Top
Begin typing your search above and press return to search.

2025: அதிகம் புழங்கியது ‘வெறுப்பு’

2025: அதிகம் புழங்கியது ‘வெறுப்பு’
X

கடந்த ஆண்டை (2025) நினைத்தாலே அதிகம் நினைவுக்கு வருவது எது? உங்களுடைய நினைவில் அதிகம் எதிரொலிக்கும் வார்த்தை எது? இந்திய மக்களின் மனங்களில் அதிகம் எதிரொலித்த வார்த்தைதான் எது?

சிறிது காலமே கேட்டவை

சிறிது காலமே அதிகம் கேட்ட வார்த்தை ‘சிந்தூர்’ (நெற்றித் திலகம்). காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றவர்களில் மூன்று பேர் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியவர்கள், இருவர் அவர்களுக்குத் தங்க இடம் கொடுத்த இந்தியர்கள் என்று தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தெரிவிக்கிறது. அதற்குப் பதிலடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் ‘ஆபரேஷன் சிந்தூர்’ – அது ஆட்சியாளர்களின் தேர்வு. தாக்கியவர்களுக்கு உதவிய பாகிஸ்தானின் அடிப்படைக் கட்டுமானங்களின் மீது இந்திய விமானப்படை விமானங்கள், ஏவுகணைகள், டிரோன்கள் தாக்குதல் நடத்தி கடுமையான சேதத்தை விளைவித்தன, அதற்கு ஈடாக இந்தியாவுக்கும் ‘சில சேதங்கள்’ ஏற்பட்டன (இவையெல்லாம் போரில் தவிர்க்க முடியாதவை). அப்போதைய மோதலில் 3 பாகிஸ்தானியர்களும் கொல்லப்பட்டுவிட்டனர். விசாரணையின்போது கைதான இரு இந்தியர்கள் குறித்து அதற்குப் பிறகு தகவல் ஏதுமில்லை. அந்த மோதல் தொடர்பாக மூடி மறைக்கப்படும் பல தகவல்கள் குறித்த விவரங்கள் இன்னமும் தெளிவாகவில்லை. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று அழைக்கப்பட்ட அந்த பதிலடி நடவடிக்கை நான்கு நாட்களுக்குத்தான் நீடித்தது என்பதால் நினைவில் நிற்க, அது போதவில்லை.

இன்னொரு வார்த்தை ‘காப்பு வரி’ அல்லது ‘தற்காப்புக்கான சுங்க வரி’. கடந்த ஆண்டு (2025) ஏப்ரல் 2 தொடங்கி அந்த வாரத்தை ஒவ்வொரு உரையாடலிலும் தவறாது இடம்பெற்றது. அந்த வார்த்தைக்கு இணையான மற்றொரு வார்த்தை – ‘ட்ரம்ப்’. ட்ரம்ப்பும் காப்பு வரியும் சேர்ந்து பல நாடுகளின் பொருளாதாரத்தைப் புரட்டி போட்டுவிட்டன, இது இன்னமும் முடிவுக்கு வரவில்லை. உதாரணம் கூற வேண்டுமென்றால், ரஷ்யாவிடமிருந்து கச்சா பெட்ரோலிய எண்ணெய் வாங்குவதற்கு எதிர்வினையாக இந்தியா மீது காப்பு வரியை விதித்தும் உயர்த்தியும் தண்டனை அளித்துள்ளது அமெரிக்கா; இது உருக்கு, அலுமினியம், தாமிரம், ஜவுளி, நவரத்தினக் கல், தங்க நகைகள், கடல் உணவுகள், ரசாயனங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியைக் கணிசமாக பாதித்திருக்கிறது. அமெரிக்காவுடனான இருதரப்பு வணிக ஒப்பந்தம் ‘வெகு விரைவிலேயே’ இறுதியாகிவிடும் என்று வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் 2025 ஏப்ரலிலேயே கூறியிருந்தாலும் 2025 முடிந்த பிறகும்கூட கையெழுத்தாகவில்லை.

‘ஜிஎஸ்டி’ (பொது சரக்கு-சேவை வரி) அடுத்து அதிகம் புழங்கப்பட்ட வார்த்தை. மிகவும் அவலமான நிலையில் பொது சரக்கு – சேவை வரி திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கிய பிறகு, எட்டாவது ஆண்டில் - ஒருசில நல்ல ஆலோசனைகளுக்கு ஒன்றிய அரசு செவி சாய்த்திருக்கிறது; வரி விகித எண்ணிக்கைகளைக் குறைத்தும், பல சரக்குகளுக்கும் சேவைகளுக்கும் வரிகளைக் குறைத்தும் செயல்பட்டிருக்கிறது. இருப்பினும் தொழில் செய்வோரையும் வர்த்தகர்களையும் அரசு நிர்வாகம் அலைக்கழிப்பது குறையவில்லை. ஜிஎஸ்டி சட்டங்களுக்கு ஏற்ப படிவங்களைப் பூர்த்தி செய்து அரசுக்கு அளிப்பதில் தாங்கள் படும் கடும் துயரங்களை தொழிலதிபர்களும் வியாபாரிகளும் தொடர்ந்து முறையிட்டுவருகின்றனர். மொத்த சில்லறை வர்த்தக விற்றுமுதல் மதிப்புடன் ஒப்பிட, அரசு அளிக்கும் வரி நிவாரணம் மிகவும் சொற்பமே; அத்துடன் அரசு எதிர்பார்த்தபடி, அறிவித்த வரிக் குறைப்பால் ‘நுகர்வு’ பெரிதாக அதிகரித்துவிடவில்லை. மக்களில் அதிக வசதி படைத்தவர்கள் மட்டும்தான் நுகர்வுக்கு அதிகம் செலவிட்டனர்.

பேசப்படாத வார்த்தைகள்

இந்தியப் பொருளாதாரம் ‘பொன்னிறச் சுருள்கற்றைக்குள்’ (கோல்டிலாக்ஸ்) நுழைந்துவிட்டதாக ‘சிலர்’ பேச முற்பட்டதும் வெகு விரைவிலேயே மறைந்துவிட்டது. ‘பொன்னிறச் சுருள்கற்றை’ என்ற வார்த்தை நல்ல காலம் பிறந்துவிட்டதைக் குறிக்கும் உருவகமாகும். இந்த வார்த்தைக்கு நேரடியாக என்ன பொருள் என்று படித்தவர்களுக்குக் கூட அதிகம் தெரியாது. இப்படியிருக்க, இந்தியாவின் தேசிய கணக்கு முறையே சரியில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்). ‘இந்திய பொருளாதாரம் வலிமையாக இல்லை’ என்று இந்த அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் தொடர்ந்து எச்சரித்துவருகிறார்கள். இறுதியாக அரசு ஏற்பாடு செய்த அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்களின் ஓசையை, ‘எங்களுக்கு வேலை கொடு’ என்று நாட்டின் எல்லா திசைகளிலிருந்தும் எழும்பிய குரல்கள் அடக்கிவிட்டன.

இப்போதைய பொருளாதார வளர்ச்சி வேகத்தில் மூன்று முக்கிய நாடுகளின் ஒட்டுமொத்தப் பொருளாதார உற்பத்தி மதிப்பு (அமெரிக்க டாலரின் நிலையான மதிப்பில்) என்னவாக இருக்கும் என்று 2025 தரவுகளைச் சேர்த்து மதிப்பிடப்பட்டிருக்கிறது:

நாடு வளர்ச்சி வீதம் 2025 உற்பத்தியுடன்

சீனா 4.8% 931 பில்லியன் டாலர்கள்

அமெரிக்கா 1.8% 551 பில்லியன் டாலர்கள்

இந்தியா 6.6% 276 பில்லியன் டாலர்கள்

அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் தனக்கும் உள்ள இடைவெளியை சீனா வெகுவாக நிரப்பிவரும் வேளையில் - இந்தியாவுக்கும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தில் பல குறைபாடுகள் இருப்பதை இந்திய அரசு ஏற்க மறுக்கிறது அல்லது புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. இந்து ஆங்கிலப் பத்திரிகையின் தலையங்கம் இப்படிக் கூறுகிறது: ‘இந்திய இறக்குமதி மீது அமெரிக்கா விதித்த 50% காப்புவரி தொடர்ந்து நீடிக்கிறது, தனியார் முதலீடு சுணக்கமாகவே தொடர்கிறது, அந்நியர்களின் முதலீடு நாட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறது, ரூபாயின் செலாவணி மாற்று மதிப்பு குறைந்துவருவதால் இறக்குமதிக்கு அதிகம் பணம் தர வேண்டியதாகிவிட்டது, நம் நாட்டுப் பொருளாதாரம் இறக்குமதிகளைத்தான் அதிகம் சார்ந்திருக்கிறது என்பதால் இது மேலும் சுமையாகிக்கொண்டிருக்கிறது. மக்களுடைய வருமானத்தின் உண்மை மதிப்பு வேகமாக அதிகரிக்கவில்லை, நுகர்வோரின் தேவைகளோ உற்சாகமின்றி இருக்கிறது’. இந்தியப் பொருளாதாரம் ‘பொன்னிறச் சுருள்கற்றை’ நிலைக்குப் போய்விடவில்லை என்பதையே இந்த உண்மைகள் உணர்த்துகின்றன.

ஒரு காலத்தில் அதிகம் புழங்கிய ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தை இப்போது கிட்டத்தட்ட மறைந்தே விட்டது. கடந்த ஆண்டில் ‘அதிகம் பேசப்படாத’ வார்த்தையாகக் கூட அமைந்துவிட்டது. மிகச் சிலர்தான் தங்களை ‘மதச்சார்பற்றவர்கள்’ என்று பெருமையாக அடையாளப்படுத்திக்கொண்டனர். தலையங்கப் பத்தி எழுத்தாளர்கள் ‘அதை’ பயன்படுத்தவே இல்லை. ‘மதச்சார்பின்மை’ என்ற வாரத்த்தைக்கு ஆரம்ப காலத்தில் - அரசு நிர்வாகத்தையும் மதத்தையும் தனித்தனியாக பிரிப்பது என்றுதான் பொருள் இருந்தது. பிறகு பகுத்தறிவு, மனிதாபிமானம் ஆகியவற்றின் அடிப்படையில் – மதக் கட்டளைகளின்படி அல்லாமல் பிரச்சினைகளைப் பார்ப்பதே ‘மதச்சார்பின்மை’ என்று பிற்காலத்தில் பொருளானது.

வெட்கம் தரும் வெற்றியாளர்

‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தை பின்வாங்கிய இடத்தை, ‘வெறுப்புணர்வு’ என்ற வார்த்தை கைப்பற்றிக்கொண்டது. அந்த வார்த்தை எல்லா மதங்களாலும் கண்டிக்கப்படுவது. பெரும்பாலான வெறுப்புப் பேச்சுகளும் எழுத்துகளும் மதம் சார்ந்தவையாகத்தான் இருக்கின்றன என்பதுதான் வருத்தம் தருகிறது. இனம், மொழி, சாதி அடிப்படையிலும் வெறுப்புப் பேச்சுகள் தொடர்கின்றன. அதிக வெறுப்புப் பேச்சுகள் முஸ்லீம்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றன. முஸ்லீம்கள் அணியும் உடை, உண்ணும் உணவு, வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக ‘வெறுப்பு’ வளர்க்கப்படுகிறது. முஸ்லீம்கள் தொழுகை செய்வதற்கு இடையூறுகள் விளைகின்றன அல்லது அவற்றுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ‘முஸ்லீம்கள் இந்தியா மீது படையெடுத்து ஆக்கிரமித்தவர்கள், நாட்டின் பல பகுதிகளை 600 ஆண்டுகளாக ஆண்டவர்கள், முஸ்லீம்களுக்கு உரிய இடத்தை இந்துக்கள் காட்டுவதற்கான நேரம் இது’ என்று அதை போலியாக நியாயப்படுத்துகின்றனர். அடுத்தபடியாக ‘கிறிஸ்தவர்களுக்கு எதிராக’ வெறுப்பு பாராட்டுகின்றனர். கிறிஸ்தவ தேவாலயங்களில் புகுந்து சேதம் விளைவிக்கின்றனர், கிறிஸ்தவப் பாதிரியார்களும் சுவிசேஷகர்களும் கொல்லப்படுகின்றனர், கிறிஸ்தவக் குழந்தைகள் கூட்டாக இணைந்து மதப்பாடல்களைப் பாடும்போது அடிக்கப்படுகின்றனர். இவற்றையெல்லாம், ‘இந்துக்களின் உரிமைகளை நிலைநாட்டல்’ என்ற பெயரில் செய்கின்றனர். இந்துக்களின் மேலாண்மையை இப்படி நிலைநாட்டுவது அரசமைப்புச் சட்டத்தையே மதிக்காத அருவருக்கத்தக்க செயலாகும். ‘இந்தியா’ என்ற நாட்டின் மூலபலமே மக்களின் குடியுரிமைதான்; மதமோ, இனமோ, சாதியோ, மொழியோ அல்ல. நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் டாக்டர் அப்துல் கலாமையும் அன்னை தெரசாவையும் கொண்டாடுகின்றனர், மிகச் சிலர்தான் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக வெறுப்பைத் தூண்டுகின்றனர்.

இதிலே அதிகம் வருத்தம் தரும் அம்சம் எதுவென்றால், இத்தகைய சட்டவிரோதமான வெறுப்பூட்டும் செயல்களைப் புனிதப்படுத்தவும் நியாயப்படுத்தவும் முற்படுகிறார்கள். இதில் முக்கியக் குற்றவாளிகள் அரசு, உயர் பதவியில் இருக்கும் சில தலைவர்கள், அரசின் ஆதரவு முழுமையாக இருப்பதால் துணிச்சல் பெற்றுவிட்ட சில அமைப்புகள். அவர்களுடைய வார்த்தைகள், செயல்கள் அல்லது மௌனம் காரணமாகவே வெறுப்புணர்வைப் பரப்புவோர் உற்சாகம் அடைந்து கடுமையான குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இந்தப் போக்கு தொடர்ந்தால் மக்களிடையே பிளவுகள் ஏற்படும் - தவிர்க்க முடியாதது நடந்தே தீரும்: இன, மத, மொழி அடிப்படையில் வெறுப்புச் சுவர்கள் உயர்ந்து இந்தியா பல துண்டுகளாகப் பிரிந்துவிடும்.

இந்தக் காரணங்களினாலேயே மிகுந்த வேதனையுடனும் அவமானத்துடனும் – 2025இல் அதிகம் பேசப்பட்ட பின்வரும் வார்த்தையைத் தேர்ந்தெடுக்கிறேன்: ‘வெறுப்பு’.


Next Story

Related Stories

All Rights Reserved. Copyright @2019
Share it