சுயமரியாதை என்ற சொல்லைப் புரிந்துகொள்வது எப்படி?
நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, சமகாலத் தமிழ் சமூகத்தில் சுயமரியாதை என்ற கருத்தாக்கத்துக்கு என்ன நேர்ந்தது?

சுயமரியாதை இயக்கத்தின் 100ஆவது ஆண்டு இது. சாதியச் சமூகம் குறித்த பெரியாரின் புரட்சிகரமான விமர்சனத்தில் சுயமரியாதை என்பது ஒரு முக்கியமான, அவசியமான அங்கமாகும். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, சமகாலத் தமிழ் சமூகத்தில் இந்த சுயமரியாதை என்ற கருத்தாக்கத்துக்கு என்ன நேர்ந்தது? அதேபோல் பிராமணர் அல்லாதவர், திராவிடர் போன்ற சொற்களின் நிலை என்ன?
பெரியாரின் ‘சுயம்’ (Self) குறித்த சிந்தனை பெரும்பாலும் பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதவர்களுக்கும் இடையிலான எதிர்ப்போடு தொடர்புடையது. பிராமணர் அல்லாதவர் என்ற வகைப்பாடு, பிராமணர்களின் சுயம் என்பதற்கு எதிராக ஒரு சுயத்தை உருவாக்குகிறது. ஆனால் இது ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. இத்தகைய அமைப்பில், பிராமணிய சுயம் முதன்மையானதாக மாறுகிறது, மற்ற சுயங்கள் அதைப் பொறுத்தே வரையறுக்கப்படுகின்றன. பிராமண சுயம் என்பது பிற சுயங்களைத் தன்னோடு தொடர்புபடுத்தி வரையறுக்கும் ஒரு தன்னாட்சி பெற்ற சுயமாகவே நீடிக்கிறது.
பிராமணர் அல்லாதவரிலிருந்து திராவிடத்துக்கு…
பிராமணர்களுக்கு எதிரான நிலையில் பிராமணர் அல்லாதவர்களை வரையறுப்பது ஒரு இரண்டாம் நிலை சுயத்தையே உருவாக்குகிறது. இந்தப் பின்னணியில் பிராமணர் அல்லாதவர்களின் சுயம் என்பது மற்றொரு சுயத்தை அடிப்படையாகக் கொண்டதே தவிர, தன்னையே அடிப்படையாகக் கொண்டது அல்ல. பிராமணர் அல்லாதவர் என்ற மொழிப் பயன்பாட்டிலிருந்து 'திராவிடம்' என்ற மொழிக்கு மாறிய அரசியல் நகர்வு என்பது, பிராமணர் அல்லாத சுயம் தனது முதன்மையை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கியமான படியாகும். ஆனால் இத்தகைய உருவாக்கங்கள் 'பிராமணர் அல்லாதவர்' என்ற வகைப்பாட்டிலிருந்து தப்பிக்கின்றனவா என்பது ஒரு தீராத சிக்கலாகவே உள்ளது. (பிராமண சுயத்துக்கு முன்னுரிமை அளிக்காத ஒரு சொல் 'அஹிந்தா' [Ahinda]. இது சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் ஆகிய சொற்களின் சுருக்கமாகும்; இது கர்நாடகாவில் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.)
இந்தச் சிக்கல் தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாதவர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையிலான உள்முரண்பாடுகளில் சமூகரீதியாக வெளிப்படுகிறது. கோபால் குரு குறிப்பிடுவதுபோல: “பிராமணர் அல்லாதவர் என்ற வகைப்பாடு அரசியல்ரீதியாக ஆக்ரோஷமானது, ஆனால் கருத்தியல்ரீதியாகப் பலவீனமானது". ஏனெனில் இது அடிப்படையில் பிராமண எதிர்ப்பு என்பதையே குறிக்கிறது, தவிர பிராமணர் அல்லாத நிலையை அல்ல. தமிழ்நாட்டின் பல தலித் செயல்பாட்டாளர்களைப் போலவே கோபால் குருவின் கருத்தும் என்னவென்றால், சமூக மாற்றத்துக்கான குறிப்புப் புள்ளியாக பிராமணர்களோ அல்லது பிராமணர் அல்லாதவர்களோ இருக்க முடியாது, தலித்துகள் அல்லது பெண்கள் மட்டுமே இருக்க முடியும் என்பதாகும். குருவின் கருத்தை விரிவுபடுத்தும் தமிழ் எழுத்தாளர் எஸ். ராமானுஜம், சுயமரியாதையில் உள்ள 'சுயம்' என்பது "கருத்தியல்ரீதியாக அனைவரையும் உள்ளடக்கியது, ஆனால் சமூகரீதியாக ஒதுக்கி வைப்பது" என்று சுட்டிக்காட்டுகிறார். இந்தச் சிக்கலோடு கூடுதலாக, திராவிடம் என்ற வகைப்பாடு மற்ற தென்னிந்திய மாநிலங்களில் அரசியல்ரீதியாகவும் சமூகரீதியாகவும் எந்தப் பிடிப்பையும் பெறவில்லை. இன்று பொது உரையாடல்களில் திராவிடம் என்பது தமிழர்களுக்கான ஒரு இன அடையாளமாகவே மாறிவிட்டது.
சுதந்திரம் என்ற கருத்தாக்கம்
சுயமரியாதை என்பது மதிக்கப்படுவதையோ அல்லது தன்னைத் தானே மதிப்பதையோவிட மேலானது. பெரியாரைப் பொறுத்தவரை, இது அடிப்படையில் சிந்திப்பதற்கான, பகுப்பாய்வதற்கான, விமர்சனப்பூர்வமாக அணுகுவதற்கான திறன் பற்றியது. சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம் பற்றிப் பேசும்போது, பெரியார் சுயமரியாதை பற்றி இவ்வாறு எழுதுகிறார்: “யாதொரு காரியத்தையும் செய்யும் முன் அது சரியா தவறா என்று பார்க்க வேண்டும். காரணங்களைப் பார்க்க வேண்டும். காரியங்களை அலச வேண்டும். ஆராய்ச்சி செய்ய வேண்டும். உண்மைகளை மதிக்க வேண்டும். இதுதான் சுயமரியாதை என்பது. விடுதலையும் சுயமரியாதையும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை... சுயமரியாதை இல்லாமல் விடுதலையினால் பயன் ஏதும் இல்லை. விடுதலை உணர்ச்சிகளுக்குக் கட்டளையிடுவது சுயமரியாதை இலட்சியமே ஆகும்.”
இங்கே, சுதந்திரம் என்ற கருத்தாக்கமே சுயமரியாதையின் நோக்கம் மற்றும் லட்சியத்தை மிக வலிமையாக வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது. சுயம் என்பது சுதந்திரமற்ற நிலையில் இருப்பதை அவர் உணர்கிறார், மேலும் சுயமரியாதை என்பது அந்த சுதந்திர நிலையை நோக்கிய ஒரு செயல்பாட்டு நகர்வாக இருக்கும் என்கிறார்.
தமிழ் சமூகத்தில் மரியாதை
பெரியாரின் சுயமரியாதை ஒரு செல்வாக்குமிக்க கருத்தாக இருந்தபோதிலும், தமிழ் சமூகத்தில் 'மரியாதை' என்பதற்கு உள்ள கலாச்சார முக்கியத்துவத்தால் அதன் பொருள் சிதைந்துவிடுகிறது. மரியாதையின் முக்கிய அம்சம் உறவு சார்ந்தது என்பதால் அதில் அதிகாரத்தின் ஆழமான தாக்கமும் உள்ளது. கோயில்கள், பிராமணர் அல்லாதாருடையவை உட்பட, 'மரியாதை' என்ற கருத்தைப் பல்வேறு வழிகளில் சடங்குமயமாக்குகின்றன. இது அந்தஸ்தை அங்கீகரிப்பதாகவும் அதிகாரத்தின் அடையாளமாகவும் இருக்கிறது. ஒரு கலாச்சார வகைப்பாடாக 'மரியாதை' என்பது பல தமிழ்த் திரைப்படங்களில் வெளிப்படுகிறது—தலைப்பில் 'மரியாதை' என்ற சொல்லைக் கொண்ட படங்களைப் பாருங்கள்!
ஒரு சுவாரசியமான நிகழ்வு: 1997இல் வெளியான 'அனியத்திபிறாவு' (Aniyathipravu) மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இது தெலுங்கில் 'நேனு பிரேமிஸ்துன்னானு', இந்தியில் 'டோலி சஜா கே ரக்னா', கன்னடத்தில் 'ப்ரீத்திகாகி' என மறுஆக்கம் செய்யப்பட்டது. தமிழில் அதன் தலைப்பு 'காதலுக்கு மரியாதை'; 'மரியாதை' என்ற சொல் கொண்ட ஒரே தலைப்பு இதுதான்! தமிழ்ச் சமூகத்தின் கலாச்சார வெளி நிலையிடங்கள் பலவற்றின் ‘மரியாதை’ என்ற கருத்தை எதிரொலிக்கிறது.
சமூக வெளியில் மரியாதையின் வெளிப்பாடுகள் அதிகாரம் மற்றும் ஆதிக்கம் தொடர்பானவை, அவை மதிப்பு, கண்ணியம் தொடர்பானவை அல்ல. திருமணங்களில் இது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது, அங்குச் சடங்குகள் மாப்பிள்ளை வீட்டாருக்கு மரியாதை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாதி மீறல் திருமணங்களில் நிகழும் ஆணவக் கொலைகளில் (துரதிர்ஷ்டவசமாக இன்று தமிழ்நாட்டில் இது ஒரு அவல முகமாக உள்ளது), மரியாதையின் நிழல் எப்போதும் ஆட்கொள்கிறது—குடும்பம், தந்தை மற்றும் பல நேரங்களில் சகோதரர்களை மதித்தல் என இது நீள்கிறது. 'மரியாதை' என்பது தமிழ் ஆணாதிக்கத்தின் ஒரு இன்றியமையாத அங்கமாகும்.
தமிழ்ச் சூழலில் பெரியார் 'மரியாதை' என்ற சொல்லைப் பயன்படுத்தியது ஒரு சொல்லாட்சி மேதைமை என்றாலும், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு தன்னாட்சி சுயத்தை வெளிப்படுத்த அந்தப் பெரிய அரசியல் இயக்கத்தால் முடியாமல் போனது, தலித்துகளுக்கும் பிராமணர் அல்லாதவர்களுக்கும் இடையில், மற்றும் பல நேரங்களில் பிராமணர் அல்லாத சாதியினருக்கு இடையிலேயே அந்நியப்படுதலை அதிகரிக்கச் செய்துள்ளது.
அம்பேத்கரிய சுயம்
கருத்தியல்ரீதியாக 'மரியாதை' என்பது அதிகாரம், சகோதரத்துவம் (Fraternity) ஆகிய இரு துருவங்களுக்கு இடையே சிக்கியுள்ளது. இவை இரண்டுமே சுயம் பற்றிய குறிப்பிட்ட பார்வைகளைக் கொண்டவை. எனவே, முதலில் தேவையான பணியைச் செய்யக்கூடிய சுயத்தை வரையறுப்பது அவசியம். சமூக உணர்வு இல்லாத, தன்னாட்சி கொண்ட, பகுத்தறிவார்ந்த சுயம் என்பது பிராமணிய சுயத்தின் கூறுகளையே மீண்டும் உருவாக்கும், அதாவது அதிகாரம் செலுத்தும் ஒரு சுயத்தையே உருவாக்கும். சுயமரியாதையில் உள்ள மரியாதையின் பொருளை உருவாக்க, சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுயம்—அதாவது அம்பேத்கரிய சுயம்—தேவைப்படுகிறது.
மரியாதையின் கலாச்சார வெளிப்பாடு அதிகாரத்தை நோக்கி நகர்கிறது, ஆனால் அம்பேத்கர் சகோதரத்துவத்தை நோக்கி நகர்கிறார். தனிப்பட்ட, பிராமணிய சுயத்திலிருந்து சமூகம் வெளியேறி, உறவு சார்ந்த, அனுபவப்பூர்வமான சமூக சுயத்தை நோக்கி நகர பிந்தையது (அம்பேத்கரிய சுயம்) உதவும். பிராமணியத்துக்கான எதிர்ப்பை, இந்தத் தன்னாட்சி சுயத்தை நிராகரிப்பதாக நிலைநிறுத்துவது முக்கியம். மேலும், மரியாதை என்பது ஒரு தன்னாட்சி சுயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால், அந்த மரியாதை 'பெருமை'யாக மாற வலுவான வாய்ப்பு உள்ளது, இது பெருமித நிலையை அடைய மற்றவர்களைப் புறக்கணிக்கிறது. அப்போது சுயமரியாதை என்பது 'சுய பெருமை'யாகவும், மற்றவர்களை விடத் தான் உயர்ந்தவன் என்ற நிலைப்பாடாகவும் மாறுகிறது. இதைப் பற்றித்தான் பெரியார் எச்சரித்துக்கொண்டிருந்தார்.
ஒரு சாதிய சமூகத்தில், தனிமனித சுயத்துக்கும் கூட்டு/சமூக சுயத்துக்கும் இடையே அடிப்படை பதற்றம் உள்ளது. தனிமனித சுயத்தின் மீதான முக்கியத்துவம், குழு அடையாளத்தை சுய அடையாளமாகச் சுருக்கிவிடுகிறது. சுயம் என்பது அடிப்படையில் ஒரு சமூக சுயம் என்றும், மற்றவர்களைத் தன்னைப் பொறுத்து வரையறுக்கும் ஒரு தன்னாட்சி பெற்ற தனிமனித சுயமாக அல்ல என்றும் நாம் தொடங்கினால், அது சமூகங்களுக்கு இடையிலான படிநிலைகளை விமர்சிக்க ஒரு தளத்தை நமக்கு வழங்குகிறது.
சாதி என்ற புலன்சார் சமூகம்
கோபால் குருவும் நானும் எங்கள் புத்தகமான ‘எக்ஸ்பீரியன்ஸ், கேஸ்ட் அண்ட் தி எவெரிடே சோஷியல்’ என்ற புத்தகத்தில் விவாதித்தது போல, சாதி என்பது ஒரு புலன்சார் சமூகமாகச் செயல்படுகிறது. இத்தகைய அணுகுமுறை, புலன்கள் (மற்றும் உணர்வுகள்) அடிப்படையில் உள்முகமானவை, தனிமனிதரீதியானவை என்ற அனுமானத்தை கேள்விக்கு உட்படுத்துகிறது. இந்தப் பார்வைகளை நாம் கணக்கில் கொள்வோம் என்றால், ஒரு குழு அடையாளத்துக்குள் தனிமனிதப் செயல்பாட்டைப் புரிந்துகொள்ளவும், தன்னாட்சி பெற்ற குழுவின் செயல்பாட்டுத் தன்மையைப் புரிந்துகொள்ளவும் அவை வழிகளை வழங்குகின்றன.
இதைச் செய்ய, சமூக சுயம் மற்றும் சமூக முகமை தன்மையை வெளிப்படுத்துவது அவசியம். இதற்கு ஒரு வழி பிராமணிய சுயத்தை விமர்சிப்பதாகும்; அதை மறுப்பதன் மூலம் அல்லாமல், தலித்துகள் உட்பட பிராமணர் அல்லாதவர்களை குணாம்சப்படுத்தும் அதே சமூக சுயத்தின் நிலைக்கு அதைக் குறைப்பதன் மூலமும் இதைச் செய்யலாம். மேலும், சுயம் குறித்த பெரியாரின் அனுமானங்களுக்கு ஆதரவான மிக வலுவான வாதங்களில் ஒன்றை, புலன்கள் என்பவை சமூகரீதியானவை என்ற புதிய அணுகுமுறைகளில் காண முடியும். தனிப்பட்ட அனுபவங்கள் என்பவை உண்மையில் சமூக உணர்வுகளே ஆகும். இந்தச் சூத்திரங்களைப் பயன்படுத்துவது பிராமணிய சுயத்தின் உறுதித்தன்மையையும் அதீத தன்னம்பிக்கையையும் மாற்றி, அதை மற்ற அனைத்து சமூகங்களுடனும் சமமான நிலையில் வைக்கும்.
-தமிழில்: ஆசை


