உடலுக்குள் ஒரு கடிகாரம்!

தூக்கம், விழிப்பு, உணவு செரிமானம், ஹார்மோன் சுரப்பு, உடலின் வெப்பம் போன்ற முக்கியமான பல செயல்பாடுகளை உடலியக்கக் கடிகாரம்தான் நாள் முழுவதும் கட்டுப்படுத்துகிறது

Update: 2026-02-23 23:30 GMT

இசைக் கச்சேரிகளில் இசைக் கலைஞர்களைப் பார்த்து ஓர் இசைநடத்துநர் மேடையில் நின்றுகொண்டிருப்பார். பாடலின்போது எந்த இசைக்கருவியை எந்த நேரத்தில் எவ்வளவு நேரம் இயக்க வேண்டும் என்பதை அவர்தான் கை அசைவுகளின் மூலம் வழிநடத்துவார். கவனித்திருக்கிறீர்களா?

அதுபோல தூக்கம் எனும் இசைக் கச்சேரிக்கும் ஓர் இசைநடத்துநர் இருக்கிறார். அவர் பெயர் ‘உடலியக்கக் கடிகாரம்’(Circadian Rhythm). நாம் தினமும் எப்போது தூங்க வேண்டும் எப்போது விழித்திருக்க வேண்டும் என்று நம்மை வழிநடத்துகிற ஓர் உடலியக்க அமைப்பின் பெயர் இது. தூக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் முதலில் இந்தக் கடிகாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தனித்துவமான கடிகாரம்!

நாம் ஒவ்வொருவரும் நாம் விரும்பிய விதத்தில் பல மாடல்களில் கைக்கடிகாரங்களைக் கட்டிக்கொள்கிறோம் அல்லவா? அதுபோல நாம் ஒவ்வொருவரும் ஒரு தனித்துவமான உடலியக்கக் கடிகாரத்தை நம் உடலுக்குள் வைத்திருக்கிறோம். இதுதான் நம் உடலின் பல்வேறு இயக்கங்களைச் சீரான முறையில் இயங்க வைக்கிறது.

அதுசரி, கடிகாரம் என்றதும் கடிகாரம் போன்ற அமைப்பில் ஒரு பொருள் உடலுக்குள் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். இது ஒரு சிக்கலான நரம்பு அமைப்பு. இதயம் போன்றோ, நுரையீரல் போன்றோ ஸ்கேனில் தெரிகிற ஓர் உயிரியல் பொருள் அல்ல.

என்ன வேலை?

தூக்கம், விழிப்பு, உணவுச் செரிமானம், ஹார்மோன் சுரப்பு, உடலின் வெப்பம் போன்ற முக்கியமான பல செயல்பாடுகளை உடலியக்கக் கடிகாரம்தான் நாள் முழுவதும் கட்டுப்படுத்துகிறது. இது சரியாக இயங்கும்போது நாம் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருப்போம். ஆனால், நமது உணவு உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள், தூக்க நேர மாற்றங்கள் போன்ற காரணங்களால் இந்தக் கடிகாரம் பாதிக்கப்படுகிறது. அப்போது, பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

எவ்வாறு செயல்படுகிறது?

உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுடனும் உடலியக்கக் கடிகாரம் நரம்புப் பிணைப்பு மூலம் இணைக்கப்பட்டுள்ளது. கடிகாரத்தில் ‘டிக், டிக்,’ ‘டிக், டிக்,’ எனும் ஒத்திசைவான லயம் உருவாகி கால நேரத்தைத் துல்லியமாகக் கணிப்பதைப்போல இந்த அமைப்பும் ஓர் ஒத்திசைவான உடலியக்க லயத்தை உருவாக்குகிறது. இந்த லயம்தான் நம் உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, ஒரு வகை லயம் இரவு நேரத்தில் மெலடோனின் எனும் ஹார்மோனைச் சுரக்கச் செய்கிறது. அந்த ஹார்மோன் நம்மைத் தூக்கத்துக்குத் தயார்படுத்துகிறது. இன்னொரு வகை லயம் காலை வேளையில் கார்ட்டிசால் எனும் ஹார்மோனைச் சுரக்கச் செய்கிறது. அந்த ஹார்மோன் நம்மை விழிப்பு நிலைக்குக் கொண்டு வருகிறது. இப்படித் தினமும் சரியானதொரு ‘தூக்க-விழிப்புச் சுழற்சி’யை (Sleep – wake cycle) நமக்கு உருவாக்கித் தருகிறது இந்தக் கடிகாரம்!

மூளைதான் எஜமானர்!

உடலியக்கக் கடிகாரத்தின் லயங்களுக்கு ஓய்வு என்பது இல்லை. உடலுக்குள் 24 மணி நேரச் சுழற்சியில் நிகழும் ஓர் இயற்கையான செயல்முறை லயங்கள் இவை. இந்த லயங்களை இயக்குவதற்கு ஓர் எஜமானர் இருக்கிறார். அவர் பெயர் ’எஸ்.சி.என்’ (SCN). Suprachiasmatic Nucleus என்பதன் சுருக்கம் இது. மூளையில், ‘ஹைப்போதலாமஸ்’பகுதியில் இருக்கிற ஓர் உள்கடிகாரம் இது. நாள் முழுவதும் உடலில் நிகழும் செயல்பாடுகளுக்குத் தேவையான சிக்னல்கள் இந்த உள்கடிகாரத்திலிருந்துதான் செல்கின்றன; உடல் மற்றும் மனத்தின் செயல்பாடுகளை இவை ஒருங்கிணைக்கின்றன. உதாரணமாக, உணவுச் செரிமானத்துக்குத் தேவையான செரிமான திரவங்களைத் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கச்செய்து, இரைப்பை மற்றும் குடலைச் செரிமானத்துக்குத் தயார் செய்கின்றன. தூக்கத்துக்குத் தேவையான மெலட்டோனின் ஹார்மோனை இரவில் சுரக்கச்செய்து நம்மைத் தூங்க வைக்கின்றன.

அதேசமயம், ‘எஸ்.சி.என்’ என்னதான் ஓர் எஜமானர் என்றாலும் நம் சுற்றுச்சூழலில் உள்ள ஒளி, இருள், வெப்பம், குளிர் போன்ற மாற்றங்களுக்கு அடிபணியக்கூடியது. அப்போது அது தன்னுடைய சிக்னல்களை அனுப்பும் முறையை மாற்றிக்கொள்கிறது. குறிப்பாக, இரவிலும் நம்மைச் சுற்றி அதிக நேரம் வெளிச்சம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது அதைப் பகல் என நினைத்துக்கொள்கிறது ‘எஸ்.சி.என்’. தூக்கத்துத் தேவையான மெலட்டோனின் ஹார்மோனைச் சுரக்க அது மறந்துவிடுகிறது; நமக்குத் தூக்கம் கெடுகிறது. இது ஒரு பொதுவான செயல்முறை.

கைக்குழந்தைகளுக்கு இந்த உள்கடிகாரம் வளர்ச்சியடையச் சில மாதங்கள் ஆகின்றன. அதனால்தான் அவர்கள் அதிக நேரம் தூங்குகிறார்கள். வயதானவர்களுக்கு மூப்பின் காரணமாக இந்தக் கடிகாரத்தின் நரம்புப் பிணைப்பில் சில ஆயிரம் செல்கள் மடிந்துவிடுகின்றன. இதனால் இவர்களுக்கு மெலட்டோனின் சுரப்பு குறைகிறது; தூக்க நேரமும் குறைகிறது.

Tags:    

Similar News