன் சுமைதான் பெரிதாகிக்கொண்டே வருகிறது, கூலிக்கு ஆள் பிடித்துப் போரை நடத்துகிறது ரஷிய ராணுவம். ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா இப்போதைக்கு நிறுத்தும் அறிகுறி தென்படவில்லை. இந்தப் போர் இரு அணிகளின் இயந்திர ஆயுதங்களுக்கு இடையில்தான் என்பதால் ஆயுதங்கள் வற்றாத வரை சண்டையை அமெரிக்கா தொடரும்.
போரைத் தொடங்கும் நாடு, அதை எப்போது நிறுத்த வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். போர் தொடர்ந்து நடந்தால் அது தளபதிகளின் ஆற்றலை மட்டுமல்ல நாட்டின் தலைவர்களின் ஆற்றலையும் அம்பலப்படுத்திவிடும் – நாடுகளின் உண்மையான வல்லமையும் தெரிந்துவிடும். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தபோது இந்தியா அதைக் கண்டிக்கவில்லை; ஆனால் ‘இது போருக்கான சகாப்தம் அல்ல’ என்று கருத்து தெரிவித்தது. வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா கடத்திச் சென்றபோது இந்தியாவிடமிருந்து இதைப் போன்ற ‘இதோபதேசம்’ ஏதும் வெளிப்படவில்லை. இப்போதைய மேற்காசியப் போரிலோ இந்தியாவின் மௌனம்தான் காதைத் துளைக்கிறது!
அமெரிக்க-இஸ்ரேல் ‘எதிர்’ ஈரான் போரில் இன, மத மாச்சரியங்களும் கடலடி நீரோட்டம் போல கண்ணுக்குத் தெரியாமல் இழையோடுகின்றன. தன்னுடைய நிலப்பரப்பை எப்படியாவது பெரிதாக்கிவிட வேண்டும் என்ற வல்லாதிக்க நாடாக மாறிக்கொண்டிருக்கிறது இஸ்ரேல். சுயநல நோக்கில் இஸ்ரேல் நடத்தும் இந்த ராணுவத் தாக்குதலுக்குத் துணை நிற்பதன் மூலம், தன்னுடைய நாடு எந்த அடிப்படை மீது உருவானதோ அதையே கைவிட்டுவிட்டது அமெரிக்கா. ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்ற கோட்பாட்டுக்கு அடிபணிந்துவிட்டதைப்போல, இந்த விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடு ‘அஞ்சி நடுங்கும் அடிவருடியைப்போல’ ஆகிவிட்டது.
(தமிழில்: சாரி)


