தீவிரமாகிறதா பெருங்கடல்களின் வெப்பம்?

2026ஆம் ஆண்டு பிறந்து சில நாட்களிலேயே அறிவியலர்கள் உலகுக்கு ஒரு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அட்வான்சஸ் இன் அட்மாஸ்பியரிக் சயன்சஸ் (Advances in Atmospheric சயின்சஸ்) இதழில் ஜனவரி 9 அன்று வெளியான புதிய சர்வதேச ஆய்வின்படி, 2025ஆம் ஆண்டு உலகப் பெருங்கடல்கள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமான வெப்பத்தை உறிஞ்சியுள்ளன. இதில் ஒன்பதாவது ஆண்டாகத் தொடர்ந்து புதிய வெப்ப சாதனையைப் பெருங்கடல்கள் முறியடித்துள்ளன.
புவியின் காலநிலை அமைப்பில் கடல் ஒரு மாபெரும் 'வெப்பக் காப்பகமாக' (Heat Sink) செயல்படுகிறது. மனித நடவடிக்கைகளால் வெளியேற்றப்படும் கார்பன் மாசு மற்றும் பிற பசுங்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் தேக்கும் உபரி வெப்பத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை கடல்களே உறிஞ்சுகின்றன.
அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்
இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள 50க்கும் மேற்பட்ட சர்வதேச அறிவியலர்கள் வழங்கியுள்ள தரவுகள் மலைக்க வைக்கின்றன. 2025ஆம் ஆண்டில் மட்டும் கடல்கள் உறிஞ்சிய கூடுதல் வெப்பம் 23 ஜெட்டா ஜூல்ஸ் (Zetta Joules) ஆகும். இது 2024ஆம் ஆண்டின் 16 ஜெட்டா ஜூல்ஸை விட மிக அதிகம். இந்த வெப்ப ஆற்றலானது 2023ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட மொத்த மின்சாரத்தைப் போல 200 மடங்கு அதிகமானது. அல்லது ஒரு விநாடிக்கு 5 முதல் 12 ஹிரோஷிமா அணுகுண்டுகள் வெடிப்பதற்குச் சமமான வெப்ப ஆற்றல் கடலில் சேர்க்கப்படுகிறது. இதனால் உலகக் கடல்களில் சுமார் 16 சதவீதப் பகுதி, 2025இல் வரலாற்றின் உச்ச வெப்பத்தை எட்டியுள்ளன.
தீவிரமடையும் இயற்கை பேரிடர்கள்
கடல் வெப்பமடைவது என்பது வெறும் நீர் சூடாவது மட்டுமல்ல; அது வளிமண்டலத்தின் 'எரிபொருள்' நிலையமாகும். இது நேரடியாகக் கீழ்க்கண்ட பேரழிவுகளை உருவாக்குகிறது:
1. சூப்பர் புயல்கள்: கடல் நீர் வெப்பமடையும் போது, அது வளிமண்டலத்துக்கு அதிக ஈரப்பதத்தையும் ஆற்றலையும் வழங்குகிறது. இதன் விளைவாக, 2025இல் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் உருவான புயல்கள் மிக விரைவாகத் தீவிரமடைந்து, முன்னெப்போதும் இல்லாத உயிர்ச் சேதங்களை விளைவித்தன.
2. கனமழை மற்றும் வெள்ளம்: வெப்பமான காற்று அதிக நீராவியைத் தக்கவைக்கும் திறன் கொண்டது. இதனால் தென்கிழக்கு ஆசியா, மெக்சிகோ மற்றும் வடமேற்கு பசிபிக் பகுதிகளில் 2025இல் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
3. கடல் மட்ட உயர்வு: வெப்பத்தால் நீர் மூலக்கூறுகள் விரிவடையும். கடல் மட்ட உயர்வில் மூன்றில் ஒரு பங்கு இந்த விரிவடைதலால் ஏற்படுகிறது. இது கடலோர நகரங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.
கடல்சார் பல்லுயிர் வளத்துக்கு ஆபத்து
கடலில் ஏற்படும் வெப்ப அலைகள் பவளப் பாறைகளை மிக வேகமாக அழித்துவருகின்றன. 2025இல் உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகளில் சுமார் 80% கடும் வெப்ப அழுத்தத்துக்கு உள்ளாகின. பவளப் பாறைகள் அழிவது கடல்சார் உணவுச் சங்கிலியைச் சிதைப்பதுடன், மீன்பிடி தொழிலையும் பாதிக்கிறது.
மேலும், தெற்குப் பெருங்கடலில் (Southern Ocean) அண்டார்க்டிகா அருகே குளிர்கால கடல் பனி அளவு வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளது. இது புவி வெப்பமாதலை இன்னும் வேகப்படுத்தும் ஒரு ஆபத்தான நிகழ்வாகும்.
இந்தியாவுக்கான எச்சரிக்கை
இந்தியப் பெருங்கடலில் பதிவாகும் அதீத வெப்பம், இந்தியத் துணைக்கண்டத்தின் பருவமழை முறையை மாற்றியமைக்கிறது. இதனால் வழக்கத்துக்கு மாறான கனமழை அல்லது நீண்ட கால வறட்சி போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. குறிப்பாக, அரபிக்கடல் பகுதியில் உருவாகும் புயல்களின் வேகம் மற்றும் தீவிரம் அதிகரித்து வருவது இந்தியக் கடற்கரை மாநிலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி எச்சரிக்கையாகும்.
நாம் செய்ய வேண்டியது என்ன?
புதைபடிவ எரிபொருட்களின் (Fossil Fuels) பயன்பாட்டைக் குறைத்து, நிகர பூஜ்ஜியம் (Net Zero) இலக்கை எட்டினால் மட்டுமே கடல் வெப்பமடைவதைத் தடுக்க முடியும். "புவி வெப்பமாதல் என்பது உண்மையில் கடல் வெப்பமாதலே" என்று மினசோட்டா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் ஆபிரகாம் கூறுகிறார். கடல்கள் நமது பூமியின் தற்காப்பு அரணாக உள்ளன; நாம் அவற்றைச் சிதைப்பதன் மூலம் நமக்கான ஆபத்தை நாமே தேடிக்கொள்கிறோம்.
வருங்கால சந்ததியினருக்கு வாழ்வதற்குத் தகுதியான ஒரு பூமியை விட்டுச் செல்ல, இப்போதே தீவிரமான காலநிலை நடவடிக்கைகளை எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

