குறையும் மக்கள்தொகை: என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு?
நாடாளுமன்றத் தொகுதிகள் மக்கள்தொகைக்கு ஏற்பப் பிரிக்கப்படும்போது, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும்; பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும்.

வரலாறு விசித்திரமான முரண்பாடுகளைக் கொண்டது. ஒரு சமூகம் எதை தனது மகத்தான சாதனையாகக் கருதியதோ, அதுவே சில தசாப்தங்களுக்குப் பிறகு அதன் இருப்புக்கே அச்சுறுத்தலாக மாறக்கூடும்.
1980களில் தமிழ்நாடு ஒரு தெளிவான இலக்கை நோக்கிப் பயணித்தது: 'கல்வி மற்றும் சுகாதாரத்தின் மூலம் வறுமையையும், மக்கள்தொகையையும் கட்டுப்படுத்துவது'.
இன்று அந்த இலக்கை எட்டிவிட்டது. தமிழ்நாட்டின் தற்போதைய பிறப்பு விகிதம் 1.3 ஆக உள்ளது. ஆனால், இந்த வெற்றியே தற்போது ஒரு புதிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
நாடாளுமன்றத் தொகுதிகள் மக்கள்தொகைக்கு ஏற்பப் பிரிக்கப்படும்போது, மக்கள்தொகையைக் குறைக்காத வடமாநிலங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும். இந்தியாவின் மக்களவைத் தொகுதிகள் 543லிருந்து 888 ஆக அதிகரிக்கப்படும்போது, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதத்திலிருந்து வெறும் 4.3 சதவீதமாகச் சுருங்கும் அபாயம் உள்ளது.
இந்த ஆபத்தை உணர்ந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, "இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது" என்ற விதியை மாற்றி, அதிக குழந்தைகளைப் பெறுவதை ஊக்கப்படுத்தப்போவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதுமை நெருக்கடி
முன்பெல்லாம் ஒரு வீட்டில் நான்கு குழந்தைகள் இருந்து இரண்டு பெற்றோர்களைக் கவனித்துக்கொண்டனர். இன்று நிலைமை தலைகீழ். '4-2-1' என்ற ஆபத்தான சூழல் உருவாகிவருகிறது. அதாவது, ஒரே ஒரு குழந்தை தனது இரண்டு பெற்றோர்களையும், நான்கு தாத்தா-பாட்டிகளையும் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
தற்போது தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 15.8 சதவீதமாக மதிப்பிடப்படுகிறது. இது 2036க்குள் 20 சதவீதமாக அதிகரிக்கும் என்கிறது ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கை. இது தேசிய சராசரி முதியோர் (15%) எண்ணிக்கையைவிட அதிகம்.
அதாவது, அடுத்த 10 ஆண்டில் தமிழ்நாட்டில் ஐந்தில் ஒருவர் முதியவர். உழைக்கும் இளைஞர்கள் குறைந்து, முதியோருக்கான சுகாதாரச் செலவுகள் அதிகரிக்கும்போது பொருளாதாரச் சவால்கள் தீவிரமடையும். இந்த 'முதுமை நெருக்கடியால்' மருத்துவக் கட்டமைப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு அரசு பெரும் நிதியைச் செலவிட வேண்டியிருக்கும்.
மக்கள்தொகை குறைவு ஏன் ஆபத்தானது?
மக்கள்தொகை சரிவு என்பது வெறும் எண்களின் கணக்கல்ல; அது ஒரு சமூகத்தின் உயிரோட்டம் குறைவது போன்றது. புதிய மனிதர்கள் இல்லாத இடத்தில் புதிய கண்டுபிடிப்புகளோ, சந்தைகளோ உருவாகாது. "புவி வெப்பமாதலை விடவும், மக்கள்தொகை வீழ்ச்சிதான் மனித நாகரிகத்துக்குப் பெரிய ஆபத்து" என எலான் மஸ்க் எச்சரிக்கிறார்.
ஒருமுறை பிறப்பு விகிதம் சரிந்துவிட்டால், அதை மீண்டும் உயர்த்துவது கடினம்.
1980இல் ஒரு குழந்தைக் கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திய சீனா, தற்போது 'மூன்று குழந்தைகள்' வரை அனுமதி அளித்தும், அந்நாட்டு இளைஞர்கள் ஆர்வம் காட்டவில்லை. தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் கோடிக்கணக்கில் ஊக்கத்தொகை வழங்கியும் பலன் கிடைக்கவில்லை.
ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள தயங்குகிறார்கள்?
விண்ணைத் தொடும் கல்விச் செலவு, வீட்டு வாடகை மற்றும் வாழ்க்கைச் செலவுகளால் இளைஞர்கள் குழந்தையைப் பெரும் சுமையாகப் பார்க்கின்றனர்.
வேலைவாய்ப்பின்மை, காலநிலை மாற்றம், பயங்கரவாதம் குறித்த பயம் ஆகியவும் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து யோசிக்க வைக்கின்றன.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, குடும்ப அளவில் போதிய ஆதரவு இல்லாதது அவர்களைத் தாய்மையிலிருந்து பின்வாங்க வைக்கிறது.
என்ன செய்யலாம்?
குழந்தை பெறுவது தனிமனித உரிமை, அதை அரசு கட்டாயப்படுத்த முடியாது. ஆனால், கால மாற்றத்துக்கு ஏற்பச் சில திட்டங்களை முன்னெடுக்கலாம்.
அலுவலகங்களிலேயே தரமான, மலிவான குழந்தைக் காப்பகங்களை உருவாக்குவதன் மூலம் பெண்களின் பணிச்சுமையைக் குறைக்கலாம். இந்தக் காப்பகங்களை உருவாக்க அரசு மானியம் வழங்கலாம்.
குழந்தை வளர்ப்பில் ஆண்களின் பங்களிப்பை உறுதி செய்ய 'கட்டாயத் தந்தை விடுப்பு' வழங்கப்பட வேண்டும்.
முதியவர்களைச் சுமையாகக் கருதாமல், அவர்களின் அனுபவத்தைப் பயன்படுத்தும் எளிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி அவர்களைப் பொருளாதாரச் சக்தியாக மாற்ற வேண்டும்.
மனித உழைப்புப் பற்றாக்குறையை ஈடு செய்ய ரோபோட்டிக்ஸ் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
மக்கள்தொகை: சுமை அல்ல, சொத்து
முன்பு மக்கள்தொகை சுமையாக பார்க்கப்பட்டது. இன்று அது ஒரு சொத்தாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் 'நாம் இருவர் நமக்கு இருவர்' என்று முழங்கிய தமிழ்நாடு, இன்று 'நமக்கு இருவர் மட்டுமே போதாது' என்ற யதார்த்தத்தை உணர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தமிழ்நாடு, தனது அரசியல் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கும் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கும் மாறிவரும் மக்கள்தொகைக்கு ஏற்பப் புத்திசாலித்தனமாகத் திட்டமிடுவது அவசியம்.


