ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்திய ஒப்பந்தம்: அமெரிக்காவுக்குச் சொல்லும் செய்தி என்ன?
அமெரிக்காவே முதன்மை என்ற போக்கு இனி எடுபடுமா?
அது 2007ஆம் ஆண்டு. ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் ஐபோன் அறிமுகத்தை அறிவித்திருந்தார், அமெரிக்காவில் அடமான நெருக்கடி முளைக்கத் தொடங்கியிருந்தது, ஐரோப்பிய ஒன்றியம் ருமேனியாவையும் பல்கேரியாவையும் உள்ளடக்கி விரிவடைந்தது, மேலும், இந்தியா முதல்முறையாக ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவெடுத்திருந்தது. டெல்லிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முதல்முறையாகத் தொடங்கப்பட்ட காலம் அது. ஆனால், ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு, சில மாதங்களாக நடந்த அசாதாரணமான வேகமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, தற்போதுதான் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தை அறிவித்தனர். இது சுமார் 200 கோடி நுகர்வோரையும், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கால் பகுதியையும் ஒன்றிணைப்பதாக உறுதியளிக்கிறது. இந்தியாவின் தற்காப்பு உள்நாட்டுச் சந்தையின் சில பகுதிகளை உற்பத்தி மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்துவதற்கான வழிகளை இந்த ஒப்பந்தம் திறக்கிறது; பதிலுக்கு, நடுத்தர வர்க்க இந்திய நுகர்வோர் ஐரோப்பிய கார்களையும் ஒயின்களையும் மலிவான விலையில் வாங்க முடியும். ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா இடையிலான இந்த விரிவான ராஜிய உறவு செயல்திட்டம் உண்மையில் மிகவும் பரந்த நோக்கம் கொண்டது.
திடீர் வேகத்துக்குக் காரணம்?
20 ஆண்டுகளாகத் தடைபட்டும் பின், தொடர்ந்தும் வந்த இந்தப் பேச்சுவார்த்தைகளில் திடீரென வேகம் கூடி மாற்றம் ஏற்பட என்ன காரணம்? இதற்கான பதில் டொனால்டு ட்ரம்ப்புடன் தொடர்புடையது. பிராந்திய இறையாண்மைக்குத் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், தண்டனை வரி விதிப்புகள் மற்றும் பல்தரப்பு அமைப்புகளின் பலவீனம் ஆகியவற்றுக்கு மத்தியில், அமெரிக்காவுக்குப் பிந்தைய உலக ஒழுங்கின் வளர்ந்துவரும் நிழற்படத்தை ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் வெளிப்படுத்துகிறது.
கார்கள், மதுபானம், விவசாயம் பால் பொருட்கள் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் ஆரம்ப காலப் பேச்சுவார்த்தைகள் மெதுவாகவே முன்னேறி 2013இல் கைவிடப்பட்டன. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலகம் சீனாவைத் தாண்டி விநியோகச் சங்கிலிகளை ஆபத்துக் குறைப்பு செய்யவும், பன்முகப்படுத்தவும் முயன்றதால் 2022இல் இந்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. முரண்பாடாக, இந்த ஒப்பந்தத்தை இறுதிவரை கொண்டு சென்றது சீனா அல்ல, மாறாக ட்ரம்ப்பின் அச்சுறுத்தல் நிழல்தான். டிசம்பர் 2024இல், தனது இரண்டாவது பதவிக் காலம் தொடங்குவதற்கு முன்பே, கிரீன்லாந்தை சொந்தமாக்கிக்கொள்ளும் யோசனையை மீண்டும் கிளப்பி ஐரோப்பாவை அமெரிக்க அதிபர் பீதியடையச் செய்தார். நெருங்கிய நட்பு நாடே பிராந்திய இறையாண்மையை அச்சுறுத்துவது, அட்லாண்டிக் கடந்த உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஐரோப்பாவுக்குத் தனித்து இருப்பதான ஒரு உணர்வைத் தூண்டியது.
இந்தக் குழப்பங்களுடன் சேர்த்து, பதவியேற்ற முதல் நாளிலேயே கனடா, மெக்சிகோ ஆகிய அண்டை நாடுகள் மீது ட்ரம்ப் கடுமையான வரிகளை விதித்தார். இது உலகெங்கிலும் உள்ள 90 நாடுகள்மீது விதிக்கப்பட்ட வரிகளில் உச்சத்தை எட்டியது. தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெய்யை வாங்கியதற்காக விதிக்கப்பட்ட கூடுதல் 25% உட்பட, இந்தியா 50% என்ற மிக அதிக வரி விகிதங்களில் ஒன்றால் பாதிக்கப்பட்டது. மிக சமீபத்தில், நேட்டோவின் சில வீரர்கள் கிரீன்லாந்துக்குச் சென்றபோது, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இங்கிலாந்துக்கும் எதிராக மீண்டும் வரி ஆயுதம் ஏவப்பட்டது. இதன் விளைவாக, சமீபத்திய பொதுக் கருத்துகள் காட்டுவது போல, அமெரிக்கா ஐரோப்பாவால் நம்பத்தகாத நாடாக மட்டுமல்லாமல், ஒரு நேரடி அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது.
இப்போது ஐரோப்பாவில் ‘ஆபத்துக் குறைப்பு’ மற்றும் ‘துண்டித்தல்’ ஆகியவை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளன - ஆனால் இந்த முறை இலக்கு சீனா அல்ல, ட்ரம்பின் அமெரிக்கா. விநியோகச் சங்கிலிகள் மட்டுமல்லாமல், கட்டாயப்படுத்துதலுக்கு எதிராகச் செயல்படும் வெளியுறவுத் திறனும் இங்கே பணயத்தில் உள்ளது. அமெரிக்காவின் 'ஜூம்' (Zoom) போன்ற வீடியோ கான்பரன்சிங் மென்பொருட்களைப் பயன்படுத்த அதிகாரிகளுக்குத் தடை விதித்து, அதற்குப் பதிலாக உள்நாட்டிலேயே உருவான 'விசியோ' (Visio) தளத்தை ஊக்குவிக்க பிரெஞ்சு அரசாங்கம் மேற்கொண்ட சமீபத்திய நடவடிக்கை இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியக் கூட்டாண்மையின் பரந்த நோக்கம், பல்தரப்பு அமைப்புகளுக்கான அர்ப்பணிப்பு, பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மேம்பட்ட ஈடுபாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை நோக்கி நகர்வதைக் காட்டுகிறது. அமெரிக்கா மேற்கு அரைக்கோளத்த்தை நோக்கிப் பின்வாங்கும்போது, ஒரு காலத்தில் ஆசியாவில் அமெரிக்காவின் ஈடுபாட்டுக்கு மையமாக இருந்த இந்தோ-பசிபிக் பிராந்தியம் இப்போது ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒத்துழைப்புக்கு அதிக அளவில் தயாராக உள்ளது.
தொடர்ச்சியான ஒப்பந்தங்கள்
இந்த வர்த்தக ஒப்பந்தம் இவ்வகையில் மிகப் பெரியது, ஆனால் இது பல நாடுகள் புதிய கூட்டணிகளை உருவாக்க முயற்சிக்கும் வளர்ந்துவரும் போக்கின் ஒரு பகுதியாகும். ஐரோப்பிய ஒன்றியம் சமீபத்தில் தென்னமெரிக்காவின் 'மெர்கோசூர்' வர்த்தகக் கூட்டமைப்புடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை முடித்தது, மேலும் பல ஒப்பந்தங்கள் வரிசையில் உள்ளன. இந்தியா கடந்த சில மாதங்களில் மட்டும் இங்கிலாந்துடனும் நியூசிலாந்துடனும் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. ஒப்புதல் பெறுவதற்கும் செயல்படுத்துவதற்கும் காலம் எடுத்தாலும், இது மாற்றத்தை உறுதிப்படுத்துகிறது. மேற்கத்திய நாடுகளுக்கு வெளியே பலர் நீண்டகாலமாகக் கனவு கண்ட பல்துருவ உலகம், ராஜியரீதியிலான சுயாட்சி, டாலர் பயன்பாட்டைக் குறைத்தல் ஆகியவை இப்போது வேகமாக வடிவம் பெற்றுவருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா உச்சிமாநாட்டுக்கு ஒரு நாள் முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் முதல்முறையாக இந்தியாவின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, ராணுவ அணிவகுப்பையும் கலாச்சார நிகழ்வுகளையும் பார்வையிட்டனர். இது சமீபத்திய மாதங்களில் ஐரோப்பாவைச் சூழ்ந்திருந்த இருண்ட மனநிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, ஒரு நெருக்கத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியது.
உலகம் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ‘அமெரிக்காவே முதன்மை’ என்பது இப்போது பெருகிய முறையில் ‘அமெரிக்கா தனித்து’ என்பதாகத் தோன்றுகிறது.
தமிழில்: ஆசை
நன்றி: தி கார்டியன்


