புவி வெப்பமாதலைத் தடுக்க ஒரு புதிய அறிவியல் முயற்சி!

காலநிலை மாற்றம் (Climate Change) என்பது வெறும் எச்சரிக்கை மட்டுமல்ல, அது நம் கண் முன்னே நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பேரழிவு. இந்நிலையில் புவி வெப்பமாதலைக் குறைக்க நாம் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றாலும், அது மட்டும் போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தச் சூழலில், 'சூரிய புவிசார் பொறியியல்' (Solar Geoengineering) அல்லது சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் தொழில்நுட்பம் குறித்த விவாதங்கள் உலக அளவில் சூடுபிடித்துள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகள், சவால்கள் குறித்து இங்கே காண்போம்.
சூரிய ஒளியைப் பிரதிபலித்தல் என்றால் என்ன?
புவிக்கு வரும் சூரிய ஒளியில் ஒரு சிறு பகுதியை விண்வெளிக்கே மீண்டும் திருப்பி அனுப்புவதன் மூலம் புவியின் வெப்பநிலையை விரைவாகக் குறைக்க முடியும் என்பதே இத்தொழில்நுட்பத்தின் அடிப்படை. புவியின் அடுக்கு வளிமண்டலத்தில் (Stratosphere) கந்தக டை ஆக்சைடு போன்ற நுண்துகள்களைத் தூவுவதன் மூலம் ஒரு செயற்கையான கண்ணாடியைப் போன்ற படலத்தை உருவாக்கி, சூரிய ஒளியைப் பிரதிபலிக்கச் செய்யலாம். இது எரிமலை வெடிப்பின்போது இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்வை ஒத்ததாகும்.
ஏன் இந்த ஆராய்ச்சி அவசியம்?
1965ஆம் ஆண்டிலேயே அந்நாள் அமெரிக்க அதிபர் லிண்டன் பி. ஜான்சனின் அறிவியல் ஆலோசகர்கள் இதைப் பற்றிப் பேசியுள்ளனர். தற்போதுள்ள சூழலில், வெறும் கார்பன் குறைப்பு நடவடிக்கைகள் மட்டும் புவியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் வைத்திருக்கப் போதாது என்று அறிவியலர்கள் கருதுகின்றனர்.
இது குறித்து தி கார்டியன் இதழில் வெளியான ஒரு கட்டுரையில் டகோட்டா க்ரூனர், டேனியல் விசியோனி ஆகியோர் குறிப்பிடுவது போல, நாம் இப்போது 'பூஜ்ஜிய கட்டத்தில்' (Phase Zero) இருக்கிறோம். அதாவது கணினி மாதிரிகள் மூலம் மட்டுமே இதை ஆய்வு செய்துவருகிறோம். ஆனால், நிஜ உலகில் சிறிய அளவிலான சோதனைகளைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. சுமார் 10 டன் கந்தக டை ஆக்சைடை வளிமண்டலத்தில் செலுத்தி, அது மேகங்களுடன் எவ்வாறு வினைபுரிகிறது என்பதை ஆய்வு செய்ய அவர்கள் முன்மொழிகின்றனர். இது ஒரு அனல் மின்நிலையம் ஒரு நாளில் வெளியிடும் புகையை விட மிகக் குறைவானதே.
எழும் அச்சங்களும் சவால்களும்
இந்தத் தொழில்நுட்பம் ஒரு தீர்வாகத் தெரிந்தாலும், இதில் பல ஆபத்துகளும் ஒளிந்துள்ளன:
1. மழைப்பொழிவு மாற்றம்: சூரிய ஒளியைத் தடுப்பது உலகின் சில பகுதிகளில் பருவமழையைப் பாதிக்கலாம். உதாரணமாக, வட அரைக்கோளத்தில் மட்டும் இதைச் செய்தால், ஆப்பிரிக்காவின் சாஹேல் பகுதியில் கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவியலர்கள் எச்சரிக்கின்றனர்.
2. திடீர் வெப்ப உயர்வு (Termination Shock): ஒருவேளை இந்தத் திட்டத்தைத் தொடங்கிவிட்டு, திடீரென நிறுத்தினால், அதுவரை தேங்கியிருந்த வெப்பம் ஒரேடியாகப் பெருகி புவியை மிக வேகமாக வெப்பமடையச் செய்யும்.
3. அரசியல் மற்றும் நீதி: இந்தத் தொழில்நுட்பத்தை யார் கட்டுப்படுத்துவது? வளர்ந்த நாடுகள் எடுக்கும் முடிவு வளரும் நாடுகளின் விவசாயத்தைப் பாதித்தால் அதற்கு யார் பொறுப்பு? தெற்குலக நாடுகள் இந்த விவாதங்களில் முழுமையாக ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பது மிக முக்கியமான கோரிக்கையாக உள்ளது.
இது ஒரு தற்காலிகத் தீர்வா?
அறிவியலர்கள் ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்: சூரிய புவிசார் பொறியியல் என்பது கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கு மாற்றாக அமையாது. இது ஒரு காயத்துக்ப் போடப்படும் 'பேண்ட்-எய்ட்' போன்றது மட்டுமே. இது கடல்கள் அமிலமாவதைத் தடுக்காது. புவி வெப்பமாதலின் தீவிரத்தைக் குறைத்து, நாம் மாற்று எரிசக்திக்கு மாறுவதற்குத் தேவையான கால அவகாசத்தை மட்டுமே இது வழங்கும்.
“கேள்விகளைக் கேட்பது ஆபத்தல்ல, மாறாக உண்மைகளை அறியாமல் இருப்பதுதான் ஆபத்து" என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு பெரிய நெருக்கடி வரும்போது, அவசரகதியில் தவறான முடிவுகளை எடுப்பதை விட, இப்போதே வெளிப்படையான மற்றும் முறையான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது நல்லது. 2026ஆம் ஆண்டு இந்தத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையக்கூடும். அறிவியலும் சர்வதேச ஒத்துழைப்பும் கைகோத்தால் மட்டுமே, புவியை வெப்பத்தின் பிடியிலிருந்து நாம் காப்பாற்ற முடியும்.

