ஈரான் போர்: வரலாறும் நிகழ்காலமும் மோதும் புள்ளி
இந்தப் போர் கடந்த சனிக்கிழமை தொடங்கியிருக்கலாம். ஆனால் இதற்கான விதை 47 ஆண்டுகளுக்கு முன்பே ஊன்றப்பட்டுவிட்டது.

போர் தொடங்கியே விட்டது. இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏவிவிடும் கணைகள் துல்லியமாகத் தாக்குகின்றன. முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டுவிட்டார். ஒரு பள்ளிக்கூடம் தாக்கப்பட்டதில் சுமார் 150 மாணவிகள் இறந்துபோயினர். பதிலுக்கு ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை அரபு நாடுகளிலுள்ள அமெரிக்கத் தளங்களை நோக்கியும் இஸ்ரேலை நோக்கியும் செலுத்தி வருகிறது.
ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் அமெரிக்கத் தளங்களில் பின்வருவன குறிப்பிடத்தக்கவை. பஹ்ரைன் (அமெரிக்காவின் 5ஆவது கடற்படைத் தளம்), கத்தார் (அல் உதீத் விமானப்படைத் தளம்), குவைத் (கேம்ப் ஆரிஃப் ஜான் விமானத் தளம்), ஐக்கிய அரபு அமீரகம் (அல் தஃப்ரா தளம்), சவுதி அரேபியா (இளவரசர் சுல்தான் விமானப்படைத் தளம்), ஜோர்டான் (முவாஃபக் சால்டி விமானப்படைத் தளம்).
47 ஆண்டுகளுக்கு முந்தைய விதை
இந்தப் போர் கடந்த சனிக்கிழமை தொடங்கியிருக்கலாம். ஆனால் இதற்கான விதை 47 ஆண்டுகளுக்கு முன்பே ஊன்றப்பட்டுவிட்டது. இது இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமான போர். இதில் இஸ்ரேல் சாமர்த்தியமாக அமெரிக்காவையும் கூடவே இழுத்துக்கொண்டு வந்துவிட்டது. ஈரானில் ஷாவின் மன்னராட்சி நடந்த காலத்தில் அது இஸ்ரேலுடன் இணக்கமாக இருந்தது. பாலஸ்தீனியர்களின் நிலத்தையும் இனத்தையும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை அது கண்டுகொள்ளவில்லை. ஷா அமெரிக்காவுக்கும் ஆதரவாக இருந்தார். ஆனால் 1979இல் உள்நாட்டுப் போரில் மன்னராட்சி அகற்றப்பட்டு இஸ்லாமியக் குடியரசு நிறுவப்பட்டபோது, நிலைமை மாறிவிட்டது. மற்ற வளைகுடா நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. ஆனால் இஸ்ரேலுடன் மோதுவதற்கு அவை தயாராக இல்லை. மேலதிகமாகத் தங்களது மண்ணில் அமெரிக்கா, தனது தளங்களை நிறுவிக்கொள்ளவும், எரிபொருளை வாங்கிச் செல்லவும் அனுமதித்தன. இஸ்ரேல் மேற்குலகின் ஆசியுடன் அணு ஆயுத நாடாக உருவாவதை 'என்ன கொடுமையிது?' என்று அவை பார்த்துக்கொண்டிருந்தன. அமெரிக்க நிழலில் ஒதுங்கி நின்றன. மாறாக, ஈரான் இஸ்ரேலை எதிர்த்தது. ஹமாஸுக்கும் உதவியது. மேற்கு ஆசியாவில் தனது ஒரே எதிரியான ஈரானைத் தாக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தது இஸ்ரேல். இப்போது, ட்ரம்ப்பின் ஆதிக்க மனோபாவத்தை கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.
உலகிலேயே மேற்கு நாடுகளின் தண்டனைத் தடைகளால் (sanctions) அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நாடு ஈரான்தான். ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டிவந்தது. இந்த நிலை 2015இல் மாறியது. ஈரான் தனது அணு உலைகளை ஐநாவின் ஆய்வுக்கு உட்படுத்தியது. அப்போது ஆட்சியில் இருந்த ஒபாமாவுடன் தடைகளை விலக்க ஒப்பந்தமும் மேற்கொண்டது (JCPOA). ஆனால் அடுத்து அரியணை ஏறிய ட்ரம்ப் ஒப்பந்தத்தைப் பின்வாங்கிக்கொண்டார் (2018). இதற்கும் இஸ்ரேலின் அழுத்தம்தான் காரணம்.
அமெரிக்காவின் உண்மையான நோக்கம்
கடந்த டிசம்பரில் ஈரானில் பொருளாதாரச் சீர்கேட்டால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கிளர்ந்தெழுந்தனர். ஆனால், ஈரானிய அரசு போராட்டத்தை ஒடுக்கிவிட்டது. அப்போதே ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்தார் ட்ரம்ப். ஆனால் செய்யவில்லை. இந்தச் சூழலில் ஓமன் அரசு அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடத்தியது. தங்களிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்றது ஈரான். தங்களது உலைகளை, பன்னாட்டு அணு ஆற்றல் முகமையின் (IAEA) சோதனைக்கு உட்படுத்தவும் ஈரான் சம்மதித்தது. இனி மேற்கொண்டு யுரேனியத்தைச் செறிவூட்ட மாட்டோம் என்றும் உறுதியளித்தது. பேச்சுவார்த்தைகள் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக ஓமன் நம்பிக்கை தெரிவித்தது. ஆனால், அடுத்த நாளே அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கியது. அமெரிக்காவின் நோக்கம் சமாதானம் அல்ல என்பது இன்னொரு முறை தெளிவாகி இருக்கிறது.
இப்போது, ஈரானின் எதேச்சாதிகார ஆட்சியை நீக்கிவிட்டு ஒரு ஜனநாயக அரசை நிறுவுவதுதான் தமது நோக்கம் என்கிறது அமெரிக்கா. இது நடக்கப்போவதில்லை. முதலாவதாக, இப்போதைய உச்ச தலைவர் கொல்லப்பட்டாலும், அந்த ஆட்சியமைப்பு மாறவில்லை. அடுத்த தலைவர்கள் வருவார்கள். இரண்டாவதாக, இப்போதைய ஆட்சிக்கு எதிரான மாற்று இயக்கங்கள் எதுவும் ஈரானில் செயல்படவில்லை. டிசம்பர்-ஜனவரியில் தன்னெழுச்சியாகப் போராடிய பலரும் இப்போது அமெரிக்காவையோ இஸ்ரேலையோ ஆதரிக்கப்போவதில்லை. ஈரானின் இறையாண்மைக்கு எதிரான இந்தப் போரில் தங்களது அரசை அவர்கள் ஆதரிக்கும் சாத்தியங்களே அதிகம். ஈராக், எகிப்து, துனிசியா என்று வரலாற்றின் பக்கங்களில் இதற்கு முன்னுதாரணங்கள் உண்டு. மூன்றாவதாக, இப்போதைய வான்வழித் தாக்குதல்கள் பலத்த சேதாரங்களை உண்டாக்கும். ஆனால், ஆட்சி மாற்றம் என்பது தரைவழித் தாக்குதல்களின் வாயிலாகவே நடக்கும். போர் அந்தக் கட்டத்தை நோக்கி நகருமா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.
இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
இந்தப் போரில் ஆஸ்திரேலியா, கனடா முதலான நாடுகள் அமெரிக்காவை ஆதரிக்கின்றன. பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் முதலான நாடுகள் ஈரான் சமரசமாகப் போக வேண்டுமென்று அறிவுரைக்கின்றன. ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்கத் தாக்குதலைக் கண்டித்திருக்கின்றன; அடுத்து அவை என்ன செய்யக்கூடும் என்று தெரியவில்லை. இந்தியா போர்ச் சூழலைக் குறித்து கவலை தெரிவித்திருக்கிறது, பிரச்சினகளைப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், சமீப காலமாக இந்திய அரசு இஸ்ரேலுடன் நெருங்கி வருகிறது. ஆகவே, அது ஈரானுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்குமா என்பது ஐயமே.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் அதன் உச்ச தலைவர் மட்டுமல்ல, ராணுவத் தளபதியும், அதன் இஸ்லாமிய புரட்சிப் படைப் பிரிவின் தளபதியும் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வருகின்றன. தாக்குதல் துல்லியமாக நடந்திருக்கிறது. பல்லாண்டு காலப் பொருளாதரத் தடைகளால் சூழப்பட்டிருக்கும் ஈரானுக்கு இப்போது ரஷ்யா, சீனா உட்பட யாரிடமிருந்தும் உதவி கிடைக்குமா என்பது ஐயமே. போர் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்றும், ஈரானிலும் அரபு நாடுகளிலும் சேதாரங்கள் தொடரும் என்றும் கணிப்புகள் வெளியாகின்றன.
போர் என்பது மரணம். போர் என்பது அழிவு. இந்தப் போர் முடிவுக்கு வரட்டும். அதுவே சாமானியர்களின் விருப்பம்.


