நீங்கள் அரசியல்வயப்பட்டவரா?
சமூக ஊடகங்களில் புரட்சி பேசுவது அல்ல, நம் அன்றாடத்தில் நிகழும் அநீதிகளுக்கு எதிராகத் துணிச்சலாகக் குரல் கொடுப்பதே முக்கியம்.
நாம் முன்புபோல் இப்போது இல்லை.
தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்குப் பிந்தைய சூழலில், நாம் முன்னெப்போதையும்விட அதிக அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்களாக மாறிவருகிறோம். தினமும் நிறைய அரசியல் விஷயங்களை நுகர்கிறோம்; நிறைய கருத்துகளைப் பகிர்கிறோம்.
ஆனால், உண்மையில் நாம் அரசியல்வயப்பட்டிருக்கிறோமா?
இன்று நாம் பேசும் அரசியல் என்பது பெரும்பாலும் அரசு, தேர்தல், கொள்கைகள் சார்ந்த 'பேரரசியல்' (Macro-politics) ஆகவே இருக்கிறது. பிரதமர், முதல்வர், அமைச்சர்கள், நடிகர்கள் என யார் குறித்தும் எளிதாகக் கருத்துகளைத் தெரிவித்துவிடுகிறோம். ஜனநாயகச் செயல்பாட்டுக்கு இத்தகைய கருத்துப் பகிர்தல் இன்றியமையாதது. ஆனால், இதனால் மட்டும் நாம் அரசியல்வயப்பட்டவர்களாகிவிடுவோமா?
நிச்சயமாக இல்லை.
ஒரு பிரதமரையோ முதல்வரையோ சமூக வலைதளங்களில் விமர்சிப்பதால், பெரும்பாலும், ஒருவரது தனிப்பட்ட வாழ்வாதாரத்துக்கோ பாதுகாப்புக்கோ எந்த உடனடிப் பாதிப்பும் ஏற்பட்டுவிடுவதில்லை. தினமும் இத்தகைய பதிவுகள் ஆயிரக்கணக்கில் இடப்படுகின்றன. இது ஒருவகையான 'விளைவுகளற்ற எதிர்ப்பு'.
சமூக ஊடகங்களில் புரட்சி… அன்றாடத்தில் மௌனம்…
நாட்டு அரசியல் குறித்து ஓயாது கருத்துகள் சொல்லும் நாம், நம் அன்றாடம் புழங்கும் அலுவலகம், கல்வி நிறுவனம், தெரு, குடும்பம் போன்ற தளங்களில் நிலவும் 'நுண்ணரசியல்' (Micro-politics) சூழலில் எதிர்வினையாற்றத் தயங்குகிறோம்.
காரணம், இங்கே அதிகார உறவுகள் மிக நெருக்கமானவை. இங்கே எழுப்பப்படும் ஒரு சிறு கேள்விகூட, நம்முடைய வேலைவாய்ப்பையோ சமூகப் பாதுகாப்பையோ நேரடியாகப் பாதிக்கும் அபாயம் கொண்டது.
இதனால்தான், சமூக ஊடகங்களில் அரசியல் பேசும் பலர், இத்தகைய அன்றாடத் தளங்களில் எத்தகைய எதிர்வினையும் ஆற்றாமல் மௌனம் காப்பதைப் பார்க்கிறோம்.
"தலைமையை எதிர்த்தால் வேலை போகும்", "நிர்வாகத்தைப் பகைத்துக்கொண்டால் நற்பெயர் கெடும்" என்ற விளைவுகள் குறித்த அச்சங்கள், நம்மைத் தார்மிகச் செயல்பாடற்ற மௌனிகளாக மாற்றுகின்றன.
இந்தப் பயம் இயல்பானது; தவிர்க்க முடியாதது. ஆனால், அந்தப் பயத்துக்காக நம் குரலை ஒடுக்கிக்கொண்டால், நாம் பேசும் அரசியலுக்கு என்ன பொருள் இருக்க முடியும்?
ஒவ்வொரு இடத்திலும் வாழ்வாதாரத்தைப் பணயம் வைக்க முடியாது என்பது யதார்த்தம். அதற்காக, நியாயத்துக்காகக் குரல் கொடுக்காமல் அடிமை மனநிலையிலேயே இருந்துவிட முடியுமா?
பிறகு நாம் என்ன செய்ய வேண்டும்? உரையாடப் பழக வேண்டும்.
உரையாடல் மொழி எனும் விடுதலைக் கருவி
அரசியல்வயப்படுதல் என்பது வெறும் கோஷமிடுவது அல்லது ஆவேசம் கொள்வது மட்டுமல்ல; அது அதிகாரத்துடன் உரையாடுவதற்கான ஒரு மொழியைக் கண்டடைவது. அதாவது, நமக்குள் எழும் 'அறச்சீற்றத்தை' தார்மிக வலு கொண்ட உரையாடலாக மாற்றுவது முக்கியம்.
ஆவேசப்படாமல், அதே சமயம் அதிகாரத்துக்கு அஞ்சாமல், நிதானமான, கண்ணியமான முறையில் நம்முடைய தரப்பை முன்வைப்பதன் மூலம், எதிர்த்தரப்பை அதிகார பீட உணர்விலிருந்து வெளியேற்றி, தார்மிகரீதியாகப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்புக்குத் தள்ள முடியும். இந்த உரையாடல் மொழியைப் பயில்வது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியம்.
தன்னை நேரடியாகப் பாதிக்காத அதிகாரத்தை விமர்சிப்பது ஒருவகையான நிழல் போர். ஆனால், தான் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கும் அதிகாரத்தை நோக்கி, தன் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டே கேள்வி எழுப்பும் துணிச்சல்தான் ஒருவரை அரசியல்வயப்பட்ட மனிதராக மாற்றுகிறது.
அன்றாட அநீதிகளுக்கு எதிராக நாம் உருவாக்கும் சிறிய எதிர்வினைகளே, நம்மை ஒரு ஜனநாயகச் சமூகத்தின் உயிர்ப்புள்ள அங்கமாக மாற்றும். இல்லையேல், நாம் வெறும் அரசியல் தகவல்களை நுகரும் சந்தைப் பொருளாகவே எஞ்சிவிடுவோம்.