Top
Begin typing your search above and press return to search.

வெற்றிடத்துக்குள் ஒளிந்திருக்கும் மர்ம ஆற்றல்!

பிரபஞ்சத்தின் 'நிசப்த' நடனம்

வெற்றிடத்துக்குள் ஒளிந்திருக்கும் மர்ம ஆற்றல்!
X

நமது புலன்களுக்கு எட்டியவரை 'வெற்றிடம்' என்பது ஒன்றுமே இல்லாத ஒரு சூன்ய பிரதேசம். ஒரு பெட்டியில் இருக்கும் அணுக்கள், மூலக்கூறுகள், கதிர்வீச்சு என அனைத்தையும் ஒவ்வொன்றாக அகற்றிவிட்டால், அங்கே மிஞ்சுவது வெறும் 'வெற்று வெளி' என்றுதான் நாம் கருதுகிறோம். ஆனால், நவீன இயற்பியல் இந்த கருத்தாக்கத்தை அடியோடு மாற்றியமைக்கிறது. நீங்கள் எதைப் பிடுங்கி எறிந்தாலும், அந்தப் பெட்டிக்குள் ஒரு பிரம்மாண்டமான ஆற்றல் எப்போதும் குடியிருக்கும். அதுதான் ‘பூஜ்ஜியம்-புள்ளி ஆற்றல்' (Zero-Point Energy).

இயற்பியலின் விளையாட்டு விதி

ஏன் ஒரு பெட்டியை நம்மால் முழுமையாகக் காலி செய்ய முடிவதில்லை? இதற்கு விடை குவாண்டம் இயக்கவியலின் அடிப்படையான 'நிச்சயமின்மை கோட்பா’ட்டில் (Uncertainty Principle) உள்ளது. ஒரு துகள் எங்கே இருக்கிறது, அது எவ்வளவு வேகத்தில் நகர்கிறது ஆகிய இரண்டையும் நாம் ஒரே நேரத்தில் துல்லியமாக அறிய முடியாது என்கிறது இந்தக் கோட்பாடு.

பெட்டிக்குள் இருக்கும் ஆற்றலை நாம் 'பூஜ்ஜியம்' ஆக்க முயன்றால், அந்தத் துகள் முழுமையாக அசையாமல் நிற்க வேண்டும். அப்படி நின்றால் அதன் வேகம் பூஜ்ஜியம் என்று தெரிந்துவிடும். இது குவாண்டம் விதிகளுக்குப் புறம்பானது. எனவே, இயற்கையானது அந்தத் துகளை எப்போதும் ஒரு சிறிய 'நடுக்கத்தில்' வைத்திருக்கிறது. நாம் பெட்டியை எவ்வளவுதான் குளிரூட்டினாலும், எவ்வளவுதான் பொருட்களை அகற்றினாலும், அந்த எஞ்சிய அதிர்வை அல்லது ஆற்றலை நம்மால் ஒருபோதும் திருட முடியாது.

அதிர்வூட்டும் கண்டுபிடிப்புகள்

இந்த விசித்திரமான ஆற்றலை வெறும் தியரியாக மட்டும் அறிஞர்கள் பார்க்கவில்லை. மேக்ஸ் பிளாங்க், ஐன்ஸ்டீன் ஆகியோரால் விவாதிக்கப்பட்ட இந்த ஆற்றல், இன்று ஆய்வகங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் ஜெர்மனியில் உள்ள எக்ஸ்-ரே லேசர் மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒரு மைல்கல்லாகும். மிகக் கடுமையான குளிர்நிலையில் (Absolute Zero) வைக்கப்பட்ட அயோடோபிரிடின் (Iodopyridine) மூலக்கூறுகளை உடைத்தபோது, அந்த அணுக்கள் உறைந்து கிடக்காமல், ஒருவித சீரான இயக்கத்தில் இருந்தது கண்டறியப்பட்டது. அதாவது, அணுக்கள் உறையும் நிலையிலும் பிரபஞ்சத்தின் அந்த அடிப்படை 'பூஜ்ஜியம்-புள்ளி ஆற்றல்' அவற்றை இயங்கச் செய்துகொண்டிருந்தது.

வெற்றிடத்தின் அழுத்தம்: காசிமிர் விளைவு

வெற்றிடம் என்பது அமைதியானது அல்ல என்பதற்கு 1948இ ல் ஹென்ட்ரிக் காசிமிர் ஒரு உதாரணத்தைச் சொன்னார். மின்னூட்டம் இல்லாத இரு தட்டுகளை மிக மிக நெருக்கமாக வைத்தால், அவை தானாகவே ஒட்டிக்கொள்ளும். இதற்குத் தட்டுகளுக்கு வெளியே இருக்கும் 'வெற்றிட ஆற்றல்' தரும் அழுத்தமே காரணம். இது ஒரு 'கில்லட்டின்' போலச் செயல்பட்டு, தட்டுகளுக்கு இடைப்பட்ட ஆற்றலை விட வெளிப்பக்க ஆற்றலை அதிகமாக்கி, தட்டுகளை ஒன்றுடன் ஒன்று மோதச் செய்கிறது. 1997இல் இது நிரூபிக்கப்பட்டபோது, வெற்றிடம் என்பது 'ஆற்றல் ததும்பி நிற்கும் கடல்' என்பது உலகுக்குப் புரிந்தது.

அறிவியலின் மிகப் பெரிய முரண்பாடு

இந்த ஆற்றல் ஒருபுறம் வியப்பைத் தந்தாலும், மறுபுறம் இயற்பியலாளர்களுக்குத் தலைவலியைத் தருகிறது. கணக்கீடுகளின்படி பார்த்தால், பிரபஞ்சத்திலுள்ள வெற்றிட ஆற்றலின் அளவு மிக மிக அதிகம். அந்த ஆற்றலின் ஈர்ப்பு விசை மட்டும் செயல்பட்டிருந்தால், இந்தப் பிரபஞ்சம் எப்போதோ வெடித்துச் சிதறியிருக்க வேண்டும். ஆனால், பிரபஞ்சம் நிதானமாக விரிவடைந்துகொண்டிருக்கிறது. இந்த ஆற்றல் ஏன் இன்னும் ஈர்ப்பு விசைக்கு முழுமையாகக் கட்டுப்படாமல் இருக்கிறது என்பது இன்றைய இயற்பியலின் 'மில்லியன் டாலர்' கேள்வி.

வெற்றிடம் என்பது 'சூன்யம்' அல்ல; அது 'சாத்தியங்களின் ஊற்றுக்கண்'. ஒரு பெட்டிக்குள் ஒரு எலக்ட்ரான் கூட இல்லை என்றாலும், அங்கே எலக்ட்ரானுக்கான மூலக்கூறு பண்புகள் (Electronness) மறைந்திருக்கின்றன. நாம் எதை, ஒன்றுமே இல்லாத வெளி என்று நினைக்கிறோமோ, அதுவே பிரபஞ்சத்தின் அஸ்திவாரமாக இருக்கிறது. ஒருவேளை, பிரபஞ்சத்தின் ரகசியங்கள் அனைத்தும் இந்த வெற்றுப் பெட்டிக்குள்தான் ஒளிந்து கிடக்கின்றன போலும்!


Next Story

Related Stories

All Rights Reserved. Copyright @2019
Share it