Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
6 நிமிட வாசிப்பு

நூற்றாண்டு கண்ட காந்தியின் ‘சத்திய சோதனை’

’சத்திய சோதனை உட்பட நவஜீவன் வெளியீடுகள்’ மூலம் கிடைக்கும் லாபத்தில் 25% தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகச் செலவிடப்பட வேண்டும் என்பது காந்தியின் உயில்.

நூற்றாண்டு கண்ட காந்தியின் ‘சத்திய சோதனை’
X

ஒரு புத்தகம் ஒரு மனிதனின் வாழ்க்கையையே அடியோடு மாற்றிவிடுமா என்று வியப்போருக்கு, காந்தியின் வாழ்க்கை மாபெரும் சான்று. தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக இருந்த காந்தி, ஜான் ரஸ்கினின் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ (Unto This Last) என்ற புத்தகத்தைப் படித்த கணமே தனது வாழ்வியல் முறையை மாற்றிக்கொண்டார். அந்த மாற்றமே பின்னாளில் ‘சர்வோதயம்’ என்ற உன்னதக் கருத்தாக்கம் உருவாக வழிவகுத்தது. ஒரு புத்தகம் ஒரு மனிதனை மாற்றியது ஆச்சரியமென்றால், ஒரு மனிதன் எழுதிய புத்தகம் கோடிக்கணக்கான மக்களின் சிந்தனையையும் வாழ்வையும் மாற்றியது ஒரு வரலாற்று அதிசயம். அந்தப் புத்தகம்தான் காந்தியின் சுயசரிதையான ‘சத்திய சோதனை’.

காந்தி இந்த நூலை எழுதத் தொடங்கி 2025ஆம் ஆண்டோடு நூறு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1925இல் நவஜீவன் இதழில் தொடராகத் தொடங்கிய பயணம், நூற்றாண்டு கடந்தும் இன்றும் உலகெங்கிலும் அதிகம் விற்பனையாகும் நூல்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. அப்படி இந்தப் புத்தகத்தில் என்னதான் இருக்கிறது? இதன் வெற்றிக்கான ரகசியம், அதன் தலைப்பிலேயே ஒளிந்திருக்கிறது. இந்தப் புத்தகத்தில் அலங்காரங்களோ தற்புகழ்ச்சியோ இல்லை; இதில் இருப்பது வெறும் ‘உண்மை’ மட்டுமே.

எழுதிய நோக்கமும் ஆன்மிகப் புரிதலும்

இந்தச் சுயசரிதையை எழுதுவதன் நோக்கம் குறித்து காந்தியே அதன் முன்னுரையில் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். "உண்மையில் சுயசரிதை எழுதுவது என்பதல்ல என் நோக்கம். நான் நடத்திவந்திருக்கும் சத்திய சோதனைகள் பலவற்றின் கதையைச் சொல்லவே விரும்புகிறேன்" என்று அவர் கூறுகிறார். அவரது பார்வையில், வாழ்க்கை என்பது தொடர்ச்சியான சோதனைகளின் களம். தன்னை மக்கள் ‘மகாத்மா’ என்று போற்றுவது அவருக்கு ஒருபோதும் மகிழ்ச்சியைத் தந்ததில்லை, மாறாக அது அவருக்குப் பெரும் மனவேதனையையே தந்தது.

அரசியல் களத்தில் அவர் ஈட்டிய வெற்றிகள் அனைத்தும் அவரது ஆன்மிகத் தேடலின் விளைச்சல்கள் என்பது அவரது திடமான நம்பிக்கை. "ஆன்மிகத் துறையில் நான் நடத்திய சோதனைகள் எனக்கு மட்டுமே தெரிந்தவை. அரசியலில் வேலை செய்வதற்கு எனக்கு இருந்து வரும் சக்தியை நான் அதனிடமிருந்தே பெற்று இருக்கிறேன்" என்று அவர் குறிப்பிடுகிறார். இதன் மூலம், ஆன்மிகமும் அரசியலும் வேறல்ல, அவை சத்தியம் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்திருப்பதை அவர் உலகுக்கு உணர்த்தினார்.

எதிர்ப்புகளும் காந்தியின் நிலைப்பாடும்

காந்தி தனது சுயசரிதையை எழுதப்போகிறார் என்ற செய்தி வெளியானபோது, அவருக்கு நெருக்கமானவர்களிடமிருந்தே சில தயக்கங்கள் எழுந்தன. குறிப்பாக வினோபா பாவே போன்ற சீடர்கள், "சுயசரிதை எழுதுவது என்பது மேற்கத்திய கலாச்சாரம்; அது நமது அகங்காரத்தை வளர்க்கும் செயல் அல்லவா?" என்று கேட்டார்கள். மேலும், "இன்று ஒரு கொள்கையை முன்வைக்கிறீர்கள், நாளை அதனைத் தவறென்று உணர்ந்து மாற்றிக்கொண்டால், உங்களைப் பின்பற்றுபவர்கள் குழப்பமடைய மாட்டார்களா?" என்ற நியாயமான கேள்வியையும் அவர்கள் முன்வைத்தனர்.

காந்தி இந்தக் கேள்விகளில் உள்ள உண்மையை ஒப்புக்கொண்டார். இருப்பினும், தனது வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். தனது தவறுகளையும், பலவீனங்களையும் பகிரங்கமாக ஒப்புக்கொள்வது மற்றவர்களுக்குத் தைரியத்தைத் தரும் என்று அவர் நம்பினார். அந்தத் துணிச்சலே அவரை இந்த நூலை எழுதத் தூண்டியது.

வரலாற்றுப் பின்னணி: சௌரி சௌரா முதல் சிறைவாசம் வரை

1922இ ல் சௌரி சௌரா வன்முறைச் சம்பவத்துக்குப் பிறகு, மக்கள் எழுச்சி உச்சத்தில் இருந்தபோதே ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தி அதிரடியாக நிறுத்தினார். இது நேரு, படேல் போன்ற தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால், "வன்முறை மூலம் பெறப்படும் சுதந்திரம் நிலைக்காது" என்பதில் காந்தி உறுதியாக இருந்தார். அகிம்சைப் போராட்டத்துக்கு மக்களைத் தயார்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த அவர், சிறைவாசத்தின்போது தனது அனுபவங்களைத் தொகுக்கத் தொடங்கினார். நிறவெறிக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் தான் நடத்திய போராட்டங்களை விளக்கி ‘தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்’ என்ற தொடரை முதலில் எழுதினார். அதன் வெற்றியைத் தொடர்ந்தே தனது சுயசரிதையை எழுதத் துணிந்தார்.

உலகளாவிய பரவலும் மொழிபெயர்ப்பு சாதனைகளும்

1925இல் குஜராத்தி மொழியில் ‘நவஜீவன்’ வார இதழில் இத்தொடர் வெளிவரத் தொடங்கியது. காந்தியின் செயலாளரான மகாதேவ் தேசாய், அதன் ஆன்மா சிதையாமல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘யங் இந்தியா’ இதழில் வெளியிட்டார். இந்த ஆங்கில மொழிபெயர்ப்புதான் உலக நாடுகளுக்கு காந்தியின் செய்தியைக் கொண்டுசேர்த்தது. அமெரிக்காவில் ‘யூனிட்டி’ இதழ் மூலம் அருட்திரு ஹோம்ஸ் இதனைப் பரப்பினார்.

தமிழில் இந்தப் புத்தகத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ரா. வெங்கடராஜுலு, சிதம்பர பாரதி, ஆண்டாள் பிரியதர்ஷினி, சுனில் கிருஷ்ணன் போன்ற பலர் மொழிபெயர்த்திருந்தாலும் ‘கல்கி’ சூட்டிய ‘சத்திய சோதனை’ என்ற பெயரே தமிழர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. 1940இல் எளிய மக்களும் கையில் ஏந்தும் வகையில் மலிவு விலையில் ஒரே புத்தகமாக இது வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில நடையைச் சென்னையைச் சேர்ந்த வி.எஸ். சீனிவாச சாஸ்திரி மெருகேற்றிக் கொடுத்தார் என்பது தமிழர்களுக்கான கூடுதல் பெருமை.

காப்புரிமையும் காந்தியின் உயிலும்

சத்திய சோதனை வெறும் வணிகரீதியான புத்தகம் அல்ல. காந்தி இதனை ஒரு சேவையாகவே கருதினார். அமெரிக்கப் பதிப்பகங்கள் இப்புத்தகத்தை வெளியிட அனுமதி கேட்டபோது, காந்தி சில கடுமையான நிபந்தனைகளை விதித்தார். இந்தியாவில் இந்தப் புத்தகம் மிகக் குறைந்த விலையில் மட்டுமே விற்கப்பட வேண்டும் என்றும், இதன் காப்புரிமை எப்போதும் ‘நவஜீவன்’ அறக்கட்டளையிடமே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அனைத்துக்கும் மேலாக, இந்தப் புத்தகம் உட்பட நவஜீவன் வெளியிடும் அனைத்து புத்தகங்களின் மூலம் கிடைக்கும் லாபத்தில் 25% தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகச் செலவிடப்பட வேண்டும் என்று அவர் உயில் எழுதி வைத்தார். அவர் மறைந்து பல தசாப்தங்கள் கடந்த பின்னரும், இன்றும் அந்த நிதியுதவி டெல்லியில் உள்ள ஹரிஜன சேவக சங்கத்துக்குத் தவறாமல் சென்றடைகிறது. தனது இறப்புக்குப் பிறகும் தனது எழுத்தின் மூலமும் எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றிவருகிறார் காந்தி.

இன்றைய தாக்கம்

இன்று காந்தியின் எழுத்துக்களுக்கான காப்புரிமை முடிந்துவிட்டதால் பல பதிப்பகங்கள் இதனை வெளியிடுகின்றன. இருப்பினும், நவஜீவன் டிரஸ்ட் இன்றும் 18க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் இதனைத் தரமாகவும் மலிவாகவும் வழங்கிவருகிறது. 2025ஆம் ஆண்டின் கணக்குப்படி, ஒரு கோடியே ஒன்பது லட்சத்துக்கும் மேலான பிரதிகள் விற்பனையாகி ‘சத்திய சோதனை’ சாதனை படைத்துள்ளது.

காந்தியின் வாழ்க்கை என்பது ஒரு மூடிய புத்தகம் அல்ல; அது ஒரு திறந்தவெளிச் சோதனைக்கூடம். தனது தவறுகளை மறைக்காமல், அவற்றை எப்படிக் கடந்தார் என்பதை விவரிக்கும் ‘சத்திய சோதனை’, இன்றைய தலைமுறை இளைஞர்களுக்குப் பெரும் உந்துசக்தியாகத் திகழ்கிறது. உண்மையை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு ஒரு சாம்ராஜ்யத்தையே பணிய வைத்த ஓர் எளிய மனிதனின் இந்த வரலாறு, இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு உலகுக்கு அறநெறியைப் போதித்துக்கொண்டே இருக்கும்.


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it