Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
7 நிமிட வாசிப்பு

ஈரான்: யாருக்காக இந்தப் போர்?

அமெரிக்காவின் தாக்குதல் ஒரு சராசரி ஈரானியர் பார்வையில் இருந்து பார்க்கும்போது அது காடடுத்தீக்கும் பெரும் வெள்ளத்துக்கு இடையே மாட்டிக்கொண்ட கதைதான்.

ஈரான்: யாருக்காக இந்தப் போர்?
X

ஈரான் மீது அமெரிக்கா நிகழ்த்திய தாக்குதல் மிகச் சிக்கலான ஒரு புள்ளிக்கு எல்லோரையும் தள்ளிப்போயிருக்கிறது.

சர்வதேச நியாயம் என்று பார்க்கும்போது அமெரிக்காவுக்குத் தற்போது ஈரானை தாக்க எந்த வித முகாந்திரமும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஈரான் அமெரிக்காவை எந்த விதத்திலும் அச்சுறுத்தவோ, ஆபத்து விளைவிக்கும்படியோ நடந்துகொள்ளவில்லை சொல்லப்போனால் அமெரிக்காதான் சென்ற ஆண்டு தன்னிச்சையாக ஈரானைத் தாக்கி அவர்களின் அணுஆயூத உற்பத்தி தொடர்பான வசதிகளை அழித்தது. மேலும், இது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்பதும் இங்கு முக்கியமானது. உடனடியான நேரடி ஆபத்து இல்லை எனும்போது ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் தொடுப்பது எல்லா வகையிலும் சர்வதேசச் சட்டங்களுக்கும் ஒழுங்குகளுக்கும் எதிரானது.

ஈரானில் உள்நாட்டு பிரச்சனைகளை இருந்தது என்னவோ உண்மைதான். அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் ஈரானிய ரியால் மதிப்பைக் கடந்த ஆறு மாதங்களில் கணிசமாக (கிட்டத்தட்ட 60%) குறைத்துவிட்டிருந்தது, ஈரானியர்கள் மனதில் அரசு மீது இருந்து வந்த நீண்டகால அதிருப்தி வெடிக்க இது ஒரு காரணமாக அமைந்தது. மிகக் குறைந்த காலகட்டத்தில் 30,000 பேருக்கு மேல் இந்தப் போராட்டத்தில் உயிரிழந்திருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில் அமெரிக்காவின் தாக்குதல் ஒரு சராசரி ஈரானியர் பார்வையில் இருந்து பார்க்கும்போது அது காடடுத்தீக்கும் பெரும் வெள்ளத்துக்கு இடையே மாட்டிக்கொண்ட கதைதான். அவை ஒன்றை ஒன்று தணித்துவிடுமா இல்லை இரண்டுமே சேர்ந்து அவர்களையே காவு வாங்கிவிடுமா என்பது எளிதில் கணிக்க முடியாத குழப்பக் கணக்கு. ஆனால், இந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமாக உயிரிழந்த பள்ளி மாணவிகளுக்கு இதில் எந்த விளக்கமும் ஈடாகாது.

ரஷ்யா என்ன நினைக்கிறது?

உலக நாடுகளை பொறுத்தவரை இந்த தாக்குதல் என்பது பெரும்பதற்ற காலம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்தப் போர் முடியவேண்டும் என்று வேண்டிக்கொள்ளாத நாடே இருக்கமுடியாது, ரஷ்யாவைத் தவிர. இந்திய, சீன பொருளாதாரங்கள் நல்ல அடிவாங்கும். ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியிருக்கிறது - முடக்கக் கூட வேண்டாம் அந்த வழியே போகும் கச்சா எண்ணெய் கப்பல்கள் ஒன்றிரண்டைத் தாக்கினால்கூட போதும், மொத்த இடமுமே ஒரே களேபரமாகும் .

உலகின் கணிசமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி இந்த குறுகிய நீரிணையைக் கடந்தே நிகழ முடியும். இந்தியாவின் 60% எரிஎண்ணெய் இறக்குமதி மேற்காசிய நாடுகளில் இருந்துதான் வருகிறது – அந்தப் பாதை முடங்கி எண்ணெய் வரத்து முடங்கினால் உடனடியாக பெட்ரோல், டீசல் விலை ஏறும்.

ரஷ்யாவுக்கு இந்த போர் நீளும் என்றால் நல்லது .உக்ரைனை உலகம் கொஞ்ச காலம் மறந்திருக்கும். அமெரிக்காவை இன்னுமொரு குழப்பக் குட்டையில் இழுத்துவிட்டது போலவும் இருக்கும் .நாளை என்ன ஆனாலும் ‘ஈரானுக்கு நான் இருக்கேன் ராசா’ என்று மறைமுகமாக உதவத் தயாராக இருக்கும். ஆப்கானிஸ்தானில் அவர்கள் எழுபதுகளில் தலையிட்டது போலவே இதில் தலையிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ட்ரம்ப்பின் திசைதிருப்பல்

ட்ரம்ப்புக்கு இது மிக அட்டகாசமான திசைதிருப்பல். ஒரே கல்லில் பல மாங்காய்களை கொத்தாக அடித்து வீழ்த்தியிருக்கிறார். தனது கட்சிக்கு (குடியரசுக் கட்சி) உள்ளேயே சரிந்தபடி இருக்கும் அவருக்கான ஆதரவை இது தூக்கிப் பிடிக்க உதவும். அயதுல்லா காமேனியின் மறைவை மட்டுமே கூட ஒட்டுமொத்த அமெரிக்க வெற்றியாக அவர் கொண்டாடிவிடுவார். அமெரிக்காவில் வரும் நவம்பரில் நடக்கவிருக்கும் மிக முக்கியமான இடைத்தேர்தலில் கணிக்கப்பட்ட பாதகமான மாற்றத்தை சரிக்கட்ட இது பயன்படலாம் .

மிக முக்கியமாக எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பாக ஊடகங்களின் தொடர் தொந்தரவு இருக்காது – கொஞ்சம் நாட்களுக்கு என்றாலும். குண்டு போட்டுக்கொண்டே இருக்கலாம். மக்கள் கவனம் எல்லாம் அதன் மீது போய்விடும். இந்தக் குழப்பங்களை எல்லாம் காரணம் காட்டி நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தவும் ஒரு வாய்ப்பு உள்ளது .

இஸ்ரேலுக்கு ஜாக்பாட்

இஸ்ரேலுக்கு உள்ளபடியே இது ஒரு ஜாக்பாட் .காஸாவில் அது இன்னும் நிகழ்த்திக்கொண்டிருக்கும் வன்முறை பெரும் கவனத்தைப் பெறாது . அதே போல பாலஸ்தீனத்தில் நிகழும் சட்டவிரோதக் குடியேற்றங்களும் காதும் காதும் வைத்த மாதிரி நடந்துகொண்டே இருக்கும் .காஸா தரைமட்டமானது, ஹமாஸ் முடக்கப்பட்டது . ஹிஸ்புல்லா தலைவர் குறிவைத்துத் தாக்கப்பட்டது என்று எல்லாமே ஏறுமுகம்தான்.

இன்னும் சொல்லப்போனால் ஈரானைத் தாக்கும்படி இஸ்ரேல் தொடர்ந்து அமெரிக்காவைத் தூண்டி விட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. ட்ரம்ப்புக்கு முன் இருந்த அதிபர்கள் அதில் உள்ள ஆபத்தை உணர்ந்து அதை தவிர்த்தபடியே வந்தார்கள். ட்ரம்ப் அதற்கு மசிந்துவிட்டார். சிரியாவிலும் அசாத் நீக்கப்பட்ட பிறகு உறவு கொஞ்சம் சுமுகமாகியிருக்கிறது. இப்போது ஈரானியத் தலைமையும் நீக்கியாகிவிட்டது. இந்தியப் பிரதமர் வேறு கட்டி அணைத்துக்கொள்கிறார். வேறென்ன சொல்ல, இஸ்ரேலுக்கு சுக்கிர திசைதான்.

கியூபா , கனடா , கிரீன்லாந்து…

கியூபா , கனடா , கிரீன்லாந்து போன்ற நாடுகளுக்கு எல்லாம் இப்போது லேசாக வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்திருக்கும். இந்த நாடுகளைத் தாக்கப்போவதாகவோ அல்லது இணைத்துக்கொள்ளப்போவதாகவோ ட்ரம்ப் பொதுவெளியில் பேசிவந்திருக்கிறார். வெனிசுலாவிலும், ஈரானிலும் இப்படி ஆட்சியைக் கவிழ்க்க முடியும் என்றால், அத்துடன் ட்ரம்ப் நிற்பாரா என்ற கேள்வி பூதாகரமாக எழுகிறது. ஓர் அத்துமீறலுக்கு எப்படியெல்லாம் நியாயம் கற்பிக்கப்படுகிறது, அது எப்படியெல்லாம் சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதை அவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள். இந்தத் தாக்குதலை அவர்களை நோக்கிய ஒரு எச்சரிக்கையாக பயம்காட்ட ட்ரம்ப் தயங்க மாட்டார்.

ஆனால், இதில் அவரவர் பார்வைகளையும் லாப நஷ்டங்களையும் தாண்டி நோக்கினால் ஈரானின் எதிரகாலம் இன்னும் குழம்பிய குட்டையாகவே தென்படுகிறது. இப்படித்தான் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள் என்று சதாம் ஹுசைனைக் கொன்றார்கள் . உலகமே கொண்டாடியது. ஆனால், ஈராக்கின் இன்றைய நிலை என்ன? வலிமையற்று, பல்வேறு அரசியல் குழுக்களாக பிளவுண்டு, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு எலும்புத் துண்டுபோல கிடந்து அல்லல்படுகிறார்கள்.

ஆப்கனின் விதி ஈரானுக்குமா?

தாலிபானுக்கு ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது? அமெரிக்கா மிக எளிதாக அவர்களை அதிகாரத்தில் இருந்து நீக்கியது. ஆனால் அவர்களை முற்றாக அழிக்க முடிந்ததா? இருபது வருடங்கள் கழித்து, போட்டது போட்டபடி அங்கிருந்தும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டுதானே நாடு திரும்பினார்கள்? இன்று தாலிபான் 2.0 முன்னை விட மூர்க்கமாக அந்த நாட்டைத் திணற அடித்துக்கொண்டிருக்கிறது. முக்கியமாக பெண்கள் எல்லாவிதத்திலும் ஒரு மாபெரும் திறந்தவெளி சிறையில் இருப்பதுபோலதான் வாழ்கிறார்கள். படிக்க முடியாது, வேலை செய்ய முடியாது, பொதுவெளியில் பேச முடியாது, தனியே வெளியே செல்ல முடியாது. இப்போது புதிதாக, எலும்பு உடையாதவரை ஒரு பெண்ணை அடிக்கலாம்; அது தவறல்ல என்றும் சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள்.

ஒரு நாட்டின் தலைமையை நீக்குவது ஒப்புநோக்க மிக எளிது. ஆனால் அங்கு ஆதாரமான ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவது, ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், முந்தைய அமெரிக்க அதிபர்களைப் போல ட்ரம்ப் அதை எல்லாம் பொருட்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார் என்று சொல்வதற்கில்லை. ‘அமெரிக்க நன்மை’ (America First) என்று வெளிப்படையாகவே பேசும் அவரிடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.

பேருந்தில் இந்த நிறுத்தத்தில் ஏறி அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிடலாம் என்பதுபோல எண்ணி இதை அமெரிக்கா முன்னெடுத்திருக்கிறது. ஆனால், போர் என்பது என்றுமே எளிமையான ஒன்றாக இருந்தது கிடையாது. எப்படியோ இந்தப் பேருந்து, புதைசேற்றில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதுதான் நம் அனைவரின் பிரார்த்தனையும்.


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it