வரலாற்றைத் திரிக்கக் கூடாது!

வரலாறு என்பது அனைவருக்கும் பொதுவான சமூக உடைமை. யார் வேண்டுமானாலும் அதை இயற்றலாம், இயற்றியதைத் திருத்தி எழுதலாம் – அதில் இடம்பெற்றுவிட்ட கட்டுக்கதைகளைத் தீவிர ஆய்வு – வாசிப்புக்குப் பிறகு நீக்கிவிடலாம். ஐரோப்பிய கருத்தாளர்களும் அவர்களை அப்படியே பின்பற்றிய சில இந்திய வரலாற்றாசிரியர்களும் ‘இனங்களிலேயே மிகவும் உயர்வானவர்கள் ஆரியர்கள்’ என்றும், இந்தியாவில் ஊடுருவி அவர்கள்தான் இங்குள்ள மக்களையும் நிலப்பரப்பையும் ‘நாகரிகப்படுத்தினார்கள்’ என்றும் சித்தரித்தனர். அவையெல்லாம் வெறும் கட்டுக்கதைகள். இந்தோ – ஆரியர்கள் கலப்புக்கும், இடம்பெயர்வுக்கும் முன்னதாகவே இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களில் தொன்மையான குடிகள் நாகரிகத்தில் செழித்து வளர்ந்திருந்தனர்: தமிழ்நாட்டின் கீழடியிலும் வேறு பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளிலிருந்து 3,500 பொது ஆண்டுக்கு முன்பாகவே சிறப்பான நாகரிகங்கள் செழித்து வளர்ந்திருப்பது தெரிகிறது.
அமெரிக்கக் கண்டத்தை கிறிஸ்டோபர் கொலம்பஸ்தான் ‘முதல் முறையாகக் கண்டுபிடித்தார்’ என்று நாம் அனைவரும் பள்ளிக்கூட பாடத்தில் படித்திருக்கிறோம். அதன் மூலம் பல தவறான தகவல்கள் பரிமாறப்பட்டன; கொலம்பஸ் அந்த கண்டத்துக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னதாக பல நூற்றாண்டுகளாகவே அங்கு ஏராளமான ஆண்களும் பெண்களும் வாழ்ந்துவந்திருக்கின்றனர். கொலம்பஸ் காலடி வைப்பதற்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, கடலோடிகளும் – சாகசப் போர் வீரர்களுமான ‘வடக்கு வைக்கிங்குகள்’ வட அமெரிக்காவில் கால் வைத்துவிட்டனர்.
வரலாற்றுத் திரிபர்கள் அநேகம்
வரலாற்றை விருப்பப்படி திருத்தி எழுதுவதில் அரசியலர்களுக்கு அலாதி ஆசை. பாரதிய ஜனதா கட்சியும் அதன் தலைமையிலான அரசும், வந்தே மாதரம் என்ற தேசியப் பாடலை காங்கிரஸ் கட்சி சிதைத்துவிட்டதாகவும், எனவே அதன் 150வது ஆண்டில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத் தொடரில் ‘முழு நாள் விவாதம்’ நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. வந்தே மாதரம் பாடல் தொடர்பாக ‘தங்கள் தரப்பு வரலாற்றை’ ஆளும் கூட்டணி உறுப்பினர்கள் அவையில் பதிவு செய்தனர். அது ‘திரிக்கப்பட்ட வரலாறு’ அல்லது ‘திரிப்பாறு’ (Distory). அப்படித் திரித்தவர்களில் முதன்மையானவர் பிரதமர் நரேந்திர மோடி. அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்:
“1857 சுதந்திரப் போராட்டத்துக்குப் பிறகு (சிப்பாய் புரட்சி) பிரிட்டிஷ் பேரரசு இந்தியர்கள் மீது பல்வேறு அநீதிகளை இழைத்து, நெருக்குதல்களைத் திணித்தது… அந்த அடக்குமுறைகளுக்கு எதிராக கொதித்தெழுந்த பங்கிம் சந்திர சட்டர்ஜி மிகவும் ஆவேசத்துடன் இயற்றியதுதான் ‘வந்தே மாதரம்’ என்ற பாடல்…
“… முகம்மது அலி ஜின்னா ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு எதிராக லக்னௌ நகரிலிருந்து 1937 அக்டோபர் 15-ல் ஆட்சேபக் குரல் எழுப்பினார். நாட்டு மக்களை எழுச்சியுறச் செய்யும் அந்த தேச பக்திப் பாடலுக்கு எதிராக, அடிப்படையற்ற வாதங்களை வைத்த முஸ்லிம் லீக் கட்சிக்குப் பதிலடி தராமல் – அவற்றைக் கண்டிக்காமல், ‘வந்தே மாதரம்’ மீது தங்களுக்குள்ள ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தாமல், ‘அந்தப் பாடல் சரிதானா?’ என்று காங்கிரஸ் தலைவரான ஜவாஹர்லால் நேருவே கேள்வி கேட்டார். ஜின்னா எதிர்ப்பு தெரிவித்த ஐந்து நாள்களுக்குப் பிறகு 1937 அக்டோபர் 20-ல் ஜின்னாவின் எதிர்ப்பில் சில அம்சங்களோடு ஒத்துப்போவதாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார் நேரு…
“…(நேரு கூறினார்) வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்ட பின்னணியை வாசித்தேன். இந்தப் பின்னணிக்கு எதிராக முஸ்லீம்கள் கிளர்ந்தெழுவார்கள் என்றே நினைக்கிறேன்.”
“… துரதிர்ஷ்டவசமாக, 1937 அக்டோபர் 26-ல், வந்தே மாதரம் பாடல் தொடர்பாக முஸ்லிம்களின் எதிர்ப்புக்குத் தலைவணங்கி சமரசம் செய்துகொண்டது காங்கிரஸ் கட்சி, அந்தப் பாடலின் சில பகுதிகளை மட்டும் வைத்துக் கொண்டது… முஸ்லிம் லீகின் அழுத்தத்துக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி (ஐஎன்சி) பணிந்ததற்கும், ஒரு பிரிவினரை மட்டும் திருப்திப்படுத்தும் அரசியல் உத்திகளையும் ஏற்றதற்கும் வரலாறு சாட்சியாக இருக்கிறது… இந்திய தேசிய காங்கிரஸ், முஸ்லிம் லீக் – மாவோயிஸ்ட் காங்கிரஸாகிவிட்டது.”
‘நாட்டு மக்களில் ஒரு சாராரைத் திருப்திப்படுத்த தேசியப் பாடலை இரண்டாகப் பிரித்த செயலானது, பிறகு நாட்டையே இரண்டாகப் பிளப்பதற்கான சமரச அரசியலாகிவிட்டது’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். இது மிகவும் அபத்தமான கற்பனை, வரலாற்றைத் திரிப்பவர்கள் கூட இந்தப் பேச்சைக்கேட்டு கூசிக் குறுகுவார்கள்.
குறு வரலாறு:
இந்தப் பாடல் தொடர்பான நிகழ்வுகள் வருமாறு:
1. 1870: வந்தே மாதரம் பாடலின் சில பத்திகளை மட்டும் பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றினார், அது அச்சாகவில்லை.
2. 1881: அந்தப் பாடலில் மேலும் சில பத்திகள் சேர்க்கப்பட்டு ‘ஆனந்தமடம்’ என்ற வங்கமொழி நாவலில் சேர்க்கப்பட்டது.
3. 1905: பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான, தேச விடுதலைப் போராட்ட ஊர்வலங்களில் கவி ரவீந்திரநாத் தாகூர் அந்தப் பாடலைப் பாடினார், ‘வந்தே மாதரம்’ என்ற முதல் வரி மட்டும் தேச பக்தர்களின் முக்கிய அரசியல் முழக்கமாகியது.
4. 1908: தமிழ் சுதேசிக் கவி சுப்பிரமணிய பாரதியார், தான் எழுதிய ‘எந்தையும் தாயும்’ என்று தொடங்கும் பாடலில் வந்தே மாதரத்தைச் சேர்த்து அதற்கு சாகா வரம் தந்துவிட்டார். நாட்டின் ஒவ்வொரு சுதந்திரப் போராட்ட வீரரின் உதடுகளும் ‘வந்தே மாதரம்’ என்பதை அடிக்கடி முழங்கின.
5. 1930: மதவாத அரசியல் தலைதூக்கத் தொடங்கியது, அந்தப் பாடல் சர்ச்சைக்குரியதானது.
6. 28-09-1937: இந்தப் பாடலுக்கு (முஸ்லிம்களிடையே) பலத்த எதிர்ப்பு அதிகரித்து வருவதால் அச்சம் தெரிவித்து, இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி விவாதித்து புதிய கொள்கையை உருவாக்க வேண்டும் என்று சர்தார் படேலுக்குக் கடிதம் எழுதினார் பாபு ராஜேந்திர பிரசாத். காங்கிரஸ் செயல்குழு கூட்டத்துக்கு (காரிய கமிட்டி) முன்னால், இந்த விவகாரத்தில் ஆலோசனை வழங்க வேண்டும் என்று தாகூரிடம் விண்ணப்பித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
7. காங்கிரஸ் செயல்குழுவில் இந்தப் பாடல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஜவாஹர்லால் நேருவுக்குக் கடிதம் எழுதினார் நேதாஜி.
8. 20-10-1937: வகுப்புவாதிகள் (மதவாதிகள்) இந்தப் பிரச்சினையை உருவாக்கியிருக்கிறார்கள், இது குறித்து ரவீரந்திரநாத் தாகூருடனும் மற்றவர்களுடனும் விவாதிக்கிறேன் என்று போஸுக்கு பதில் எழுதினார் நேரு.
9. 26-10-1937: பாடலின் முதல் பகுதியே உணர்வை முழுதாகப் பிரதிபலிக்கிறது, அது எந்த மதத்தவரையும் புண்படுத்தாது என்று நேருவுக்கு கடிதத்தில் தெரிவித்தார் தாகூர்.
10. 28-10-1937: ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரு பத்திகளை தேசியப் பாடலாக ஏற்றுக்கொண்டது காங்கிரஸ் செயல்குழு (காரியக் கமிட்டி).
11. ஜனவரி 1939: இந்த முடிவை காங்கிரஸ் செயற்குழு, வார்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் மகாத்மா காந்தி முன்னிலையில் மீண்டும் வலியுறுத்தியது.
ஒரு பாடலின் சில பத்திகளையோ, ஒரு பகுதியை மட்டுமோ தேசியப் பாடலாக ஏற்றுக்கொள்வது வழக்கத்துக்கு மாறான செயல் அல்ல. தேசிய கீதமாக பாடப்படும் ‘ஜன கண மன’ கூட ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய மிகப் பெரிய பாடலில் இடம் பெற்றுள்ள ஒரு பகுதிதான். பல நாடுகளின் தேசிய கீதங்களும் கூட இப்படி பெரிய பாடலிலிருந்து சுருக்கப்பட்ட வடிவம்தான்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பாரதிய ஜனதாவின் மூல வடிவமான ஆர்எஸ்எஸ் பங்கு பெற்றதில்லை என்பதையும், ‘வந்தே மாதரம்’ பாடல் மக்களிடையே பரவ அது எதையும் செய்யவில்லை என்பதையும் இந்த விவாதத்தின்போது மிகவும் கவனத்துடன் தவிர்த்துவிட்டார் மோடி. ஆர்எஸ்எஸ் இயக்கம் தனது தலைமையகத்தில் இந்திய தேசியக் கொடியை 52 ஆண்டுகளாக ஏற்றியதும் இல்லை.
தவறான முன்னுரிமைகள்
1937 முதல் பாடப்படும் இரண்டு பத்திகள் மட்டுமே உள்ள ‘வந்தே மாதரம்’ குறித்து எவருமே சர்ச்சை கிளப்பியதில்லை, இப்போது மட்டும் ஏன்? மக்களை அன்றாடம் பாதித்துவரும் பிரச்சினைகள் குறித்தும், எதிர்காலத்தில் நாடு அடைய விரும்பும் லட்சியங்கள் குறித்தும்தான் நாடாளுமன்றமும் அரசும் கவலைப்பட்டு அக்கறையுடன் விவாதிக்க வேண்டும்.
‘ரோபாட்டிக்ஸ்’ என்றழைக்கப்படும் இயந்திர மனிதன் மூலமான தொழில் உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, தன்னை இயக்குபவரின் ரசனை - தேவைக்கேற்ப தானாகவே செயல்களைச் செய்யும் ‘மெஷின் லேர்னிங்’ என்ற செயல்முறை, விண்வெளி ஆய்வில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், காலநிலை மாற்றத்தால் பெருங்கடல்களின் மாறும் தன்மை – அவை தொடர்பான தரவுகள், இவையெல்லாம் எப்படி மனிதர்களின் வாழ்க்கையை மாற்றும் என்று சீன நாட்டின் அரசமைப்புச் சட்ட அமைப்புகள் விவாதிக்கின்றன. இந்திய நாடாளுமன்றம் தன் பங்குக்கு, நாட்டில் இப்போது நிலவும் வறுமை, கல்வித்துறை, சுகாதாரத்துறைத் தேவைகள், அடித்தளக் கட்டமைப்பின் நிலை, தொழிலுற்பத்தி, அனைவருக்கும் தேவையான பொருள்களும் சேவைகளும் கிடைப்பது, நிதிநிலையில் நிலையான தன்மை, வெளிவர்த்தகப் பற்றாக்குறை, காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுவரும் விளைவுகள் போன்றவை குறித்து விவாதிக்க வேண்டும். ஏற்றத்தாழ்வு, மக்கள்தொகைப் பெருக்கம், வேலை – வாழ்வாதாரத்துக்கு உள்நாட்டிலேயே கோடிக்கணக்கானவர்கள் மேற்கொள்ளும் குடிப்பெயர்வு, மதச்சார்பின்மை, அறிவியல் – தொழில்நுட்பம் மற்றும் நமக்குத் தெரியாத பல பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும்.
வரலாற்றைத் திரிப்பது தவறானது; எதிர்காலம் குறித்த அக்கறை இல்லாமல் தொடர்ந்து இப்படி அலட்சியப்படுத்துவது மன்னிக்க முடியாத குற்றம்.


