ஐஃபோன்: உலகின் போக்கை மாற்றி அமைத்தது எப்படி?
ஸ்மார்ட்ஃபோன் புரட்சியின் 20ஆவது ஆண்டு

சில விஷயங்களை நாம் வெறும் தனிமனித/ துறைச் சாதனைகளாக கடந்துவிடுகிறோம். அப்படி அல்ல. ஸ்டீவ் ஜாப்ஸின் ஐஃபோன் மனிதகுல வரலாற்றில் ஒரு பாய்ச்சல்…
நவீன தொழில்நுட்ப வரலாற்றை 'ஐஃபோனுக்கு முன்', 'ஐஃபோனுக்கு பின்' எனப் பிரிக்கலாம்.
2007க்கு முன்பு இருந்த மொபைல் போன்கள் வெறும் தொலைத்தொடர்பு சாதனங்களாக, பிளாஸ்டிக் பொத்தான்களின் சிறைக்குள் அடைந்து கிடந்தன. ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் அந்தச் சிறையை உடைத்தார்.
அதுவரை கணினிகளில் மட்டுமே அதன் முழு வடிவத்தில் சாத்தியமாகி இருந்த இணைய அனுபவத்தை, எவ்விதச் சிதைவுமின்றி மனிதனின் கைக்குள் கொண்டுவந்ததன் மூலம் ஒரு புதிய யுகத்தை ஜாப்ஸ் தொடங்கிவைத்தார்.
ஐஃபோன் அறிமுகமாவதற்கு முன்பாக நமது டிஜிட்டல் வாழ்க்கை என்பது ஆங்காங்கே சிதறிக் கிடந்த ஒரு மூட்டை. இணையம், மியூசிக் ப்ளேயர், கேமரா... இப்படிச் சிதறிக்கிடந்த வெவ்வேறு தொழில்நுட்பங்களை மேம்பட்ட முறையில், செறிவாக ஒரே புள்ளிக்குக் கொண்டுவந்து, ஒட்டுமொத்த உலகத்தையே நம் உள்ளங்கைக்குள் சுருக்கியது ஐஃபோன்.
ஒரு புரட்சிகரக் கேள்வியும் பொத்தான்களின் வீழ்ச்சியும்
ஐஃபோன் வருவதற்கு முன்பே பிளாக்பெர்ரி, நோக்கியா போன்ற ஆரம்பநிலை ஸ்மார்ட்போன்கள் சந்தையில் இருந்தன. ஆனால், அவை பொத்தான்கள் நிறைந்தனவாகவும், பயன்படுத்துவதற்குச் சிக்கலானவையாகவும் இருந்தன. தொழில்நுட்பம் வளர வளர கருவிகள் சுலபமாவதற்குப் பதில் சுமையாக மாறுவதை ஜாப்ஸ் கவனித்தார்.
அப்போது அவர் கேட்ட அந்த ஒரு கேள்விதான் மொபைல் வரலாற்றின் போக்கையே மாற்றியது: "ஏன் ஒரு போனில் இவ்வளவு பொத்தான்கள் இருக்க வேண்டும்? அந்தப் பொத்தான்களையே ஒரு மென்பொருளாக மாற்றினால் என்ன?" இந்தச் சிந்தனையின் விளைவாக உருவானதுதான் மல்டி-டச் தொழில்நுட்பம். விசைப்பலகைக்குப் பதில் மனித விரல்களையே முதன்மைக் கருவியாக மாற்றியது ஐஃபோன்.
ஐஃபோன்களுக்கு முன்பே மொபைல்களில் இணையம் இருந்தது. ஆனால், அது டபிள்யு.ஏ.பி (WAP) எனப்படும் சுருக்கப்பட்ட, வெறும் எழுத்துக்கள் மட்டுமே கொண்ட ஒரு அரைகுறை இணைய அனுபவமாகவே இருந்தது. கணினியில் ஒரு இணையதளத்தின் வடிவம் சிதையாமல் மொபைலிலும் துல்லியமாகத் தெரியும்படி ஐஃபோன் மாற்றியது. ஐஃபோனின் 'சஃபாரி' பிரவுசர் மூலம், மக்கள் முதன்முதலில் முழுமையான ஹெச்.டி.எம்.எல் (HTML) பக்கங்களைத் தங்கள் மொபைலில் பார்த்தனர். கணினித் திரையில் காண்பதைப் போலவே விரல்களால் ஜூம் செய்து இணையதளங்களை வாசிக்கும் வசதி, இணையப் பயன்பாட்டையே புரட்டிப்போட்டது.
ஐஃபோனுக்கு முன்பு வரை மொபைல் செயலிகள் என்பவை தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமே அறிந்த ஒரு சிக்கலான மென்பொருள் உலகமாக இருந்தது. ஐஃபோனின் வருகை அந்தப் பிம்பத்தை உடைத்து, புதிய செயலிகள் உலகத்தை உருவாக்கியது. ஆப் ஸ்டோர் என்ற ஒரு பாலத்தை உருவாக்கி, சிக்கலான மென்பொருட்களை ஒரு சாதாரண நபரும் ஒரே ஒரு கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் எளிமையை அறிமுகப்படுத்தியது. இந்த எளிய அணுகுமுறைதான், இன்று நாம் காணும் பல லட்சம் கோடி மதிப்பிலான 'செயலி-பொருளாதாரத்தின்' அஸ்திவாரமாக அமைந்தது.
ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற உணவு விநியோகச் செயலிகள், ஊபர், ஓலா போன்ற பயணச் செயலிகள், ஃபோன்பே, ஜிபே போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைத் தளங்கள் என இன்று நாம் சுவாசிக்கும் நவீன உலகுக்கான ஆக்ஸிஜனாக ஐஃபோன் வழங்கிய அந்த ஆப்-கலாச்சாரம் மாறியது. புதிய வேலைவாய்ப்புகளை, புதிய நிறுவனங்களை, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு புதிய கலாச்சாரத்தையே உருவாக்கியது. ஒட்டுமொத்தமாக சேர்த்துப் பார்த்தால்தான் அதன் முழு வீச்சும் புரியும்.
ஆப்பிளின் மென்பொருள் கட்டமைப்புக்கு மாற்றாக, கூகுள் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டுவந்தபோதுதான் ஸ்மார்ட்போன் சந்தை ஜனநாயகப்படுத்தப்பட்டது. சாம்சங் முதல் ஷாவ்மி (Xiaomi) வரை பல நிறுவனங்கள் இந்த ஓட்டத்தில் இணைந்தன. ஐஃபோன் ஒரு திசைகாட்டியாகப் பாதை காட்ட, மற்ற நிறுவனங்களின் போட்டி மற்றும் கண்டுபிடிப்புகள் சேர்ந்து இன்று நாம் காணும் இந்த பிரம்மாண்டமான ஸ்மார்ட்போன் உலகத்தை முழுமையாக்கின.
ஜாப்ஸின் தத்துவம்: எளிமையே உச்சகட்ட நுணுக்கம்
ஐஃபோனின் வெற்றிக்கு அதன் தொழில்நுட்பத்தைத் தாண்டி, அதன் பின்னால் இருந்த ஸ்டீவ் ஜாப்ஸின் தத்துவமே அடிநாதம். "வடிவமைப்பு என்பது அது எப்படித் தெரிகிறது என்பதில் இல்லை; அது எப்படி வேலை செய்கிறது என்பதில் இருக்கிறது" என்பது ஜாப்ஸின் வேதம். எளிமை என்பது உச்சக்கட்ட நுணுக்கம் என்று நம்பிய ஜாப்ஸ், தொழில்நுட்பமும் கலைகளும் சந்திக்கும் புள்ளியில் நின்றார்.
ஐஃபோன் என்பது வெறும் வணிகத்தையோ அல்லது மொபைல் சந்தையையோ மட்டும் மாற்றிய சாதனம் அல்ல; அது நம் வாழ்வின் ஒவ்வொரு அணுவிலும் ஒரு மெல்லிய புரட்சியை நிகழ்த்தியுள்ளது. நாம் யோசிக்கும் முறை, செய்திகளைப் பகிரும் வேகம், ஏன்... ஒருவரோடு ஒருவர் உறவாடும் முறை என அனைத்தையும் அது மறுவரையறை செய்துவிட்டது.
இன்று தகவல்கள் நம்மைத் தேடி வருவதில்லை; அவை எப்போதும் நம்முடனேயே இருக்கின்றன. ஒரு குக்கிராமத்தில் நடக்கும் அநீதி, அடுத்த சில நிமிடங்களில் உலகளாவிய கவனத்தைப் பெறுகிறது என்றால், அதற்கு ஸ்மார்ட்போன் உருவாக்கிய அந்தத் தடையற்ற தகவல் பரிமாற்றமே அடிப்படை. இணையத்தோடு மனிதன் எப்போதும் பிணைக்கப்பட்டிருக்கும் ஒரு புதிய சமூகக் கட்டமைப்புக்கு ஐஃபோன் வலுவான அடித்தளமிட்டது.
ஒட்டுமொத்தத்தில், ஸ்டீவ் ஜாப்ஸ் உலகுக்கு வழங்கியது ஒரு கருவியை மட்டுமல்ல; தொழில்நுட்பம் மனிதனின் அங்கமாக மாறிய ஒரு புதிய யுகத்தையும்தான்.


