Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
6 நிமிட வாசிப்பு

விடைபெற்றார் வாழ்நாள் போராளி

எல்லோரையும் அரவணைப்பதே நல்லகண்ணுவின் அரசியலாக இருந்தது. அன்பே அவரது வழியாக இருந்தது

விடைபெற்றார் வாழ்நாள் போராளி
X

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பெருந்தூண்; தன் ஒட்டுமொத்த வாழ்வையும் பொதுப்பணிக்கு அர்ப்பணித்த பெருந்தகையாளர், அரசியலில் நேர்மைக்கும் எளிமைக்கும் வாழும் உதாரணராகத் திகழ்ந்த செம்மல், எல்லோர்க்கும் நல்லார், முதுபெரும் அரசியல் தலைவர் இரா.நல்லகண்ணு காலமானார். எளிய மக்களின் மேம்பாட்டுக்காகவும், தொழிலாளர்களின் உரிமைக்காகவும், விவசாயிகளின் எழுச்சிக்காகவும் உழைத்த பெருமகனார் நல்லகண்ணு.

இந்திய இடதுசாரிகளில் பல தனித்துவ சாதனைகளுக்கு உரியவர் நல்லகண்ணு. 1925இல் பிறந்தவரான நல்லகண்ணு 1943இல் தனது 18ஆவது வயதில் கட்சியில் இணைந்தார். அது தொடங்கி முக்கால் நூற்றாண்டு காலம் தன்னாலான பணிகளை கட்சிக்காக பங்களித்துவந்தவர் நல்லகண்ணு. இந்த முக்கால் நூற்றாண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எத்தனையோ பிளவுகளையும், புதுப்புது பிரிவுகளையும் கண்டாலும், உறுதிபட ஒரே கட்சியில் தன் அரசியல் பணியைத் தொடர்ந்தவர் நல்லகண்ணு.

1925 டிசம்பர் 26 அன்று ஸ்ரீவைகுண்டத்தில் ராமசாமி - கருப்பாயி தம்பதியின் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தவரான நல்லகண்ணு, ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதாலேயோ என்னவோ விவசாயிகள் மேம்பாட்டுக்கான சிந்தனை அவரது சிறு வயதிலேயே அவரை ஆக்கிரமித்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் முதுகெலும்பாகக் கருதப்படும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கப் பணியும் கிராமப்புற சேவையுமே நல்லகண்ணுவைச் செலுத்தும் உந்துசக்தியாக இருந்தன.

காந்தியில் தொடங்கி கம்யூனிஸத்துக்கு…

சிறுவயதில் காந்தியால் ஈர்க்கப்பட்டவர் நல்லகண்ணு. சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார். ஆனால், பள்ளிக் காலத்தில் பொதுவுடைமைக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். மார்க்ஸியக் கொள்கைகள் நல்லகண்ணுவுக்குள் சென்று இறங்க பள்ளி ஆசிரியர் பலவேசம் முக்கியமான காரணமாக இருந்தார். பாரதியார், திரு.வி.க, விவேகானந்தர் படைப்புகள் நல்லகண்ணுவின் இளமைக்கால சிந்தனையை செதுக்கின. சாதிக் கட்டமைப்பை உடைப்பதும், சுரண்டலற்ற சமுதாயத்தை உருவாக்குவதுமே தனது லட்சியம் எனக் கருதிய நல்லகண்ணு, 16 வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர முயன்றார்; ஆனால், வயது முதிர்வுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. விளைவாக தனது 18ஆவது வயதில் 1943இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் அடிமட்டத் தொண்டராகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர், இந்திய தேசியக் குழு உறுப்பினர் எனப் பல முக்கிய பொறுப்புகளையும் வகித்தவர் நல்லகண்ணு. தனிப்பட்ட வாழ்வைப் பொறுத்த அளவில் காந்திய வழிமுறையே அவரது பாதையாக இருந்தது.

விவசாயிகளுக்காகத் தன் வாழ்வில் எண்ணற்ற போராட்டங்களை முன்னெடுத்தவர் நல்லகண்ணு. நிலச்சுவான்தார்களின் பிடியில் இருந்த நிலங்களை மீட்க அவர் நடத்திய மாநிலம் தழுவிய போராட்டங்கள் எண்ணற்றவை. ஆயினும், 1948இல் அவர் முன்னெடுத்த 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' போராட்டம் அவரது வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இந்தப் போராட்டத்தின் விளைவாக இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாக 'நெல்லை சதி வழக்கில்' சேர்க்கப்பட்டார் நல்லகண்ணு. அப்போதெல்லாம் மிடுக்கான மீசைதான் நல்லகண்ணுவின் அடையாளம். சிறையில் அந்த மீசையைச் சுருட்டை வைத்துப் பொசுக்கி சித்திரவதை செய்தனர் போலீஸார். கடும் சித்ரவதைக்கு இடையிலும் சக தோழர்களைக் காட்டிக் கொடுக்காத உறுதி மிக்கவராகத் திகழ்ந்தார். நெல்லை சதி வழக்கில் சுமார் ஏழு ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்தார் நல்லகண்ணு. ஆயினும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தார். 1970களில் நில மீட்சிப் போராட்டம் இந்தியா முழுவதும் முன்னெடுக்கப்படுவதில் முக்கியப் பங்காற்றினார் நல்லகண்ணு. மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் குறித்த விவரங்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டார். நில மீட்பு தொடர் இயக்கமாக நடக்க தொடர் குரல் கொடுத்தார்.

நல்லகண்ணுவின் போராட்டங்கள்

விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்காகவும், விவசாயிகளுடைய நிலவுரிமைக்காகவும் மட்டும் அல்ல; விவசாயிகள் வாழ்வுரிமைக்காகவும் போராடியவர் நல்லகண்ணு. கனிம வளச் சுரண்டலுக்கு எதிரான நல்லகண்ணுவின் போராட்டங்களும் விவசாயிகள் மீதான அக்கறையின் தொடர்ச்சியே. அவற்றின் உச்சம் போன்றுதான் அமைந்தது 2010இல் தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் நடத்திய சட்டப் போராட்டம்.

மணல் கொள்ளைக்கு எதிராக வழக்கறிஞர் இல்லாமலேயே நீதிமன்றத்தில் நேராக ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார் நல்லகண்ணு. சட்ட வாதங்களைவிட, தாமிரபரணி ஆற்றுடன் மக்களுக்குள்ள பிணைப்பை உணர்வுபூர்வமாக விளக்கினார். மணல் அள்ளுவதால் கிராமங்கள் பாதிக்கப்படுவதை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார். நல்லகண்ணுவின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் இது தொடர்பாக ஒரு நிபுணர் குழுவை நியமித்தனர். அந்த நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையிலேயே ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்தது நீதிமன்றம். இது தனது 86ஆவது வயதிலும் கனிம வளக் கொள்ளைக்கு எதிராகக் களத்தில் நின்று நல்லகண்ணு நடத்திய போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைதியின் தூதர்

வாழ்நாள் முழுக்க சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும், மத நல்லிணக்கத்துக்காகவும் செயல்பட்டவர் நல்லகண்ணு. 1996இல் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட சாதிக் கலவரங்கள் நல்லகண்ணு வீட்டிலேயே பலி கேட்டன. நல்லகண்ணுவின் மாமனார் அன்னசாமி கொல்லப்பட்டார். ஆயினும், அவர் வெறுப்புக்கு எதிராக உறுதிபட நின்றார். 'சிலர் செய்த தவறுக்காக ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்க முடியாது' என முதிர்ச்சியுடன் கூறினார். அமைதியின் தூதராக மக்கள் இடையே பயணப்பட்டார். பாதிக்கப்பட்ட மக்கள் இடையே சென்று பணியாற்றினார். பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் பட்டியலினத் தலைவர்கள் பதவியேற்க முடியாத சூழல் அதை எதிர்த்துப் போராடியவர் நல்லகண்ணு; 4,000 பேருடன் மாபெரும் உண்ணாவிரதம் இருந்தார்; 2006இல் அந்த ஊராட்சிகளில் தேர்தல் நடத்தப்பட நல்லகண்ணுவின் தொடர் போராட்டங்களும் ஒரு காரணம்.

எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர் நல்லகண்ணு. கடைசி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார். 2015 சென்னை வெள்ளத்தின்போது நல்லகண்ணுவின் வீட்டிற்குள் நீர் புகுந்து பெரும் பாதிப்புக்குள்ளானபோதுதான் அவரது வீட்டின் பின்னணி பலருக்கு தெரியவந்தது. வெள்ளத்தில் சிக்கியபோது அவரை மீட்க படகில் வந்தனர் மீட்புக் குழுவினர். அப்போதும்கூட படகில் பொதுமக்களுக்கு முன்னுரிமை அளிக்கச் சொன்னார் நல்லகண்ணு. தமக்குக் கிடைக்கும் பரிசுகளையும் விருதுகளையும்கூட மக்கள் பணிக்கே திருப்பி அளித்தவர் நல்லகண்ணு. கடைசி காலம் வரை பஸ்ஸிலும் ஆட்டோவிலுமே பயணம் மேற்கொண்டவர். அரசியல் பயணங்களின்போது, தனக்கு கட்டுசாதம் போதும் என்றவர்.

தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் நல்லகண்ணு ஆற்றிய சேவையைப் பாராட்டி 2022இல் 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்பட்டது. விருதுடன் வழங்கப்பட்ட 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் தனது சொந்தப் பணமான 5,000 ரூபாயையும் சேர்த்து தமிழ்நாடு அரசுக்கே வழங்கிவிட்டார் நல்லகண்ணு.

தீவிரமான போராளி. ஆனால், கடுஞ்சொல் பேசுபவர் அல்ல. கொந்தளிக்கும் போராட்டங்களை முன்னெடுத்தவர்... ஆனால், வெறுப்பு அரசியலர் அல்ல. எல்லோரையும் அரவணைப்பதே அவரது அரசியலாக இருந்தது. அன்பே அவரது வழியாக இருந்தது. மாற்றுக் கட்சித் தலைவர்களும் மதிக்கும் ஒரு உன்னத அரசியல் பண்பாளராகத் திகழ்ந்தவர் நல்லகண்ணு. தன்னுடைய மறைவால் நிரப்ப முடியாத ஓர் வெற்றிடத்தை தமிழ்நாட்டு அரசியலில் நிரந்தமாக விட்டுச்சென்றுவிட்டார் நல்லகண்ணு.


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it