எரிசக்தி நெருக்கடி: தாக்குப்பிடிக்குமா இந்தியா?
1979இல் ஏற்பட்டது போன்ற எரிசக்தி நெருக்கடிச் சூழல், தற்போது மீண்டும் உருவாகிவருகிறது.

காலச்சக்கரம் சில நேரங்களில் நம்மை அதே பழைய இடத்துக்கே கொண்டு வந்து நிறுத்துகிறது.
1979இல் ஈரான் புரட்சியின்போது உலகம் ஒரு பெரிய எண்ணெய் நெருக்கடியைச் சந்தித்தது. இப்போது, 2026இல் அதே மேற்காசிய பகுதியில் மூண்டுள்ள போர் பதற்றம், மீண்டும் இந்தியப் பொருளாதாரத்துக்கு ஒரு 'பிளாஷ்பேக்' பயத்தைக் கொடுத்துள்ளது.
அன்று நடந்தது என்ன?
1979இல் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, உலக நாடுகளுக்குக் கிடைத்து வந்த கச்சா எண்ணெய் விநியோகம் திடீரென நின்றது. பீப்பாய் 13 டாலருக்கு விற்ற எண்ணெய், 34 டாலராக எகிறியது.
அப்போது இந்தியா இப்போது இருப்பதைப் போல பலமான நிலையில் இல்லை. மிகவும் பலவீனமான காலகட்டத்தில் இருந்தது. 1962 முதல் 1977 வரையிலான காலகட்டத்தில் சந்தித்த போர்கள், வறட்சி, நெருக்கடிநிலை மற்றும் சோஷலிசக் கொள்கைகளால் நலிவுற்றிருந்த இந்தியப் பொருளாதாரத்துக்கு, அந்த எரிசக்தி விலை உயர்வு பேரிடியாக அமைந்தது. பணவீக்கமும், அந்நியச் செலாவணி தட்டுப்பாடும் நாட்டை நிலைகுலையச் செய்தன.
இன்றைய நிலவரம் என்ன?
இன்று மேற்காசியாவில் இஸ்ரேல்-ஈரான் இடையே மூண்டுள்ள போர், மீண்டும் ஒரு எண்ணெய் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா பணமதிப்புநீக்கம், கொரொனா பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர் எனப் பல சவால்களைக் கடந்து இப்போதுதான் மீண்டு வருகிறது. இந்த நேரத்தில் ஏற்பட்டுள்ள எரிசக்தி விலை உயர்வு, மீண்டும் பணவீக்கத்தைத் தூண்டியுள்ளது.
இந்தியாவின் பலமும் பலவீனமும்
1979 சூழலுக்கும் தற்போதைய காலகட்டத்துக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. இன்று இந்தியப் பொருளாதாரம் அன்று இருந்ததை விடப் பெரியது; இந்த அதிர்ச்சியைத் தாங்கும் அளவுக்கு நம்மிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு இருக்கிறது. ஆனாலும், இந்தியாவின் பலவீனம் என்னவென்றால், இன்றும் நாம் 85% கச்சா எண்ணெய்க்கு இறக்குமதியையே நம்பி இருக்கிறோம். இதனால் பெட்ரோல் விலை உயர்வு, சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் சரக்குக் கட்டண உயர்வு போன்றவை பயமுறுத்துகின்றன. ஏற்கெனவே ஹோட்டல்கள், ஸ்டீல் ஆலைகளில் இதன் பாதிப்புகள் தெரிய ஆரம்பித்துவிட்டன.
தப்பிக்குமா இந்தியா?
அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நெருங்கிவருவதால், அந்நாட்டு அரசு எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளும், வாங்கும் நாடுகளும் சமமான பாதிப்பைச் சந்தித்துவருவதால், விரைவில் ஒரு ராஜதந்திரத் தீர்வு எட்டப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு ஒரு சுமுக முடிவு எட்டப்பட்டு, போர் முடிவுக்கு வந்தால் மட்டுமே, 1979 போன்ற ஒரு நீண்டகாலப் பொருளாதாரச் சரிவிலிருந்து இந்தியாவால் தற்காத்துக்கொள்ள முடியும்.

