நமது ஆவேசத்திடமிருந்து ஒரு விடுதலை
சமூக ஊடகங்களின் காலத்தில் ஆவேசத் தூண்டில்களிடம் நாம் அகப்படாமல் இருப்பது அவசியம்
ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில அகராதிகள் இந்த ஆண்டின் சொல் என்று தேர்ந்தெடுப்பதுண்டு. அப்படி கடந்த ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு அகராதி தேர்ந்தெடுத்த சொல்: ரேஜ் பைட் (Rage bait). இதனை சமூக ஊடகங்கள் மூலமாக ஒருவர் பெறும் ஆவேசத் தூண்டல் என்று மொழிபெயர்க்கலாம். சுருக்கமாகத் தமிழில் கூறுவதென்றால் ஆவேசத் தூண்டில் என்று ரேஜ் பைட்டை மொழிபெயர்க்கலாம்.
இன்றைய சமூக ஊடகச் சூழலில் ஒரு தகவல் எவ்வளவு உண்மையானது என்பதை விட, அது எவ்வளவு வேகமாகப் பகிரப்படுகிறது என்பதே அதன் வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்த ஓட்டத்தில் உருவான ஒரு ஆபத்தான உத்திதான் ஆவேசத் தூண்டில். சமூக ஊடகப் பயனர்களை கோபப்பட வைத்து, அந்த ஆத்திரத்தின் மூலமாக அதிக விருப்பக் குறிகள், பின்னூட்டங்கள், பகிர்வுகளைப் பெறுவதே இதன் நோக்கம்.
ஆவேசத் தூண்டில் என்றால் என்ன?
மக்களைச் சிந்திக்கும்படித் தூண்டுவதற்குப் பதிலாக, அவர்களை உடனடியாக உணர்ச்சிவசப்பட (குறிப்பாக ஆத்திரப்பட) வைக்கும் வகையில் பகிரப்படும் பதிவுகள் ஆவேசத் தூண்டில் எனப்படும். ஒரு தவறான புள்ளிவிவரம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றிய அவதூறு, அல்லது அடிப்படை அறிவே இல்லாத ஒரு முட்டாள்தனமான கருத்து போன்றவற்றை வேண்டுமென்றே பதிவிட்டால் பதிலுக்கு மக்கள் அதைக் கண்டிப்பதற்காகக் கருத்துப் பதிவிடுவார்கள். அந்த ஈடுபாடே அல்காரிதத்தின் மூலம் அந்தப் பதிவை மேலும் பலருக்குக் கொண்டுசேர்க்கிறது.
2021இ ல் ஃபேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் பிரான்சிஸ் ஹேகன் வெளியிட்ட தரவுகளின்படி, ஒரு பயனர் அமைதியாக ஒரு பதிவைப் பார்ப்பதை விட, கோபத்தில் எதிர்வினையாற்றும்போது, ஃபேஸ்புக்கின் அல்காரிதம் அந்தப் பதிவுக்கு 5 மடங்கு அதிக முன்னுரிமை அளிக்கிறது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் 'Bad Food Hacks' என்ற பெயரில் வேண்டுமென்றே அருவருப்பான முறையில் உணவைத் தயாரிக்கும் காணொளிகள் பகிரப்படுகின்றன. மக்கள் அதைக் கிண்டல் செய்தும், திட்டியும் பல்லாயிரக்கணக்கான பின்னூட்டங்களை இடுகிறார்கள். இது அந்தக் காணொளிகளின் படைப்பாளருக்குப் பெரும் வருமானத்தைப் பெற்றுத்தருகிறது.
ஆவேசத் தூண்டிலில் இருந்து தப்பிக்க 5 வழிகள்
1. 5 நிமிட விதி: ஏதேனும் ஒரு பதிவு உங்களை உச்சகட்ட கோபத்துக்கு உள்ளாக்கினால், உடனடியாக எதிர்வினை ஆற்றாதீர்கள். 5 நிமிடங்கள் காத்திருங்கள். உங்கள் உணர்ச்சி வேகம் குறைந்த பிறகு சிந்தித்தால், அது உங்களை வேண்டுமென்றே தூண்டுவதற்காகப் போடப்பட்ட பதிவு என்பது புரியும்.
2. ஈடுபாடு காட்டாமல் இருத்தல்: ஆவேசத் தூண்டில் பதிவுகளுக்கு நீங்கள் இடப்போகும் கோபமான பின்னூட்டம், அந்தப் பதிவை மேலும் பிரபலமாக்குமே தவிர அதைத் தடுக்காது. எனவே, அத்தகைய பதிவுகளைக் கண்டால் எவ்வித எதிர்வினையும் (விருப்பக்குறி, பின்னூட்டம், பகிர்வு) செய்யாமல் கடந்து செல்வதே சிறந்தது.
3. தரவு சரிபார்ப்பு: ஒரு புள்ளிவிவரமோ செய்தியோ நம்ப முடியாத அளவுக்கு ஆத்திரமூட்டுவதாக இருந்தால், அது உண்மையான ஆதாரத்திலிருந்து வந்ததா என்று சரிபாருங்கள். அங்கீகரிக்கப்பட்ட செய்தித் தளங்கள் மூலம் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துங்கள்.
4. அல்காரிதத்தை மாற்றியமைத்தல்: உங்களை அடிக்கடி ஆத்திரப்படுத்தும் பக்கங்களை ‘ப்ளாக்’ (Block) அல்லது அன்ஃபாலோ (Unfollow) செய்யுங்கள். சமூக ஊடகங்களில் ‘விருப்பமில்லை’ (Not Interested) என்ற வசதியைப் பயன்படுத்தி, உங்கள் திரையில் தோன்றும் செய்திகளை உங்களுக்குப் பிடித்தமான ஆக்கபூர்வமான செய்திகளாக மாற்றுங்கள்.
5. டிஜிட்டல் கல்வியறிவு: ஏன் இந்தப் பதிவு இப்படிப் போடப்பட்டுள்ளது, இதன் பின்னால் உள்ள நோக்கம் என்ன என்பதையெல்லாம் சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களின் ஆத்திரம் என்பது ஒரு பெருநிறுவனத்துக்கோ ஒரு தனிநபருக்கோ பணமாக மாறுகிறது என்பதை உணர்ந்தாலே நீங்கள் அந்த வலையில் விழ மாட்டீர்கள்.
நமது கவனம் என்பது ஒரு விலைமதிப்பற்ற சொத்து. அதை எங்கே செலவிட வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். ஆத்திரமூட்டும் செய்திகளுக்கு நாம் அளிக்கும் ஒவ்வொரு விநாடியும் நமது மன அமைதியைக் குலைப்பதுடன், சமூகத்தில் வெறுப்பு வளரவும் காரணமாகிறது. ‘மெளனம் சில நேரங்களில் வலிமையான ஆயுதம்’ - குறிப்பாக ஆவேசத் தூண்டில் பதிவுகளுக்கு எதிராக!