இன்றைய உலகுக்கு காந்தி ஏன் தேவை?

பிளவுபட்டுக் கிடக்கும் 21ஆம் நூற்றாண்டுக்கு காந்தியின் தேவை முன்பைவிட அதிகரித்திருக்கிறது

By :  ஆசை
Update: 2026-01-29 23:30 GMT

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் நிகழ்ந்த இரண்டு உலகப் போர்களின் காலகட்டத்திலும் வாழ்ந்தவர் காந்தி. இப்போது இருபத்தியோராம் நூற்றாண்டின் கால் நூற்றாண்டை நிறைவுசெய்திருக்கிறோம். தற்போது காந்தி இருந்திருந்தால் அவருக்கு எந்த விதமான உணர்வு ஏற்பட்டிருக்கும் என்று யோசிக்கத் தோன்றுகிறது. நிச்சயமாக ஒருவித முன்நிகழ்வுணர்வுதான் (Dejavu) - அதாவது ஏற்கெனவே நிகழ்ந்ததையே மறுபடியும் பார்க்கிறோம் என்ற உணர்வு – அவருக்கு ஏற்படும் என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு இன்றைய உலகம் மறைமுகமான உலகப் போர்களைச் சந்தித்துவருகிறது. அந்த அளவுக்கு இன்றைய உலகம் பிளவுபட்டுக் கிடக்கிறது.

21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த ஆப்கானிஸ்தான் போர் (2001–2021), ஈராக் போர் (2003–2011) ஆகியவை மத்திய கிழக்கின் தலையெழுத்தையே மாற்றி அமைத்தன. அதனைத் தொடர்ந்து 2011இல் தொடங்கிய சிரிய உள்நாட்டுப் போர், சுமார் 6 லட்சம் மக்களின் உயிர்களைக் குடித்ததோடு, லட்சக்கணக்கானவர்களை அகதிகளாக மாற்றியது. சமீபத்திய ஆண்டுகளில் யேமன் உள்நாட்டுப் போர், ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியப் போர், உலகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல், உக்ரைன்-ரஷ்யப் போர் போன்றவை நவீன காலத்தின் கொடிய போர்களாக உருவெடுத்துள்ளன. இவை தவிர சூடான், காங்கோ குடியரசில் தொடரும் உள்நாட்டுச் சண்டைகளும் மானுடத்துக்கு பெரும் சவாலாகவே உள்ளன. நமக்கு வெகு அருகே இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரின்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியுமா?

புள்ளிவிவரங்களின்படி, கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் போர், நேரடி வன்முறை காரணமாக உலகம் முழுவதும் சுமார் 30 லட்சம் முதல் 50 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களில் சுமார் 90 சதவீதத்தினர் அப்பாவிப் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும். போர்க்களத்தில் நேரடியாக மடிந்தவர்களைக் காட்டிலும், போரினால் ஏற்பட்ட பஞ்சம், நோய்த்தொற்று, மருத்துவக் குறைபாடுகளால் மறைமுகமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தின் 'போரின் விலைகள்' ஆய்வுத் திட்டத்தின்படி, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிந்தைய போர்களில் மட்டும் சுமார் 45 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்கள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல; இவை ஒவ்வொன்றும் சிதைந்துபோன ஒரு உலகின் சாட்சியங்கள்.

போரின் காரணமாகத் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, தஞ்சம் தேடி அலைக்கும் அகதிகளின் எண்ணிக்கை முன்னெப்போதையும் விட இன்று அதிகரித்துள்ளது. ‘கண்ணுக்குக் கண் என்ற கொள்கை உலகையே குருடாக்கிவிடும்’ என்ற காந்தியின் புகழ்பெற்ற கூற்று, இன்றைய ராணுவ மோதல்களுக்கு மிகச் சரியான எச்சரிக்கையாகும். நவீனப் போர்கள் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதிலாக, பழிவாங்கும் உணர்ச்சியை அடுத்தடுத்த தலைமுறைகளிடம் கடத்துகின்றன. வன்முறை என்பது ஒருபோதும் நிலையான அமைதியைக் கொண்டுவராது என்பதற்கு இன்றைய மத்திய கிழக்கு நாடுகளின் சூழலே சாட்சியாகும்.

தேசியம்: இரு வேறு அணுகுமுறைகள்

தற்போது உலகம் முழுவதும் தீவிர தேசியம் எழுச்சி பெற்றுள்ளது. டொனால்ட் ட்ரம்ப், விளாடிமிர் புடின் போன்ற தலைவர்களின் அரசியல் அணுகுமுறைகள், தங்கள் தேசத்தின் பெருமையை மீட்டெடுப்பதாகக் கூறிக்கொண்டு, குறுகிய கால நலன்களை மட்டுமே முன்னிறுத்துகின்றன. இது பெரும்பாலும் மற்ற நாடுகளையோ அல்லது மாற்றுக் கருத்துடையவர்களையோ எதிரிகளாகச் சித்தரிப்பதன் மூலம் கட்டமைக்கப்படுகிறது. ‘எங்கள் நாடு முதலில்’ (Our Country First) என்ற இத்தகைய முழக்கங்கள், பன்மைத்தன்மை கொண்ட உலகுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன.

இதற்கு நேர்மாறாக, காந்தியின் தேசியம் மற்றவர்களை அரவணைப்பதாக இருந்தது. காந்தி நாட்டை நேசித்தார், ஆனால் அந்த நேசம் பிற நாடுகளை வெறுப்பதன் மூலம் உருவாகவில்லை. ‘எனது தேசப்பற்று என்பது மற்ற நாடுகளைச் சுரண்டுவதோ அல்லது துன்புறுத்துவதோ அல்ல; அது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனை உள்ளடக்கியது’ என்று அவர் தெளிவாகக் குறிப்பிட்டார். இன்றைய நவீன தேசியம் மக்களைப் பிரிக்க சுவர்களை எழுப்புகிறது; ஆனால் காந்தியின் தேசியம் நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் வலியுறுத்தியது.

சிறுபான்மையினரும் காந்தியும்

நவீன தேசியத்தின் ஒரு முக்கியப் போக்கு, பெரும்பான்மைவாதத்தை முன்னிறுத்துவதாகும். இதனால் பல நாடுகளில் சிறுபான்மை மக்கள் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுகிறார்கள். அவர்கள் தேசத்தின் அங்கமாகப் பார்க்கப்படாமல், தேசத்தின் வளர்ச்சிக்குத் தடையாகவோ அந்நியர்களாகவோ சித்தரிக்கப்படும் போக்கு அதிகரித்துள்ளது.

இந்த விஷயத்தில் காந்தியின் நிலைப்பாடு மிக உறுதியானது. ‘ஒரு நாடு தனது சிறுபான்மையினரை நடத்தும் விதத்தைக் கொண்டே அந்த நாட்டின் தரம் அளவிடப்படுகிறது’ என்று அவர் கூறினார். இந்தியா சுதந்திரம் பெற்றபோது நிலவிய மதக் கலவரங்களின்போது, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர் தனது உயிரையே பணையம் வைத்துப் போராடினார். ஒரு ஜனநாயக நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படாவிட்டால், அது உண்மையான சுதந்திரம் அல்ல என்பது அவரது கருத்து.

காந்தியின் தேசியம் என்பது ஒரு குறிப்பிட்ட மதம், மொழி அல்லது இனத்துக்கு உட்பட்டது அல்ல; அது அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஒரு பரந்த தத்துவமாகும். ஐரோப்பிய நாடுகளில் நிலவிய 'ஒரே இனம், ஒரே மொழி' என்ற குறுகிய தேசியவாதக் கொள்கையை அவர் நிராகரித்தார். இந்தியாவைப் பொறுத்தவரை, பல்வேறு மதங்களும் கலாச்சாரங்களும் இணைந்து வாழும் ஒரு பன்முகத் தன்மையே அதன் பலம் என்று அவர் நம்பினார். ‘இந்தியா என்பது ஒரு மதம் அல்லது ஒரு சமூகத்துக்குச் சொந்தமானதல்ல; அது இங்கு வாழும் ஒவ்வொரு குடிநபருக்கும் சமமான உரிமைகளை வழங்கும் ஒரு தேசம்’ என்பதே அவரது உள்ளடக்கிய தேசியத்தின் அடிப்படை.

பெரும்பான்மையினரின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப காந்தி கையாண்ட மிகச் சிறந்த ஆயுதம் 'தன்னையே வருத்திக்கொள்ளுதல்'; அதன் மூலம் தார்மீக அழுத்தத்தை உருவாக்குதல் ஆகும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம், 1947 செப்டம்பரில் கொல்கத்தாவில் நிகழ்ந்த வகுப்புவாதக் கலவரத்தின்போது அவர் மேற்கொண்ட சாகும் வரையிலான உண்ணாவிரதம்.

பெரும்பான்மையினரின் மனசாட்சியை நோக்கி…

இந்திய சுதந்திரத்தின்போது கொல்கத்தா ரத்தக் களரியாக மாறியிருந்த நிலையில், காந்தி அமைதியை நிலைநாட்ட உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். ஒரு பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர், சிறுபான்மையினரின் உயிருக்காகத் தனது உயிரையே பணயம் வைப்பதைக் கண்டபோது, கலவரத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் வன்முறை உணர்வு மறைந்து தார்மீகக் குற்ற உணர்வு மேலோங்கியது. இதன் விளைவாக, கலவரக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து காந்தியின் காலடியில் ஆயுதங்களை ஒப்படைத்தனர். அதிகாரத்தாலோ அல்லது சட்டத்தாலோ செய்ய முடியாத மாற்றத்தை, பெரும்பான்மைச் சமூகத்தின் ஆழ்மனசாட்சியைத் தொடுவதன் மூலம் காந்தி நிகழ்த்திக் காட்டினார். இதன் மூலம், சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்பது பெரும்பான்மையினரின் 'கடமை' என்பதை அவர் சொல்லாமல் புரியவைத்தார்.

இன்றைய உலகின் பெரும் பிரச்சினைகளுள் ஒன்று காந்திபோல பெரும்பான்மையினரின் மனசாட்சியை நோக்கிப் பேசும் வெகுஜனத் தலைவர்கள் இல்லாதது. இஸ்ரேலில் ஒரு காந்தி, ரஷ்யாவில் ஒரு காந்தி, அமெரிக்காவில் ஒரு காந்தி, இன்றைய இந்தியாவில் ஒரு காந்தி, இலங்கையில் ஒரு காந்தி, ஈரானில் ஒரு காந்தி என்று எங்கெல்லாம் உலகம் சிதறுண்டு கிடக்கிறதோ, எங்கெல்லாம் பெரும்பான்மைவாதம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் ஒரு காந்தி இன்று இருந்திருந்தால் நிச்சயம் இப்போது இருப்பதைவிட மேம்பட்ட ஒரு உலகத்தை நாம் கண்டிருப்போம்.

நவீனத் தலைவர்கள் அதிகாரத்தைப் பலப்படுத்துவதிலும், ஆயுத உற்பத்தியிலும் கவனம் செலுத்தும்போது, காந்தி தனிமனித ஒழுக்கத்தையும் நேர்மையையும் மிதத்தையும் வலியுறுத்தினார். இன்று உலகம் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பாதிப்பு முதல் போர் அபாயங்கள் வரை அனைத்துக்கும் மனிதர்களின் பேராசையே காரணமாக உள்ளது. சர்வதேசத் தலைவர்களான மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றோர் காந்தியின் வழியைப் பின்பற்றியே சமூக மாற்றங்களை உருவாக்கினர். இது காந்தியக் கொள்கைகள் நடைமுறைக்குச் சாத்தியமானவை என்பதற்கான சான்றாகும்.

அணு ஆயுதங்களும், அதிநவீன ஏவுகணைகளும் அமைதியைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை இன்று பொய்த்துப் போய்விட்டது. மாறாக, அவை உலகைப் பயத்திலேயே வைத்திருக்கின்றன. இந்தச் சூழலில், வெறுப்பு அரசியலைக் கைவிட்டு, சக மனிதர்களை நேசிக்கும் காந்திய வழிமுறை மட்டுமே அழிவைத் தடுக்க முடியும். குறுகிய கால அரசியல் ஆதாயங்களுக்காக மக்களைப் பிரிக்கும் தற்காலச் சூழலில், காந்தி காட்டிய சகிப்புத்தன்மை, உள்ளடக்கிய தேசியம் ஆகியவை ஒரு ஆரோக்கியமான உலகைக் கட்டமைக்க மிக முக்கியமானவை. மகாத்மா காந்தி ஒரு நபரல்ல, அவர் காலாவதியாகாத ஒரு தத்துவம்.


(ஜனவரி 30: மகாத்மா காந்தி நினைவுநாள்)

Tags:    

Similar News