சிந்தை: புதிய தலைமுறைக்கான சிந்தனைவெளி

சமூகத்தின் தேவையே புதிய ஊடகங்களின் பிறப்புக்கு வழிவகுக்கிறது. இன்று ஓர் ஊடகத்தின் பிறப்பானது, வெறும் தகவல் தளத்தின் தொடக்கம் மட்டுமல்ல; அது ஒரு புதிய உலகப் பார்வையின் பிரகடனம்.
உலகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்டும், அதே தொழில்நுட்பத்தால் பிளவுற்றும் கிடக்கும் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையில் ‘சிந்தை’ காலடி எடுத்து வைக்கிறது. எல்லோரையும் ஒருங்கிணைக்கும், மேம்பட்ட வாழ்வைச் சிந்திக்கும் தளமாக ‘சிந்தை’ செயல்படும். அறிவியல் முதல் கலை வரை ‘சிந்தை’யின் பார்வை விரிந்தாலும், அரசியல் - ஆட்சி நிர்வாகத்தின் மீதே ‘சிந்தை’யின் கவனம் கூர்ந்திருக்கும்.
இன்றைய ‘அதீத தகவல் பெருக்க யுக’த்தில், ஒரு கருத்திதழ் வெறும் தகவல்களை வழங்குவதோடு நின்றுவிட முடியாது. தரவுகளின் அடிப்படையிலான தர்க்கரீதியான பகுப்பாய்வை முன்வைப்பது கடமை. காட்சி ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில், வாசிப்பு ஒரு சவாலான கலைப் பயிற்சியாக மாறியுள்ளது. இந்தத் தலைமுறையின் தேவையை ‘சிந்தை’ உணர்கிறது.
கருத்துகளைப் பல்லாயிரம் சொற்களில் விவரிப்பதைவிட, கூர்மையான சொல்லாடல்களில் தரவுகளின் வழியே கடத்தும் புதிய நடைக்கு ‘சிந்தை’ களம் அமைக்கிறது. அதேசமயம், நிதான வாசிப்புக்கான விரிந்த உரையாடலுக்கான இடமாகவும், வாசிப்பை வளர்த்தெடுக்கும் தளமாகவும் ‘சிந்தை’ இருக்கும்.
உலகளாவிய தமிழ்ச் சமூகத்தின் அறிவார்ந்த விவாதங்களைத் தமிழ் வாசகர்களுக்குப் புதிய தலைமுறைக்கான மொழியில் கொண்டுசேர்ப்பதும், தமிழின் செழுமையான மரபுகளை உலகத் தளத்தில் முன்னிறுத்துவதும் ‘சிந்தை’யின் இலக்கு. பிரச்சினைகளை மட்டும் அல்லாது, யோசனைகளை அதிகம் பேச வேண்டிய காலகட்டம் இது. சமூகத்தின் எல்லா குரல்களுக்கும் இடம் அளிக்கும் தளமாகச் செயல்பட்டாலும் ஜனநாயகம், சமூக நீதி, நல்லிணக்கம், தாராளம், கூட்டாட்சிக்கான தளமே ‘சிந்தை’யின் தளமாக இருக்கும்; மக்கள் நலனே ‘சிந்தை’யை வழிநடத்தும் ஒரே அறக்கோட்பாடாக திகழும்!


