உலகை அதிரச் செய்யும் எப்ஸ்டீன் ஆவணங்கள்… பின்னணி என்ன?

பாலியல் தீவு, சிறுமிகள் கடத்தல், பிரபலங்களுக்கு விருந்து... ட்ரம்ப், மோடி முதல் பில் கேட்ஸ் வரை அடிபடும் பெயர்கள்...

Update: 2026-02-03 23:30 GMT

அமெரிக்காவின் நிழல் உலகக் கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019இல் ஒரு சிறை அறையில் சடலமாக மீட்கப்பட்டபோது அவருடன் சேர்ந்து பல ரகசியங்களும் புதைக்கப்பட்டதாகவே கருதப்பட்டது.

ஆனால், இப்போது அமெரிக்க நீதிமன்ற உத்தரவால் பொதுவெளியில் கசிந்துள்ள 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், உலகின் பல செல்வாக்குமிக்க நபர்களின் தூக்கத்தைக் கலைத்துள்ளன.

யார் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்?

சர்வதேச அளவில் 'மர்ம மனிதராகப்' பார்க்கப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன், ஒரு சாதாரண கணித ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னாளில் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் நிதிச் சந்தையின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தவர்.

இவர் வெறும் கோடீஸ்வரர் மட்டுமல்ல, உலகின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்களுடனான நட்பை முதலீடாகக் கொண்டு தனது சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்.

இவரிடம் இருந்த அபரிமிதமான செல்வாக்கு மற்றும் 'நிதி ஆலோசகர்' என்ற அடையாளம், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முதல் பிரிட்டனின் பக்கிங்ஹாம் அரண்மனை வரை இவருக்கு ஒரு சிவப்புக் கம்பள வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

பாலியல் தீவு... லோலிட்டா விமானம்...

எப்ஸ்டீன் தனது செல்வாக்கை வெறும் பணத்துக்காக மட்டும் பயன்படுத்தவில்லை; உலகையே உலுக்கிய ஒரு பாலியல் குற்றப் பின்னணி அவருக்கு இருந்தது. அமெரிக்காவின் விர்ஜின் தீவுகளில் 'லிட்டில் செயின்ட் ஜேம்ஸ்' என்ற தனித் தீவையே இவர் விலைக்கு வாங்கியிருந்தார். அந்தத் தீவு பின்னாளில் ‘பாலியல் தீவு’ என்றே அழைக்கப்பட்டது.

உலகெங்கிலும் இருந்து நூற்றுக்கணக்கான சிறுமிகளை நயவஞ்சகமாக அழைத்து வந்து, அந்தத் தீவிலும், நியூயார்க்கில் உள்ள தனது ஆடம்பர மாளிகைகளிலும் சிறைபிடித்து வைத்திருந்தார்.

'லோலிட்டா எக்ஸ்பிரஸ்' என்று அழைக்கப்பட்ட தனது சொந்த ஜெட் விமானம் மூலம் இந்தப் பெண்களை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குக் கடத்திச் சென்றார்.

அங்கு வரும் உலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு இந்தச் சிறுமிகளைக் கட்டாயப்படுத்தி பாலியல்ரீதியாகப் பயன்படுத்தியது இவர் செய்த மிகக் கொடூரமான குற்றமாகப் பார்க்கப்படுகிறது.

எப்ஸ்டீன் எப்படி சிக்கினார்?

எப்ஸ்டீனின் கொடூரமான இருண்ட பக்கம் 2005ஆம் ஆண்டில் மெல்ல வெளிச்சத்துக்கு வந்தது. 14 வயதுச் சிறுமி ஒருவர் அளித்த புகாரிலிருந்து இவரது வீழ்ச்சி தொடங்கியது. இருப்பினும், தனது அபரிமிதமான பண பலத்தாலும், உயர் மட்டத் தொடர்புகளாலும் பல ஆண்டுகள் சட்டத்தின் பிடியிலிருந்து இவர் நழுவிவந்தார்.

இறுதியில் 2019ஆம் ஆண்டு ஜூலை நியூஜெர்சியில் உள்ள விமான நிலையத்தில் அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையினரால் எப்ஸ்டீன் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட சில வாரங்களிலேயே இவர் சிறையில் மர்மான முறையில் உயிரிழந்தது, இந்த வழக்கைப் பெரிய மர்மக் கதையாக மாற்றியது.

லட்சக்கணக்கான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டது எப்படி?

எப்ஸ்டீன் உயிரிழந்தாலும், அமெரிக்கப் புலனாய்வாளர்கள் விசாரணையைக் கைவிடவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் எப்ஸ்டீன் மற்றும் அவரது கூட்டாளி கிஸ்லேன் மேக்ஸ்வெல் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள், டைரிகள், தனி விமானத்தின் பயணப் பதிவுகள் மற்றும் 300 ஜிபி அளவிலான டிஜிட்டல் தரவுகள் சேகரிக்கப்பட்டன.

எப்ஸ்டீனின் மின்னஞ்சல்கள், தொலைபேசி உரையாடல்கள் மற்றும் அவரது மாளிகைகளில் பணிபுரிந்த ஊழியர்களின் வாக்குமூலங்கள் எனப் பிரம்மாண்டமான ஒரு தரவுத்தளம் உருவாக்கப்பட்டது. இவையே இன்று 'எப்ஸ்டீன் கோப்புகள்' என்று அழைக்கப்படுகின்றன.

இந்த ஆவணங்களை ரகசியமாக வைக்க எப்ஸ்டீனின் கூட்டாளிகள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மைச் சட்டம்' (Epstein Files Transparency Act) மூலம், 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் அனைத்து ஆவணங்களையும் பொதுவெளியில் விட உத்தரவிடப்பட்டது. இதன் விளைவாகவே, தற்போது பல லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன.

உலகப் பிரபலங்களும் இந்தியத் தொடர்பும்

இந்த ஆவணங்களின் பக்கங்களைப் புரட்டினால், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் பில் கிளின்டன் ஆகியோரின் பெயர்கள் மீண்டும் மீண்டும் அடிபடுகின்றன. இது தவிர, பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஆண்ட்ரூ, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுத் பராக், தொழில்நுட்ப ஜாம்பவான்கள் எலான் மஸ்க்,  பில் கேட்ஸ் என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங், இசை மன்னர் மைக்கேல் ஜாக்சன், ஹாலிவுட் நட்சத்திரங்கள் லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் பிளான்செட் ஆகியோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சர்ச்சை இப்போது இந்தியக் கரைகளையும் வந்து எட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் 2017 இஸ்ரேல் பயணம் குறித்த சில குறிப்புகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. மேலும், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் இந்தியத் தொழிலதிபர் அனில் அம்பானி போன்றோரின் பெயர்கள் தொடர்புப் பட்டியலில் இருப்பதையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆதாரமற்ற தகவல் என்றும் வதந்தி என்றும் திட்டவட்டமாகத் மறுத்துள்ளது.

அதிகாரம், பணம், செல்வாக்கு

இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் எல்லோருமே குற்றவாளிகள் அல்ல என்கின்றனர் புலனாய்வாளர்கள்; ஆனால் எப்ஸ்டீன் போன்ற ஒரு கொடூரக் குற்றவாளியின் சமூக வட்டத்தில் இத்தனை பெரும் புள்ளிகள் உலவியதுதான் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News