Top
Begin typing your search above and press return to search.

மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களை கைவிடுவதே ஒரே வழி: மல்லோஜுலா வேணுகோபால் ராவ்

சரணடைந்த மாவோயிஸ்ட் சித்தாந்தியின் முதல் பேட்டி

மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களை கைவிடுவதே ஒரே வழி: மல்லோஜுலா வேணுகோபால் ராவ்
X

இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், அரசியல் விவகாரக் குழுவின் அங்கத்தினரும், அதன் சித்தாந்தத் தூணாகக் கருதப்பட்டவருமான மல்லோஜுலா வேணுகோபால் ராவ் (சோனு, 70), கடந்த அக்டோபரில் மகாராஷ்டிராவின் கட்சிரோலியில் சரணடைந்தார்.

தடைசெய்யப்பட்ட இந்தக் குழுவின் ரகசியப் போராளியாக 1980ஆம் ஆண்டு முதல் இருந்த ராவ், மறைந்த மாவோயிஸ்ட் தலைவர் கிஷண்ஜியின் தம்பி ஆவார். இவர் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த மின்னஞ்சல் பேட்டியில், ‘ மாவோயிஸ்ட் இயக்கம் ஒரு தோல்வியடைந்த பரிசோதனை' என்றும், இனி ஆயுதங்களைக் கைவிடுவதே சரியான வழி என்றும் கூறியுள்ளார். சரணடையும்போது இவர் தலைக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் அளித்த பேட்டியிலிருந்து முக்கியப் பகுதிகள்


இந்தியன் எக்ஸ்பிரஸ்: சுமார் 50 ஆண்டுகள் காட்டிற்குள் வாழ்ந்தீர்கள். அது எப்படி இருந்தது?

மல்லோஜுலா வேணுகோபால் ராவ்: மாவோயிஸ்ட் இயக்க உறுப்பினராக காட்டில் நான் கழித்த நாட்கள் என் வாழ்க்கையின் பொன்னான அத்தியாயம். என் வாழ்வு, 'நாகரிகமற்றவர்கள்' என்று கருதப்பட்ட, ஒதுக்கப்பட்டுவிட்ட மக்களுடன் பின்னிப் பிணைந்தது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு நான் சந்தித்தவர்கள் பழங்குடியினர். அவர்கள் மீது வனத் துறையின் அட்டூழியங்கள் மிகக் கடுமையாக இருந்தன. அவர்களுக்குப் போதுமான உணவோ, உடையோ இல்லை. கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் எட்டாக்கனியாக இருந்தன. .

பழங்குடியினருக்கே காடுகள் மீது அதிகாரம் இருக்க வேண்டும் என்றும், காடுகளின் வளங்களுக்கு அவர்களே உரிமையாளர்கள் என்றும் மாவோயிஸ்ட் கட்சி நம்பியது. ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு அதிகாரம் அளிக்க ஒரு தொடக்கப் புள்ளியாக அந்தக் காடுகளையே கட்சி தேர்ந்தெடுத்தது. அத்தகைய பகுதிகளில் பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது.

ஆனால், கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் கட்சி செய்த தவறுகளால், எங்களால் இயக்கத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியவில்லை.


இ.எ: 'போதும், நாம் சரணடைந்துவிடலாம்' என்ற எண்ணம் எப்போது உங்களுக்கு வந்தது?

ராவ்: தலைமறைவு வாழ்க்கையின் சிரமங்களுக்காக ஒருபோதும் நான் சரணடைந்துவிடலாம் என்று நினைத்ததில்லை. ஆனால், மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப எங்கள் சித்தாந்தத்தையும் நடைமுறையையும் செழுமைப்படுத்த நாங்கள் தவறிவிட்டோம். 1980களின் நிலைமைகள் 21ஆம் நூற்றாண்டில் இப்போது இல்லை. அதுவும் கடந்த 25 ஆண்டுகளில், நாட்டின் பொருளாதார அமைப்பில் (இந்தியப் பொருளாதாரம் என்பது உலக ஏகாதிபத்திய அமைப்பின் ஒரு பகுதி) குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.

தொடர்ச்சியான இழப்புகளைச் சந்தித்து, இயக்கம் பலவீனமடைந்து, நம்பிக்கைகள் மங்கியபோது, ஆயுதப் போராட்டத்தை விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருப்பது அறிவார்ந்தது அல்ல என்பதை நாங்கள் உணர்ந்தோம். எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பசவராஜ் (பசவராஜு) கூட, ஆயுதப் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தவே முடிவுசெய்தார். அதை நடைமுறைப்படுத்தும் முயற்சியில், அவர் ஒரு கொடூரமான போலீஸ் என்கவுன்ட்டரில் உயிரை இழந்தார். அவருடன் சித்தாந்தரீதியாகவும், அரசியல்ரீதியாகவும், அமைப்புரீதியாகவும் உடன்பட்ட நாங்கள், அவரது நம்பிக்கைக்குரிய தோழர்களாகக் கூடி, 'சரணடையும்' முடிவை எடுத்தோம். கடந்த கால் நூற்றாண்டு காலமாகவே கட்சியின் நிலைப்பாட்டில் எனக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன.


இ.எ: நீங்கள் மாவோயிஸ்ட் கட்சியின் சித்தாந்தத் தலைவராக அறியப்பட்டவர். இப்போது துரோகி என்று அழைக்கப்படுகிறீர்கள். உங்கள் பாதுகாப்பு குறித்து அச்சமாக உள்ளதா?

ராவ்: பல ஆண்டுகளாக, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் எங்கள் இயக்கம் முன்னேறவில்லை.

என்னைத் துரோகி என்று அழைப்பவர்கள், எங்கள் அரசியல் விவகாரக் குழு எழுதிய கடைசிக் குறிப்பையும், நான் வெளியிட்ட 22 பக்க ஆவணத்தையும் படித்தால் மகிழ்ச்சி அடைவேன். நாட்டில் புரட்சிகரமான சூழ்நிலைகள் முன்பைவிட மேம்பட்டதாக இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர், மேலும் மாவோயிசம் வீழ்த்தப்பட முடியாதது என்று வாதிடுகிறார்கள். ஆனால், அவர்கள் காகிதத்தில் எழுதுபவர்களும், மைக்குக்கு முன்னால் நின்று பேசுபவர்களாகவும் மட்டுமே.. அவர்கள் பேசுவது ஏட்டுச்சுரக்காய். உண்மையான புரட்சியாளர்களாக இருந்தால், முதலில் உலகெங்கிலும் மாறிவரும் நிலைமைகளைப் புரிந்துகொண்டு எங்கள் இயக்கத்தின் தவறுகளை உணர்வார்கள்.

என்னைத் துரோகி என்று சொல்பவர்கள், சூரியனைப் பார்க்கவில்லை. சூரியனைச் சுட்டிக்காட்டும் விரல்களை மட்டுமே பார்க்கிறார்கள். அவர்கள் புரட்சிகர இயக்கத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை.


இ.எ: உங்கள் பார்வையில், மாவோயிஸ்ட் கட்சி மக்களிடையே தங்கள் ஆதரவுத் தளத்தை எப்படி இழந்தது?

ராவ்: மாவோயிஸ்ட் கட்சி செய்த தவறுகளால் தான் மக்களிடையே அதன் அடித்தளம் மோசமடைந்தது. மக்கள் ஆதரவுத் தளம் என்று நான் சொல்வது ஒருங்கிணைந்த வெகுமக்கள் அடித்தளத்தையே.


இ.எ: மாவோயிஸ்ட் கட்சியின் எதிர்காலம் என்ன?

ராவ்: ஆயுதப் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பவர்கள் தவிர்க்க முடியாமல் மேலும் தவறுகளிலும் இழப்புகளிலும் தள்ளப்படுவார்கள். இதற்கான சமீபத்திய நிரூபணம் தோழர் ஹித்மாவை நாம் இழந்தது. இது இந்தியாவின் மக்கள் இயக்கத்திற்கு சரிசெய்ய முடியாத சேதங்களை ஏற்படுத்தும்.

அந்த (வன்முறை) பாதையில் தொடர்ந்து செல்வதால் கட்சிக்கு ஏந்த எதிர்காலமும் இருக்காது. எங்களின் கடந்த காலத் தவறுகளும், தற்போதைய தாக்குதல்களில் ஏற்பட்டுள்ள இழப்புகளும் மிகத் தெளிவாகத் தெரிகின்றன. காற்றில் கண்மூடித்தனமாகக் வாள் வீசும் அந்த 'வெளியாட்கள்' இதை உணரவில்லை. அவர்கள் இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை நிறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.


(தமிழில்: ச.கோபாலகிருஷ்ணன்)


Next Story

Related Stories

All Rights Reserved. Copyright @2019
Share it